வேற்று கிரக ஜீவராசிகள்
வெப்பத்தை கக்கிக்கொண்டிருக்க
இந்த கானகத்தில்
இனி நிசப்தம் இல்லை என்று
நிச்சயிக்கப்பட்டுவிட்டதா?
நிச்சயமற்ற வாழ்வின்
கொடிய முகங்களை
பார்ப்பதை தவிர்த்து
கவலைதோய்ந்த முகம்
கண்களில் தேங்கிய உப்பு நீருடன்
கொஞ்சமாய் பிடி மண் எடுத்து
அணி அணியாய்
பறவைகள் பறக்கத் தொடங்குகின்றன
கூடுகளை விட்டு
வெளியேறும் பறவைகள்
கடும் வெப்பத்தால் வெந்தபடி
இறக்கைகள் ஒடிபட்டு
தத்தி தத்தியே செல்கின்றன
தாமதிக்கும் பறவைகளுக்கு
கானகமே மயானமாய்
அவதரித்த வண்ணம்
தொடர்கிறது
எங்கும் மரணத்தின் ஓலங்கள்
சப்தங்களை உள்வாங்கிக் கொண்டு
சமுத்திரம்
மௌன சாட்சியாய்
பார்த்து கொண்டிருக்க
கானகத்தின் அமைதிக்காய்
கடும் தவம் செய்யும் புலிகள்
வேடந்தாங்கல் சென்ற பறவைகள்
வெகு சீக்கிரம் திரும்பாது கண்டு
உறுமத் தொடங்க
அதன் சப்தங்கள்
கானகத்தை தாண்டியும்
எதிரொலிக்கிறது.
ஆக்கம்: பாண்டித்துரை