கடிதம் - 1

22 07 2008

அன்புள்ள  பாண்டி

 

பேசிக்கொண்டிருப்பது வாசு, உங்களது மின் அஞ்சலை பார்த்துவிட்டு, எழுதாத கடிதத்தின் ஞாபகம் வர அமர்ந்துவிட்டேன். சம்பவங்களில் இருந்து கவிதை தேடும்போது சம்பவத்தின் சக மனிதன் கவனிக்கப்படுவதும் நாம் கவிதை தேடும் வேட்டைக்காரனாகவும் மாறும் சாத்தியம் உண்டு. மனதை ஆட்டிப்படைக்கின்ற சம்பவம் நடக்காத ஒரு நாளில் மண்டை முடியை பிய்துக்கொள்ளும் அவஸ்தையும் நிகழக்கூடும் ( இடைவிட்டு மீண்டும் எழுதுகிறேன். வீட்டிற்கு வந்துவிட்டேன்.)

 

இந்தக் கடிதம் ஏன் கிழிந்தது என்பதிலிருந்துதான் இந்த கடிதம் தொடங்கியிருக்கவேண்டும். இந்த கடிதத்தின் நீள, அகல போதமை என்னை கட்டுப்படுத்துவதை உணர்கிறேன். இன்று நான் எழுதும் இரண்டாவது கடிதம். கடந்த இரண்டு வருடத்தில் இருந்தே நான் எழுதும் இரண்டாவது கடிதம் இதுதான். முகிலுக்கு எழுதப்பட்ட முதல் கடிதத்தில் நிறையவே எழுதிவிட்டேன். அந்த கடிதத்தின் காப்பி இதில் வந்துவிடக்கூடாது என்று கவனமாக எழுதுகிறேன்.

 

நாம் தொலையாடியிருந்தாலும் (உங்களிடம் சுட்டது) சிறு அறிமுகம் நமக்குள் இருந்தாலும் இதுவே நமது நேரடி சந்திப்பாக நான் நினைப்பதால் என்னைப்பற்றின வலுவான ஒன்றை உங்களிடம் காட்டி சபாஷ் வாங்கிட நினைக்கிற முட்டாள்தனம் வந்துவிட்டது. மூன்றாவது பாட்டில் பீரும் மூன்றாவது முத்தமும் பால்யத்தின் கனவுகளை அல்ல பால்யத்தையே கொண்டுவரும் (இந்த எடத்தில் கடிதத்தை கிழிக்கும்பொழுது ஒரு வரி கிழிந்துவிட்டது) கொண்டவையோ அடுத்த முறை மூன்றாவது பாட்டில் பீரை முயற்சி செய்யவும். (எழுத்து பிழைகளோடு கொஞ்சம் கருத்து பிழையும் இருக்கும் மன்னிக்கவும்) படித்ததுவரை ஒரே ஒரு கவிதை தவிர்த்து உங்களை கவிஞனாக அடையாளப்படுத்துகிறது. (அந்தக் கவிதை நியாபகமில்லை பண்ணும்போது சொல்கிறேன்) பால்யத்தின் கனவுகளுக்காக நீங்கள் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம் காதல் கவிதைகளில் பழைய நெடி இருந்தாலும் ரீமிக்ஸ் பாடல் போல் இல்லை. காதலை ஆணிவேர் சல்லிவேர் அக்குவேராக பிரித்து எரிந்துவிட்ட தமிழ் சமுகத்துக்கு நாம் காட்டும் வேரும் அதில் ஒன்றாகவே கட்டாயம் இருக்கும். தமிழ் சமூகம் காதலை விட்டு ஒதுங்கி மீண்டும் புதிய காதல் செய்ய தொடங்கும்போது அது வாய்க்கலாம். அதுவரை யாரோ எடுத்து எறிந்த ஏதோ ஓர் வேர் நம் கைகளில் இருந்துகொண்டுதான் இருக்கும். உங்களின் கட்டுரை சிலரை படித்தேன். மிக அருமை சிறுகதைகளை இன்னும் படிக்கவில்லை அலுவலகத்தில் கொஞ்சம் கெடுபிடி அதிகமாகிவிட்டது. போன மாதம் வந்த எங்கள் மேனேஜரை விழித்துக்கொள்ள வைத்துவிட்டது. உங்கள் போட்டோ பார்த்தேன் ரொம்ப சின்னதாகவும் கொஞ்சம் அழகாகவும் ரொம்ப ஒல்லியாகவும் (இது மட்டும் கவிஞர்களுக்கான பொது அடையாளம்)

தூரத்தில் இருந்து என்னை பார்த்தால் உங்களைப்பலவும் (ச்சே சே.. ரொம்ப அழுகுன்னே எழுதியிருக்கலாம்) இருக்கிறீர்கள். கடிதம் முடிந்துவிட்டது. நிஜமாகவே எப்ப முடியும் என்று காத்திருந்தேன். இன்னும் சிலநாள் ஆகும் மிக ஆர்வத்துடன் ஒரு கடிதம் எழுத பாசம் பழக்கம்தானே!

 

அன்புடன் வாசு

 

கடிதத்தின் பக்கவாட்டில் எழுதப்பட்டது

சிங்கப்பூரில் குளிர் அதிகமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் வெயிலும் வெயில் அதிகமாக இருப்பதாக நினைத்தால் குளிரும் கொடுக்கும்படி இறைவனை வேண்டுகிறேன்.

 

நலம் நலமறிய ஆவா எழுத மறந்துவிட்டேன்.





“கூட்டாஞ்சோறு”

22 07 2008

 

எழுதவந்து எத்தனைநாளாயிற்று, என்ன இதுவரை எழுதியிருக்கிறோம் என்றெல்லாம் யோசித்திடாமல், என்னோடு இசையக்கூடும் என்றறிந்த 8-நண்பர்களிடம் ஒரு வருடத்திற்கும் முன்னால் பேசியபொழுது கூட்டாஞ்சோறு ஆரம்பமாகியது.

 

மரபு, புதுக்கவிதை, நவீனத்தைநோக்கிய பார்வை என பலரின் கவிதைகள் ஒருங்கே தொகுத்தால் எல்லோருக்குள்ளும் ஒரு நினைவு, நிறைவு இருக்கக்கூடும் என்றெண்ணியபொழுது, சிதைவுறும் கனவுகளாய் சில பிரச்சினைகள். ( ஒவ்வொரு பிறப்பின் ரகசியமும் பிரச்சினைகளை கடந்தபின்னர்தானோ!? ) காரணம் சொல்லாமல் இரண்டு நண்பர்கள் விலகிட, காரணத்தைச் சொல்லி ஒரு நண்பர் விலகிட, இன்னொரு நண்பரோ செல்லாது, செல்லாது; நான் என்னத்தைப்பா கவிதை எழுதிட்டேன். ஏதோ இங்க வரணும் உங்களைப் பார்க்கணும்! அதுக்காக எழுதுவதாக சொல்ல, இதன் பின்னர்தான் யோசிக்கத்தோன்றியது……

 

கூட்டாஞ்சோறு இப்படியாகத்தான் பின்னர் உருமாறியது படைப்பின் பிரம்மா-க்களாக. நான் (பாண்டித்துரை), கோட்டை பிரபு, செல்வா, காளிமுத்துபாரத் ஆகிய நால்வரும் கவிதைகளையும், கத்தைகளையும் சமமாகப் பகிர்ந்துகொண்டோம். கவிஞர்கள் பிச்சினிக்காடு இளங்கோவும், .வீ.விசயபாரதியும் வாழ்த்துரையும், அணிந்துரையும் தந்துவிட முகப்பு ஓவியத்திற்காக மட்டுமே ஆறு மாதகாலத்திற்கும் மேலான காத்திருப்பு. ஓவியம் தருவதாக ஒப்புதல்தந்த நண்பரோ பணிச்சூழல் காரணமாய் பறந்தபடியிருக்க பிரம்மா பிறப்பானா என்ற கேள்விக்குறி என்னிலும் என் பின்னணியிலும்………..

 

செல்வாவும், காளிமுத்துபாரத்தும் நான் எது சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி என்ற மனநிலையில். கோட்டைபிரபு மட்டும்தான் சாதக பாதகங்களை கொஞ்சம் அலசிப்பேசுவதாய் என்ன பாண்டி தொடருவோமா வேண்டாமா என்று………

 

முடியாதபட்சத்தில் கலைத்திடுவோம் என்பதாக ஜனவரித் திங்கள் ஒருநாள் இன்னும் மூன்று மாதங்கள் பொறுத்திருப்போம் என்று அவன் முகத்தைப் பார்க்காதவனாய் முன்மொழிந்தேன்.

 

அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் எல்லாம் கவிஞர் அய்யப்பமாதவனால்! சென்னை - தஞ்சைக்கு இடையேயான சில பயணங்கள், ஓவியம் அச்சாக்கப்பணி என்று ஒவ்வொன்றையும் தனதாக்கிக்கொண்டு பிரம்மா அச்சுக்கோர்ப்பதிலிருந்து அழகாய் வெளிவருவதுவரை எங்களுக்கான கவலைகள் யாவற்றையும் சுமந்துகொண்டார்.

 

சசியும், சின்னாவும், அறிவும்- கூடத்தான் அவ்வப்பொழுது பிரம்மா பிறத்தலின் ரகசியங்களை அறியத்துடிப்பதாகவும், இடைஇடையே குங்குமப்பூ, குமட்டும் மருந்துகள் என்று ஆலோசிப்பதாகவும் இருந்த

 

பிரம்மா

 

இதோ இன்று ( 20.07.08 )  சப்பரத்தில் ஏற்றப்பட்டு உங்களின் முன்னே வலம்வந்துகொண்டிருக்கிறான். இன்முகம் காட்டி பிரம்மனைச் சுமந்தபடியே .வீ.சத்தியமூர்த்தி, கண்டனூர்சசிகுமார், சின்னபாரதி, அறிவுநிதி, மணிசரவணன் என்று முகம்காட்டா இன்னும் எத்தனையோ கவிநண்பர்கள்………

 

பிரம்மா பிறக்கும்பொழுது அதன் தொடர்ச்சியாய் கனத்த மழையையோ, கனத்த வெயிலையோ நாளை தோன்றுவிக்கலாம்

 

குழந்தைக்கான குதூகலத்துடன்

பாண்டித்துரை





சொல்லப்படாத மௌனங்களினூடே

22 07 2008

 

                                                                        (01.06.08 அன்று சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்ற கவிஞர் மாதங்கியின் நாளை பிறந்து இன்று வந்தவள் கவிதை நூல்வெளியீட்டில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்கள் பேசியதன் சுருக்கமான பகுதி உங்களுக்காக)

 

எதைபற்றி வேண்டுமானலும் பேசுங்கள் என்று நூலாசியர் அற்புதமான ஒரு சுதந்திரத்தை எனக்கு கொடுத்தார்கள். ஆனால் சுதந்திரம் என்று கிடைத்ததுமே பொறுப்பு வந்துவிடுகிறது  என்றுச் சொல்லி வாழ்க்கை இலக்கியம் என்ற தலைப்பில் அவர் பேசியவை

 

 

நவீனத்துவவாதிகள் மரபை எதிர்ப்பதில்லை. மரபின் நீட்சியாகத்தான் நவீனத்தை பார்க்கிறார்கள். நவீனத்துவம் என்கிற ஒரு விசயத்தை நாம் உணர ஆரம்பித்துவிட்டால் எந்த ஒருவிசயமும் நமக்கு புரிபடாமல் இருக்கப்போவதில்லை, ஏன் என்றால் அதில் சொல்லப்படாத மௌனங்கள் இருக்கிறது. அந்த மௌனத்தை உணர்வது எப்படி என்பதை  சின்ன ஒரு வழிமுறையாக நான் காட்டுகிறேன். இதை நீங்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்பது எல்லாம் கிடையாது. இது  நவீனத்துவம் நமக்கு கொடுக்கும் சுதந்திரம். நமக்கு கொடுக்கப்பட்ட அற்புதமான பொறுப்பு. இந்த பொறுப்போடு அணுகும்பொழுது நவீனத்துவம்  என்பது உங்களுக்கும் புரியும்.

 

இலக்கியவாதிக்கும் வாசகனுக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளிதான் உள்ளது, அதை எப்பொழுது வேண்டும் என்றாலும் இருவரும் தாண்டிக்கொள்ளலாம்