சிங்கப்பூர் நாடக ஆசிரியர் திரு.இளங்கோவன் அவர்களுக்கு

28 09 2009

 சிங்கப்பூர் நாடக ஆசிரியர் திரு.இளங்கோவன் அவர்கள் இயக்கிய ‘மிருகம்‘ நாடகம் பற்றி மலேசிய எழுத்தாளர் திரு.கே.பாலருமுகன் அவரது வலைப்பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அந்த பதிவை எனது சொந்த தலைப்பு மற்றும் சில வரிகளை இணைத்து எனது வலைதளத்தில் பதிவிட்டிருந்தேன். ஆனால் நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் திரு.இளங்கோவன் அவர்களை காயப்படுத்துவதாக நண்பர்கள் வாயிலாகவும் நான் முன்பு பணிபுரிந்த அலுவலகத்திற்கு 23.09.2009 அன்று திரு.இளங்கோவன் அவர்களிடம் இருந்து வந்திருந்த மின்னஞ்சலை 27.09.2009 இன்று எனது மின்னஞ்சலுக்கு எனது பழைய அலுவலக அதிகாரிகள் அனுப்பியிருந்தனர், அந்த மின்னஞ்சல் வாயிலாகவும் அறிந்துகொண்டேன்.

அவர் மனதை காயப்படுத்திய அந்த வரிகளை எனது பழைய பதிவிலிருந்து நீக்கிவிட்டேன்.

திருத்தப்பட்ட பதிவினை பார்க்க:மிருகம் நாடகம் பற்றி மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் பார்வை

மேலும் நான் பல நண்பர்களுக்கு அந்த பதிவை படிக்கச் சொல்லி குறுந்தகவல் அனுப்பியதாக திரு.இளங்கோவன் அவர்களின் மின்னஞ்சல் வாயிலாக அறிய நேர்ந்தது. நான் யாருக்கெல்லாம் குறுந்தகவல் அனுப்பினேனோ அவர்களை விசாரித்தால் அந்த குறுந்தகவலின் சாரம் என்ன என்பதை அறிய நேரலாம். மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் தாக்கப்பட்ட சம்பவத்தை அவரது வலைபதிவில் படிக்க நேர்ந்தது. அதன்பின் கே.பாலமுருகனின் வலைபதிவை படிக்கச் சொல்லியே குறுந்தகவல் அனுப்பினேன். மேலும் என்னைத்தவிர யாரும் பார்க்காத எனது வலைதளத்தை பாருங்கள் என்று யாருக்கும் குறுந்தகவல் அனுப்பவில்லை.

இந்த பதிவின் வாயிலாக திரு.இளங்கோவன் அவர்களை காயப்படுத்திய அந்த ____________  வார்த்தையை நீக்கி விட்டேன். மேலும் திரு.இளங்கோவன் அவர்களிடம் இந்த பதிவின் வாயிலாக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் நான் பயன்படுத்திய அந்த வார்த்தை நாடகத்தையே குறிப்பதாகும்.

அந்த நாடகமாக மாறியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும்இல்லை என்பதாகவும் அந்த நாடகத்தை பார்க்க வேண்டும் என்பதாகவும் எழுதப்பட்ட எனக்கான சொற்கள் பிறரை காயப்படுத்தும் போது அதற்காக வருந்துகிறேன். இனி கூடுதல் கவனத்தோடு எழுத முற்படுகிறேன்.

திரு.இளங்கோவனின் மின்னஞ்சலுக்கு முன்னான சம்பாஷனைகள் அதன் பின்னான மனிதர்களை நினைத்துபார்க்கையில் மனம்விட்டு சிரிக்க நேர்ந்தது. நிறையச் சிரித்தேன்.

இந்த மனித வாழ்வில்

முன்னும்

பின்னும்

மாற்றம் மட்டுமே

நிரந்தரமானது!

 பாண்டித்துரை

அலைபேசி: 82377006

மின்னஞ்சல்:pandiidurai@yahoo.com





வீடு தேடி வரும் கோலம் – ஞாநி

29 08 2009

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும். இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்….. தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

ஞாநி





மீண்டுவரும் இந்தக் கவிதைகள்

9 04 2009

மீண்டுவரும் இந்தக் கவிதைகள்

தேர்தல் ஜீரத்தில் பணம்+புட்டி+விசேட ப்ரியாணி = பொட்டி

தமிழக முத்திரைகள் தலைநகர் தலைமையை மாற்றுவதாக அமையட்டும் 

vote_box_blue-1

————————————————–

நமக்கு என்ன வந்துவிட்டது

நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்

 

 

எல்லாம் மாறும்மட்டும்

எதிர்த்து நிற்கட்டும்

தேசம் விட்டு தேசம் போய்

பிச்சையெடுக்கட்டும்

பிணைகைதியாய் வாழட்டும்

காட்டி கொடுக்கட்டும்

நமக்கு என்ன வந்துவிட்டது

நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்

 

அடிபட்டு வீழும்

அநாமத்தின் புகைப்படகோப்புகள்

வாரம் ஒரு

வன்புணர்ச்சி வீடியோ பதிவுகள்

இல்லாதுபோயின்

சன் டிவியும் கலைஞர் டிவியும்

நமக்கு என்ன வந்துவிட்டது

நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்

 

 

செல்லடி சப்த்தத்தை செய்தியாய் படிப்போம்

பின் அதனை மடித்துவைப்போம்

நன்றாக சாப்பிடுவோம்

இரவின் கனவோடு இன்புற்று

தூங்கி எழுவோம்

நமக்கு என்ன வந்துவிட்டது

நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்

 

வில்லு படம் பற்றி பேசுவோம்

விசயகாந்த் அரசியல் பற்றி பேசுவோம்

இன்னார் கூட இன்னார் ஓடிப்போனது உட்பட

நாம் பேச நிறைய இருக்க

நமக்கு என்ன வந்துவிட்டது

நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்

 

 

நமக்கென வீடு இருக்கிறது

காய்ச்சல் வந்தால்

அம்மா

அப்பப்பா
தொலைபேசி அழைப்புகள்

நமக்கு என்ன வந்துவிட்டது

நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்

———————————————————————————————

சாவதற்கு அவர்கள்

தயாராகவே இருக்கிறார்கள்

 

ண்புணர்சிக்கு உட்படுத்தி

கொட்டடிக்குள் அடைபடுவதிலிருந்து

கொத்து கொத்தாய் வீழும் குண்டால்

குறையும் மனிதத்தை எதிர்த்து

சகோதர நாடு தரும்

சாக்கடை முகாம் கடந்து

 

சாவதற்கு அவர்கள்

தயாராகவே இருக்கிறார்கள்

 

தொல்லை தரும் வெள்ளை வேன்

வெள்ளை உடை தரித்த மனிதர்கள்

தொடரும் சோதனைச் சாவடி

இல்லா தேசம் வேண்டி

 

சாவதற்கு அவர்கள்

தயாராகவே இருக்கிறார்கள்

 

உண்ணா நோன்பிருந்து

தினம் ஒருவராய்த் தீக்குளித்து

போராளி உடை தரித்து

மூப்பைக் கண்டடைந்த பின்

 

சாவதற்கு அவர்கள்

தயாராகவே இருக்கிறார்கள்

 

——————————————————————————————————————

 

 

ீங்கள் படிக்கப்போவதில்லை
தெரியும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்

 

திருமணத்திற்கு பின்னான நாட்கள்
பியர் சாப்பிட்ட முதல் நாள்
நாய்க்குட்டிக்கு கொடுத்த முத்தங்கள்
குழந்தைக்கான கவிதை
அலுவலகக் கடிதம்
அம்மாவுடன் தொலையாடியது
லதாவுக்கான புன்னகை
கென் நித்யா ஞாபகம்
முதல் சிறுகதை
சாதி சான்றிதழுக்கு கொடுத்த நூறு ரூபாய்
குட்டப்பன் மீதான கோபம்
ஈழவிடுதலையின் முடிவு
கடைசி மரணம்

 

நீங்கள் படிக்கப்போவதில்லை
தெரியும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 

 

——————————————————————————————————————– 

கனவு காணுங்கள்

கனவு காணுங்கள்

அப்துல்கலாம்

சொல்லிக்கொண்டே இருப்பார்

 

ஆழமான கனவு

கொஞ்சம்

நீளமான கனவு

 

ஆமாம்

என் கனவை

நாளை பிறக்கும்

குழந்தையும்

சுமக்கப் போகிறது(தா)

 

நரை விழுந்த

கிழத்தின் துடிப்புகூட

நம்மில் பாதியாய்

 

ஞாபகபடுத்திக் கொள்கிறேன்

ஒவ்வொரு செல்லடியின்

சப்தத்திற்கு பின்பு

நாளை நனவாகும் என்று

 

விதைக்கப்பட்ட ஆன்மா(க்கள்)

உலவிக்கொண்டிருக்கிறது

அந்த நம்பிக்கை

விடியும் ஒரு நாள்

ஈழத்தில்

—————————————————

 

புதிதாய் முளைப்பதற்கான சாத்தியங்களில்

செல்லடிக்கப்பட்டு

மரங்கள் வெட்டப்படுகின்றன

தொடரும் பருவ நிலை மாற்றத்தால்

மழைவரத்தும் குறைகிறது

உயிர்த்துளி பருக

வான்பரப்பிலோ

உருகும் உலோக மழைத்துளி

வெம்மைநோய் தாக்கத்தால்

நிலப்பரப்பின் கரும்பயிர்கள்

ஆழ்கடல் பரப்பின் நிசப்தத்தோடு

அதிகரிக்கும்

மௌனங்களுக்கான இடைவெளியில்

கிழக்கு சிவக்கத்தொடங்கலாம்

திறக்கப்படாத கடவுளின் கண்களை

இடைவிடாது சப்தமிடத்துடிக்கும்

இரவின் பூனைகளின் காத்திருத்தலோடு

கைத்தடிக் கிழவனின் நிலத்தடி நீருக்காக

காத்திருக்கும்

தமிழ்க்கடவுளின்

ஆயுள் நீட்டிக்கப்படவேண்டும்

என்பது பற்றிய சிந்தனையாவது

உணவிற்காய் உதடுகள் திறக்கும்பொழுது

வந்து செல்லட்டும்.

———————————————————————————————————————–

 

 

வேற்று கிரக ஜீவராசிகள்
வெப்பத்தை கக்கிக்கொண்டிருக்க
இந்த கானகத்தில்
இனி நிசப்தம் இல்லை என்று
நிச்சயிக்கப்பட்டுவிட்டதா?
நிச்சயமற்ற வாழ்வின்

கொடிய முகங்களை
பார்ப்பதை தவிர்த்து
கவலைதோய்ந்த முகம்
கண்களில் தேங்கிய உப்பு நீருடன்
கொஞ்சமாய் பிடி மண் எடுத்து
அணி அணியாய்
பறவைகள் பறக்கத் தொடங்குகின்றன
கூடுகளை விட்டு
வெளியேறும் பறவைகள்
கடும் வெப்பத்தால் வெந்தபடி
இறக்கைகள் ஒடிபட்டு
தத்தி தத்தியே செல்கின்றன
தாமதிக்கும் பறவைகளுக்கு
கானகமே மயானமாய்
அவதரித்த வண்ணம்
தொடர்கிறது
எங்கும் மரணத்தின் ஓலங்கள்
சப்தங்களை உள்வாங்கிக் கொண்டு
சமுத்திரம்
மௌன சாட்சியாய்
பார்த்து கொண்டிருக்க
கானகத்தின் அமைதிக்காய்
கடும் தவம் செய்யும் புலிகள்
வேடந்தாங்கல் சென்ற பறவைகள்
வெகு சீக்கிரம் திரும்பாது கண்டு
உறுமத் தொடங்க
அதன் சப்தங்கள்
கானகத்தை தாண்டியும்
எதிரொலிக்கிறது.

—————————————————-

©pandiidurai@yahoo.com