எழுத்தாளர் வண்ணநிலவன் சுபமங்களா-விற்கு அளித்த நேர்காணல்-லிருந்து
கேள்வி: வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீங்க…? நீங்க வாழும் வாழ்க்கையை? சக மனிதர்களின் வாழ்க்கையை?
பதில்: வாழ்க்கை இன்றைக்கு சந்தோசமாக இல்லை. துக்கம்தான் வாழ்க்கையாக இருக்கு. அதில் சந்தோசங்கள் பொய்யான குமிழிகளா இருக்கு.
ஒளவையார் சொல்லியிருக்கா :- “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிதுன்னு.” மானிடப்பிறவிதான் பிறவிகளிலேயே மோசமானது. சிங்கம் புலி மைனா புறா இவைகளுக்கு இரை மட்டும் பிரச்சினை. மனிதனுக்கு எல்லாமும் பிரச்சினை. மனித பிறவி என்பதே போன ஜென்மத்தின் பாவம்தான். வாழ்க்கை உயர்ந்ததல்ல. இந்த வாழ்க்கையை விட்டுட்டு எப்படா போகலாம்ன்னே இருக்கு.
பள்ளிப் பருவத்திலிருந்தே எடுத்துக்கொள்ளுங்கள். ஏதோ குழந்தை பள்ளி சென்றது படித்தது என்று இல்லை. மார்க் வாங்கணும் அதிலும் நூத்துக்கு நூறு வாங்கணும். வரலாற்றில் விஞ்ஞானத்தில் உள்ள இரண்டாயிரம் வருடத்து விசயங்களை நாலு வயசு பையன் படிச்சாவணும். பல பயித்தியக்காரர்கள் சொல்லிவிட்டுப் போனதை மாங்கு மாங்குன்னு பதினஞ்சி வருசம் உக்காந்து படிச்சிக்கிட்டிருக்கான். இது மாதிரி சின்ன வயசிலிருந்தே சிக்கல்கள் ஏற்பட்டுடுது. இதில் சந்தோசம் என்பதற்கு வாய்ப்பே இல்லை. இதை மாற்ற முடியும்னு சொல்றாங்க. அது மகாப் பெரிய பொய். பிச்சைக்காரனுக்கு பிரச்சினை சோறு. பணக்காரனுக்கு வரி. பிரச்சினை உரைக்காதவர்களுக்கு வேண்டுமானல் வாழ்வில் ஏதோ பெரிய விசயங்கள் இருப்பது மாதிரி தோன்றும். விஞ்ஞான நவீனங்கள் பெருகி இருக்கு. ஸ்விட்சு போட்டா லைட் எரியுது. ஏசி இருக்கு. விமானம் இருக்கு. மனித வாழ்க்கை மட்டும் சிக்கலாகிக்கிட்டே இருக்கு. இது எனக்கு ஏற்பட்ட என் வாழ்க்கையைப் பாத்து மட்டும் இப்படி சொல்லல. மத்தவங்க வாழ்க்கையை பார்க்கும்போதும் அப்படித்தான் இருக்கு. இவ்வளவு சிரமபட்டு மனிதன் வாழணுமான்னுதான் எனக்கு தோணுது.
நன்றி: சுபமங்களா