2008 திரும்பிப் பார்க்கிறேன்

happy2008

அட! அதற்குள் 2008 கடந்துவிட்டதா, என்பதை தவிர திரும்பிப்பார்த்தால் எல்லாம் மகிழ்வான தருணங்களாகத்தான் இருந்திருக்கிறது.

 

2008-ன் துவக்கத்தில் நாம் என்னும் காலாண்டிதழை நண்பர்களுடன் ஆரம்பித்தது, பிரம்மா என்னும் கவிதை தொகுப்பினை (எனது முதல் கவிதை தொகுப்பு) நான்கு நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டது, அம்ருதா, யுகமாயினி, வடக்குவாசல், உயிரெழுத்து, அநங்கம், உயிரோசை (இணையம்) இதழ்களில் எனது படைப்புகள் வெளிவந்தது, முதல் தொலைக்காட்சி படைப்பு (சிங்கப்பூர் வசந்தம்), சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமை (PR) பெற்றதுடன் அடுத்த ஆண்டு என் ஊரில் எழுந்து நிற்கப்போகும் குடியிருப்புக்கு அடித்தளம் போட்டது வரை எல்லாம் மகிழ்வான தருணங்களே.

 

என்ன பாண்டி, அப்ப துன்பங்களே இல்லையா? என்றால்

 

இருக்கிறது!

 

ஆகக்கொடிய வலியினை மார்ச்-08  மத்தியில் அரவணைத்துக்கொண்டேன். இதன் வீச்சு இதயத்தில் துளையாய் இன்னும் இருக்கிறது. 2009-தினை இன்முகமாக வரவேற்க எல்லோரும் எழும் தருணத்திலும் என்னுள்ளேயான துன்பத்தின் சாயலை வெளிக்கொணர விரும்பவில்லை.

 

எப்பவும் அழாதடா, சிரிச்ச முகமாக இரு. இல்லை இல்லைனு சொல்லாத, எல்லாம் உன்னிடம் இருக்கிறது. வரும்! எல்லாம் ஒவ்வொன்றாய். உன்னைச் சுற்றிலும் மெழுகின் ஜோதியைத்தான் நீ நிரப்ப வேண்டும் என்று சொன்ன தோழி நினைவுக்கு வருகிறாள் இவானோடு! .

 

அதற்கான முயற்சியாய் 2008ன் துன்பங்களோடு

 

இனி

எனக்கான வலியினை

யாரிடமும் சொல்லப்போவதில்லை

ஏன்

என்னிடம் கூட!

 

2009 ன் துவக்கத்தில் எதற்காக காத்திருக்க போகிறாய் என்றால்

 

ஒரு கவிதைக்காக!!!

 

2008 ன் துவக்கத்திற்கான முதல் நாளிரவு அழகான ஒரு கவிதையை மனம் சுமந்துநின்றது, அந்த கவிதையை இந்த நேரத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

 

 

கவிதைக்கான காத்திருத்தலோடு

பாண்டித்துரை

 

@pandiidurai@yahoo.com

ஏழாம்முறை வாசிக்க

 

 

 

உங்களின் மின்னஞ்சலை சரி பார்க்கவும் என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது.

 

எதற்கு என்று பதிலனுப்பினேன்.

 

மாரடைப்பு வரும் என்று பதில் வந்தது.

 

மீண்டும் எப்படி என்று பதிலிட்டேன்.

 

மகிழ்ச்சி வந்தால் மாரடைப்பு வரத்தானே செய்யும் என்று மின்னஞ்சல் வந்தது.

 

கோடி (பணம்) விழுந்ததும் அதிர்ச்சியடைந்து சினிமாவில் விழுவார்களே அதான் ஞாபகத்திற்கு வந்தது. ஒரு வேளை அப்படிப்பட்ட செய்தி எதுவும் இருக்குமோ என்று ஆவலுடன் சென்று திறந்து பார்த்தேன்.

 

பதினைந்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல் வந்திருந்தது. இதில எந்த மின்னஞ்சலை குறுஞ்செய்திக்காரன் இல்லை காரி (பெயர் எதுவுமின்றி அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வந்தது) அனுப்பியிருக்ககூடும் என்று மின்னஞ்சல் வந்த தேதியினை சரிபார்த்தேன். இன்றைய தேதிக்கு மொத்தம் ஏழு மின்னஞ்சல் வந்திருந்தது. இன்னும் துல்லியமாக எப்படி கணிப்பது என்றமின்னஞ்சல வந்த நேரத்தை பார்த்தேன். ஏழு மின்னஞ்சல்களுமே இரண்டு மணிநேரத்திற்கு முன்பு வந்திருந்தவை. குறுஞ்செய்தி வந்த நேரத்தையொட்டிய மின்னஞ்சல் எதுவும் இல்லை.

 

மின்னஞ்சலை அனுப்பியபின் காலம்தாழ்த்தி குறுஞ்செய்தியை அனுப்பியிருக்ககூடுமோ? அப்படியெனில் இந்த ஏழில் ஒன்றாக இருக்ககூடும் என்று யார் யாரிடம் இருந்து வந்துள்ளது என்று பார்த்தபின் மின்னஞ்சலை திறக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

 

பெருமாள், குட்டப்பன், மின்மினி, எர்த்தர் சா ஆல்பிரட், ஆல்பினா மற்றும் எழுத்தாளர்கள் மாதங்கி, ரசிகவ்ஞானியார் என்றிருந்தது.

 

இதில் மாதங்கி மற்றும் ரசிகவ் நான் நன்கு அறிந்தவர்கள் எனது நண்பர்கள். ஆக மற்ற ஐந்துபேரில் ஒருவராகத்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். முதலில் எந்த மின்னஞ்சலை படிப்பது என்பதிலேயே சில நிமிடம் தாமதம்.

 

1

 

ஆல்பினா

 

பெயரே புதுமையாக இருக்கிறது, இதற்கு முன்பு கேள்விப்பட்ட பெயராகவும் இல்லை என்று ஆல்பினாவிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சலை படிக்கத்தொடங்கினேன். 

 

ஆல்பினாவிடமிருந்து ஆங்கிலத்தில் மடல் வந்திருந்தது. அதை அப்படியே இங்கு கொடுத்துவிடுகிறேன். புரியக்கூடிய அளவில் அந்த மின்னஞ்சல் இரப்பதும் ஒரு காரணம்.

 

Hello again! This is Albina! Remember me? I hope you received my message I sent you today. I will send you some more picture of me. If you will like it and want to write me further I will be glad! I will check my mailbox soon and will write you back! I will wait for your e-mail with impatience. Hope to hear from you soon! From Albina.

 

இதுபோன்று ஒருவாரத்தில் சராசரியாக ஜந்துமின்னஞ்சல் எனக்கு வருகிறது. இதற்குமுன்பு ஒருமுறை நானும் பதிலனுப்ப அதற்கு ஒரு நீண்ட மின்னஞ்சல் வந்திருந்தது. அந்த நீண்ட மின்னஞ்சலை இங்கு சுருக்கி கொடுக்கிறேன்.

 

Hello

 

This letter might come as a surprise to you especially since we have never meet ………..

 

I am Mrs Astrada Alintah 28 yrs Carribbean> right now in London……………….

 

I saw in one of his private room some vital information where my husband deposited the sum of ($10.5 million USD) ……………….

 

I believe by virtue of your personality that you are capable to assist me due to my latest predicament bearing in mind that your assistance is needed to transfer this fund into your account.

 

I propose a commission of (30% percent) of the total sum of ($10.5million USD) to you for the expected services assistance.…………………. Really it is hard to believe because of what is happening around the world but it is true.

 

——- Whatever your decision> while I await your prompt response.

 

BEST REGARDS>

 

MISS ASTRADA ALINTA

 

ஆகா நாடு விட்டு நாடுவந்து ஆயிரத்திற்கு கஷ்டப்பட்டுகிட்டு இருக்கும்பொழுது மில்லியன், பில்லியன் என்று மின்னஞ்சல் வருகிறதே என்று நினைத்தேன். சரி முயற்சி பண்றதி என்ன தப்பு அப்படினு பதில் அனுப்பினேன்.

 

அடுத்த மின்னஞ்சலில்  ; MISS ASTRADA ALINTA  வின் இரண்டு புகைப்படமும் வந்தது. அழகான புகைப்படம. மச்சக்காரன்டா பணம்  + பெண் இரண்டும் சும்மா கூரைய பிச்சிகிட்டு கொட்டபோகுது இனினு, MISS ASTRADA ALINTA  குறிப்பிட்டிருந்த வங்கி அதிகாரிக்கு மின்னஞ்சல் பண்ணினேன்.

 

வங்கி அதிகாரியிடமிருந்து  அடுத்தடுத்தது மின்னஞ்சல். அந்த சான்றிதழ் குடுங்க, இந்த சான்றிதழ் குடுங்கனு. எல்லாத்தையும் அனுப்பி செல்பேசி எண் எல்லாம் கொடுத்தபின்னாடி, ஒரு நானுற்றி இருபத்தைந்து அமெரிக்கன் டாலர் டிடி அனுப்புங்க மொத்த பணமும் உங்க அக்கவுண்டிற்கு மாறிடும் என்று செய்திவந்தது. 

 

ஆகா இவைங்க அவைங்க போலனு பதில் அனுப்பவில்லை.

 

அடுத்தடுத்த இரண்டு நாளிலும் மின்னஞ்சல்.

 

ம்கூம் அந்த பேரா உடனே அழிச்சிடுறது.

 

மறுநாள் நள்ளிரவு இரண்டுமணிக்கு செல்பேசி அலற பேசினது ஒரு பெண்குரல்,

 

ஆங்கிலத்தில் பாண்டே இருக்கிறாரா என்று.

 

ஆம் பேசுவது பாண்டேதான் என்றேன்.

 

நாங்கள் ; Federal Government of Nigeria> International Remittance  Department of this Bank  ல் இருந்து பேசுகிறோம்  என் பெயர் Mrs. Jacobs  உங்களுக்க 10மில்லியன் காசோலை தயாராக உள்ளது நீங்கள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளவும் அல்லது உங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிடுகிறோம், அதற்கு முன்பாக நீங்கள் ஒரு நானுற்றி இருபத்தைந்து அமெரிக்கன் டாலர் செலுத்தவேண்டியிருக்கும் என்றாள்.

 

என்னது நானுற்றி இருபத்தைந்து அமெரிக்கன் டொலரா என்றேன்.

 

10மில்லியன் பெறப்போகிறீர்களே என்று பதில் வந்தது. பதிலுடன் இழையோடிய புன்னகை எங்கள் ஊரில் செய்யும் நக்கலைபோன்றிருந்தது.

 

அதிலிருந்து தொடர்ச்சியாக நள்ளிரவு தொலைபேசி அழைப்புகள், வேறு வேறு பெண்குரல்கள்.

 

சில நாட்களுக்கு இரவில் செல்பேசியை அணைத்துவிட்டேன். இதுபோன்ற மின்னஞ்சல் வந்தால் பதில் அனுப்பாமல் அழித்துவிடுவேன்.

 

இப்பொழுது இரவில் அப்படிபட்ட அழைப்புகள் வருவதில்லை.

 

குறுஞ்செய்தி ஒன்று வந்தது. மீண்டும் அதே காரன் / காரியிடமிருந்து

 

மின்னஞ்சலை பார்த்தாச்சா என்று

 

இல்லை. ஏதேனும் அவசரமான செய்தியா? நான்  அலுவலக பணியில் இருக்கிறேன், மதியம் தான் சரிபார்க்க முடியும் என்று பதிலிட்டேன்.

 

2

 

ஒரு பத்து நிமிடங்களுக்கும் மேல் பதில் இல்லை. சரி அடுத்த மின்னஞ்சலை பார்கலாம் என்று குட்டப்பனிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சலை தெரிவுசெய்தேன்.

 

வணக்கம். என் பெயர் குட்டப்பன்

 

தற்பொழுது பெங்களுரில் பணிபுரிகிறேன்

 

இத்துடன் சில கவிதைகளை அனுப்பியுள்ளேன்

 

படித்துவிட்டு உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்

 

உங்களின் நண்பர்களுக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்புங்கள்.

 

நட்புடன்

 

குட்டப்பன்

 

பெங்களுரு

 

யாருடா இந்த குட்டப்பன். நமக்கு எட்டப்பன்தான் தெரியும் அதுவும் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் தவறாக சித்தரிக்கபட்ட எட்டப்பனை மட்டும்தான் தெரியும். சமீபத்தில் ஸ்ரீகாந்த நடித்து வெளிருவதாக சொல்லப்பட்ட எட்டப்பன் திரைப்படம் வெளிவந்துவிட்டதா இல்லையா என்றும் தெரியவில்லை.

 

சரி நமக்கும் கவிதைக்கும் கொஞ்சம் தூரம்னாவாவது இந்த குட்டப்பனுக்கு தெரியக்கூடாதா. எங்கயோ மின்னஞல்சல் முகவரி கிடைச்சதுங்கறக்காக இப்படியா!னு நினைத்துக்கொண்டே சரி படிக்கனும்தானே அனுப்பியிருக்கார். படிப்பமேனு படிக்க ஆரம்பித்தேன்.

 

 

 

 

ஒரு பியரும்

இரண்டு கவிதைகளும் போதும்

நான்

வேறொருவனாக.

 

 

நுரைத்த பியரில்

இரண்டு  ஈக்கள் மிதந்து கொண்டிருந்தது

எடுத்து கீழே போட்டுவிட்டு

குடிக்க ஆரம்பித்தேன்

 

 

 

 

காலியாகப்போகும்

பியர் போத்தலுக்காகவாவது

பியர் குடிக்கவேண்டும்

என்று தோன்றியது.

 

 

பியர் பற்றிய கனவுகள்

விடிவதற்கு முன்பே

எழுப்பிவிட்டுவிடுமளவு

போதை நிரம்பியது.

 

ஆக்கம்: குட்டப்பன்

 

 

இதை படிச்சிட்டு என்ன சொல்றது. உங்களுக்கு குட்டப்பன் அதிகம் பியர் சாப்பிடுவாருனு தோணிருக்கனுமே. வேணா ஒரு பியர் சாப்பிடலாம்னு போல எனக்கு தோணுச்சு. இதை குட்டப்பனிடம் சொன்னா வாங்கி கொடுப்பாரா?

 

அவர் எங்க இருக்காரோ

 

சரி அனுப்புவோம் வந்தா பியர் இல்லாட்டி குட்டப்பனோட கவிதைனு பதில் அனுப்பியாச்சு. இன்னும் சில நாட்களில் பியர் கிடைக்ககூடும்.

 

நம்பிக்கைதானே வாழ்க்கை.

 

3

 

எர்த்தர் சா ஆல்பிரட்டிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சலை சரிபார்க்கத் தொடங்கினேன்.

 

 

:

 

◘◘ <SPAN< span>

 

என்று இருந்தது. ஒன்றும் புரியவில்லை. சரி யுனிகோடு உருவாக இருக்ககூடுமோ என்று முயன்றும் பலனில்லை.

 

எப்பொழுதும் கணிணி சார்ந்த பயன்பாட்டின் சிக்கலுக்கு கேத்ரீனாதான் எனக்கு உதவிபுரிவாள். அவளுக்கு எப்படி இதனை தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கு மாற்றுவது என்று கேட்டு மடலிட்டேன். இன்றிரவிற்குள் அவளிடமிருந்து பதில் வரக்கூடும். எதையும் தாமதப்படுத்துவது கேத்ரீனாவிற்கு பிடிக்காது. என்னையும் அப்படி இருக்கச்சொல்வாள்.

 

4

 

மின்மினியின் மின்னஞ்சலை வாசிக்கலாம் என்று படிக்க ஆரம்பித்தேன். மேட்ரோமோனியலில் மணமகள் வேண்டி பதிவுசெய்துவைத்திருந்ததிற்கு பதில் வந்திருந்தது.

 

வணக்கம்

 

என்னுடைய பெயர் சராதாம்பாள் (மின்மினி) உங்களின் மின்னஞ்சல் முகவரியை மேட்ரோமோனியல் இணையதளத்திலிருந்து கிடைக்கப்பெற்றேன். நீங்கள் உங்களின் திருமணத்திற்கு உடனடியாக பெண்பார்ப்பதாக அறிந்தேன். உங்களுக்கு ஏற்ற ஒரு துணையாக நான் இருக்ககூடும். மின்மினி என்பது என்னுடைய செல்லப்பெயர், இந்த பெயர் கொண்டுதான் எல்லோரும் என்னை அழைப்பர்.  நீங்கள் வேண்டுமெனில் உங்களுக்கு விருப்பமான பெயர் கொண்டு அழைக்கலாம்.

 

எனக்கு சுற்றுலா செல்வது மிகவும் பிடித்தமான ஒன்று. திரைப்படங்களை விரும்பி பார்ப்பேன். புத்தகம் படிப்பது நிரம்ப பிடிக்கும். இது போன்று உங்களுக்கும் பல சிந்தனைகள் என்னுடன் ஒத்துப்போகின்றன.

 

உங்களுக்கு பியர் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதுவும் முக்கியமான விழாக்களில் மட்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இப்படி வெளிப்படையாக கூறியுள்ளது மிகவும் கவரக்கூடிய அம்சம். ஏன் எனில் இன்று ஆண்களில் பலர் பார் தாண்டியவர்களாகவே இருக்கிறார்கள் என்பது என்னுடைய கருத்து. திருமணத்திற்குபின்னும் உங்களின் மனைவி வேலைக்கு செல்லவேண்டும் என்று விரும்புவதும் நான் உங்களை தெரிவுசெய்ததற்கு மற்றுமொறு காரணம்.

 

இதையெல்லாம் படித்தபொழுது கருத்து சுதந்திரதில் உங்களுக்கு உடன்பாடு இருக்ககூடும் என்பது என்னுடைய நம்பிக்கை. உங்களின் இரண்டு புகைப்படங்களையும் பார்த்தேன். புகைப்படத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களின் மீசையை புகைப்படத்திற்காக டிரிம் செய்தீர்களா? உங்களின் புகைப்பட பாதியை மட்டும்தான் பார்க்க நேர்ந்தது. உங்களின் முழு நீள புகைப்படம்மிருப்பின் அனுப்ப முடியுமா?

 

 

 

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பினை அழுத்தினால்  என்னைப்பற்றிய இன்னும் சில தகவல்களை தாங்கள் தெரிந்து கொள்ள நேரிடும். உங்களுக்கு விருப்பமிருப்பின் இந்த loveminmini@yahoo.com மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

 

சிநேகமுடன் காத்திருக்கிறேன்

 

மின்மினி

 

இணைப்பை திறந்து பார்த்தேன். புகைப்படம் தவிர்த்து மீதி எல்லாம் இருந்தது. சரி புகைப்படத்தை கேட்டு பதில் அனுப்புவோம்.

 

ஆனா  பதில் உடனடியாக அனுப்பமுடியாது. காரணம் முழுநீள புகைப்படம் தற்சமயம் கைவசம் இல்லை. மேலும் என்னை அழகா புகைப்படம் எடுக்கும் அறிவைவேறு தேடி போகவேண்டும். அதுவும் அறிவை புடிக்கிறது மொட்ட வெயிலில் காக்கா விரட்டின கதைதான்.

 

பெண்தேடுவது குறித்து இன்னும் அம்மாவிற்கும் நான் சொல்லவில்லை.

 

5

 

மீதம் உள்ளது பெருமாளின் மின்னஞ்சல். இதுதான் அதுவானு ஆவல். திறந்து படிக்க ஆரம்பித்தேன்

 

ஏன் போனவராம் என்னை பார்த்தும் பார்க்காததுமாதிரி போன அப்படினு ஆரம்பித்தது.

 

நாம எப்ப பெருமாள எங்க ஒரே குழப்பமாக இருந்தது

 

மேலே படிக்க ஆரம்பித்தேன்.

 

இன்னும் நீ அதை மறக்கவில்லை போல. நான் வேணும் என்றே அப்படி செய்தேனா  சொல். அன்று பார்ட்டியில் கொஞ்சம் அதிகமாக பியர் சாப்பிட்டுவிட்டேன் . பியர் சாப்பிட்டால் நான் அப்படித்தானு உனக்கே தெரியும். ஆனா உன் பிரண்டுக்கு தெரியாது என்பது உண்மை. பியர் சாப்பிடும்போது என்னருகே இருந்த நீ அப்புறம் எழுந்து சென்றது எனக்கு எப்படி தெரியும்.

 

பியர் சாப்பிடாத உன் பிரண்டுக்கே தெரியலை!

 

அப்பகூட எனக்கு சந்தேகமா இருந்தது. என்னடா வித்தியசமா இருக்கேனு. சரி பியர்தான் நெறய உள்ளவிட்டதோனு நினைச்சுக்கிட்டேன். நீ தான் பார்த்துக்கிட்டே இருந்திருக்க ஓடி வந்து ஒரு அறை விட்டிருக்கலாம்ல, அதையும் நீ செய்யல. நான் என்னதான் செய்ய சொல்லு. எனக்கு அப்ப என்ன தோணுச்சோ அதை செஞ்சுட்டேன்.

 

என்னடா இது விஜய் பட டயலாக் மாதிரி இருக்கு. யாரு அவ இத ஏன் பெருமாளு எனக்கு அனுப்பனும். ஒரு வேள தவறுதலா அனுப்புனர் பகுதியில் முதல் எழுத்தை தட்டிவிட்டு மின்னஞ்சலை தேர்வு செய்யும் பொழுது என்னுதை தட்டிவிட்டிருக்க வேண்டும்.

 

ம் இந்த மின்னஞ்சல் முழுமையா இல்லாம ” நீ தான் பார்த்துக்கிட்டே இருந்திருக்க ஓடி வந்து ஒரு அறை விட்டிருக்கலாம்ல. அதையும் நீ செய்யல. நான் என்னதான் செய்ய சொல்லு. எனக்கு அப்ப என்ன தோணுச்சு செஞ்சுட்டேன்” . இத்துடனே  துண்டாகிஇருந்தது.

 

 

 

பெருமாளு பியரை அதிகமாக குடிச்சிட்டு அந்த பிகரை அப்படி என்னதான் பண்ணியிருப்பான். தெரிந்துகொள்ள ஆவல். பெருமாளுக்கே மின்னஞ்சல் அனுப்பி கேட்டுவைக்கவேண்டும்.

 

ஐந்து மின்னஞ்சலையும் படித்தாச்சு. இதில் எது அவனது இல்லை அவளதாக இருக்ககூடும். ஒரு வேளை ரசிகவ் அல்லது மாதங்கியா இருந்தால்? ஏதற்கும் சரிபார்த்துவிடுவோமே.

 

 

6

 

ரசிகவ் மின்னஞ்சலை சரிபார்த்தேன்

 

பாண்டி உங்களை  என்னுடைய travel network WAYN  ல் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

 

ரசிகவ் ஞானியார்.

 

இந்த இணையத்தில் என்னை இணைக்க சொல்லி பல நண்பர்களிடமிருந்தும் மின்னஞ்சல் வந்தது. நான் இணையவில்லை. ரசிகவிடமிருந்து மட்டும் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை WAYN – ல் ணையுங்கள் என்று மின்னஞ்சல் வந்துவிடும். இணைந்ததில்லை.  இதுபோன்று பல இணையதளங்கள் அவற்றில் சிலவற்றில் இணைந்து விட்டு பின் அந்த பக்கமே செல்லாமல் இருந்துவிடுவதுதான் காரணம்.

 

ஆனா இந்த முறை ரசிகவின் வேண்டுகோளை ஏற்றுவிட்டேன். ரசிகவிற்கு இணைந்தது பற்றி பதில் எதுவும் அனுப்பவில்லை. அவரது இணைப்பு பட்டியலில் தெரிந்துகொள்வார் என்று விட்டு விட்டேன்.

 

7

 

மீதமிருக்கும் ஒன்று மாதங்கியின் மின்னஞ்சல். இவராகத்தான் இருக்கவேண்டும். ஏன்னா மின்னஞ்சல் வந்த எண் சிங்கப்பூருக்குடையது. இப்பத்தான் எண்ணையும் சரிபார்த்தேன். ரசிகவ் இருப்பது இந்தியாவில். ஆனா மாதங்கி அவர்களிடம் செல்பேசி இல்லை. இதற்கு முன்பு அவரின் வீட்டு எண்ணுக்குதான் தொடர்பு கொண்டு உரையாடியிருக்கேன். அதுவும் குறுஞ்செய்தி அனுப்பியது கிடையாது.

 

எப்படியிருந்தாலும் இன்னைக்கு வந்த மின்னஞ்சலை படிக்கத்தான் போகிறோம். என்ன இந்த குறுஞ்செய்தியினால் கொஞ்சம் முன்பே இணையத்திற்கு வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு மாதங்கி அவர்களின் மின்னஞ்சலை திறந்தேன்

 

  நாளை பிறந்து இன்று வந்தவள் 

 

மாதங்கியின்  கவிதை நூல் வெளியீடு

 

இடம்:  தேசிய நூலகம் (5 வது தளம்) 100 விக்டோரியா தெரு சிங்கப்புர்

 

நாள் :  ஜூன் 1  2008

 

நேரம்:  மாலை 5 மணி

 

தலைமையுரை மற்றும் நூல் வெளியீடு:  திரு நா. ஆண்டியப்பன்

 

நூலாய்வு:    திருமதி சுகுணா திரு விசயபாரதி

 

சிறப்புரை : திரு முருகடியான் ( தற்கால இளையரிடம்…)

 

திருமதி சித்ரா ரமேஷ்  (வாழ்க்கை இலக்கியம்)

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:  திரு கோ. இளங்கோவன்

 

ஏற்பாட்டாளர்கள்:  தேசிய நூலக வாரியம் ரூ நண்பர்கள்

                           

என்றிருந்தது.

 

கடந்த வாரத்தில் ஒரு முறை இன்னும் சில நாட்களில் எனது புத்தகம் வெளிவரவிருக்கிறது. வெளியீட்டிற்கான நாள் இன்னும் முடிவாகவில்லை. உறுதிசெய்யப்பட்டதும் அழைப்பிதழை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று வந்த மின்னஞ்சல் ஞாபகத்தில் தோன்றியது.

 

மேலே வந்த அழைப்பிதழுடன் புத்தகத்தின் அட்டைப்படத்தையும் இணைந்திருந்தார். சிகப்பு நிற அட்டைப்படத்தின் கீழே சில மனித உருவங்கள், பூச்சிகள் போன்ற தன்மைகொண்ட ஓவியம், கருப்பு நிறத்தில் இருந்தது. நாளை இந்த புத்தகத்தை பற்றி நூல் ஆய்வு செய்பவர்கள் இந்த அட்டைப்படத்தை பற்றி என்ன ஆய்வு செய்யகூடும் என்று நினைத்துக்கொண்டேன்.

 

ஏழு மின்னஞ்சலையும் படித்துவிட்டபின்பும் அந்த குறுஞ்செய்திக்கான மின்னஞ்சல்…. ஒரு வேளை பெருமாள் போன்று யாரவது தவறுதலாக எனக்கு அந்த குறுஞ்செய்தியை அனுப்பியிருக்ககூடுமோ?

 

சரி யாராக இருக்ககூடும் இலவச குறுஞ்செய்தியை அனுப்பி விளையாடுவதை விட்டு ஒரு வெள்ளி செலவு செய்து குறுஞ்செய்தி அனுப்பியரை(ளை) தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்து செல்பேசியை எடுத்தபொழுது, தொடுவதற்காக காத்திருந்தது போல் ப்ராக் ப்ராக் என்றது ( தவளை சத்தத்தைதான் எனது அழைப்பு ஒலியாக வைத்துள்ளேன்)

 

நண்பர் சசியிடமிருந்து அழைப்பு

 

என்ன சசி என்றேன்

 

பாண்டி காலையில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. உங்களின் மின்னஞ்சலை பாருங்கள் என்று. யாருனே தெரியலை நானும் ஆர்வக்கோளாறுல மின்னஞ்சலை திறந்து பார்த்தேன். எல்லாம் பார்த்த மின்னஞ்சலா இருந்துச்சு . உங்களுக்கே தெரியும் நீங்கதான் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புவிங்க. வேறயாரும் அவ்வளவா அனுப்பமாட்டாங்க. சரி அந்த நம்பருக்கு போன் பண்ணினா யாருமே எடுக்கமாட்டான்றாங்கனு சொல்ல

 

சசி எனக்கும் அப்படி ஒரு குறுஞ்செய்தி வந்துச்சு ஆனா ஆள்தான் யாருனு தெரியலைனு சொன்னேன்.

 

மின்னஞ்சல் எதுவும் வந்துச்சா என்றார் ஆர்வமாக,

 

வந்துச்சு, ஆனா அதுல எது இந்த குறுஞ்செய்திக்குறியதுனு தெரியலை என்றேன்.

 

பாண்டி, ஒரு வேளை “காலை அலாரம்” மக்காங் சன்-னா இருக்குமோ. அவன்தான் அவனுக்கு வர்ற குறுஞ்செய்தியை படிச்சு கூட பார்க்காம உடனே பத்துபேருக்கு தட்டிவிடுவான். இப்பகூட புது நம்பர் மாத்திட்டான் உங்களுக்கு தெரியுமா.

 

ம் தெரியும் சசி. அது அவனோட நம்பர் இல்ல.

 

அப்ப திருப்பதி வேங்கடாசலம் மாதிரி எவனும் கிளம்பிட்டானுங்களோ என்றார்.

 

இருக்கலாம் என்றேன்.

 

பேசி முடித்த சில நிமிடங்கள் கழித்து அந்த எண்ணிலிருந்து குறுஞ்செய்தி. மின்னஞ்சலை சரிபார்த்தீர்களா என்று?

 

சரி பார்த்தாகிவிட்டது. யார் நீங்கள் என்ன அனுப்பினீர்கள் என்று பதிலிட்டேன்

 

நான் யாராக இருந்தால் என்ன மழை வருகிறது நீங்கள் நனைகிறீர்கள் அல்லவா அப்படித்தான் இதுவும். எனக்கு மின்னஞ்ல் கிடையாது. கிடையாது என்றால் எப்படி உபயோகிப்பது என்றும் தெரியாது. அதனால் உங்களுக்கு மின்னஞ்சல் இருக்கும் என்று அனுப்பினேன். எனக்கு எதுவும் மின்னஞ்சல் வந்துள்ளதா என்று பதில் வந்தது.

 

சில நேரங்களில் என்னுடைய நண்பர்களின் தேவைக்கு என் மின்னஞ்சல் முகவரியை கொடுப்பேன். அப்படி யாரோ ஒரு நண்பனோ என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் சசிக்கும் இதேபோன்று வந்ததே

 

நீங்கள் யார்? எங்கிருக்கிறீர்கள் என்னமாதிரியான மின்னஞ்சல் என்று பதிலிட்டேன்

 

நான் யாராக இருந்தால் என்ன மின்னஞ்சல் வந்ததா இல்லையா என்று பதில் வந்தது.

 

இல்லை என்று பதிலிட்டேன்

 

பின் அந்த எண்ணிலிருந்து குறுஞ்செய்திவரவில்லை.

 

மதியத்திற்கு மேல் மக்காங் சன்-னிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. உங்களின் மின்னஞ்சலை திறந்துபாருங்கள் என்று.

 

சசிக்கு போன் பண்ணினேன்.

 

என்ன பாண்டி மக்காங் சன்-னிடமிருந்து மின்னஞ்சல் வந்துச்சா என்றார்.

 

அட இதபத்திதான் பேச போன் பண்ணியதே இவருக்கும் மக்காங் சன் அனுப்பியிருப்பானோ என்று உங்களுக்கும் அனுப்பியிருக்கானா என்றேன்

 

அவனுக்கு அனுப்பியதே நான் தானே என்றார்.

 

மக்காங் சன்-னின் புண்ணியத்தில் எத்தனை பேர் மின்னஞ்சல் பெட்டிகளை இந்நேரத்தில் திறந்துகொண்டிருப்பார்களோ?

 

அதுவும் ஏழாம் முறை வாசிக்க!

 

நன்றி: அநங்கம் – மலேசியா

© pandiidurai@yahoo.com

 

 

 

 

பிறழ்வாய் நீ நான் இல்லை அவன்

man225mj7

கனவுகள் கனவுகள் கனவுகள், என்னை துரத்தும் கனவுகள் நான் துரத்தும் கனவுகள். கொடைக்கானல், ஹாசன், பெங்களுர், சென்னை, சிங்கப்பூர் அதற்குமேல் அதற்குமேல் சிரிக்கத் தோன்றியது அழத்தோன்றியது இதற்கு முன்பு நடனமாடிடாத கால்கள் நடனமாட தொடங்குகிறது முகம் சோகமாகிறது துளிர்த்த கண்ணீர்துளிகள் கண்களுக்குள்ளேயே வரண்டுவிடுகிறது யாருக்காகவோ வாழ்வதாக பேசித்திரிகிறேன் பசிக்கிறது சாப்பிடுகிறேன் அடுத்த ஒரு வருடத்திற்கு வீடு கட்ட என்னை அடமானம் வைத்துவிடுகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீட்டிய திட்டங்கள் எல்லாம்  அடுத்த ஓராண்டை கடந்து நிற்கிறது,  இதே நிலைதான் கடந்த ஆண்டும். நாலு நம்பரில் பம்பர் அடித்துவிடுவதாககூட ஒரு கனவு! இன்னும் அதற்கான ஆயத்தங்களில் நாலு நம்பர் கடை எந்த திக்கில் இருக்கும் என்று தேடியது கிடையாது, ஆகக் குறைந்தபட்சம் ஒரு வெள்ளி வேண்டுமே அதை முதலில் சேமிக்க வேண்டும்.

 

நான் மட்டும் இப்படித்தானா? இந்த உலகில் இருக்கும் மனிதர்கள் எல்லோருக்குமே இப்படித்தானா? குழப்பங்கள் குழப்பங்கள் குழப்பங்கள், என்னை தொடரும் குழப்பங்கள் நான் போட்டு குழப்பிய குழப்பங்கள். கவிதை எழுதவேண்டும், சில கவிதைகள் எழுதியாயிற்று. பைத்தியம் போல இருக்கிறேன், யார் இங்கே பைத்தியம் நானா? நீயா? பைத்தியத்திற்கான வரையறையை பைத்தியத்திடம் கேட்டால் யார் இங்கே பைத்தியம் நானா? நீயா? நாளை திருமணம் செய்யவேண்டும், அதற்கு பின் ஒரு பிள்ளை ஆணோ பெண்ணோ, அவளை பள்ளியில் சேர்க்கவேண்டும் அதை எல்லாம் பொண்டாட்டி பார்த்துக்கொள்வாள் என்றாலும் திருமணம் திருமணம் திருமணம் நடக்கும் ஒருநாளில்.

 

சிலருடன் பேசிக்கொண்டிருக்கிறேன், பிறகு மௌனமாகிறேன். அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள், தலைகுனிகிறேன் துக்கம் துக்கம் துக்கம் இல்லை தூக்கம் தூக்கம் தூக்கம். முப்பதானாயிரம் வெள்ளி வந்திருக்கணும் இல்ல ஆனா இருபத்தி ஆறுதானே வந்திருக்கு, இல்ல இல்ல கணக்கு சரிதான் டாலரை மாற்றும் போது இருக்கும் ஏற்றம் இறக்கம் இருக்க வேண்டியதுதானே அப்ப முப்பதானாயிரம் வெள்ளி சரிதானே! இறங்கி நடக்கத் தொடங்குகிறேன், கொஞ்சதூரம் கொஞ்சதூரம் கொஞ்சதூரம் நிரம்பதூரம் நடந்தாயிற்று. மழை வருகிறது, குடை  மறந்துவிட்டேனே ஓடு ஓடு ஓடு, வேகமாக ஓடு மேல செல்வோமா வேண்டாமா. முப்பதானாயிரம் வெள்ளி அறுபதனாயிரத்தை கடந்திருந்தால் வேண்டாம் போக வேண்டாம் நடக்கத்தொடங்குகிறேன் ஆறு வெள்ளி ஒரு குடை எடுத்திருக்கலாம்ம் நனைகிறேன். மெல்ல சிரிக்கிறேன் யாரும் பார்க்கவில்லை அவரவர்கள் ஒதுங்கி நிற்கிறர்கள், குடையை பிடிக்கிறார்கள் சிக்னல் வாகனங்கள் நிற்கிறது வாகனங்கள் போகிறது எந்த வாகனம் என்னை மோதக்கூடும், அதற்கு முன்பு அந்த வாகன எண்ணில் ஒரு நாலு நம்பரை எடுக்க வேண்டும், ஆகக் குறைந்தபட்சம் ஒரு வெள்ளியாவது அடுத்த ஆண்டு இறுதிக்குள் சேமித்திடவேண்டும்.

©pandiidurai@yahoo.com