திருப்பதி ஏழுமலை வெங்கடேசா……..
நீ எப்ப பிறந்தா எனக்கு என்ன சீ–னிவாசா…..
என்ன பாட்டுனு பார்க்கிறீர்களா. கடந்த வாரத்தில் எனக்கு வந்த 10க்கும் மேற்பட்ட குறுந்தகவல். தகவல் ஒன்றுதான் என்னனா திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு இன்று (இன்னைக்கு இல்லங்க) பிறந்தநாள் இந்த தகவலை அலட்சியப்படுத்தாமல் நீங்கள் உங்களின் நலம் விரும்பிகளுக்கு அனுப்பினால் உங்களுக்கு நல்லதே நடக்கும் என்று……….. . என்ன கொடுமை சார் இது
நேற்று இரவு நண்பர் ஒருவர் நல் இரவு எனக்கு போன் செய்திருந்தார். திடீரென்று நீதி உங்கள் அப்பா பிறந்த நாள் என்னைக்கு என்று தெரியுமா என்று கேட்டார். என்னப்பா இப்படினு மேலே என்அறையில் டைரியில் இருக்கு என்றேன் ( என் போன் நம்பரை ஞாபகத்தில் வைப்பது எனக்கு சிரமம். ஒரு சிலர் பக்கம் பக்கமா ஏத்தி வைச்சிருப்பாங்க அது அவங்களோட தனி திறமை). அப்படினா அம்மானு அடுத்த வீசினாரு. அம்மாவின் பிறந்தநாள் சரியா தெரியாதுங்க அம்மா பிறந்த மாதத்தில் ஒரு நாளை நாங்களே தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றேன். அம்மா பிறந்த வருசம் கூட முன்ன பின்ன இருக்கலாம் என்றேன். அட என்னப்பா இந்த நேரத்தில் என் அம்மா அப்பாவை கேட்கிறிங்க. வீட்ல ஏதாவது… அட நீங்க இப்ப நல்லாத்தானே இருக்கிறிங்க என்றேன்.
இல்ல நேற்று எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு பிறந்த நாளு என்று . உங்களுக்குமா என்று சொல்லி முடிப்பதற்குள், நான் உங்க நண்பர்தானே என்றார். எனக்கு செய்தியை அனுப்பிய நண்பருக்கு நான் தொடர்பு கொண்டு உங்க அம்மா அப்பா பிறந்தநாள் தெரியுமா என்று கேட்டேன் . தெரியாது என்று சொல்லிவிட்டார் . சரி பெருமாளு பிறந்தநாளு எப்படிடா உனக்கு தெரியும் என்றேன். பசங்க அனுப்புனாங்க அண்ணானு சொன்னான் , நான் அதுக்கு உன்ன பெத்தது உங்க அப்பன் ஆத்தா அவங்கதான்டா உனக்கு முதல் தெய்வம் உண்மையான தெய்வமும் கூட முதலில் அவங்க பிறந்தநாளை தெரிஞ்சுக்க அப்படினு சற்று கடுமையா பேசிட்டேன். பாவம் அந்த பையன் இந்த அண்ணனுக்கு அனுப்புனதுக்கு இப்படி வாங்கிகட்டிக்க வேண்டியிருக்கு என்று நினைத்திருக்கலாம் என்று அந்த தம்பியிடம் கடுமையாக பேசியதற்கு என்னிடம் வருந்தி பேசினார்.
சரி நண்பா உனக்கு இதே குறுந்தகவல் எத்தனை வந்தது என்றேன். ஒரு 5 அல்லது 6 இருக்கும் என்றார். எத்தனை பேர்கிட்ட இதுமாதிரி கேள்விகேட்டிங்க என்றேன். அந்த தம்பிக்கிட்ட மட்டும் இப்ப உங்ககிட்ட ஆனா நீங்க குறுந்தகவல் அனுப்பவில்லை என்றார். நண்பா உன்னை பற்றி புரிந்துகொள்ளகூடியவர்களிடம் தான் நீ கடுமையாகவும் இருக்கமுடியும் அன்பாகவும் இருக்கமுடியும் என்றேன். அதனால அந்த தம்பி வருந்தமாட்டான் என்றேன். சரி உங்க குலசாமி பேரு என்ன அப்படினு கேட்டாரு அட இது என்னடா என்று காளி என்றேன். இரவு மணி 1-க்கு ம் மேல் இந்த பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. எனக்கு மதுரைவீரன் என்றார். சரி உங்க காளி எப்பங்க பிறந்தாங்கனு அடுத்து ஒரு துண்டை இல்ல குண்ட போட்டாரு. (ம் இது சரிபாடாதுனு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு ) டேய் நண்பா எனக்கு இன்னும் சரியா ஞாபகத்தில் இருக்கிறது என் பிறந்தநாளுதான் ஆனா அதுகூட இப்ப விடிஞ்சா ஞாபகத்தில் இருக்குமா என்று தெரியவில்லை என்றேன்.
அப்புறம் நான் சொன்னது எங்க காளி சூளி எல்லாம் நம்ம பாட்டன் பூட்டன்–க. அப்பா, அம்மா பிறந்தநாளே தெரியாதப்ப இது எப்படிங்க தெரியும் என்றேன். இல்ல இவங்களோட நம்பிக்கையை நான் குறைசொல்லவில்லை இந்த முட்டாள்தனமான நம்பிக்கையெல்லாம் என்னபண்ணுறது என்று என் தலையில் ஏத்திவிட்டு நண்பர் தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார். அப்புறம் எனக்கு எப்படிங்க தூக்கம் வரும். துக்கம் தான் வந்திச்சு!
எங்க ஊருல துண்டுச்சீட்டில் எழுதி அல்லது அச்சடிச்சு இதுபோன்ற தகவல்தாங்கிய செய்தி வரும். இப்ப டெக்னாலஜி வளர்ந்துவிட்டதுல அதான் குறுந்தகவல் என்று நினைத்து கொண்டேன். இதுவரைக்கும் எனக்கு மின்னஞ்சல் வரலைங்க. இந்த கட்டுரையை படித்துவிட்டு நலம் விரும்பிகள் யாரும் அனுப்பகூடும்க.
சிங்கப்பூரில் பணிச்சூழல் காரணமாக நண்பர்களை மாதம் ஒருமுறை சந்திப்பதே ஆபூர்வம். சந்திப்பது மட்டுமல்ல தொ(ல்)லைதொடர்பு குறுந்தகவல் என்று எல்லாமேங்க. நாமா போன் பண்ணினா மச்சான் உனக்கு போன்பண்ணனும் என்று நினைச்சேன் நீயே பண்ணிட்ட அப்படிப்பான். சரி எப்ப நினைச்சா என்றால் தினமும் என்பான் அப்படியே 3-மாசம் ஓடியிருக்கும். ஆனா இதுபோன்ற குறுதகவல் மட்டும் சுட சுட அனுப்பிறாங்க நம்ம பயபுள்ளங்க.
இதுல என்ன கொடுமை சார்னா இந்த குறுந்தகவலை அனுப்புவதில் இரண்டு ரகம் இருக்காங்க 1. நல்ல படித்தவர்கள், நல்ல வேலையில் அதிலும் அற்புதமா சிந்திக்ககூடியவர்கள் ( என்று நான் நினைத்திருந்தவர்கள்) 2. கஷ்டப்பட்டு உடல் உழைப்பால் தினமும் 12மணிநேரம் முதல் 18 மணிநேரம் உழைக்க கூடியவர்கள். (பேசாமல் ஊரிலே இப்படி தினம் 10 குறுந்தகவல் அனுப்பி கஷ்டப்படாமல் நல்லா இருந்திருக்கலாம் – {அட நீங்க வேறங்க இருக்கிற சூப்பர் ஸ்டாருக்கும் சுப்ரிம் ஸ்டாருமே கண்டுக்காதபொழுது இதுல பெருமாளு எங்கங்க ……….. }அப்படினு சில நண்பர்கள் நினைக்கலாம்)
இதில் 3- வதா ஒரு ரகம் இருக்காங்க. அதான்க ரொம்ப கொடுமையானது. ஒரு குறுந்தகவல் வந்தா போதும் படிப்பதற்குள் கண்ணை மூடிக்கிட்டு 10- பேருக்கு அனுப்பிறது . இன்னாருகிட்ட இருந்து குறுந்தகவல் வந்தா போதும் என்னடா மச்சான் எப்படி இருக்கிறாய் வேலை எப்படி என்றல்லாம வராது இப்படிப்பட்ட ஏதாவதா ஒன்னைதான் அனுப்புவான்னு பேரை பார்ததுமே அப்படியே 10-பேருக்கு அனுப்பிறது (எனக்கு ஒரு குறுந்தகவல் போன மாசம் வந்தது டேய் எனக்கு பெண்குழந்தை பொறந்திருக்குனு – எனக்கு ஷாக் எல்லாம் கிடையாதுங்க என் நண்பனுக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை அது ஒரு தனிகதை அப்புறம் பார்ப்போம்) .
நான் உங்களுடைய நம்பிக்கைக்கோ, மூடநம்பிக்கைகளுக்கோ எதிரானவன் அல்ல நல்ல பேஷா திருமாலு, பெருமாளுனு கொண்டாடுங்க. ஆனால் அதை இப்படி கொண்டாடலாமே உங்கள் ஊரில் உள்ள அரசு நடத்தக்கூடிய அல்லது சேவைமனப்பான்மையுடன் நடத்தகூடிய பல பள்ளிகள் அடிப்படை தேவைகூட இல்லாமல் இருக்குங்க. இப்படி 10 பேருக்கு குறுந்தகவல் அனுப்புறதுக்கு பதிலா, 10வருசத்திற்கு ஒருமுறை 10 பென்ஞ் வாங்கி போடலாம்க (அப்ப நீதான்ட அங்க கடவுள்) அப்படி ஒரு பள்ளில படிச்ச 10- பேரு செய்தால் போதும்க பள்ளி என்று இல்லை, எங்கு எங்கு அடிப்படை கட்டமைப்புகள் தேவைப்படுதோ அங்க அங்க இப்படி 10 வருசத்திற்கு ஒரு முறை நீங்க செய்தால் கோபாலு, பெருமாளு என்று நம்மின் எதிர்கால தலைமுறைகள் கையேந்த வேண்டிய கை நீட்ட வேண்டிய அவசியம் இருக்காதுங்க.
கனவுகள் கண்டது போதும் இனி நாம் கண்ட கனவுகள் நிறைவேற்றப் புறப்படுவோம்.
தோழமையுடன்
பாண்டித்துரை.