“கூட்டாஞ்சோறு”

 

எழுதவந்து எத்தனைநாளாயிற்று, என்ன இதுவரை எழுதியிருக்கிறோம் என்றெல்லாம் யோசித்திடாமல், என்னோடு இசையக்கூடும் என்றறிந்த 8-நண்பர்களிடம் ஒரு வருடத்திற்கும் முன்னால் பேசியபொழுது கூட்டாஞ்சோறு ஆரம்பமாகியது.

 

மரபு, புதுக்கவிதை, நவீனத்தைநோக்கிய பார்வை என பலரின் கவிதைகள் ஒருங்கே தொகுத்தால் எல்லோருக்குள்ளும் ஒரு நினைவு, நிறைவு இருக்கக்கூடும் என்றெண்ணியபொழுது, சிதைவுறும் கனவுகளாய் சில பிரச்சினைகள். ( ஒவ்வொரு பிறப்பின் ரகசியமும் பிரச்சினைகளை கடந்தபின்னர்தானோ!? ) காரணம் சொல்லாமல் இரண்டு நண்பர்கள் விலகிட, காரணத்தைச் சொல்லி ஒரு நண்பர் விலகிட, இன்னொரு நண்பரோ செல்லாது, செல்லாது; நான் என்னத்தைப்பா கவிதை எழுதிட்டேன். ஏதோ இங்க வரணும் உங்களைப் பார்க்கணும்! அதுக்காக எழுதுவதாக சொல்ல, இதன் பின்னர்தான் யோசிக்கத்தோன்றியது……

 

கூட்டாஞ்சோறு இப்படியாகத்தான் பின்னர் உருமாறியது படைப்பின் பிரம்மாக்களாக. நான் (பாண்டித்துரை), கோட்டை பிரபு, செல்வா, காளிமுத்துபாரத் ஆகிய நால்வரும் கவிதைகளையும், கத்தைகளையும் சமமாகப் பகிர்ந்துகொண்டோம். கவிஞர்கள் பிச்சினிக்காடு இளங்கோவும், .வீ.விசயபாரதியும் வாழ்த்துரையும், அணிந்துரையும் தந்துவிட முகப்பு ஓவியத்திற்காக மட்டுமே ஆறு மாதகாலத்திற்கும் மேலான காத்திருப்பு. ஓவியம் தருவதாக ஒப்புதல்தந்த நண்பரோ பணிச்சூழல் காரணமாய் பறந்தபடியிருக்க பிரம்மா பிறப்பானா என்ற கேள்விக்குறி என்னிலும் என் பின்னணியிலும்………..

 

செல்வாவும், காளிமுத்துபாரத்தும் நான் எது சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி என்ற மனநிலையில். கோட்டைபிரபு மட்டும்தான் சாதக பாதகங்களை கொஞ்சம் அலசிப்பேசுவதாய் என்ன பாண்டி தொடருவோமா வேண்டாமா என்று………

 

முடியாதபட்சத்தில் கலைத்திடுவோம் என்பதாக ஜனவரித் திங்கள் ஒருநாள் இன்னும் மூன்று மாதங்கள் பொறுத்திருப்போம் என்று அவன் முகத்தைப் பார்க்காதவனாய் முன்மொழிந்தேன்.

 

அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் எல்லாம் கவிஞர் அய்யப்பமாதவனால்! சென்னைதஞ்சைக்கு இடையேயான சில பயணங்கள், ஓவியம் அச்சாக்கப்பணி என்று ஒவ்வொன்றையும் தனதாக்கிக்கொண்டு பிரம்மா அச்சுக்கோர்ப்பதிலிருந்து அழகாய் வெளிவருவதுவரை எங்களுக்கான கவலைகள் யாவற்றையும் சுமந்துகொண்டார்.

 

சசியும், சின்னாவும், அறிவும்கூடத்தான் அவ்வப்பொழுது பிரம்மா பிறத்தலின் ரகசியங்களை அறியத்துடிப்பதாகவும், இடைஇடையே குங்குமப்பூ, குமட்டும் மருந்துகள் என்று ஆலோசிப்பதாகவும் இருந்த

 

பிரம்மா

 

இதோ இன்று ( 20.07.08 )  சப்பரத்தில் ஏற்றப்பட்டு உங்களின் முன்னே வலம்வந்துகொண்டிருக்கிறான். இன்முகம் காட்டி பிரம்மனைச் சுமந்தபடியே .வீ.சத்தியமூர்த்தி, கண்டனூர்சசிகுமார், சின்னபாரதி, அறிவுநிதி, மணிசரவணன் என்று முகம்காட்டா இன்னும் எத்தனையோ கவிநண்பர்கள்………

 

பிரம்மா பிறக்கும்பொழுது அதன் தொடர்ச்சியாய் கனத்த மழையையோ, கனத்த வெயிலையோ நாளை தோன்றுவிக்கலாம்

 

குழந்தைக்கான குதூகலத்துடன்

பாண்டித்துரை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s