சிரிப்பவர்கள் சிரித்துவிட்டுப் போகட்டும்-சிறுகதை

qw1.jpg

  வீரையா 45 வயது இருக்கக்கூடும். பெக்கியோ சமுகமன்ற கவிமாலை நிகழ்வில் தான் முதன் முதலில் சந்தித்தது.       

என்னை இவர் எஸ்.பாஸ் உரிமத்தில் பணிக்கு இங்கு வந்திருக்கிறார் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் எல்லோரிடமும் அறிமுகப்படுத்தினார். எஸ்.பாஸ் உரிமத்தால் எனக்கு எந்த மகிழ்ச்சியும் கிடையாது. எனக்கு சந்தோசம் குடுக்காத ஒன்று இவருக்கு எப்படி குடுத்திருக்க முடியும்.  ஒரு வேளை அவருக்கு கிடைக்காத ஒன்று எனக்கு கிடைத்ததே என்ற மகிழ்ச்சியா?.      

 இப்ப நினைத்தாலும் அவர் எனக்கு ஆச்சர்யம்தான்.  பெரும்பாலான நிகழ்வுகளில் வீரையா பேசாமல் அமர மாட்டார். வீரையா வந்தாலே எல்லோருக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். சிலர்பேச ஆரம்பித்தால் ஆக வந்துட்டாருய்யானு எழுந்து செல்வதுண்டு அதில் அடியேனும் ஒருவன். ஆனா இதுவரைக்கும் வீரையா பேசுறத கேட்கிறதில இருக்கும் ஆர்வம் குறையல. ஒருவேளை எனக்கு மகிழ்ச்சியக் குடுப்பதாலேயே இருக்கலாம்.           

வீரையா கவிதை படிக்க ஆரம்பிச்சா குறைந்தது ஒரு பக்கமாவது படிப்பார்.  ஆனா, நான் முழுமையாக் கேட்டது கிடையாது சிரிச்சுகிட்டே இருப்பேன். தமிழ்நாட்டில் இருந்து கலை இலக்கியம் சார்ந்த எந்த ஒரு ஆளுமைகள்  வந்தாலும் ஒரு பொன்னாடையோட  ஆஜர் ஆவார்.  பல நேரத்தில படிக்கட்டோட திரும்ப நேர்ந்த அனுபவங்கள் அவருக்குண்டு.     

 நான் எழுத ஆரம்பித்த பிறகு நண்பர்களைச் சந்திக்கும் போது இவரு நண்பர், கவிஞர், எழுத்தாளர் என்று என்னை நண்பர்கள் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள் . நான் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறுவேன்.  அது எனக்குள்ளிருக்கும் வெறுமையாகவும் இருக்கலாம். ஆனால் வீரையா கொஞ்சமும் கூச்சப்படாம நான் கவிஞர் என்று அறிமுகபடுத்திக்குவார். அதானே இதில எதுக்கு கூச்சபடிவேண்டியிருக்கு வீரையாகிட்ட இருந்து நான் கத்துகிட்டது அதுதான். ஆனாலும் எனக்கு இன்னமும் அந்த கூச்சம் போகலை. முன்னாடிக்கு இப்ப பரவாயில்லை. 

வீரையாவை, நான் கவனித்த வரையில் அவருள் கவலைக்கான ரேகைகள்  முகத்தில் தென்பட்டதில்லை. எப்பவும் புன்னகைதான். ஒரு வேளை நாம் கவலை என்று கற்பித்துக்கொண்டது இவரிடத்தில் மாறுபட்டிருக்ககூடும் என எண்ணியதுண்டு.   

 வீரையா கவிதை படிக்கும் போது உலகம் தழுவிய செய்திகள் இருக்கும். படிமகவிதை, உரைநடை கவிதை என்று உள்ளது.  இது என்ன செய்திக் கவிதையா? என்று யாரும் கேட்டதில்லை.

      ஒரு முறை வீரையாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது உங்க வீட்டுக்கார அம்மா நீங்க எழுதுவதற்கு என்ன சொல்கிறார் என்ற போது, அவர் ?அவங்களுக்கு தேவை பணம் நான் அதை சரியா அனுப்பிக்கிட்டு இருக்கேன். அதனால அவங்க இத கண்டுக்கலை? என்றார்.

  நண்பர் ஒருவர் இவரெல்லாம் ஒரு ஆளாய்யா? என்னத்த எழுதிக் கிழுச்சிட்டார்? என்று சொன்னதா, ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.        அதானே! என்ன அவரு எழுதி கிழிச்சுட்டாரு. நான் வீரையாவைக் கவனித்த வரையில் வீரையா கவிதை படிக்கும் போது அதில் கவிதையுடன் ஒலி96.8 வானொலி,, வசந்தம் தொலைக்காட்சி, ஆனந்தவிகடன், தமிழ்முரசு இவற்றுடன் உலகம் தழுவிய சில தகவல்கள் இடம் பெறும். எப்படி இவரால் வேலைப் பளுவிற்கு இடையே இவ்வளவுக்கும் நேரம் ஒதுக்கமுடிகிறது.            தமிழ் இதழ்கள் படிக்காமல் தான் தோன்றியாய் திரியும் என் போன்றவர்களுக்கு, வீரையாவிடம் கேட்பதற்கு நிறைய இருக்கிறது.

 இன்னும் கொஞ்சம் தாண்டிப்போய் யோசித்தேன்! சிங்கப்பூரில் இப்படி ஆர்வமாக இருப்பவர்கள் எத்தனைபேர் இருக்கக்கூடும்! அதுவும் இந்த வயதில்,  நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் அளவு ஆர்வம் உள்ளவர்கள், அப்படியே கலந்து கொண்டாலும் யார் இருந்தால் நமக்கென்ன என்று மனதில் தோன்றியதை பலர்முன் பகிர்ந்து கொள்ளும் அந்த துணிவு! கண்டனூரான் சொன்னமாதிரி என்னா தைரியம் என்பதை நினைத்து வியந்தேன்!    

 எழுதுவது என்றில்லை ஆடல், பாடல் என்று எங்கு வாய்ப்பளிக்கபடுகிறதோ அங்கு வீரையாவைப் பார்க்கலாம். வாரஇறுதி நாட்களில் சிங்டெல் விற்பனை அங்காடியின் விளம்பரப்பகுதியிலோ, இன்ன பிற மேடைகளிலோ தேக்காவைச் சுற்றி நான் கவிஞன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் வீரையாவை ..

 ஒருமுறை இப்படித்தான் தக்கிலின் சமுக மன்றத்தில்          நடைபெற்ற பட்டுக்கோட்டையார் விழாவின் இறுதி போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது பிரிவுக்கான  பாடல் பாடும் போட்டி நடைபெற்றது.  450க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் உடன் பெற்றோரையும் அழைத்து வந்திருந்தனர். இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது நாம் நினைக்க கூடாது என்று நினைத்தாலும், ஊரின் ஞாபகம் என்னுள் முனுக்கென்று எட்டிப்பார்க்கும்..    

 என்னை நடுவராக அழைத்திருந்தமையால் உடன் நண்பன் கண்டனூரானை அழைத்துக்கொண்டு சென்றேன். நடுவர் எனும் பேருக்கு ஏத்த மாதிரி தம்பி இந்த அறையில் நீங்க இருங்க நாங்க தேவைப்படும் போது உங்களை கூப்பிடுகிறோம் என்றனர். அங்கு வீரையாவும் வந்திருந்தார். கண்டனூரும் வீரையாவும் தன்னார்வமாய் பொதுப்பணிகளை எடுத்துக்கொண்டு அங்கும் இங்குமாய் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்க நான் மட்டும் நடு அறையில். எனக்குத் தெரிந்து விட்டது இனி நம்மை கூப்பிடப்போவதில்லை என்று ஆனாலும் மனசு நீ தாண்டா நடுவர்! என்று சொல்லி நடு அறையைவிட்டு நகர மறுத்தது. கண்டனூரும் வீரையாவும் குழந்தைகள் பாடுவதை கேட்பது, நினைத்த நேரத்தில் சாப்பிடுவது என்று அனுபவிக்க நானோ வாட்டர் பாட்டிலுடன் திருப்திபட்டுக்கொண்டேன்.  விழா முடிந்து வந்தபின் அந்த விழா பற்றி நான் யாரிடமும் மூச்சு விடலை … 

      பள்ளி குழந்தைகளுக்கான போட்டி முடிந்ததும், நண்பகலுக்குப்பின் பொதுப் பிரிவு ஆரம்பித்தது. வீரையாவும் உணவருந்தும் போது ஆர்வமாக பட்டுக்கோட்டையாரின் பாடல் புத்தகத்தை எடுத்து கொண்டு சில வரிகளை வாசிக்க உடன் இருந்த குழந்தைகளுக்கான நடுவர் ஒருவர் உங்க குரல் நல்லாயிருக்கே பொதுப்பிரிவுல பாடுங்கலேனு சொல்ல ?நான் சிங்டெல் பாட்டு போட்டியில எல்லாம் கலந்து கொண்டிருக்கேனாக்கும்? என்றார் வீரையா.  நானும் கண்டனூரும் வீரையாவை அழைத்துச் சென்று போட்டி நடைபெறும் அறையில் அமரவைத்து வாழ்த்துக்கள் சொன்னோம் அடிக்கடி.  சுற்றியிருந்த பிற போட்டியாளர்கள் எங்களை கவனிக்கத் தொடங்கினர். குறிப்பாக வீரையாவை ,போட்டி ஆரம்பமாகி சிலர் பாடத்துவங்கினர்     

 வீரையாவின் முறை வந்தது எல்லோரிடம் ஆர்வம் அதிகமாகியது நடுவராக பணிபுரிந்த வெண்பா இளங்கோ ஆர்வமிகுதியால் வீரையாவை கவனிக்கத் தொடங்கினார். உன்னைக் கண்டு நான்ஆட என்னைக் கண்டு  என்ற  பாடலை பாடத்தொடங்கினார் பாருங்க பார்வையாளர்கள் எல்லோரும் எதற்கோ கட்டுப்பட்டதாக மௌனமாக இருக்க நானும் கண்டனூரும் அடக்கமுடியாமல் சிரிக்கத் தொடங்கினோம் கண்டனூரைவிட என் சிரிப்பு உச்சத்தை அடைவதையுணர்ந்து புத்தகத்தை வாகாக வைத்து மறைத்துவிட்டேன். பாடல் முடியும் வரை நானும் கண்டனூரும் அசையவில்லை கண்டனூருக்கு அவ்வளவு ஆர்வம்.  வெண்பா இளங்கோவைப் பார்க்கப் பாவமாக இருந்தது  அவசர கதியில் அவஸ்தைப்படுபவராக அவரது முகம் பலவிதங்களில் பரிணமித்தது.  இவை எதையும் கண்டுகொள்ளாமல் வீரையா கணீர் என்று பாடி முடிக்க சிரிப்பை வெளியில் கொண்டு விட நானும் கண்டனூரும் சிரி சிரி என்று சிரித்தோம் . உள்ளே இருந்தவர்கள் எல்லோரும்  அவர்களின் அறியாமையில் எங்களை மனதிற்குள் திட்டியிருக்க கூடும். வெற்றியாளர்களை அறிவித்தனர் வீரையாவின் பெயர் இடம் பெறவில்லை என்பதில் கண்டனூருக்குத்தான் அதிக வருத்தம்.    

  சிறிது நேரத்தில் அறிவிப்பு ஒன்று வந்தது பாடலாசிரியர் வைரமுத்து கலந்து கொள்ளும் இறுதிநாளன்று பட்டுக்கோட்டையாரின் பாடலை நடனவடிவில் அரங்கேற்ற பெயர் பதிவு செய்யும்படிக் கேட்டுக்கொண்டனர்.  முதல் ஆளாக வீரையா எழுந்தார் எனக்கு பரதம் எல்லாம் தெரியுமென்று. கண்டனூர் உடன் ஓடிச்சென்று வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் எந்த பாடலை எடுத்து எப்படி ஆடுவது என்று ஆலோசனை சொல்லத் தொடங்கினார்.  தடைபடுவதாகயிருந்த எனது சிரிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.    

ஒரு முறை வீரையா என்னிடம் சொன்னது ?நான் எழுதுவதை கவிதை என்று நினைத்து கொண்டு எழுதுகிறேன்? என்றார். ஆமாய்யா! குறீயீடு, பெண்ணியம், நவீனம், மரபு என்று எழுபவர்களுக்கு மத்தியில் கவிதையை எழுதிச்செல்லும் வீரையா… 

நான் சிரித்துக் கொண்டேயிருக்க வெள்ளைமனம் படைத்த வீரையா என்னைக் கடந்து செல்லத் தொடங்கினார்.   

பாண்டித்துரை – சிறுகதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s