கண்ணை கசக்கி கொண்டு
விடியல் ஆரம்பமாகிறது.
வரவேற்கும் வண்ணமாக
விழியோரம் நீர்திவளைகள்!
காலையின் அவசரத்தில்
அவியும் இட்டலியுடன் சேர்த்தே
அவளும் கவனிக்கப்படுகிறாள்.
பரபரப்பாய் நகருகிறது.
9 மணிக்கு
கன்னத்தில் முத்தம்,
கையில் இரண்டு சாக்லெட்டுடன்
தாழ்ப்பாள் போடப்படுகிறது.
சுவர்களின் மத்தியில்
அவளின் உலகம் சுழலத் தொடங்குகிறது
தேடல்களில் கிடைக்கிறது
வீடு நிறம்ப வெறுமை.
கையில் இருக்கும் டெடீபீருடன்
கதைக்கத் தொடங்குகிறாள்.
கண்ணை மூடிக்க
இல்லனா பூச்சாண்டி வந்துரும்,
பப்புக்குட்டி அழக்கூடாது,
அம்மா செல்லம்ல.
ஏதோ நினைவுக்கு வர
பால் புட்டியை எடுத்து
நாவினை எச்சில்படுத்துகிறாள்.
கதவுகளின் பின்னே
கடந்து செல்லும் வண்டிச்சப்தமும்,
இன்னபிற இத்யாதிகளும்
இவளை கண்டுகொள்வதில்லை
மறதியில் தூங்கிவிட்டவள்
எழுகிறாள்.
மணி 3 !
ஏதோ ஒரு வருத்தம் தென்படுகிறது.
ஞாபகம் வந்தவளாய்
பாத்ரூம் சென்று வருகிறாள் .
காய்ந்து போன
இட்டலியுடன் செல்லச் சண்டை,
கொஞ்சம் பால் என்று,
கண்ணை மூடி திறக்கிறாள்
வெள்ளைப் பற்களில் புன்னகையுடன்.
ஜன்னல் கம்பிகளுக்கு அப்பால்
உலகம் சிரிக்கத் தொடங்குகிறது.
கிளி ஜோசியக்காரன் கடந்து செல்கிறான்
தாழ்பாள் விடுவிக்கபடும் ஓசை
இப்பொழுது எல்லாம்
அவளை சென்றடைவதில்லை.
ஆக்கம்: பாண்டித்துரை