நீர்வீழ்ச்சியையொத்த ஜோ வென்ற இரைச்சல் என்னைச் சுற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாய் மனிதர்கள் மறைந்து கொண்டிருக்க என்றும் இல்லாது அழவேண்டும் என்று ஆசைப்பட்டவனாய்………
இங்கு (சிங்கப்பூர்) வந்தபின் அம்மாவிடம் தொலைதொடர்பில் உரையாடியது “அம்மா இப்ப நான் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். என்னை நினைத்தால் எனக்கே ஆச்சர்யமாக உள்ளது” என்பதான நீட்சிகள் நேற்றுவரையில் ஆனால் இன்று அழ ப்ரியபட்டவனாய்.
திரைப்படங்களில் எல்லாம் நாயகன் அழும்போது நாயகி பாhத்துவிடக்கூடாது என்று கழிவறைக்குள் சென்று கண்ணாடிமுன் நின்று ஓவென்பதாகவோ யாருமற்ற தனிமையில் கதறி துடிப்பதாகவோ அல்ல. எல்லோரையும் கடந்து செல்லும்போது ஒரு சிறு துளி எட்டிப்பார்த்தாலே போதுமானதாக இருந்தது.
எம்.ஆர்.டியில் பயணிக்கும் பொழுதும் என் தேடல்கள் எனதொத்த முகமாகவே இருக்க அழுதலில் கரைந்து போனதாய் ஒன்றும் தென்படவில்லை. பெருவாரியான புன்னகைகளே கொட்டிக் கிடந்தன.
அழுவதற்கான தேவை இக்கணத்தில் என்னை அரவணைக்கும் தோழமையாகவே எண்ணியபோதும் எட்டிப்பார்க்கவில்லை. அதீதமான எதிர்பார்ப்புகள் சில நேரங்களில் அடையாளப்படுத்தாமல் புறக்கணிக்கப்படலாம்.
எம்.ஆர்.டியின் தடதடக்கும் சப்தங்கள் ஒருபுறம் கேட்டுக்கொண்டிருக்க கொட்டிக்கிடக்கும் புன்னகைகளின் ரீங்காரம் இன்னும் எனக்கான நேரம் மௌனித்து என்னருகேவோ சிலமணிநேர தொலைவிலோ வந்துகொண்டிருக்ககூடும். காத்திருந்தலின் சுகம் காதலில் மட்டுமல்ல.
என்மீதான கட்டுடைப்பின் விருப்பமின்மையோ அல்லது என் மீதான புரிதலாகவும் இருக்கலாம் காலதாமதத்திற்கு. பேருந்து பயணத்திற்கு மாறிய பொழுதும் பெயர்தெரியா முகங்கள் என தொட்டுச் சென்றபொதும் ………. இன்னும் என்னுள் எட்டிப்பார்க்கவில்லை. ஆனால் அழ வேண்டும்.
அதற்கான நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்! கொஞ்சம் சொல்லுங்களேன். கெஞ்சலாய் கேட்கிறேன். ப்யர் போன்ற என் ப்ரியமான அழுகையை கணநேர நண்பனாக மீட்டுத்தாருங்களேன்.
மழைநேரத்து குதுகூலமாக அழுகையினூடே நடக்கவேண்டும் அழுகையினூடே சிரிக்க வேண்டும் என்னை பைத்தியம் என்று பார்க்கட்டுமே. என் நிஜமான ரூபத்தை அக்கணத்திலாவாது அறியட்டுமே. இமைகளின் இயலாமை உறக்கத்திற்கு அழைத்து சென்றபோதும் எனக்கான நிறுத்தத்தில் அநிச்சையாய் விழித்தெழுந்து நடந்துசென்றபோதும் எட்டிப்பார்க்காத அழுகைக்காய் நான் இன்னும் காத்துக்கொண்டிருக்கேன்.
அம்மாவிற்கு தொலை தொடர்பு கொள்ளவேண்டும் என்ற ஆவல். இனி எனக்கான இரவுகள் விழித்துக்கொண்டே இருக்கும். எப்பொழுதும் என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்கள்.