இது சரியா? தவறா

                                                                          

இது சரியா தவறா என்று இங்கும் யாருக்கும் தெரிவதில்லை. சரி என்ற மனநிலையில் நான் இருக்கிறேன். தவறு என்ற மனநிலையில் நீங்கள் இருக்கலாம். நான் சொல்லவருகின்ற விசயங்கள் எல்லாம் உங்களிடத்தில் மாறுபடக்கூடும். நான் உங்களிடம் சொல்வது, நான் நீங்கள் ஆகவேண்டிய நிர்பந்தத்தை எதிர்பார்க்காதீர்கள். நான் எனது, எனக்கான, சில நிமிடங்கள், சில மணிநேரம், சிலநாட்களையாவது விட்டுச்செல்லுங்கள். இவை புரிதலுக்கான, உணர்தலுக்கான, பகிர்தலுக்கான விசயமாக இருக்கலாம் இல்லாதும்மிருக்கலாம்.

 

உணர்சிவசப்பட்டு உதிர்கின்ற கண்ணீர்துளிகளோ, மகிழ்வின் உந்துதலால் ஆனந்த கூத்தாடுவதையோ, எதிர்நோக்காததால் நான் எழுதிச்செல்வதில் எவ்வித சிரமமும் இல்லை. மொழியறியாதவனின் மனநிலை, அல்லது மொழியற்றவனின் மனநிலை, நான் கடந்து செல்லவும், என்னை கடத்திச்செல்லவும் காரணியாக இருக்கின்றன. இப்படி பேசுவதற்கான ஆயத்தங்களிலேயே திசை திருப்பப்பட்டு மூர்ச்சையாகிவிடுகிறேன்.

 

வீடுகளுக்குள் வருபவர்கள் எல்லாம் தவறானவர்களாக இருக்கிறார்கள். தப்பு தப்பாக பேசுகிறார்கள். ஏன் இப்படி இவன் இருக்கின்றான். இவனை சரியாக கவனிப்பது இல்லையா? உங்களின் மூத்தபையன் நல்லா கலகலனு இருக்கிறானே! இவனுக்கு என்னஆச்சு, என்பதில் தொடங்கி எண்ணங்களற்ற கேள்விகளால் எதிர்படும் குழந்தைகளின் முகங்களில் சப்தங்களற்ற சலனங்களாக. சபிக்கப்பட்டவர்களாக சிறுபிராயங்களிலேயே சிலுவைகளை  ஏற்றுக்கொள்கின்றனர்.

 

சமீபத்தில் என் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அவரது அழைப்பின்பெயரில் சென்றிருந்தேன். அவருக்கு இரண்டு பெண்குழந்தைகள். மூத்த பெண்ணிற்கு 12வயதிருக்கலாம் இளைய பெண்ணிற்கு 7வயதிருக்கலாம். இளையபெண் துறு துறு என்று எப்பொழுதும் பட்டாம்பூச்சியாய் தொட்டதும் பறப்பதும் தொடத்துவங்குமுன் பறப்பதுமாக வர்ணப்பூச்சுகளாய் என்னைமட்டுமல்ல பலரையும் ஈர்த்திடுவாள். இவளை பார்த்த பின் இவளது மூத்த சகோதரியை பார்க்க நேரிட்டது ஒரு சிலருக்குள் வினா எழும்பலாம் விடைபெறறுச் செல்லும்பொழுது சிலர் வினவவும்கூடும். முதல்பெண்குழந்தையின் ஆழ்ந்த மௌனமும் அதனூடான தனிமையும் ஒற்றைத்தலைவலியாய் எனக்கும், முன், பின் வந்தவர்களும் அனுபவித்ததை.

 

மூத்த குழந்தை, அவளின் இன்னும் சிறிய ப்ராயத்தில் சந்தித்திருப்பின் அல்லது இன்னும் பல ஆண்டுகள் கடந்துசென்றபின் சந்தித்திருப்பின் பட்டாம்பூச்சியாய் சிறகசைத்திருக்கலாம்! இப்பொழுது எனக்கு, இல்லை உங்களுக்கு சில ஓப்பீடுகள் எழக்கூடும். ஏன் இப்படி இவள் இருக்கிறாள், இளையவள் போல இல்லையே இவளுள் இருக்கும் அந்த கலகல துறுதுறு எல்லாம் எங்கு ஒளித்துவைத்திருப்பாள் என்று புரிந்து கொண்டதன் வெளிப்பாடு இது அல்ல!

 

கேள்விகள் எழுந்த வண்ணமாய் அதற்கான பதிலா இது என்று தெரியாதபொழுதும் நான் அவளாகவே மாறுபட எத்தனிக்கிறேன். அவளது மனவெளியில் சஞ்சரிக்கும்பொழுது தனிமையும், மௌனமும் சின்னதாய் சிறகசைத்து புன்னகைக்கிறதுஇசைமீதான இவளது ஈடுபாடு முதன்மையான கல்வி இவற்றிடையே வாழ்ந்ததன் மிச்சங்களை நேசிக்க வாசிப்பதற்கான பக்கங்களாக அடிக்கிச்செல்லும் ஒவ்வொரு வெளியியும் அர்த்தம்பொதிந்தவை. மறையும் சூரியனின் உடைந்த சுடர்வெளியாய் எங்கும் புன்னகை எல்லாம் புன்னகை. இளையபெண் எந்த அளவிற்கு பட்டாம்பூச்சியாய் சிறகசைத்தாலோ அதனினும் மேலானதொரு தளத்தில் சஞ்சரித்துகொண்டிருந்தாள். உணவினை கொறித்துக்கொண்டிருக்கும் அணிலின் சிநேகத்தை ஏற்படுத்தியபடி.

 

நம்முடைய கேள்விகளும் அதன்பிறகு எழத்துடிக்கும் திணிப்புகளும் சிதைவுறும் மனவெளிக்கு திறப்புகளாகிறது. வேறபட்ட இருவரின் உலகுமே அழகியல் நிறைந்தது. ஆழ்கடலுக்குள் இவர்களை இழுத்சென்றபடி இவர்களின் தாய் தந்தையர் இருந்திருக்கலாம், இருக்கநினைக்கலாம்!

 

சரியா தவறா என்றதன் தொடர்ச்சியாய் இளையபெண்ணின் ஓவியங்களில் மனமொற்றி, அவளது வினாவிற்கான தேடலாக என் விழியெங்கும் வண்ணங்கள் நிரம்பிக்கொண்டிருக்க, என்முன் ஒரு புகைப்பட ஆல்பம் நீட்டப்பட்டது. நண்பரின் திருமதி கொடுத்த ஆல்பத்தை வாங்கும்பொழுது திருமண ஆல்பமாகவே இருக்ககூடும் என்ற எண்ணப்பாடு. (பல வீடுகளும் ஆல்பம் என்று அந்த ஒன்றை மட்டுமே அதிகமாக தந்ததை நினைத்துக்கொண்டேன்)  ஞாபகப்பொதிகளை மனம் சுமத்தலைவிட இன்னும் கொஞ்சம் அதிகமாக புகைப்படங்கள் சுமந்தபடியே வண்ணகளை இழப்பதற்கான ஆயத்தங்களில் இருக்கலாம்.

 

ஐந்து ஆறு வருடம், இன்னும் கொஞ்சம் காலறநடந்து ஒரு பத்து பதினைந்துவருடம் என்று பின்நோக்கத்தொடங்கினால், அம்மாவின் மடிமீது தலைவைத்துறங்கும் நிலையில் ஒவ்வொரு புகைப்படங்களாக வருடியபடி அடுத்தடுத்த பக்கங்களாக புரட்டப்படும்பொழுது, சிலநிமிட வாழ்தலுக்கான சாத்திங்கள் அந்தப்புகைப்படங்களில்! அந்த புகைப்படங்களில் இருப்பவருக்கோ அல்லது அதனையொட்டி பயணித்தவர்களோ மீட்டெடுத்தபடி மிதக்கும் வெளிகளில் பயணிக்க ………

 

இந்த புகைப்படத்தில் சம்பந்தப்படாதவர்கள் இந்த புகைப்படங்களை பார்த்தால்? இதுபோன்ற ஒருவெளியில் பயணித்திருப்பினும் புகைப்படத்தின் வெளிகளுக்குள் பயணிக்க !

 

குடும்ப சுற்றுலா சென்றுவந்ததன் தடயங்களை பின்பற்ற  ஆல்பத்தில் காலயந்திரமும் சில மாயயந்திரமும் இணைக்கபட்டுள்ளதா? என்ற ஆவலில் பக்ககங்களை புரட்டும்பொழுது எல்லாம் விரியும் விழிகளின் வழியே ஒருவித மயாகற்பனைகளில் அதற்கான காட்சிகளும் விரியத்தொடங்குகிறது. பயணச்சீட்டுக்களும் புகைப்பட உருவாக்கத்தின் புராதான சுருக்கங்களுமாய் தசவதாரத்தை ரசித்த ஜாக்கிஷானின் மனநிலையில் மொழிதெரியாதவனாய் வாவ் வாவ் என்றே சொல்லத்தோன்றுகிறது  

 

எனக்கான ஆல்பமும் இப்படிஒன்றாகத்தான் இருக்கவேண்டும். எங்கு இந்த ஆல்பத்தினை வடிவமைத்திருப்பர் என்ற எண்ணப்பாட்டை  கேட்டபொழுது நண்பரின் திருமதி 15தினங்களுக்கும் மேலாக ஈடுபட்டு உருவாக்கியவை என்பதை ஒருபக்கம் மனம் நம்மபமறுக்கும்மல்லவா. கலைத்து போடப்பட்ட சீட்டுக்கட்டுகளாக மிக நேர்த்தியாக வடிமைக்கப்பட்டிருந்தது. கவனச்சிதறலையும் அடுத்தபக்களுக்கே இழுத்துசெல்லமுயன்றபடி பக்கங்கள்தோறும் மழலையரின் புன்னகையாய் அத்தனை வசீகரம். இந்த புகைப்பட ஆல்ப வடிவமைப்பினை வர்தக ரீதியில் முயன்றிருப்பின் நிச்சயம் சில பல உச்சங்களை தொட்டிருக்கலாம். இவற்றை எல்லாம் கடந்தபடி மதிய உணவினை உட்கொண்டபொழுது பிரியாணியுடன் பரிமமாறப்பட்ட குழம்பில் சிறு வில்லைகளாக போடப்பட தேங்காய் சில்லுகள் இப்பொழுதும் அந்த மதியவெளிக்கு இழுத்துச்செல்கிறது.

 

உண்டபின் குழுமிய நண்பர்களிடையே நவீனம், பின்நவீனம் கவிதைகள் பற்றிய கருத்துக்களை தெளிவுபடுத்த, அல்லது எப்படி அணுகுவது என்ற வினவலாக எழுந்த சொல்லாடல்கள் எல்லாம் தெளிவின்மையாய் தொக்கிநிற்பதால் புரிதலுக்கான முயற்சியாய் சொல்லபட்டவையை இங்கு இசையினூடக அணுகத்தொடங்குகிறேன். கவிதை மீதான ஒப்பீடாக இங்கு இசையை குறிப்பிடலாம். கர்நாடக சங்கீதம் தாண்டிய பறை போன்ற நம்முடையபாராம்பரிய இசைச்கருவிகள் எழும் இசைத்தலை எத்தனை பேர் புரிதலுடன் அணுகத்தொடங்கியிருக்கமுடியும்? தெம்மாங்கு, நாட்டுப்புறம், வில்லுப்பாட்டு என்று குறிப்பிட்ட சமுகத்தின் இசைவடிவங்களின் குறிப்பறித்தவர்கள் எத்தனைபேராக இருக்ககூடும்? இன்று ஒட்டுமொத்த தமிழர்களின் இசையாய் குத்தகை எடுத்திருக்கும் கோடம்பாக்கத்து இசையயை அணுகத்தொடங்கியிருக்கும் தொண்ணூரு சதவிகிதத்தினர் புரிதலுடான அணுகியிருப்பர்?

 

இசைமீது எந்த ஒரு அடிப்படை ஞானமும் இல்லாதவன் என்ற அடிப்படையில் எப்படி இசையை நான் உணருகிறேன் என்றால் கேள்விக்குறிதான் மிஞ்சுகிறது. ஆனால் இசையை ரசித்திருக்கிறேன், ரசித்துக்கொண்டிருக்கிறேன்இசையோடு இசையாக மாறவும் எத்தனிக்கிறேன். இதுபற்றி இங்கும் யாரும் ஆச்சரயபட்டதாய் நினைவில்லை. இது எனக்குமட்டுமல்ல பலருக்குமான ஒன்றே. ராஜஸ்தான்னில் இசைக்கப்படும் மரபுவழிபாடலாகவோ, கிறிஸ்தவ தேவாலயத்தில் இசைக்கபடும் இசையாகவோ, மசூதிகளில் ஓதப்படும் பாத்திமாவிலோ அல்லது நண்பர்களுடனா செல்பேசிஉரையாடல்களில் அவர்களின் பேச்சையும்தாண்டிய கேட்ககூடிய ரீங்காரங்களை எல்லாம் நுகரும்பொழுது ஆடலாம், சில மெல்லிய அதிர்வுகளால் என் உடலெங்கும் பரவலாம், மௌனிக்கலாம், சவமாய் கூடமாறலாம், பைத்தியக்காரனின் புன்னகையும் அதனையும் கடந்த ஒன்றும்மில்லாத வெளிகளையும் ஏற்படுத்தலாம்.

 

பல்வேறு இசைக்கருவிகள் மூலம் எழுமபும் பலகூறு இசைகள் என்று இப்பரபஞ்சம் முழுமைக்கும் இசை, இசையாய் பரவியுள்ளது. ஒவ்வொரு இசையும் யாரோ ஒருவரால் இசைக்கப்பட, இசைப்பதற்காக ஒருவர் இருந்துகொண்டே இருக்கிறார் என்கின்ற உண்மை அறியப்படாதபொழுதும்,  யாரோ ஒருவரால் ரசிக்கப்பட்டுகொண்டிருக்கிறது.

 

இங்கு காதுகளை அடைத்துகொண்டு இருப்பவர்கள் விடுத்து எல்லோருமே இசைப்பிரியர்களாக இருக்கிறார்கள். என்ன, மெத்த படித்ததாய் நினைத்துக்கொண்டிருப்பவர்கள் மத்தியல் புதிதாய் வருபவர்கள் அஞ்சிபோய் வெளிப்படுத்தவிருப்பமின்றி அவருள்ளே புதைத்துவிடுகின்றனர். மேலும் இசைப்பவன் மட்டும் ஞானி என்றும் அதை உற்று உணர்ந்து பரவசமிகுதியால் தன்னை மறக்கும் ஒருவன் (விமர்சகர்கள் தாண்டிய) ஞானமற்றவன் என்ற பார்வையும் சிக்கல்களை உண்டாக்குகிறதுஇதற்கே இப்படியெனில் உற்றுணரா உச்சத்தின் இசையை நுகர்ந்து சஞ்சரிப்பனுக்கு?

 

முதலில் நீ ரசிக்கத்தொடங்கு, பிறகு அதையே வெறுக்கத்தொடங்கு. இப்பொழுது உங்களின்  மனநிலையில் வெறுப்பதற்கான காரணங்கள் குறையத்தொடங்கலாம். வெறுப்பதற்கான காரணங்கள் இருப்பினும் அதை ரசிப்பதற்கான மனநிலையில் மாற்றிடவே விரும்பக்கூடும்இங்கே பலரும் கவிதையை கவிதையாகவே பார்க்கிறார்கள். அதையும் கடந்து தரிசிக்க மிகச்சிலரே இருக்கிறார்கள் மிகச்சிலரே முயல்கிறார்கள். ஆகா சூப்பர்  என்று உங்களின் உதடுகளில் ஒட்டியிருக்கும் ரெடிமேட் சொற்களை வெட்டியெறியுங்கள் ஆழ்நிலைதியானமாய் அணுகத்தொடங்குங்கள். கவிதை என்ற ஒன்று கவிதையோடு முடிந்துவிடுவது அல்ல!   வாழ்வியலோடு பார்ககத்தொடங்கும் பொழுது புரிபடாத கவிதைகளும் புரிபடத்தொடங்கும் புரிபடாத பொழுதும் கவிதையாகத்தோன்றும்.

 

 

உலகம் உருண்டையானது ஆரம்பித்த இடத்தில்தானே முடிக்கவேண்டும்

 

இது சரியா தவறா ?

 

இதோ விடைபெறும் தருணம்நான் உள்நுழைந்ததும் அங்கு இருந்த பியானோவை கவனித்து  இதை யார் இசைப்பது என்று கேட்டேன் நண்பரின் திருமதி  சொன்னது அவரின் முதல் குழந்தை என்று, பின் அவளை வாசிக்கச் சொல்வதாகவும் சொன்னதை மீட்டெடுத்து அந்த குழந்தையை அழைக்க அவளுள் சில சங்கடங்கள், எப்படி புதியவர்கள் முன் வாசிப்பது என்பதாகவும், அல்லது இந்த நேரத்தில் அவளுக்கு இசைப்பது விருப்பமின்மையாகவும், இன்னும் கடந்தால் ஒருவித கட்டாயத்தின் பெயரில் வெளிபடுத்தவேண்டிய நிலையில் இருப்பதாலும், இசைப்பதற்கான தயக்கதில்  அவளின் விரல்கள் பியானோவினை மீட்டத்தொடங்கியது,   சிறைபட்ட இசையை மீட்கத்தொடங்கியது. குழுமிய நண்பர்கள் செவிமடுத்தபொழுதும், செவிவழிசென்றவை இசையாயகவும், இசையற்றவெளியாகவும் இருக்கலாம். இசைக்கு செவிமடுத்தலைவிடுத்து, அந்த குழந்தையின் இசைவிற்காய் செவிமடுத்தவர்கள்

 

அவளுக்கான இசைத்தொகுப்பில் இரண்டு பாடல்களை இசைத்தபின் மெல்லிய குழப்பம் அவளுடைய உலகினுள் எங்களை அழைத்துசென்றுவிட்ட திருப்தியும் எங்களின் உலகுடன் அவள் சஞ்சரிக்கத்தொடங்கிய முயற்சியுமாய் அடுத்து எதை இசைப்பது என்று சிந்தனையில். இடைப்பட்ட இந்த நேரத்தில் இரண்டாவது  குழந்தை, அவளுக்கேயுரிய சிறிய பியானோ கருவியில் இசைக்கத்தொடங்க, இப்பொழுது முதல்  குழந்த இரண்டாவது குழந்தையை ஒரு வித ஏக்கத்துடன் பார்க்கத்தொடங்க விழிகளில் பற்றி எரியத்தொடங்கியது அவளுக்கான இசையும் இசைப்பதற்கான விருப்பங்களும்.

 

 

நண்பர்ரிடம் விடைபெற்றுவெளியே வந்தபொழுது, எங்களை வழியனுப்பும் விதமாக உள்ளிருந்து இசைக்கப்பட, காற்றுவழி எனதான தீர்மானத்தில் இரண்டாவது குழந்தையாக இருக்ககூடும் என்று அவளை அழைத்து அவளிடம் விடைபெறஎண்ணி பார்க்க, அந்த சிறிய பியானோ கருவியினை இரு குழந்தைகளும் ஒன்றிணைந்து இசைத்துக்கொண்டிருந்தனர். சொல்லுங்கள் இது சரியா? தவறா?

 

இப்பொழுதும் நினைக்கின்றேன், இந்த இரு குழந்தைகளின் உலகங்கள் நானே கற்பித்துக்கொண்டவை. சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்! ஏன் இப்படி என்று எண்ணப்பாட்டில் எழும் கேள்விகளின் திணிப்பால் றெக்கை வெட்டப்பட்ட தும்பிகளா இவர்களை பார்ப்பாதற்கு, மாற்றுவதற்கு விருப்பமின்றி விலகியிருந்து இவர்களின் உலகினுள் சென்றுவரவும், அதனூடாக எனக்கான உலகத்தில் அவர்கள் வந்து செல்வதற்கான வழித்தடங்களாக தோற்றுவித்தலே இந்த வாழ்வின் போதுமானதொன்றாக இருக்கிறது.

 

இந்த இரண்டு பெண்குழந்தைகள், இவர்களின் தாய் பற்றி கண்டுணர்ந்ததை  சொல்லிய பின் தவறவிட்ட சில தருணங்களை தரிசிச்கும் நண்பரைப்பற்றி சொல்லவா வேண்டும்! இடையிடையே நான் பேசிச்சென்ற புகைப்பட ஆல்பம் மற்றும் கவிதைமீதான பார்வையும் இந்த பத்திக்குள் இடைச்செருகலாய் இருப்பினும் இது சரியா தவறா என்று எண்ணத்தொடங்கும்முன், எனக்கு கிடைத்தது அந்த இருகுழந்தைகளிடமிருந்தே. புரிதலுக்கான பாதைகள வசிகரிக்கப்படவேண்டும்.

 

சரியா?   தவறா ?
பாண்டித்துரை  

நன்றி: யுகமாயினி – ஜீன் 08

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s