வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள்

 வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளையும் என்னால் படிக்க இயலவில்லை. புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 117 சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் 60க்கும் மிகுதியான சிறுகதைகள் படித்துள்ளேன். திரு சுப்ரமண்யம் ரமேஷ் குறிப்பிட்ட கதைகளில் தனுமை, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, கூறல், நிறை மட்டுமே படிக்க நேர்ந்தது. நான் இன்னும் என்னை படைப்புகளை நுகர்ந்து என் எண்ணப்பாடுகளை வெளிப்படுத்த தயார் செய்யவில்லை, அல்லது இன்னும் அதீதமாக இலக்கிய படைப்புகளை படிக்காததன் தயக்கமாகவும் இருக்கலாம். என்னை ஏதோ ஒரு தளத்திற்கு அழைத்துச்செல்லும் களமாக வாசகர்வட்டம் இருப்பதால், என் பயிற்சியாகவே இந்த முயற்சியும்  

பொதுவாகவே வண்ணதாசன் சிறுகதைகளில் கதைசொல்லக்கூடிய உக்தி ஒன்று போலத்தான் தெரிகிறது. இதை இவரது பல சிறுகதைகளில் காணமுடிகிறது (நான் படித்தவரையில்) அல்லது பிறரின் சிறுகதைகளில் கவனிக்க தவறிய அம்சமாகவும் இருக்கலாம். ஒரு கதையில் டிபன்பாக்ஸ், இன்னும் சிலகதைகளில் போர்வை, தலைவலி, தேரோட்டம் என்று இது போன்ற ஒன்றை மையப்படுத்தி, அல்லது அதீதமாக தென்படச்செய்து இதனூடாக அந்த கதையை விவரித்து விஸ்தரித்து செல்லும் பொழுதுதான், வண்ணதாசன் என்னை வியக்கச்செய்கிறார். நான் விரும்பி படித்த யாளிகள் கதை, இன்னும் சில கதைகள் அலுப்பு தட்டச் செய்தது. திரு.சுப்ரமணியம் ரமேஷ் குறிப்பிட்ட தனுமை என்னும் சிறுகதை என்னை ரொம்பவே கவர்ந்தது அதை என்னால் இங்கு எப்படி என்று விவரிக்க இயலாதது வருத்தமே.

 ஓர் அருவியும் 3 சிரிப்பும் பக்கம் -131ல் 

குற்றால அருவியில் இரு நண்பர்களுக்கு இடையேயான சம்பாசனைகளில் இந்த சிறுகதை காட்டப்படுகிறது. கடைவைத்திருக்கும் அண்ணாச்சி என்னத்தை அனுபவித்திருக்க கூடும் என்ற இவர்களின் உரையாடலால், அண்ணாச்சி முதன் முறையாக வாழ்தலின் தரிசனத்தை அனுபவிக்க முயல்கிறார். இந்த சிறுகதையை படிக்கும்பொழுது என் ஞாபகத்திற்கு வந்தது பொன்.ராமச்சந்திரனும், ஆனந்தவிகடனும். பொன்.ராமச்சந்திரன் நேற்றிருந்தோம் முதல் சந்திப்பில் எம்.ஆர்.டிக்காக காத்திருந்த தருணத்தை சொன்னது, அநேக பேர் இப்படித்தான் இருக்கின்றோம். சிலரோ தெரிந்தும் அத்தகு வாழ்தலை நுகர விருப்பமின்றியே விடைபெறுகின்றனர். 

ஆவியில் வண்ணதாசன் எழுதிவரும் தொடர் அகம் புறம், எப்பொழுதாவது படிப்பதுண்டு. அப்படி சமீபத்திய அவரது பதிவு, புலி பற்றி வரும் கனவு (யானை பற்றிய கனவுகள்தான் இவருக்கு அதிகமாக வருமாம்) இறுதியில் எல்லோரையும் கனவு காணச்சொல்லியிருப்பார். அந்தக் கனவும் அண்ணாச்சியுடன் பொருந்திப்போவதாகவே தோன்றுகிறது.

 இதே போன்று ஞாபகம் எனும் சிறுகதை பக்கம் 175-ல் 

டிபன் பாக்ஸ் பற்றிய ஞாபகங்களை எடுத்துச்செல்லும் அந்தக் கதையில் இறுதியில் வரும் வரிகள்  

வாட்ச்மேன் இவள் பார்ப்பதற்கு பதில் சொல்வது போல ‘ நம்ம எஃப் கிளார்க்குமா ஓவர்டைம் செய்தாரு வேலைனா வீடும் அவருக்கு மறந்து போகும்னு சிரித்தார்.   

அவளுக்கு சிரிப்பு வரவில்லை தனக்கு டிபன் பாக்ஸ் ஞாபகம் வந்தது போல் அவருக்கு வீட்டின் ஞாபகம் வரவேண்டும்

 இந்த சிறுகதையில் டிபன்பாக்ஸை மறந்துவிட்டுச் சென்று மீண்டும் எடுக்க வரும்பொழுது 100 பேர் பணிபுரிந்த அலுவலகமா இது என்று, அந்த நிசப்தத்தில் தன்னை அவள் தொலைத்திருப்பாள். இந்த கதையின் ஓட்டம் வேறு என்றாலும் முடிவு நான் மேலே சொன்ன கதையுடன் ஒன்றுபடுகிறது. அண்ணாச்சிக்கு ஞாபகப்படுத்தியது போல், கடந்து செல்லும் பொழுது நமக்கும் யாரவது ஞாபகபடுத்த வேண்டியிருக்கிறது. 

வந்தோம், இருந்தோம், சென்றோம், இப்படித்தான் இங்கு அநேக பேர் வாழ்ந்து செல்கின்றனர். நம்மை சுற்றிலும் நாம் தவறவிட்ட வாழ்வியல்களை அதற்குரிய கணத்துடன் வண்ணதாசனின் பல சிறுகதைகளில் காணமுடிகிறது. 

வண்ணாத்திப்பூச்சியின் நினைவுகளுடன்

பாண்டித்துரை  

நன்றி:வாசகர் வட்டம்  (10-02.2008)