நீதி இங்கதான் இருக்கியா. அடைபட்ட காதுகளில் பட்டுத் திரும்பும் பக்கமெல்லாம் எதிரொலித்த வண்ணம். யாராக இருக்கக் கூடும் பிரபுவும், செல்வாவும் என்னை கூப்பிட்டபடியே ஓடிவந்ததை, சரவணனிடமிருந்து வராத மின்னஞ்சல்கள் என்னின் குப்பைத்தொட்டி முழுமைக்கும். போததகுறைக்கு நேற்றையகனவில் ஞாபகமறதியாய் பூர்ணிக்கு எழுதியபின் எதற்காக என்று கிழித்தெரிந்த கடிதங்களுமாய் நிரம்பிக்கிடந்தது.
இன்று அதிகாலையில் (6.00) மணிக்கு அலுவலக அவசரமாய் ஒரு கப் மை–லோவும் இரண்டு பிரட்டும். என்றைக்கும் இல்லாததாய் என் தொண்டையில் மாட்டிக்கொள்ள எழுந்த கண்ணீரை பார்த்து சீனன் சிரித்துக் கொண்டிருந்தான். வித்தியாசமாய் உணவருந்துவதாக நினைத்திருக்கலாம். இந்த நேரத்தில் பொறையேறுகிறது யாரக இருக்கக்கூடும். அடிக்கடி அம்மா மட்டும்தான் நினைப்பாள், அதுவும் அழுதுகொண்டே. ஆனால் இப்பொழுது இந்தியாவில் இரவு அல்லவா வறண்டு போன கண்ணீராய் அவள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க கூடும். வேறு யாரு சசியா?
கடந்த நான்கு நாட்களாக விடுமுறையிருந்தும், எப்போதும் போல் இல்லாமல் ஞாபகங்களை மட்டும் சட்டைப்பையில் வைத்து திரிந்தேன். நேற்றுத்தான் சசிகூட போன் செய்து என்னப்பா என்றார். இருக்கியா என்பதாக நான் இருக்கிறேன் என்பதாகவும்! அது மட்டுமில்லாமல் சசியும் இந்நேரத்திற்கு ஒரு கப் தேத்தண்ணி இரண்டு பிரட்டுடன் அமர்ந்திருக்கலாம். நிச்சயம் சசி என்னை நினைத்திருக்க மாட்டார்.
வேறுயாராக இருக்கலாம், மதியம் உணவருந்தியபின் கிடைக்கும் குட்டித்தூக்கத்தில் வராத கனவுகளாய் வந்த கனவுகளும் ஒரு மணிக்கு வைத்த வைப்ரேட்டர் அலாரத்தால் தொட்டாச்சிணுங்கியாய் கடந்த வாரத்தில் எம்.ஆர்.டியில் பயணித்த பொழுது என்னெதிரே அமர்ந்திருந்தவளின் சாயலுடன்.
மூன்று மணிக்கு மீட்டிங் ஆறு மணிக்கு பேக்ஸ் இடையிடையே செல்பேசி, அப்போதும் வருவதில்லை நான் கல்லூரியில் காதலித்தவளாய். நெகத்துடன் கொஞ்சமாய் சிநேகம் செய்து மெனக்கெட்டாலும் பின்னிருந்து வரும் குரல் போன வாரம் எல்.கெச்–க்கு கோட் பண்ண சொன்னேன் இன்னும் செய்யவில்லையா? அதனூடே ஜெனியின் சிரிப்பு சப்தமும் எதிர்பார்த்தே காத்திருப்பாள் போல .
அன்றும் அப்படித்தான் சிராங்கூன் ரோட்டில் டொபாயோ போவதற்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். அருகிலிருந்த சிலர் தூரத்தே ஒருவனை காட்டி சிரித்துக்கொண்டிருந்தனர். அவனும் கெக்களித்தபடி எங்களை நோக்கி வந்து கொண்டிருக்க அவன் பின்னே பத்திருபது பேர் ஆண் பெண் என்று பேச்சு சப்தமும் சிரிப்பதுமாய் எல்லாம் இவன்பற்றிய சில நிமிட சந்தோசம் பொழுதுபோக்காய் ………..
இவனோ சட்டை கிழிந்து மழிக்கப்பட்ட தலையுடன் பல நாள் உச்சிவெயிலில் சுற்றித்திரிந்தவனாய் அந்த மாலை நேரத்தில் அங்கங்கே கிழிசல்களுடன் நிஜத்தை சொருபிக்கும் வண்ணமாய் கைகள் ஏதோ ஒன்றை எழுதிச்செல்ல எரியும் விழிகளில் பார்த்துக்கொண்டிருந்தான் சுற்றியிருந்தவர்களின் நிர்வாணங்களை என்னையும் பார்த்திருக்கலாம். பஸ் வந்தவுடன் நான் ஏறிச்சென்றுவிட்டேன்.
அருகிருந்த முதிர்ந்த சக பயணி தமிழா என்றார் . ம் என்பதாக எத்தனை வருசுமாச்சு, வந்து 2 தம்பி 3 சக்கரைக்கு இன்னும் ஓரிரு மாதத்தில் 7 மாமா வந்து 12 வருடத்திற்கு மேலாகிவிட்டது. ஜன்னல் வழி ஓடிச்சென்றன விண்முட்டும் கட்டிடங்களும் வெள்ளைப்பெண்களுமாய் அடுத்தடுத்த நிறுத்தங்களும்
மயானமாய் இருந்த பிரதேசமல்லவா உடலிலிருந்து உரிக்கப்பட்ட வெம்மைத் தடங்கள் அங்கங்கே தெரித்திருக்க யாருக்கும் தெரியாது. திரும்பி பார்த்தபொழுது முதியவருக்கு பதிலாக சீன மாதோ அல்லது பிலிப்பானாவோ இருக்கணும். அவளுக்கு புரிந்திருக்காது, என்னை பார்க்க பிடிக்காதவளாய் திரும்பிக்கொண்டால்.
ஜெனியின் சிரிப்புச் சப்தம் பிரிண்டரில் இருந்து அந்த கோட்டை (quote) எடுத்து பாஸ் டேபிளில் வைத்து விடு நான் கலெக்சனுக்கு போய்விட்டு நாளை அலுவலுக்கு வருகிறேன்.
இரவு அடிக்கப்போகும் தொலைபேசிக்காக யாரும் காத்திருக்கப்போவதில்லை. இந்த அங்காடியின் நெடிய க்யு முடிவடைய இன்னும் கால் மணிநேரமாகலாம். அப்பாவோடா செல்லுக்கு டிரை பண்ணேன். அவளா பரிட்சையில சுட்சை அமத்திப்போட்டிருப்பா. எப்பொதும் போலத்தான் இன்றிரவும் ப்ளிஸ் ட்ரை எகைன், ப்ளிஸ் ட்ரை எகைன் ………..
விண்மீன்களையும் நிலவினையும் விரடிட்டிப்பிடிக்கும் வேகத்தில் லாரிகள் . முழுநாளைய வாசனையை தோல்பையில் அடைத்திருக்க அதன் மீதான முகக்கவிழ்ப்பில் கசப்புகளை சுவைத்தபடி தொண்டையில் ஜில்லிட்டது ப்யர். இன்றைய
இரவில் வராத கனவுகளுக்காய் நாளைய பொழுதில் தொலைந்து போகலாம்………….