என் வழியே எழுதப்படாத குறிப்புகளாய் எஸ்.ரா!!!

இன்றும் கதைசொல்லியாக தன்னை அறிமுகப்படுதிக்கொள்ளும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வாசிப்போம் சிங்கப்பூர் 2008 நிகழ்விற்காக சிங்கப்பூர் (11.03.08 முதல் 15.03.08 வரை) வந்திருந்தபொழுது பகிர்ந்து கொண்டவை என்னுள் படிந்த செவிவழியே கொஞ்சம் வெயிலையும் கொணர்ந்துவரக்கூடும்.

எழுத்தாளனாக உருவாக குடும்பமும் குடும்பம்சார்ந்த விசயங்கள் பெரும்பான்மையான பங்காற்றியிருக்க, தீவிர படிப்பில் அக்கறை செலுத்தும் குடும்பமாகவும், அம்மாவழி தாத்தா லண்டன்வரை சென்று படித்திருக்க 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒன்றிரண்டு கல்லூரி இருந்தபொழுது ஆண்இ பெண் என்று அனுப்பி படிக்க வைக்கவும், அதுவும் பெண்களை படிக்க அனுப்பச் செல்லும்பொழுது துணைக்கு யாரும் அழைத்து செல்லக்கூடாது என்றவகையில் இவருக்கு தெரிந்தவை எல்லாம் புத்தகங்கள். எங்கும் புத்தகங்களாய் ஆக்ரமிக்க மதியநேரங்களில் யாரும் உறங்குவதில்லை. ஒவ்வொரு இடத்திலும் புத்தகத்தை சுமந்தபடியே ஒருவர் வாசித்துக் கொண்டிருக்க, மறுபுறம் தீவிரமாக படித்த தேவாரம், திருவாசகம், திருப்பாவை இசைமீதான பயிற்சியில் சமயலறைவழியே நினைவுவரும் பொழுதெல்லாம் அம்மாவால் பாடப்பட்டு கேட்க்கப்பட இப்படி புத்தகம் எழுத்து இருக்கும் இடத்தில் எல்லாருக்குள்ளும் இயல்பாக வரக்கூடிய ஒன்றுதான் இவரையும் புத்தகங்களுக்குள் இழுத்துச்செல்ல …..

ஆரம்பகட்டங்களில் “இரும்புக்கை மயாவி” போன்ற காமிக்ஸ் புத்தகங்கள், சாகசங்கள் நிறைந்த புத்தகங்களாய் படிக்கத்தொடங்கி, ஒருகட்டத்தில் காமிக்ஸ் புத்தகங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிந்தபொழுது பின்னர் படிக்கப்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் யாவும் இப்படி நடக்குதா, அப்படி இல்லையா என்பதை பரிசோதிக்கவே. இதையும்படி என்ற அண்ணனின் ஆசையால் கொடுக்கப்பட்ட பாரதியார் கவிதைகளும் வீட்டில் இருந்த கரும்பலகையில் தினசரி படித்த ஒன்றை யாராவது ஒருவர் எப்பொழுதும் எழுத அதிகாலையில் எழுந்தபடியிருக்க, அப்படி எழுதுவதற்காக ஏதாவது ஒன்றை படிக்கவேண்டுமே! இப்படியான போட்டிகள், ஆறுக்கும் மேற்பட்ட தினப்பத்திரிக்கைகள் வந்துவிழ தொடர்கிறது வெயிலாய் இவரின் எழுத்து.

வாசித்தபொழுது படங்கள் இல்லாத புத்தகத்தால் என்ன பிரயோசனமிருக்கு என்ற எண்ணப்பாட்டில், பள்ளியில் நடத்தப்படும் சரித்திரப்பாடங்களில் தமிழ் இலக்கியங்களில் சித்திரத்தையே ஏன் காட்டுவதில்லை என்று எழுப்பும் கேள்விகளால், பாரதியை வாசித்தபொழுது உடலில் ஏற்படுத்திய வேறொரு மாற்றத்தால் இப்படியும் ஒரு மனிதன் இருக்கிறானா என்று எழுந்த சந்தேகத்தை சொல்ல, பாரதிவாழ்ந்த எட்டையபுரத்திற்கு அழைத்துச்சென்று காட்டப்பட்டபோதுதான் இவருள் தோன்றியது எல்லாம் உண்மையென்று.

பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் கிராமத்துவாழ்வினை சுவீகரித்து, பிறந்தநாள் முதல் இன்றுவரை காணும் முடிவற்ற வெயிலின் காட்சியால் சதா இவரின் எழுத்துவழியே வெயிலும் இழையோடியபடியே நம்முள்ளும் வெப்பத்தைஉணரச்செய்கிறது. இன்றும்கூட இவரின் சன்னல் கதவுகள் உச்சபட்ச வெயிலின் வருகையை உணர்ந்தால் அகலத்திறந்து வீடுநிரம்ப மஞ்சள்வெயிலை நிரப்பிக்கொள்ளும். எழுத நினைக்கும் பொழுதெல்லாம் பருகும் நீர், உடல் என்று ஒருபகுதியாய் வெயிலும் இவருள் விரிகிறது.

வீட்டில் எழுத்தாளராக விரும்பியதோ இவரின் அண்ணன். யாருக்கும் காட்டாமல் மறைத்து எழுதிய அண்ணனின் படைப்புகள் பத்திரிக்கைகளில் வருவதைகண்டு எழுவது என்பது பெரியவிசயமில்லையா என்ற எண்ணத்தில், எழுத்தாளனாக வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்ற அண்ணனிடம் தொடுத்த கேள்விக்கு கிடைத்தவை நிறைய படி. என்ன என்ன தோன்றுகிறதோ எல்லாவற்றையும் படி. எதுக்கு என்று தெரியாமல் தாத்தாவால் கிடைத்த ஆங்கிலப் புத்தகங்களையும் படிக்கவே திறந்துகொண்டது இன்னொரு சாளரம் அங்கிருந்தும் வெயில் கசிந்துகொண்டிருந்தது.

படிப்பில் அக்கறையில்லாத கடைசிவரிசை மாணவனாக ஏதேதோ சிந்தனையில் வீட்டின் படிக்கட்டிலிருந்து இவரின் உலகம் விரியத்தொடங்கியது. ஊரின் வெளியே நடந்து செல்லத் தொடங்கியபொழுது துணையாய் வெயிலும் இவரின் நிழலை சுமந்துவரத் தொடங்கியது. அறத்திற்கு கட்டுப்பட்ட கிராமத்து மக்கள், வேடிக்கை மனிதர்கள் என்று வித்தியாசப்படுத்தி பனையைமட்டும் பத்திரப்படுத்தியிருக்கும் நிலப்பரப்பும் இவரை ஆக்ரமித்துக்கொண்டது. இன்று முனைவர்பட்டம் பெற்றாலும் எல்லோரையும் அனைத்துச்செல்ல பெயரின்முன்னே தன்னை கதைசொல்லியாகவே வெளிப்படுத்துகிறார்.

நம்மைச்சுற்றியுள்ள இனம்தெறியாத வெறுமையைவிரட்ட, மென்மையான ஸ்பரிசமாய் யாரோ ஒருவரின் தொடுதலான ஒன்றை உணரத்தொடங்கியபொழுது எழுந்த உத்வேகம் எழுத்தாக உருப்பெற, எழுதவேண்டிய உத்வேகத்தில் இவரால் தேடித்தேடி ஆரம்பத்தில் வாசிக்கப்பட்டவை வீடுமுழுமைக்கும் நிரம்பியிருந்த மாஸ்கோ-பதிப்பகத்தின் சோவியத் எழுத்தாளர்களின் படைப்புகள். வாசிக்கத் தொடங்கியபொழுது நெருக்கமாய் வந்துசென்றவை ரஷ்யக்கிராமங்கள். இங்கே தொலைந்துபோனாலும் மீண்டுவரக்கூடும் என்று முன்னர் நினைத்ததை சமீபத்தில் ரஷ்யா சென்றபொழுதுகூட இவரால் உணரமுடிந்தது சொந்தகிராமத்தின் மஞ்சள் வெயிலையும் சேர்த்தே.

ஏன் இருவர் சந்தித்தனர், ஏன் இருவர் சந்திக்கவில்லை? எல்லா இலக்கியங்களும் சொல்லக்கூடியவை இந்த சின்னபுதிர்தான் என்று சொல்லும் இவருக்குள் இன்றுவரையுள்ள விசித்திரங்களும் இவையே. ஒரு புதினத்தினுள் ஏன் ஒருவரையொருவர் சந்திக்கின்றனர் ஏன் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை? வாழ்க்கையைப்போல விதிவசமானது நாவல். நாவல் என்பது வாழ்க்கையின் விதியைப்போல ஏதோ ஒரு கற்பனாசக்தியின் விதிவசம்தான் நாவலை நகர்த்துவதாய் உணர்ந்து, இலக்கியத்தை இழுத்துச்செல்ல சொல்லப்படாத மௌனங்களுக்கு இலக்கியங்கள் மிகப்பெரிய இடத்தினை உருவாக்க மனதிற்கு நெருக்கமாக இருந்த எழுத்தாளராக திரும்பத் திரும்ப படித்த தஸாவெஸ்கியை சொல்கிறார். எப்படி பாரதி சொற்களின்வழியாகவும் தமிழின் நுட்பத்தின் வழியாகவும் கதையாடலுக்கு மனதினை கடந்திச்செல்லும் மனநிலைவரை சென்றுவரத் தொடங்கியதைப்போல் கடையெழுத்திற்கு குறிப்பாக மனிதர்களை பார்க்க படிக்க தஸாவெஸ்கியும் இவருள் காய்ச்சலை உற்பத்திசெய்ய, திரும்ப திரும்ப படித்துக்கொண்டிக்கும் ரஷ்ய வழிவந்த எழுத்தாளனாகவே இன்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறார்.

தன்னைச்சுற்றியுள்ள சின்னச் சின்ன விசயங்கள் குடும்பஉறவுகளின் வழியே விசித்திரமான உலகினை நெடியவீட்டின் சமயலறை, தொட்டிக்குள்ளிருந்து பூக்கும் ரோஜாப்பூக்கள், வேம்பிலிருந்து வெளிப்படும் கடலோசை என்று வசிகரித்த உலகில், முன்கட்டுக்கு வராத, வெளியிலிருக்கும் யாரையும் பார்க்காத பெண்களிடத்திலிருந்தே இவரின் எழுத்து தொடங்குகிறது. திரும்ப திரும்ப எழுதிய படைப்புகளை படிக்கும்பொழுதெல்லாம் இவருள் பிரதான இடங்களை பெண்களே ஆக்கரமிப்பதற்கு இது ஒரு காரணம். என்னடா உனக்கு பிரச்சினை என்று ஆராய்ந்தால் கிடைக்ககூடியவை எங்கோ தீர்க்கப்படாத இவர்களின் வெம்மையான உலகமே இவருள் வந்துசெல்கிறது

மொழிக்குள் வராத, பகிர்ந்துகொள்ளப்படாத, தன்னுடைய குறைகளை யாரிடமும் சொல்லாத பெண்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு அந்தரங்கமான ஒன்று அவர்களுக்கு புரிபடக் கூடியதாகவும் எழுதவைத்த ஒருபெரும் சக்தியாகயும் இருக்கிறது. இவை அசட்டு நம்பிக்கைகள் ஆனால் அந்த நம்பிக்கைகள் நிசமானவை. இலக்கியத்தின் ரொம்ப முக்கியமானதாக நினைக்கத் தோன்றுவது இதுபோன்ற நினைவுகளும் நினைவுசார்ந்த இடங்களும் என்று நினைவுபடுத்தும்பொழுது “நினைவு ஒரு இடமாக இருக்கிறது” என்ற கவிதையாக நகுலன் வந்துசெல்கின்றார். திருச்செந்தூருக்கு இப்பொழுதுசென்றால் நான்கு, எட்டு, பதினான்கு என்று கடலலைகளின் வழியே கால்பதிந்து நடந்தவையே நினைவுக்கு வருகிறது. இந்த இடங்கள் ஒரு நினைவுதான். பிறருக்கு முருகனும் முருகனைச்சார்ந்த பிம்பங்களுமே தட்டுப்பட, இப்படி படுத்துறங்கி பயணித்த இடங்களும், இடங்கள் தந்த உத்வேகமும் இவரை எழுதவைத்திருக்கிறது.

முதல்சிறுகதை பத்திரிக்கையில் வெளிவந்ததும், முதல்புத்தகம் வெளிவந்ததும் தற்செயலான ஒருநிகழ்வாக நினைத்துப் பார்க்கையில் தனக்கானவையாக எழுதி வெளிவந்திருப்பதைப் போன்று இன்னும் வெளிவராதவை இவரின் வீட்டின் அறையெங்கும் நிரம்பிய வெயிலினூடாக மிதந்தபடி இருக்கிறது. இறைவன் ஒருவன் இருக்கக்கூடும் என்று நினைப்பவர்களின் பார்வையில் இவர் ஆசிர்வதிக்கப்பட்டவர். ஆமாம் இவருக்கு கிடைத்த நண்பர்களும் அப்படித்தான்.

பெருமாள் தேடித்தந்த புத்தகங்களுடன் எழுத நினைத்தால் நீ ஊரைச்சுற்று என்றும் பெருமாள் சொல்ல பணத்தினை மனம்தேட பெருமாளிடமிருந்து கிடைத்த நூறுரூபாயில் தொடங்கியபயணம் வாசிப்போம் சிங்கப்பூரையும் கடந்து இருண்மைக்கு அப்பால் தோன்றும் மஞ்சள் வெயிலாக தொடர்கிறது. அண்ணனின் நண்பனான கோணங்கியின் நட்பு கிடைக்க பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எல்லா இலக்கிய நண்பர்களின் வீடுகள் என்று இலக்கில்லாத பயணங்கள், ஏன் சென்றோம், எதற்காக சென்றோம் என்று கண்ட காட்சிகளை இன்று மீட்டெடுக்கப்படும்பொழுது வெளிவருபவை மனிதர்கள் சார்ந்து இல்லாது பெரும்பாலனவை இயற்கை சார்ந்தவையாகவே இருக்கின்றன. அற்புதமான காலை, அதன்வழி எழுந்துவரும் சூரியஉதயம், உறங்கா நீண்டஇரவின் இரயில் பயணங்கள், செடிமுளைத்த பாதைகள், இமயமலையின் அடிவாரம், பௌத்தமடாலயங்கள் என்று இந்தியாவின் பிரதான இடங்களுக்கு பலமுறைபயணித்த பாதங்களுமே இன்று ” நெடுங்குருதி” , “யாமம்” என்று தொடர்கிறது

வரைபடத்தில் பார்த்தபொழுது தெரியாத இந்தியா பயணங்களின் வழியே தெரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் எங்கோ மொழி தெரியாத ஊரில் மனிதர்களையும் கடந்த ஏதோ ஒன்று நெருக்கமாய் இருக்க, எழுத்தின் திசையை அவதானிக்கமுடிந்தது. எழுத்து, இலக்கியம் எல்லாமும் இந்த மொழி தெரியாத, மொழியைப்பற்றி கவலைப்படாமல் அவ்வப்பொழுது வாழ்க்கையின் விதிகளை முடிவுசெய்து வாழக்கூடிய மனிதர்களின் மீதுதான். பெரும்பான்மையான கவனமும் இன்றும் இருக்ககூடிய அடிநிலையில் கவனிக்கப்படாத மனிதர்கள். இவர்களின் இயல்பான வாழ்க்கை மறுபுறம் இவர்களிடமிருந்த ஏராளமான கதைகளும் இவரை எழுதவைக்கின்றன.

பால்யத்தில் மாட்டுச்சந்தைக்கு மாடுகளுடனும் பயணத்தை கடக்க முடிவில்லா கதைசொல்லிய மனிதர்களும் மாடுகளை ஓட்டிச்செல்லும் அத்தனை நபர்களுமே கதைச்சொல்லிகளாக இருந்தாலும் யாரோ ஒருவர் இரவின்வழியே சொல்லப்பட்ட கதைகளில் இவருள் தோன்றியது தமிழுக்கான தமிழர்களுக்கான கதைமரபு என்று ஒன்று இருக்கிறது. நூற்றுக்கனக்கான விதங்களில் இந்த கதைகள் இருக்கின்றன ஒவ்வொரு கதைமரபிலும் ஒரு குறிப்பிட்ட கதைசொல்லலை பின்னர் முனைவர் பட்டம் பெற்றபொழுது கண்டடைந்தார். உலகின் மிகச்சிறிய கதைகளும் தமிழிலேயே இருக்க, செவ்விலக்கியங்கள் காட்டியபாதையின் வழியே எழுதப்பட்ட ஆரம்பகால கதைகள்யாவும், சந்தித்த மனிதர்கள், வாழ்ந்த கிராமங்கள் இந்த காலகட்டதில் இவருள் பாதித்த இன்னொரு எழுத்தாளரையும் கவனிக்கவேண்டும் அவர்தான் மார்க்கோஸ். இவரை படித்தபொழுது எழுந்தவை நம்பிக்கைகள். காரணமில்லாமல் மனிதர்கள் வைக்கும் நம்பிக்கைகள், எதற்காக கற்பனைகள் இருக்கின்றன என்று தெரியாக கற்பனைகள், இறந்து போனவர்கள்பற்றி நம்மின் நம்பிக்கைகள் என்று இன்றும் இவரின் வீட்டில் செல்விக்காக எடுக்கப்படும் ஆடைகளும், இறந்துபோன பெண்கள், இல்லாத திருடர்கள் இவர்களின் நினைவுகளின் தொடர்ச்சியாய் இவர் கண்டடைந்தது உலகத்தின் பெரிய கதைச்சொல்லிகள் பெண்கள்.

ஒவ்வொரு கிராமங்களுக்குள்ளும் இருக்கும் நம்பிக்கைகள், கற்பனைகள் மாய மயக்கங்களைப்போன்று மார்க்கோஸ் புனைக்கதையின் மயாத்தன்மை நம்பிக்கைகளை கடந்து, வரலாற்றையும், விந்தைகளையும் போர்ஹே கற்றுத்தர சரித்திரம் என்பது தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டே இருப்பது, சரித்திரம் முடிவற்ற ஒன்றல்ல, சரித்திரம் மனித உடலில்தான் எழுதப்படுகிறது என்றும் போர்ஹே சொல்ல அதன்வழி இவரோ, நான் நீ என ஒவ்வொரு தனிமனிதமும் சரித்திரம். எதனுடைய சரித்திரம் நீயென்றால் தமிழ்மொழியின் சரித்திரம் உங்கள் குடும்பத்தின் சரித்திரம், உங்கள் ஒவ்வொருவரின் சரித்திரம் எங்கோ ஒருவன் சந்திக்கும்பொழுது நீ மதுரையா என்று வினவலுக்கு பின்னே ஒரு புள்ளியில் மதுரையின் சரித்திரத்துடன் பிண்ணப்பட சரித்திரத்தை பற்றிய நம்முடைய கற்பனாசக்தி செங்கல் மேல் அடிக்கவைக்கப்பட்ட மற்றொரு செங்கலாகவே உயர்ந்துசெல்கிறது. எல்லாக் காலமும் எல்லாக் காலத்திலும் இருக்கிறது மனதினுள் உறங்கிக் கொண்டிருக்கிற குரங்கு தாவிக்குதிக்க அதுவும் நூற்றாண்டுகளை கடந்தும்! சரித்திரத்தை திரும்பத் திரும்ப மறு புனைவாகச் செய்யுங்கள், சரித்திரத்தின் இல்லாத பக்கங்களை எழுதுங்கள் என்று சொல்லும் இவர் இன்றும் சரித்திரத்தை இலக்கியத்தை தத்துவத்தை வாசிக்க போர்ஹே கற்றுத்தர மாணக்கனாக கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மீண்டும் பெருமாள் வர செவ்விலக்கியங்களை ஏன் நீ படிக்கவில்லை படி படித்தபின்னர் பிடிக்காவிட்டால் நிராகரித்துவிடு என்று சொல்ல அதனூடாக எழுந்த சுவையின் நீட்சியாய், இவரை எது எழுதவைத்ததோ அங்கேயே திரும்பிச்சென்றுவிட மனிதர்களே இல்லாத நிலக்காட்சிகள், முடிவில்லா வாழ்வின் சின்னச் சின்ன அம்சங்களாய் தொடர புறநானுற்றின் (பாடல் 246) “களம் செய்கோவே களம் செய்கோவே” ஒரு பெண்ணினுடைய உள்ளார்ந்த உணர்ச்சிகள் கொண்ட இந்த கவிதை ஒரு புகையாய் எழ எழுதப்படவேண்டியவை திரும்பவும் என்னவென்றால் மனித அக்கறைகள், அவலங்கள் என்று திரும்பத் திரும்ப திரும்பிய பக்கமெல்லாம் காட்சி தருகின்றவை வீழ்ச்சிதான். வீழ்ச்சியின் ஒருபகுதிதான் இன்னும் இவருள்ளே கேட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு பிரதான கருவைகொண்டிருக்க பிரதானமாக எழுதுவதும் வீழ்ச்சி பற்றியதுதான். இவரின் எல்லா நேர்காணலிலும் சொல்லப்பட்டவை வீழ்ச்சியின் பாடலை எப்பொழுதும் முனுமுனுத்துக் கொண்டிருப்பவன் நான்.

மனிதமனம் வித்தியாசமாய் ஏதோ ஒரு விதத்தில் ஒன்று சேர்க்கிறது. சங்ககாலத்தை முழுமையாக படித்து முடித்தபொழுது தோன்றியவை செவ்விலக்கியங்களையும் கடந்து சமகாலத்தில் வெளிப்படாத அத்தனை உணர்வுகளுக்கும் இடம்கொடுத்திருக்கிறது என்கிறார். துயரம் மட்டுமல்லாது எல்லா உணர்வுகளையும் பிரதிபலித்து பாடப்பட்டுள்ளன என்கிறார். எழுதுகின்ற நேரத்தில் எப்பவும் ஏதேதோ எழுத்தாளர்களிடமிருந்து சொற்களை, வாக்கியங்களை அவர்களின் அனுமதியின்றி, அனுமதியுடன் விரும்பியும், விரும்பாமலும் எடுத்துக்கொண்டு நன்றி தெரிவிக்கும்போதுதான் தோன்றுகிறது, கவனிக்கப்படாத சமகால வாழ்க்கையும் இரண்டாயிரம் ஆண்டுகள் இலக்கிய வெளியையும் இணைத்து எழுதவேண்டியிருக்கிறது. சங்ககாலத்தில் கண்ணகி நடந்த வழித்தடம் முழுவதுமான பயணங்கள், முக்கிய நதிகளின் ஆரம்பம்தொட்டு முடியும் இடம்வரையிலான பயணங்கள் வழியே கண்டடைந்தது, இலக்கியங்கள் எல்லாமும் பெரியநினைவுகள் ஏதோ மறந்த மௌனங்கள்.

“யாமம்” எழுதும்போதும் “நெடுங்குறுதி” எழுதும்போதும் நமக்குள் இருந்த சொல்லமறந்த நினைவுகள், அந்த நினைவினை ஏதோ ஒருவகையில் பதிவுசெய்கிறேன் ஒவ்வொருவரும் பதிவுசெய்கின்றனர். அதுயார் குறித்த நினைவுகள் என்றால்? என்குடும்பத்தில் உள்ளவர்களா எனது ஊரா என்றால் தெரியாது. அப்படி தனித்துவமான பிரிக்கப்பட்ட நினைவுகள் ஒன்றைத்தொட அது இன்னொன்றை தூண்டிவிட தனிமனித நினைவுகள் மறக்கடிக்கப்பட்டு பொதுவான நினைவுகள். பிரித்துப்பார்க்கமுடியாத சென்னையும் ஏதோ ஒருபகுதியாக இருக்க, கிராமம் கூட அப்படித்தான் இப்படி ஒவ்வொன்றாய் தொட்டுத் தொட்டுச்செல்ல பெரும்பான்மையான மனநிலை இப்படித்தான் இருக்கிறது. மணலாக பின்னால்தான் சரிந்துகொண்டிருக்க முடிகிறது. இன்றளவிலும் நிறுத்த முடியவில்லை மணலைபோல காற்றின் திசைகளிலும் மனம் செல்ல உடல் கைகள் என்று எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் மணல் தொற்றிக்கொள்கிறது. அப்படி எதை எழுதினாலும் ஏதோ ஒரு நினைவு தொற்றிக்கொள்கிறது. ஏன் இவ்வளவு விதிவசத்தால் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது எதுக்காக மணல் முடிவில்லதா பயணத்தில் இருக்கிறது என்று உற்றுப்பார்த்தால் மண் மண்சார்ந்த மனிதர்கள் அதற்குள் புதையுண்ட கிராமத்து மனிதர்கள், கிராமங்களை கடக்கும்பொழுது செவிகளில் பட்டுத்தெறிக்கும் புதையுண்ட மனிதர்களின் குரல்கள் ஏன் என்னை எழுதவில்லை என்று கேட்கும் குரலால் எழுதப்படவேண்டியவை பூர்வீகமான நம்முடைய வரலாறு இதே நேரத்தில் சமகால நெருக்கடி என்று இருளின் புனைவாய் வெக்கை தோன்றுகிறது.

ஒவ்வொருவரின் வழியே ஒவ்வொருவிதமாய் வெளிப்படும் தயக்கம் என்று வாழ்ந்துகொண்டு இப்பொழுது பார்த்தால் சகல அவமானத்திற்கு உரிய அங்கிகாரம் இருக்கு ஆனால் இடமில்லை. தன்னை விற்றுக்கொள்ள ஒருவன் தயார் என்றால், அவனை வாங்க பலர் வெளியே இருக்கின்றனர். மனித மனத்தின் விசித்திரம், அது இழந்தது, பெறவேண்டியது என்று எல்லாம் எங்கோ தேங்க ஒவ்வொருவரின் வழியாக திறக்கப்படுகிறது. இன்று எவ்வித வேறுபாடும் துவேசமுமின்றி இவரால் உணரமுடிகிறது. ஆனால் அது முக்கியம் என்கிறார். மொத்த சமூகத்தில் என்னுடைய குளத்தில் ஒருகுருவி நீரைகுடிக்கத்தேவையில்லை ஆனால் எங்கோ ஓர் இடத்தில் நீர் தேக்கப்படவேண்டும் அப்படித்தான் இருக்கவேண்டும் எழுதப்படுபவன் ஏதோ ஒரு அக்கறைசார்ந்து எழுதுகிறான் அது எப்படி வந்துள்ளது என்பதைவிட அவனது அக்கறை மிகமுக்கியம் மதிக்கப்படவேண்டும் என்கிறார் அறைமுழுமைக்கும் அதிரும் சிரிப்புகளுடன் எஸ்.ரா.

எழுத்து: பாண்டித்துரை
நன்றி: “நாம்” காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 08

©pandiidurai@yahoo.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s