நள்ளிரவும் தசாவதார மொக்கையும்

2 07 2008

 

தலைப்பை பார்த்ததும் தசாவதாரம் திரைப்படத்தை நள்ளிரவில் பார்த்ததாக நினைக்கலாம். அப்படியொரு அபாயம் இதுவரையிலும் ஏற்படவில்லை. ஏன் எனில் இன்னும் நான் படத்தை பார்க்கவில்லை.

 

அப்புறம் எப்படி மொக்கைனு நீங்க………

 

நேற்று நள்ளிரவு என் தோழியிடம் தொலையாடிக்கொண்டிருந்தேன். இரவு உணவு, கொஞ்சம் இலக்கியம் என்று தொடர்ந்ததன் ஓரிடத்தில் தசாவதாரம் பார்த்துவிட்டீர்களா என்றேன். சரியான மொக்கை பாண்டி 150.00 ரூபாய் ப்ளாக்கில (அவர்களின் ஊரில்) டிக்கெட்வாங்கி 13 ம் தேதி அன்றே பார்த்தேன் என்ற பொழுது ,  இதற்கு பிறகு இந்த திரைப்படத்தை பற்றி தெரிந்துகொள்ள அவ்வளவாக நான் ஆர்வம் காட்டவில்லை. எனக்கு கமல்திரைப்படங்கள் ரொம்ப பிடிக்கும்பாண்டி ஆனா இந்த படம் செம்மமொக்கை பாண்டி என்று திரும்பவும் சொன்னார்.

 

மாயக்கண்ணாடி பார்த்தீர்களா என்றேன். ( அந்த நேரத்தில் ஏன் இந்த திரைப்படத்தை பற்றி நான் கேட்டேன் என்று இப்பொழுதும் புரியவில்லை ) .

 

போஸ்டரை பார்த்து ஏமாந்துபோய்விட்டேன் பாண்டி என்று அவள் பேசியது குழந்தை போல இருந்தது. சும்மா வித்தியாசமான கெட்டப்பில் சேரன் போஸ்டரை பார்த்து ஏமாந்து விட்டேன் என்றபடியே சிரித்துக்கொண்டிருந்தார் .

 

நானும்தான்……………

 

என் தோழிக்கு கமலிடமும், சேரனிடமும் பதில் இருக்காது என்பது தெரியும்.

 

சேரன் சார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சொன்னதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

பாண்டித்துரை





ரோபாவின் முன் அ.ஆ என்னுள்ளே

12 02 2008

 picture-003.jpg

ரோபாவின் முன் . என்னுள்ளே பிரமாண்டமாய்…………….. 

எனக்கான தேவைகள் எல்லா இடங்களிலும் நிரம்பிக் கிடக்கிறது. அப்படித்தான் ஆவியும்.  புரிதலற்ற ஒரு காலத்தில் புரண்டு எழுந்துவந்த தடங்கள் இருந்தாலும் என் சகோதரனின் உபயத்தால் ஆவியின் சில பக்கங்களை அவ்வப்பொழுது விரும்பி படிப்பதுண்டு. அப்படித்தான் ஞாநியின் பக்கங்களும்.  ஞாநியின் பக்கங்கள் ஒரு கட்டத்தில் (100க்கு பிறகு ) தடைபட்டபொழுது மீண்டுவரும் என்று எண்ணியதுண்டு. அப்படித்தான் அடுத்தடுத்த பக்கங்கள். 

07.02.08 சீனப்புத்தாண்டை (சிங்கப்பூர்) கொண்டாடிக் கொண்டிருந்தது. இன உணர்வுகள் எனக்கான தேவை என்றாலும் அவை என்றுமே பூசலுக்கு அடிக்கோடிடுதை அனுமதித்ததில்லை. பல்வேறுபட்ட இனமக்கள் வாழும் ஒரு சமுகத்தில் வாழும்பொழுது அவர்களின் உணர்விற்கு என்னையும் உட்படுத்த முயல்வதுண்டு அப்படித்தான். ஆனாலும் மனதளவில் சீனப்புத்தாண்டை கொண்டாடினேன் கூடுதலாக என்னுடைய முதலாளிக்கு ஒரு குறுந்தகவல் அவ்வளவே. கடந்த ஆண்டு சீனப்புத்தாண்டை நினைத்துப்பார்க்கும் அளவிலே இந்த ஆண்டு சீனப்புத்தாண்டு என்னை ஆட்கொண்டது. கடந்த ஆண்டு புத்தாண்டிற்கு மலேசிய லங்காவி தீவிற்கு நானும் என்னுடைய சகோதரர்களும் பயணித்ததே. இந்த ஆண்டு என்னுடைய சகோதார்கள் அனைவரும் இந்தியாவில் விடுமுறையை கொண்டாட நான் மட்டும் இங்கே 

சீனப்புத்தாண்டை கொண்டாடும் முகமாகவும் கவிமாலை கவிஞர்கள் குடும்பத்துடன் கலந்துரையாடும் ஒரு பகுதியாக எனக்கு வந்த அழைப்பினையொட்டி சிங்கப்பூர் பொட்டானிக்கல் கார்டன் (பூ மாலை) பகுதிக்கு ஒரு நாள் முழுமைக்கும் என் சின்டெரெல்லா கனவுகளுடன்…. எல்லோரையம் எனக்கு பிடிக்கும் என்றாலும் என்னருகே சிலரே இருக்க கூடும் அப்படிச் சிலர் வந்த மகிழ்ச்சியில் நாளைய பொழுதில் அதன் ஞாபகங்கள் எங்காவது துருத்திக்கொண்டிருக்கலாம்.  

 மாலையில் தேக்காவின் வீதிகளில் பயணிக்கும்பொழுது சனசந்தடி பற்றிய சலிப்பு ஏற்பட்டாலும் இதை விட்டால் இவர்கள் வேறு எங்குபோய் மகிழக்கூடும் இவர்களின் மகிழ்ச்சிக்கு இடைஞ்சலாய் (இடையே) நான் என்றவாரு கால்களின் போக்கினில் கண்களில் ஒரு மாற்றம். ஏதேச்சையாய் நான் படித்த சில வரிகள் 

ஞாநியின் …… பக்கங்கள் ஆரம்பம் ஆரம்பித்த ஒன்று மீண்டுமா என்ற ஆர்வமிகுதியில் மேலெழுந்த பார்வையில் கொட்டை எழுத்துக்களில் குமுதம். வாங்குவோமா இல்லையா என்று யோசிப்பதற்கு முன்னே என்கைகளில் தாங்கியபடி பிறகு என்ன சில்லறையை சரிபார்க்காமல் கொடுத்துவிட்டு செல்ல மறதியில் நடைபோட்ட என்னை அங்காடிக்காரர் அழைத்து மிச்சமாக 0.30 சென்ட் கொடுக்க அட என சொல்லிக் கொண்டே முதல் பக்கத்தை திருப்பினால் வாங்கியதன் சந்தோசங்கள் ஒரு பக்கம் வடியத்தொடங்கியது.   

 ரோபோ படத்திற்கு தமிழில் என்ன பெயர் சூட்டலாம். சரியான பெயரை சொல்லும் ஒரு வாசகருக்கு பரிசு ரூபாய்.1000.00  

உடனே என்னுள் எட்டிப்பார்த்தது . (இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா) படத்திற்கான தலைப்பு போட்டியே. (நான் எழுத ஆரம்பித்ததற்கு ஒரு வகையில் .ஆவிற்கும் ஒரு தொடர்பு உண்டு 

100 கோடிக்கும் மேல் பட்ஜெட் ப்ரமாண்டம் சங்கர் இதையெல்லாம் தூக்கிச்சாப்பிடப்போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இத்தகு பிரமாண்டத்தின் படதலைப்புக்கு ரூபாய் 1000.00 ? ரசிகா! பெயரை தமிழ்ப்படுத்துவதால் கிடைக்கும் வரிச்சலுகையை…………….?  

ரோபாவின் முன் . என்னுள்ளே பிரமாண்டமாய்…………….. 

குமுதம் ரஜினி ரசிகர்களை வைத்து சம்பாதிக்கிறதா அல்லது ரஜினி……………….. 

ஆக மொத்தத்தில் ரஜினி ரசிகர்களின் மதிப்பு ஒரு ஆயிரமாய்………………………. 

 





ராமசாமி வாத்தியாரும், அமீர்கானும்

4 02 2008

1.jpg

  தாரே ஜமீன் பர் இன்று இந்தியதிரை உலகின் விரும்பிகள் விமர்சகர்களுடன் குழந்தைகளும் முணுமுணுக்கும் மந்திர உச்சாடனம். இந்த இந்தி திரைப்படத்தை பற்றி இணையதளங்களில் வெளிவந்த செய்தியையடுத்து படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது மற்றொரு காரணம் அமீர்கான் இயக்கிய முதல் திரைபடம் என்பதுமே. இந்த திரைப்படத்தின் கதையோட்டம் என்னவென்று தெரிந்திராதபொழுது  திரைப்படத்தை பார்ப்பதற்கு இரு தினங்களுக்கு முன் (17.01.200 8) ஒரு கவிதை எழுதினேன். அந்த கவிதையை பின்னினைத்துள்ளேன் 

பெங்களுரில் இருந்த காலகட்டத்தில் திரையரங்கு சென்று இந்திதிரைப்படங்கள் பார்த்ததே கடைசி. சிங்கப்பூர் வந்த இந்த 1 1/2 வருடங்களில் தரையரங்கு சென்று பார்ப்பதற்கான (நட்பு) சூழல் உருவாகததாலே எந்த ஒரு இந்திபடமும் இதுவரை பார்க்கவில்லை . இடையிடையே நான் பார்த்தது தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஆங்கிலத்திரைப்படங்களே இதுகூட என் சமீபத்தியபோக்குதான். பணிசூழல் பின் எழுத ஆரம்பித்தது எங்காவது ஒரு நிகழ்வு என்றால் நானும் அங்கு தென்படவேண்டும் என்ற ஆவலால் திரைப்படங்கள் பார்ப்பது குறைவே பீமா போன்ற திரைப்படங்களை ஆர்வமிகுதியால் உடனே பார்த்து அடிபட்டு திரும்புவதும் உண்டு 

இவ்வளவு கால இடைவெளிக்கு பிறகு நான் பார்த்த இந்தி திரைப்படம் நள்ளிரவு நேரத்தில்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் அமீர்கான் வருவதற்கு சற்று முன் நாளை பார்த்துகொள்வோம் மீதியை என்ற எண்ணப்பாட்டை அடுத்த சில நிமிடங்களில் திரையில் தோன்றிய கோமாளி மாற்றியமைத்தான். திரைப்படத்தை பார்த்து முடிக்கும்வரை ராமசாமி வாத்தியாரும் என்னுடனிருந்து படம் பார்த்ததாக ஒருவித உணர்வு. படம் பார்த்து முடித்தபின் எப்பொழுதும்போல் என்ன நீதிப்பாண்டி என்றவாறு ராமசாமி வாத்தியார் கடந்து சென்றார். உடனே எனனுள் எழுந்தது ராமசாமி வாத்தியாரிடம் உரையாடவேண்டும். என் வீட்டில் தொடர்பு கொண்டு என் சகோதரி மற்றும் அம்மாவிடம் ராமசாமி வாத்தியாரின் தொ(ல்)லைதொடர்பு எண்ணை வாங்கித்தருமாறு கூறி ஒருவாரகாலம் ஆகிவிட்டது. இன்னும் என்னுள்ளே அதே ஆவால் ராமசாமி வாத்தியாரிடம் உடையாடவேண்டும்…………  

என்னால் இயன்றளவு என் நண்பர்களை நேரிடையாகவும் மின்னஞ்சல்வழியாகவும் இந்த திரைப்படத்தை பார்க்கவேண்டி வலியுறுத்தியுள்ளேன். குழந்தைகள் இந்த படத்தை பார்த்தபின் தங்களின் பெற்றோரிடையே ஏற்படப்போகும் மாற்றங்களுக்காக நேற்றுப்போல இன்றும் அவர்களின் முகச்சாயலின் முரண்பாட்டை உற்று நோக்கியபடியே……… 

உலக சினிமாவை பார்த்துவிட்டு உள்ளுர் சினிமாக்களை (தாரே ஜமீன் பர்)  சூசூபீ என்பவர்களுக்கு நமக்கு இப்படி எழுத மட்டும்தான் தெரியும். அமீர்கான் போன்று பரிட்ச்சார்த்தமான முயற்சிகள் எடுக்கத் தெரியாது என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு எழுதினால் நீங்கள் எழுதுவதெல்லாம் சரியே .

 3.jpg

பால்யம் தொட்டே

எழுத தொடங்கினேன் என்றாலும்

றெக்கை வெட்டப்பட்ட தும்பிகளாக

எழுப்பட்டவை எல்லாம்

எனக்கானதாகத்தான் தெரிகிறது

சிறுபிள்ளையின் அழுகையாய்

எல்லா பக்கங்களிலும் நிரம்ப

அம்மா மட்டும் இழுத்து அணைத்துக்கொள்கிறாள்.

இருத்தலும் மறுத்தலுமான

நெடுந்தூரப் பயணத்தில்

ராமசாமி வாத்தியார் போன்று யாரேனும்

பக்கங்களை புரட்டிப் பார்த்து

புரிதலுக்கான மொழியை சுட்டிக் காட்டியும்

புலம்பெயர்கின்றன

எழுபதப்பட்டவையெல்லாம்

றத்தலின்போது ஒத்துக்கொள்ளப்படுகிறது

இவன் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று.     

ஆக்கம்: பாண்டித்துரை