சிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 4

14 08 2009

சிங்கப்பூர் தமிழ் இலக்கிய கருத்தரங்கு

(ஜனவரி 2009)

முனைவர் திண்ணப்பன் அவர்களின் முயற்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழை விருப்ப பாடமாக படிக்கும் கல்லூரி மாணவர்களை கவிதை, சிறுகதை என்ற வெளிகளுக்குள் இழுத்துச் சென்று எழுத்தின் பிறப்பினை அறிமுகப்படுத்தியும், அதன்வழி பிறக்கவிருக்கும் வாசிப்பாளன், எழுத்தாளனை அடையாளப்படுத்தும் பணியுடன், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முதன் முறையாக அந்த மாணவர்களுடன் அவர்கள் வாசித்து ஆய்வு செய்த நூல் ஆசிரியர்களை சந்திக்கவைத்து கலந்துரையாடலாக சிங்கப்பூர் தேசிய பல்கலை கழகத்தில் நடைபெற்றது.

மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த முதல் மேடை அனுபவமாக இந்த நிகழ்வு இருந்திருக்க வேண்டும். ஆனாலும் எந்த பயமும் இல்லை. குழந்தைகளாகத்தான் இருந்தது எல்லோரின் பேச்சும். இவர்களில் ஓராண்டிற்கு பின்னும் எத்தனை பேர் வாசிப்பினை தொடர்கின்றனர் என்பது எப்போதும் என்னுள் எழுகின்ற கேள்விக்குறியாய். கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடதக்க ஓரிரு எழுத்தாளர்கள் உருவாகியிருக்கின்றர் என்று சொல்லாதது பெரிய வருத்தத்தை தோற்றுவிக்கப்போவதில்லை.

 எழுத்தாளர்களின் முன் மாணவர்களால் வாசிக்கபட்ட ஆய்வுக்கட்டுரையை உள்வாங்கி பின் அதன் எண்ணங்களை தன் சுயம் பற்றியும் மௌனித்தும் பேசிய எழுத்தாளர்களை காணவாவது அடுத்த ஆண்டு அதீதமான பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் பாண்டித்துரை





சிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 1

6 08 2009

(பெப்ரவரி-09)

“பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்”

 

தங்கமீன் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் மலேசிய எழுத்தார் சை.பீர்முகம்மது அவர்களின் “பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும”; சிறுகதை நூல் வெளியீடு சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய ஆதரவுடன் பெப்ரவரி-09ல்  வெளியிடப்பட்டது.  பாலுமணிமாறன் எழுதிய கவிதையை தேசிய அளவிலனா நான்குமொழி பாடலில் தமிழ் பாடலுக்கு இசையமைத்த குணசேகரன் குரலில் இசையுடனான தமிழ்தாய் வாழ்த்தாக பாடியதுடன் நிகழ்வு தொடங்கியது.

 

நிகழ்வினை முன்னின்று நடத்திய பாலுமணிமாறனின் வரவேற்புரையையும் நன்றியுரையையும் தொடர்ந்து ஜோதி. மாணிக்கவாசகம் அவர்கள் நூலினை அறிமுகப்படுத்தினார். எல்லாக்கதைகளிலும் ஏதோ ஒரு ரூபத்தில் உள் நுழையும் கள்ளுக்கடையில் தொடங்கி, சிகப்புவிளக்கு, மயான கண்டம், அசுணப் பறவை, உக்கிரப் பாம்பு என்று இருபது சிறுகதைக்குள் பொதிந்திருக்கும் நட்பு பெண்ணுரிமை என்ற பலவித கருத்துகளின் மையஓட்டத்தை தொடுவதாக அமைந்திருப்பதாக நான் சொல்வது எல்லாம் இருபது கதைகளின் வாசகனாக என்ற நூலாய்வு வாசக பகிர்தலாக அமைந்தது.

 

  நிகழ்வில் சென்னையில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் அயலக தமிழர்களில் தமிழ் பணி செய்தமைக்காக திமுக இலக்கிய அமைப்பு வழங்கிய முதல் அயலக தமிழருக்கான அண்ணா விருதை பெற்ற தொழிலதிபர் போப்ராஜ் அவர்களுக்கு, மலேசிய எழுத்தாளர்கள் கையெழுத்திட்ட நினைவுப்பரிசினை வழங்கி கௌரவித்தனர். பின்னர் பேசிய கவிஞர் அமலதாசனின் தலைமையுரை, பள்ளிமாணவர்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனையாக அமைந்தது.

 

  கவிஞர் அமலதாசன் அவர்கள் நூலினை வெளியிட, முதல் பிரதியை முறையே முஸ்தபா அறக்கட்டளையின் தலைவர் முஸ்தபா அவர்களும், செல்லாஸ் உணவக உரிமையாளர் மா.அன்பழகனும் பெற்றுக்கொண்டனர்.

 

 

“இவன் நட்ட மரங்கள்

 

இவன் நட்ட ரப்பர் மரங்கள்

 

நிமிர்ந்து விட்டன

 

இவன் நடும்போது

 

குனிந்தவன்தான்

 

இன்னும் நிமிரவில்லை”

 

என்ற வரிகளை எழுதிய மலேசிய எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்கள் நூலாசிரியர் சை.பீர்முகம்மது பற்றிய அறிமுகத்தை சொல்லி, மூன்று தொகுதிகளாக வெளிவந்த “வேரும் வாழ்வும்” என்ற மலேசிய சிறுகதை தொகுப்பிற்கு எடுத்துகொண்ட முயற்சிகள் அதற்கு மேற்கொண்ட பயணங்கள், இருபத்தைந்து ஆண்டுகள் பெரிதாக ஏதுவும் எழுதாமல் ஒதுங்கியிருந்து மீண்டு வந்தபோது மாறிவிட்ட நவீன இலக்கிபோக்கிற்கு ஏற்றவாறு தன்னையும் மாற்றிக்கொண்டவர் சை.பீர் என்பதாக அமைந்தது.

 

                முனைவர் ரெத்தின வேங்கடேசன் வழிநடத்த நூலாசிரியரின் உரையுடன் தொடங்கிய கலந்துரையாடலில் “வெடித்த துப்பாகிகள்” எனும் சிறுகதையை பாடமாக கொண்ட சிங்கப்பூர் மெக்பர்சன் உயர்நிலைபள்ளி மாணவர்கள் பலர் ஆர்வமாக கலந்துகொண்டதுடன் கலந்துரையாடலில், கேட்ட எப்படி ஒரு சுவரஸ்யமான சிறுகதையை எழுதுவது, இந்த சிறுகதைக்கு எழுத எடுத்து கொண்ட கால அளவு, கதை கரு எங்கிருந்து கிடைத்தது, என்பது உட்பட பார்வையாளராக வந்திருந்தவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

  இங்கு வந்திருக்கும் நீங்கள் எல்லாரும் எழுத்தாளராக முடியும் உங்கள் மனதோடு நீங்கள் பேசத்தொடங்கும் போது, என்பதை மையப்படுத்தி எல்லோரும் விரும்பக்கூடிய பேச்சாக  மலேசியாவின் தென்றல் வாரஇதழ் ஆசிரியர் வித்யாசாகரின் சிறப்புரை அமைந்தது.

 

○ பாண்டித்துரை

©pandiidurai@yahoo.com





டோ டோ பறவையின் ஞாபகங்களுடன்

22 06 2009

கடந்த ஞாயிறு 14.06.09 மாலை 4.30மணியளவில், இரு மலேசிய எழுத்தாளர்களின் நூல் அறிமுகத்துடன் நவீன எழுத்துகள் சார்ந்த புரிதலுக்கான கலந்துரையாடலாக சிங்கப்பூர் தேசிய நூலகவாரியத்தின் 16வது (POD) மாடியில் எழுத்தாளர் பாலுமணிமாறனின் ‘தங்கமீன்’ பதிப்பக ஏற்பாட்டில் நடைபெற்றது.

உள்நுழைந்து வெளிரும் வரையில், பார்வையாளர் வருகையில் இருந்து நிழ்வில் நிறையவே வித்தியாசங்களை உணரமுடிந்தது. நிழவின் முதலாக தங்கமீன் பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் பாலுமணிமாறன் வாழ்த்துரையும், நன்றியுரையையும் ஒருங்கே சொன்னார்.

பின்னர் பேசவந்த சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அவர்கள் “நவீனவாதம் ஒரு பகிர்வு” எனும் தலைப்பில், அவருள் இன்னும் முழுமைபெறதா நவீனத் தேடலை மேலைநாடுகளில் தொடங்கி, தமிழக எழுத்துகளின் மீதான நவீனத் தோன்றலுடன், ஈழ இலக்கியங்களின் நவீன வாழ்வியலையும், மலேசிய சிங்கப்பூர் நவீன வாதம் என ஐந்து கட்டங்களாக பிரித்தளிக்கபட்ட கட்டுரையை நிறைவுசெய்தபோது அறிவியல் சமன்பாடுகளாக பரிணமித்து பார்வையாளர்கள் முன் சிக்கலான பிம்பத்தையே தோற்றுவித்தது.

நவீனம், பின்நவீனத்தின் கூறுகளை எழுத்தாளர் சித்ரா ரமேஷ் பல்வேறு வண்ணச்சிதறல்களாக நவீன உலகின் வாழ்வியலையும், அதே வாழ்வியலை சங்ககாலத்திற்கும் எடுத்துச் சென்று இன்றைய, இயல்பான எதார்த்தமான விசயங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றுச்சொல்லி பள்ளிக்கூடம், பெண்ணியம் ஊடாகங்களை கடந்து பல்வேறு இசங்களைச் சுட்டி சொல்லப்பட்ட செரிவான செய்திகளை வாசகர்கள் உட்புகுந்து வந்தார்களா என்பதைவிட, கடைசியில் சொல்லப்பட்ட டோ டோ பறவையின் ஞாபகங்களை எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்திருக்ககூடும். அன்றைய இரவு உறக்கத்தில் டோரா புஜ்ஜியாக டோ டோ பறவையும் அதன் அழிவால் எப்படி டோ டோ மரங்களும் இன்று நம்மிடையே வெறும் பெயர்களாக இருக்கிறது என்ற பிம்பங்களைச் சுமந்து விடியும் வரையில் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

பின்னர் எழுத்தாளர்களே நூலினை அறிமுகம் செய்யும் நிகழ்வு அரங்கேறியது. 700 சிறுகதைகள் எழுதிய மலேசிய எழுத்தாளர் ஏ.தேவராஜன் அவர்களின் ‘அரிதாரம் கலைந்தவன்’ எனும் முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட எழுத்தாளர் புதுமைத்தேனீ அன்பழகன் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர். அதன்பின் பரவலாக கவனம்பெற்றிருக்கும் மற்றொரு மலேசிய இளம் எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது ‘கடவுள் அலையும் நகரம்’ முதல் கவிதை தொகுப்பை வெளியிட மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரான் பெற்றுக்கொண்டார்.

Devarajan Book Launch

‘எனது மேடு பள்ளங்கள்’ எனும் தலைப்பில் அரிதாரம் கலைந்தவன் எனும் சிறுகதை புத்தகத்தை எழுதிய மலேசிய எழுத்தாளர் ஏ.தேவராஜன் 80-களின் தொடக்கத்தில் இருந்து எழுதிய சிறுகதைகளின் வெளியையும், பரிச்சார்த்தமான முயற்சிகளை மேற்கொண்ட சிறுகதைகளுடன் சிறுகதைகளுக்கான கூறுகளையும் எடுத்துக்காட்டி இது நவீனமாக என்று சிறுகதையை படித்துப்பார்த்து புரிந்துகொள்ளுங்கள் என்றபோது எல்லோருக்குள் ஒருவித இறுக்கம் சுமந்துகொண்டது. அந்த இறுக்கங்களையெல்லாம் தனக்குள் மற்றொரு திறமையை பொதித்து வைத்திருந்த 70ற்கும் மேற்பட்ட குரல்களில் பேசும் ஏ.தேவராஜன் சிலகுரல்களில் பேசிக்காட்டியபோது தங்களின் இறுக்கங்களையெல்லாம் மறந்து சிரித்துக்கொண்டிருந்த பார்வையாளர்களுடன் 16வது மாடிக்கட்டிடம் கொஞ்சம் சிலிர்த்துத்தான் போயிருக்ககூடும்.

Bala Book Launch

‘கடவுள் அலையும் நகரம்’ எனும் தனது முதல் கவிதை தொகுப்பை அறிமுகப்படுத்திய மலேசிய இளம் எழுத்தாளர் கே.பாலமுருகன் ‘நானும் எனது கடவுள் அலையும் நகரம்’ எனும் தலைப்பில் ஆரம்பகாலத்தில் கவர்சியான காதல்கவிதைகளை எழுதி சுற்றிக்கொண்டிருத்தவன் என்று பட்டவர்தனமாக ஆரம்பித்து, தற்செயலான நிகழ்வாக கல்லூரிக் காலகட்டத்தில் வாசிக்கபட்ட நவீனம் சார்ந்த எழுத்தாளர்களைசுட்டி மறுவாசிப்பின் வழியேதான் அவர்கள் முன்வைத்த சிக்கல்களை, புரிதல்களை எனக்குள் கிரகிக்கமுடிந்தது என்றும், தனது கடவுள் அலையும் நகரத்தின் கடவுள் என்பது ஒரு குறியீடு, அந்த குறியீடு தனது இயல்பு வாழ்க்கையை சிதைத்து வாழ்ந்துகொண்டிருக்கிற மனிதர்களே என்பதை சில கவிதைகளின் வழியே புனிதபிம்பங்களையும், மனிதனை உற்பத்தியாக மாற்றும் நகரத்தின் பரபரப்புகளையும் உணர்வு சார்ந்து உடைத்தெறிந்தார். இருப்பினும் என்னற்ற வளர்ச்சிகளை தனக்குள் உள்ளடக்கி வானுயர்ந்து வளர்ந்திருந்த கட்டிடத்திற்குள் நின்றுகொண்டு இன்றும் ஆடுகளை வெட்டிக்கொண்டிருக்கறார்கள், இராமர்பாலம் என்றுச் சொல்லி முடக்கப்பட்ட திட்டங்களை முன்வைத்து வாழ்தலுக்கு சாத்தியமில்லாத எழுத்து படைப்பில் மட்டுமே நவீனத்தை உள்ளடக்கியிருக்கிறது, மாற அன்பு மட்டுமே நிரந்தரமானது அன்பாக இருங்கள் என்றபோது இவருக்கு முன் வந்தவர்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியதை பார்வையாளர்கள் உணர்ந்திருக்க்க் கூடும்.

பரவலாக எதிர்பார்க்கப்பட்ட கலந்துரையாடலின் துவக்கத்தில் மலேசிய மூத்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது சிங்கப்பூரின் பழமையை ஞாபகப்படுத்தி எது நவீனம் பின்நவீனம் என்றால் எல்லாமே மக்கள் விரும்பவேண்டும் என்பதை மனதில் வைத்து படைக்கவேண்டும் என்றார். இடையிடையே எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்கள் சை.பீர்முகமதுவின் கருத்துகளுக்கு பெண்ணியம் சார்ந்த சில கருத்துகளை முன்வைத்தார். பின்னர் தொலைபேசிவாயிலாக ‘கொரியா கண்ணனிடம்’ எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் சில கேள்விகளை முன்வைத்தார் பார்வையாளர்களும் தங்களுக்குள் எழுந்த சந்தேகங்களை கேட்டறிந்தனர். இவரைத்தொடர்ந்து தமிழக எழுத்தாளர் ‘உயிர்மை’ இதழ் ஆசிரியர் ‘மனுஸ்யபுத்திரனுடன்’ தொலைத்தொடர்பை ஏற்படுத்த பின் நவீனம் பின்பின் நவீனம் என்று நகர்ந்துவிட்ட சூழலில் நவீனக் கவிதைகளை மறுவாசிப்பு தொடர்ச்சியான வாசித்தலின் வழியேதான் அடையாளம் காணமுடியும் என்றபோது நகரவாழ்வின் பரபரப்பில் தங்களின் சுயத்தை இழந்துகொண்டிருந்த மனிதர்கள் கலைந்துசெல்லத் துவங்கியிருந்தனர்.

தங்கமீன் பதிப்பகம் வெளியீட்டு புத்தகங்கள் ஒவ்வொன்றும் படைப்புசார்ந்தும் ‘கலவை’ சிறுகதைதொகுப்பின் ஒரு நாள் நிகழ்வு, ‘பயாஸ்கோப்காரன்’ வழியே மலேசிய எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல், இன்று புரிதலை நோக்கிய பயணம் என்று சிறு சலனங்களை ஏற்படுத்தும் நிகழ்வாகவே முன்னெடுத்துச் செல்லும் இந்தப் பயணம் விமர்சனங்களை கடந்தும் தொடரவேண்டும்.

தனி மனிதர்களாக நகர்த்திக்கொண்டிருக்கும் இந்த மலேசிய சிங்கப்பூர் இலக்கிய நிகழ்வுகள் ஒரு குழுவாக அல்லது இன்னும் சிலர் சேர்ந்து இயங்கும்போது கூடுதலான இடப்பெயர்வுகளை உருவாக்கலாம். உருவாக்கப்படவுண்டிய சிங்கப்பூரின் தமிழ் இளம் எழுத்தாளர்கள் டோ டோ பறவையின் ஞாபகங்களாக ஆக்கப்படுவதற்கு முன் வாசிப்பதற்கு சிறந்த களத்தினை ஏற்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் அரசின் செயல்பாடுகள் அர்த்தம்பொதிந்த கனவாக….

பாண்டித்துரை