புறத்தை உள்வாங்கி அகத்தை நோக்கிய பயணத்தில்…

 

 

சிங்கப்பூரின் சிறுகதை எழுத்தாளராக அறியப்பட்ட எழுத்தாளர் மாதங்கியின் முதல் கவிதை தொகுப்புநாளை  பிறந்து இன்று வந்தவள் ( உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடு) வெளியீட்டுவிழா, சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் 5-வது தளத்தில், 01.06.2008 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன் தலைமையில் நடைபெற்றது. நாளை  பிறந்து இன்று வந்தவள் முதல் பிரதியை நா. ஆண்டியப்பன் வெளியிட, தேசியநூலக வாரிய அதிகாரி திருமதி புஷ்பலதா பெற்றுக்கொண்டார். கவிஞர் வெண்பா இளங்கோவன் நிகழ்ச்சி நெறியாளராக பொறுப்பேற்றிருந்தார்.

 

தற்காகால இளையர்களிடம் மரபு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய சிங்கப்பூர் இலக்கண ஆசான் பாத்தென்றல முருகடியான், தற்கால இளையர்களிடம் மரபு இருக்கிறது என்ற உடன்பாட்டு அடிப்படையில் பேசப்போகிறேன் என்றார். இந்த ஆசிரியரின் நூலுக்குள்ளே நான் செல்லவில்லை ஏன் என்றால் மரபில் நான் ஊறிப்போனதால் பெரும்பகுதி எனக்கு புரியாது என்றார். தலைப்பு பற்றி குறிப்பிடும்பொழுது இதற்கான விளக்கம் தேடி எனக்கு மண்டைவலி வந்துவிட்டது, நூல் ஆய்வு செய்தவர்கள் இதுபற்றி சொல்லக்கூடும் என்று தலைப்பிற்குள் வந்தபொழுது,  தற்கால மரபை இளையர்கள் பின்பற்றுகிறார்கள். என்னிடம் ஒரு கவிஞர்  ஐயா மரபு என்றால் என்ன என்று கேட்டார். மரபு என்றால் என்ன என்று மொட்டையாக கேட்காமல் ஐயா என்று விளித்தாயே, இதுதான் மரபு இந்த மரியாதையை கொடுக்கவருவது மரபு. அகரமுதல என்ன சொல்லவருகிறது என்றால் பழமை, இயல்பு, இலக்கணம், வழிபாடு, ஓழுக்கம், பருவம், பெருமை, செல்வம், சான்றோரின் சொல் வழக்கை பின்பற்றுதல் என்றுச் சொல்லி இதில் ஏதாவது இன்றைய இளையர்கள் பின்பற்றுகிறார்களா என்ற வினவலாக தொடர்ந்த நீண்ட பேச்சில், கவிதை மரபாக இல்லாமல் கடந்து செல்லும் பயணம் முழுமைக்குமான உகந்த ஒன்றாய் இருந்ததில் நகைச்சுவையையும் கடந்து மரபை பின்பற்றுதலின் மறுபயனீடாய் இவரது பேச்சு அமைந்தது.

 

முன்னதாக நூல் ஆசிரியர் பற்றி இப்படி குறிப்பிட்டார். மாறுபட்ட குணங்கள் உடையவர்கள் கூட முகம் புண்படாத வகையில் புன்னகைத்துச் செல்லும் அரிய குணம் உண்டு அதனால்தான் மனுஸ்யபுத்திரனையும் ஏற்றுக்கொள்கிறார், என்னைபோன்ற மாட்டுப் பிள்ளையையும் ஏற்றுக்கொள்கிறார் என்றார்.

 

நூல்ஆய்வு செய்த கவிஞர் சுகுணாபாஸ்கர் கவிதை உலகத்தோடு நாம் இணையும் ஒவ்வொரு கணமும் முடிவில்லா ஒரு நிலையைதான் தாண்டிச் செல்கிறோம் என்றுச் சொல்லி மாதங்கியின் கவிதைகளுக்குள் வந்தபொழுது , அவரின் கவிதைகள் தினசரி வாழ்வின் அனுபங்களின் பதிவாக இருக்கிறது சிறுகதையின் எழுத்து நடையும், குழந்தைகளின் உலகை எளிதில் எடுத்து வரும் முயற்சியும், உரைநடையை உள்ளடக்கிய கவிதைகள் என கலந்திருக்கிறது.

 

கவிதைமொழியால் ஆன நேர்த்தியான கவிதையாக தீவுவிரைவுச்சாலை  (பக்கம்-36) கவிதை இருப்பதாகவும், இந்த கவிதையில் சாலையில் நிழல்கள் சிந்தியிருப்பது நம்மை வேறொரு தளத்திற்கு எடுத்துச்செல்கிறது என்றபடியே முகவரிகள் தொலைவதில்லை, தேக்கா வெட்டவெளியில்,  சன்னல் இல்லாத வீடு, நீ பெரியவனானால், ஒரு பண்டிகைநாளில் என்ற கவிதைகளை தொட்டுச்சென்றது என்னவோ கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அழகாகத்தான் இருந்திருக்கும்.  இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ஒன்றை சொல்லி விடைபெறுகிறேன் என்றுச் சொல்லிவேறொரு வெயில் நாளில்என்ற கவிதையை படித்தபொழுது, என்னையும் அறிந்தே எதிரே இருந்த குழந்தைகளை நோக்கி நான் நகரவேண்டி வந்ததில் தூறலுக்குபின்னான நிசப்தம் ஒளிந்திருக்கலாம்.

 

பின்னர் நூலாய்வு செய்த கவிஞர் .வீ.விசயபாதி உரைநடை புத்தகத்திற்கு உரைநடையில் ஆய்வு செய்யும் பொழுது ஏன் கவிதை புத்தகத்திற்கு நீ கவிதையாக ஆய்வு செய்யக்கூடாது என்று தமிழவேள்தாசன் கேட்டுக்கொண்டதற்கிணங்க என்றுச் சொல்லியபொழுது, பலருக்கும் புருவம் உயர்ந்திருக்கலாம். யார் அந்த தமிழவேள்தாசன் என்று.  உரையின் இறுதியில் தமிழவேள்தாசன் யாரென்று சொல்வதாக சொன்னதால் பார்வையாளர்கள் சமாதானம் அடைந்து இவரின் ஆய்வினுட்புகமுடிந்தது.

 

மொழி ஆளுமையைவிடவும் அனுபவ ஆக்ரமிப்பே அதிகமான கவிதைகளில் கோலாச்சுவதாகச் சொல்லி கவனத்தை ஈர்க்கும் முரண்பட்ட தலைப்பு விமர்சன விளம்பரத்திற்காக அல்ல என்பதை தலைப்பிற்குரிய கவிதையை படிக்கும் பொழுது சரியான தலைப்புத்தான் என்று சாமதானம் அடைவதாகச் சொல்லி, நீ பெரியவன் ஆனால் (பக்கம்-21) என்ற கவிதைபற்றிய இவரது தாக்கம் இந்த கவிதையடுத்த கவிதைக்கு செல்ல கொஞ்சம் கால அவகாசம் தேவைபட்டது என்கிறார். இந்த விசயபாரதியின் வாழ்க்கை போலவே பலரது வாழ்க்கையிலும் பழகிப்போனதாகவே இருப்பதாக வேறுபாடு (பக்கம்-30) கவிதையை சுட்டி, அடுத்தடுத்து தேக்கா வெட்டவெளியில், நறுமண மெழுகுவர்த்திகள், ரோஜாப்பபூக்களை எடுத்து, இந்தோனேசியாவில் காட்டுத் தீயாம் என்று ஒரு பண்டிகைநாளில் முடித்து விடைபெறும் தருணத்தில், மரபு கவிதையோடு வாழ்த்தி தமிழவேள்தாசனை நான் தினமும் சந்திக்கும் இடம் என் வீட்டு நிலைக்கண்ணாடி என்றபொழுது பலருக்குமான ஆச்சர்யம் என்னில் இல்லாதுபோய்விட்டன.

 

பின்னர் சிறப்புரையாற்றிய திருமதி. சிதரா ரமேஷ் எதைபற்றி வேண்டுமானலும் பேசுங்கள் என்று நூலாசியர் அற்புதமான ஒரு சுதந்திரத்தை எனக்கு கொடுத்தார்கள். ஆனால் சுதந்திரம் என்று கிடைத்ததுமே பொறுப்பு வந்துவிடுகிறது  என்றுச் சொல்லி வாழ்க்கை இலக்கியம் என்ற தலைப்பில் அவர் பேசியவை – ( பேசியதன் விபரங்கள் சொல்லப்படாத மொனங்கள் எனும் தனிப்பத்தியாக இந்த வலைதளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதால் இவரின் பேச்சுக்கள் இந்தப்பத்தியில் இடம்பெறவில்லை)

  

நூலினை வெளியிட்டு தலைமையுறையாற்றிய எழுத்தாளர் நா.ஆண்டியப்பன் பேசியபொழுது , உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்கு வார்த்தைகக்கு வடிவம் கொடுக்கும்பொழுது அது கவிதையாகிறது. மகிழ்ச்சி, துயரம் என்று எல்லாவிதமான உணர்வுகளையும் கவிதையில் வெளிப்படுத்திவிடமுடியும் ஆனால் துன்பவியல் கதைகள்தான் பரவலாக வெற்றிபெற்றுள்ளன. அப்படி இவரது கவிதையெங்கும் ஆங்காங்கே மனிதநேயம் வெளிப்படுவதாய் சொல்லி குறிப்பால் உணர்த்தும் உக்தியும் இவருக்கு கைவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

 

நறுமணமெழுகுவர்த்தி (பக்கம்-32) கவிதை பற்றி சொன்ன பொழுது வைரமுத்து மெழுகுவர்த்தியை பற்றி மட்டும் கவலைப்படுகிறார், மாதங்கியோ மனிதர்களை பற்றிக் கவலைப்படுகிறார். அதற்கு கவிஞர் படித்த வேதியல் பட்டமும் ஒரு காரணம், என்றபடியே சன்னல் இல்லாத வீடு (பக்கம்-52) கவிதை பற்றி சொல்லும் பொழுது அதில் உள்ள ஓம், ஏலும் என்ற 2 வரிகளை எடுத்துவிட்டால் அந்த கவிதை மிகச்சாதாரணமாக போய்விடும் என்று சொல்லி, இத்தொகுப்பின் மிகச்சிறந்த கவிதையாக எனக்குபடுகிறது என்றார். நீ பெரியவனானால்,  ஒரு பண்டிகை நாளில், புரியவில்லை என்ற கவிதைகளை தொட்டுச்சென்றார்.


இறுதியில் நன்றியுடன் ஏற்புரையாற்றிய நூலாசிரியரின் பேச்சு அன்பினை பிரதானப்படுத்துவுதாக இருந்தது. முதலில் அனைவருக்கும் நன்றிகளைச் சொல்லி, இங்கு பேசும் பொழுது பலரும் நூல் தலைப்பு முரணாக இருப்பதாக நாம் கேட்டோம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு கவிதை வெளியீட்டு நிகழ்வு  வெறும் பாராட்டுடன் முடிந்துவிடாமல் அந்த இடத்தை விட்டு வெளியே செல்லும் பொழுது பல கேள்விகளை ஏற்படுத்த வேண்டும். அந்த நிகழ்வில் இருப்பவர்கள் ஒரு வட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க கூடாது. வேறு பகுதிகளில்  நவீனம், மரபு என்று தனி தனி குழுவாக இருப்பார்கள். மரபு சார்ந்தவர்கள் நடத்தும் நிகழ்விற்கு, நவீனம் சார்ந்தவர்கள் செல்வது கிடையாது என்பதைவிட அதற்கான சாத்தியம் அங்கு இல்லை. காரணம் எண்ணிக்கை மிக கூட.  ஆனால் சிங்கப்பூரோ சிறிய நாடு. இங்கு மரபு. புதுக்கவிதை. நவீனம். பின்நவீனம் என்று எல்லரும் சூழ்ந்து இருக்கும் சூழல் இருக்கிறது. முரண்பட்ட கருத்துக்களை விவாதிக்க வேண்டும். முடிவில் விடைபெற்று செல்லும் பொழுது ஒருவரையொருவர் பார்த்து புன்னகைக வேண்டும்  என்ற காரணத்தாலே பல நிகழ்வுகள் இங்கு நிகழவேண்டும் என்றும் ஆசைப்பட்டேன்.  அறிவு சார்ந்து இல்லாமல், நம் சூழல் அன்பு சார்ந்து இருக்கவேண்டும் அதையே நான் விரும்புவதும் என்ற பொழுது இயல்பாகவே எல்லோருக்குமான கைகள் ஒன்றை ஒன்று குலுக்கிக்கொண்டன.

 

தலைப்பை கேட்டதுமே பலர் உற்சாகமானர்கள்.  ஒரு கவிதையை கவிஞர் ஒரு அர்த்தத்தில் எழுதியிருப்பார். படிக்கும் ஒருவர் ஆண் என்றால் அவர் அனுபவங்கள் அவரின் வாழ்க்கையின் பின்புலங்கள் வைத்து ஒருவித அர்த்ததில் புரிந்துகொள்வார். வேறு சிலர் வேறு வேறு அர்த்ததில் புரிந்துகொள்வார். இது இயல்பான ஒன்றுதான். அடடா. கவிதையின் பொருளை யாராவது கேட்டால் கட்டாயம் சொல்லவேண்டும், ஏன் எனில் அதுகவிஞனின் கடமை என்றுச் சொல்லி பல்வேறு விவாதங்களுக்கு இட்டுச்சென்ற நூல்தலைப்பு பற்றிய கவிதைக்கான உருவாக்கத்தை இப்படி பகிர்ந்து கொண்டார்.

 

நாளை பிறந்து இன்று வந்தவள்எழுதுவதற்கு உண்டான தருணத்தை சொன்னால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.  இந்த கவிதை எழுந்த தருணதிறகு பின் பெரும் துயரம் உள்ளது. சென்ற  ஆண்டு உலகில் சில இடங்களில் சில குரூர சம்பங்கள் நிகழ்ந்ததன, (இயற்கை சீற்றங்களை சொல்லவில்லை)  விதவிதமான குரூர சம்பவங்கள். நாம் கற்பனையும் செய்துபார்த்திராதவை. அச்சம்பவங்கள் என்னுள் பல கேள்விகளை புதிர்களை எழுப்பியது. நம் வரும்காலத்தினரின் கேள்விகளை எங்கனம் எதிர்கொள்ளப்போகிறோம், மனித இனத்தின் பின்தொடர்சிச்கு முட்டுக்கட்டை என்று தோன்றுகிறது என்றெல்லாம். ஒரு எதிர்காலத்தவர்  நம்மிடம் கேட்டால் என்ன பதில் சொல்வோம். நம் முகத்தை எங்கு வைத்துக்கொள்வோம். நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அன்பாக இருக்க வேண்டும் என்று போதிக்கிறோம் உரக்க சொல்கிறோம் உண்மைதான். ஆனால் நாம் காண்பது. நம் செய்திதாள்கள் என்ன சொல்கின்றன. ஒவ்வெரு நாட்டிலும் நடக்கும் நிகழ்ச்சிகளில்  யாருக்கும் உடன்பாடு இல்லை.  எதிர்காலத்தவர்கள் நம்மிடம் வந்து கேட்டால் நாம் என்ன பதில் சொல்லப்போகிறோம். அதன் வெளிப்பாடே இந்த கவிதை. கவிதையின் இறுதிவரி எனக்கு மிகவும் கவித்துவமாக தோன்றியது. அதையே இந்த நூலுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று தலைப்பாகவும் வைத்துவிட்டேன். பரபரப்புக்கு எழுதப்பட்டதல்ல பரிவினால் எழுந்து ஒரு பயங்கரத்தை உள்ளடக்கியது.

 

இந்த கவிதை தொகுப்பில் வருங்காலம் பற்றிய சில கவிகைகள் விஞ்ஞான சிந்தனையுடன் இருக்கின்றன, வட்டார வழக்கு கவிதையும் இருக்கின்றன. தமிழ் முரசில் உங்களுக்கு வயதாகிவிட்டது என்ற கவிதை பிரசுரமாகியது. அந்த கவிதையை படித்த ஒரு வயது முதிர்ந்த பெண்மணி என்னிடத்தில் தொலைதொடர்பு கொண்டார். அந்த கவிதை பல குறீயீடுகளை, பல படிமங்களை உள்ளடக்கியது. அந்த கவிதையை படித்தபின் அம்மா நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு புது தெம்பு வந்துவிட்டது என்று கூறி என் குடும்பத்தினரை ஒரு ஓவியமாக வரைந்து நேரில் சந்தித்தபொழுது கொடுத்தார். இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும். கவிதைதான் இந்த சித்திரத்தை செய்யச்சொன்னது என்றபொழுது, கவிதைக்கான அங்கீகாத்தையும் தாண்டி இந்நிகழ்வில் கலந்து  கொண்ட அந்த வயதுமுதிர்ந்த பெண்மணி பலருள்ளும் சித்திரமாகவும், கவிதையாக்கவும் புனையப்பட்டிருக்கலாம்.

 

தொடர்ந்து கவிதை, நவீன ஓவியம் அவரவர் பார்க்கும் பார்வையில் வேறு ஒன்றாக பரிணமிக்கறிது. ஓரு கவிதையை வாசித்த உடன் கவிதை முடிந்துவிடக்கூடாது. கவிதையை வாசிப்பது என்பது பயணசீட்டுவாங்குவது போன்றது, வாசிப்பு முடிந்தபின்தான் நம் பயணம் டங்கவேண்டும் எப்படிப்பட்ட பயணம் என்றால் புறத்தை உள்வாங்கி அகத்தை நோக்கிய பயணம் இதில் நாம் இறங்க வேண்டிய இடம் வந்த பின்பும் கவிதை நம்மை விட்டு பிரிவதில்லை. நம் ஆன்மாவுடன் இரண்டறக்கலக்கிறது கவிதையாய் உருவெடுக்கும்  கணத்திலிருந்த அது கவிஞனைவிட்டு போய்விடுகிறது. வாசகருக்குரிய கதையாகவிடுகிறது தனக்குரிய கவிதைகளை ஒரு நல்ல வாசகன் அடையாளம் கண்டுககொண்டுவிடுவார். கவிதை திறக்கவியலாது இருக்கும் மனத்தினை திறந்து துன்பங்கள் உருவாக்கிய படலங்களை மென்மையாக கண்டு  மயிலிறகால் வருடுகிறது. குழந்தைமையின் பரவசத்துடன் அவரை மிதக்கசசெய்கிறது. கவிதைகள் கவலைகளை தீர்ப்பதில்லை ஆனால் பார்வையில் மாற்றத்தை உருவாக்குகிறது என்று விடைபெற்றபொழுது அரங்கமெங்கும் அன்புததும்பி என்னையும் வெளிக்கொணர்ந்துவிட்டது.

 

 

 

எழுத்து: பாண்டித்துர

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s