அன்புடன் பிள்ளைகள் நால்வருக்கும்
சிறப்பாக நீதிபதி – பாண்டித்துரைக்கு
ஈழத்துத்தாய் (அம்மா) எழுதிக்கொள்வது. உங்கள் ‘பிரம்மா’ கவிதைநூல் வெளியீட்டு விழாவுக்கு என்னையும் ‘தமிழ்வாழ்த்து’ பாடுகிறீர்களா? ஏன அன்புடன் அழைத்தீர்கள் மிக்க நன்றி.
விழாவுக்கு வருகை தந்திருந்த தமிழ்ஆர்வளர்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் வெண்திரையில் என்னையும் புகுத்தி என்னை அழைத்துவரும் அன்பான பெண்குலத்தைப் பெருமைபடுத்தினீர்கள்.
நான் சற்றும் எதிர்பாரதவிதமாக நினைவுப்பரிசுடன் இந்த ஏழையின் பெயரையும் பொறித்து முனைவர் திருமதி.லெட்சுமி அம்மையார் கைகளினால் பொன்னாடை போர்த்தும் கைங்கர்யத்தையும் செய்து இந்த தாயைப் பெருமைப்படவைத்துவிட்டீர்கள். ‘நன்றி’ என்ற மூன்று எழுத்துக்குள் அது அடங்கக்கூடுமா?
அந்த நேரத்திலிருந்து உங்களுக்கு உங்கள் பெயர்பொறித்த ஏதாவதொன்று ‘பிரம்மா’ ஞாபகமாக தரவேண்டுமென்று இந்த தாய்க்குப் பெரிய ஆவல். ஊசியில் நூலைக்கோர்த்து ( தையல் எந்திரமல்ல) உங்கள் நால்வர் பெயரையும் ஒரு துணியில் (அதுவும் நான்கு பூக்கள் மாத்திரமுள்ள துணியாகத் தேடினேன்) நான்கு மலர்கள் உள்ள இந்த சிறுதுணியில் ஒரு பூ மாத்திரம் மொட்டவிழ்த்த ( மலர்ந்தும் மலராத பாதிமலர்) மலராக காணக்கிடைத்தது. வாங்கி தைக்கிறேன்… தைக்கிறேன்.. அதில் உங்கள் பெயர்களைத் தைத்து முடிக்க ஒருவாரத்துக்கு மேலாகிவிட்டது. உங்கள் பிள்ளை குட்டி பேரப்பிள்ளைகள் காலத்திலும் உங்கள் உடுப்புபெட்டியின் அடியில் கிடக்கும் இத்துணியை அவர்களுக்கு காட்டி ‘2008’-ல் நாங்கள் நான்கு பேராக சிங்கப்பூரில் ‘பிரம்மா’ என்ற நூலை வெளியீடு செய்த காலத்தில் ஈழத்து தாயொருவர் மனம் மகிழ்ந்து தன்கையால் எம்பெயர்களைத் தைத்துக்கொடுத்தது இந்தத்துணி என்று கூறுவீர்கள். நீங்கள் கடந்தகால இனிய நினைவுகளில் மூழ்கும் அவ்வேளையில் பூவுலகிலில்லாத இத்தாய்க்கும் அதுபெரிய ஒரு கல்வெட்டாக அமையுமல்லவா?
தாங்கள் நான்கு பேரும் இன்று போல் என்றும் இணைபிரியா (கோட்டைபிரபு பாண்டித்துரை செல்வா காளிமுத்துபாரத்) நண்பர்களாக வாழ்ந்து பெரிய – அரிய – சீரிய கவிஞர்களாக வளர வாழ்த்துகள். உங்கள் வலதுகரமாக விளங்கும் சசிகுமார், சின்னபாரதி, அறிவுநிதி, சிவக்குமார், கவிஞர் இன்பா, காதலுடன் கண்ணா பொன்ற அறிஞர்கள் புடைசூழ, அண்ணாக்கள் ந.வீ.விசயபாரதி, ந.வீ.சத்தியமூர்த்தி, நாகை.தங்கராஜ் தமிழ்நெஞ்சர் கோவிந்தர், முனைவர் ரெத்தினவேங்கடேசன், முனைவர் லட்சுமி, கவிஞர் மாதங்கி, கவிஞர் மலர்விழி இளங்கோவன், எழுத்தாளர் இராம.வைரவன் போன்ற பெரியர்களின் ஆசிர்வாதமும் தாங்கள் குறிப்பிட்ட திரு.மாசில அன்பழகன், திரு.பாத்தென்றல் முருகடியான் போன்றவர்களின் வழிகாட்டலும் உங்களுக்கு உறுதுணையாக இருக்க வாழ்த்துக்கள்.
நீங்கள் அனைவரும் தமிழ்த்தாயின் வாரிசுகள். தமிழின் பெயரால் சந்தித்துக்கொண்டோம் ‘நான் ஒரு தனி மரமல்ல பெரிய ஒரு தோப்பு” என்ற பெருமிதம் இறுமாப்பு எனக்கும் வர வழிவகுத்தவன் தமிழ்த்தாய் தானே! நன்றி
என்றும்
அன்புடன் அம்மா
வள்ளியம்மை சுப்பிரமணியம்


அண்மைய மறுமொழிகள்