“நாம்” நாலு வார்த்தை பாலுணா

untitled1

கடந்த வாரத்தில் இருந்து ஒரே அதிரயடியாக தினமும் ஒரு பதிவினை நள்ளிரவில் தனது வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார் சிங்கப்பூர் எழுத்தாளர் பாலு மணிமாறன். கவிஞர் கருணாகரசின்தேடலை சுவாசி” கவிதை தொகுப்பு பற்றி, சிங்கப்பூர் பாடலாசிரியர் நெப்போலியன் எழுதிய காதலில் விழுந்தேன் திரைப்படத்திலானஉன் தலைமுடி உதிர்வதைகூட தாங்கமுடியாது அன்பே” பாடல், மறைந்த சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழின் முன்னாள் ஆசிரியர் வை. திருநாவுக்கரசு,  இசைஞானி இளையராஜா, கிரிக்கெட், நெஞ்சுக்குள் பெய்திட்ட மாமழை வாரணம் ஆயிரம் என இன்றுடன் பதிவேற்றபட்ட நாலு வார்த்தை மொத்தம் பதினைந்து. இதன் தொடர்ச்சி நூற்றை தொடுமா என்ற ஆவலும் எனக்குள் ஏற்படுகிறது. அப்படித்தான் நாலு வார்த்தையின் ஆறாவது பதிவாக நண்பர்களுடன் இணைந்து நடத்துகின்ற எங்களின் நாம் இதழ் பற்றி ஒரு அழகா பதிவினை எழுதியிருந்தார். இது போன்ற எழுத்துக்கள்தான் இழப்பிற்கு பின்னான இதத்தினை தொட்டுச்செல்கிறது.  “நாம்” இதழ் மற்றும்நாம்” நண்பர்கள் சார்பாக பாலுமணிமாறன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளையும் இந்த பதிவின் வாயிலாக சொல்லிக்கொள்ள ஆசை.

 

நன்றி: பாலு மணிமாறன்.

பாலு மணிமாறன் எழுதிய பதிவின் இணைப்பினை  பிண்ணினைத்துள்ளேன்.

 

நாலு வார்த்தை – 006 – “நாம்” சிங்கப்பூர் காலாண்டித…

 

©pandiidurai@yahoo.com

இளா

b2

அவளின் புன்னகையில்

என்னை ஒளித்து வைத்திருந்தாள்

என்னை கண்டடைய

தினமும் புன்னகைத்தபடி.

 

(11.12.08 அன்று என் நண்பரின் – இளாவிற்கு 1வயது பூர்த்தியாயிற்று)

©pandiidurai@yahoo.com

பெருமாளு

 

ஊருல இருந்து பெருமாளு வர்றானாம். எனக்கு தெரியாது, சின்னா சொல்லித்தான் தெரியும். அதுகூட போனவாரம் ஜலான்பஜார் சமூகமன்றத்தில் கவிதை விழாவுக்கு ஏதேச்சையாக சின்னாவை பார்த்தது, இல்லைனா பெருமாளு ஊருக்குபோறப்பதான் தெரிஞ்சிருக்கும்.

 

எனக்கு இப்ப நினைச்சாலும் சிரிப்புதான் வருது. ஊருல மாட்டுவண்டியில சுத்திக்கிட்டு திரிஞ்சவன் பெருமாளு. நானாவது சென்னைக்கு பொழப்பு தேடிப்போனப்ப இரண்டுதரம் லாரில, ஒருதரவ கூட்சு வண்டியில போயிருக்கேன். சென்னையில இருந்த ஆறுமாசத்துல ஆசதீர டவுன்பஸ்ல சுத்தியிருக்கேன். அதுவும் பெசன்ட்நகர் பீச்சுக்குதான் போவேன். அங்கதான் நெறைய அண்ணங்களும், அக்காவும் பக்கத்துல பக்கத்துல உக்காந்து கடலில் இருந்து வரப்போற பெரியஅலையை வேடிக்கைப்பாப்பாங்க. கடல்தண்ணியை விட்டு கொஞ்சம் தூரம்மா நின்னு நானும் வேடிக்கைபார்ப்பேன். சிங்கப்பூர் வந்த பின்னால மாசத்தில இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தேக்காவுக்கு எம்.ஆர்.டியிலதான் போறது. பெருமாளுக்கு எம்.ஆர்.டினா என்னனு தெரியாது இங்க வேகமா போற ரெயிலுக்கு அதான் பேரு.

 

ம் சொல்லமறந்துட்டேன் பார்த்திங்களா. பெருமாளுக்கு அப்பன் ஆத்தா கிடையாது. ஆனால் அவன் அநாதையும் இல்ல. அவனோட அப்பா, அம்மா இவன் சின்னப்புள்ளையா இருக்கும்போதே காணம போயிட்டாங்க. அப்பயிலருந்து பெருமாளு எல்லாரு வீட்டுக்கும் போவான் வருவான். பசிச்சா யாரவது ஒருத்தர் வீட்டுக்குபோவான் நல்லா திம்பான். அவனுக்கு மட்டும் வயிறு நிறைய எல்லாரு வீட்டுலயும் சோறு கிடைக்கும். யாரு வீட்டுத் திண்ணையிலயாவது படுத்துக்கிடப்பான்.

 

யேன்டாப்பா பெருமாளு ஒரு வேலைக்கு போறதுதானேனு அவங்கிட்ட யாரும் கேட்டது கிடையாது. நாங்கூடத்தான்!

 

பெருமாளுக்கு மச்சம்னு கூனிக்கிழவி சொல்லக் கேட்டிருக்கேன்.   கையை காலக்காட்டி அம்மாக்கிட்ட  கேட்டேன், ஏம்மா எனக்குகூட மச்சமிருக்கே அப்புறம் ஏன் பெருமாளை மட்டும் மச்சக்காரன்னு சொல்றாங்கனு. அதுக்கு அம்மா சொன்னா உனக்கு அங்க இங்தான் மச்சம் ராசா அவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்னு. அம்மா சொன்னா அது சரியாத்தான் இருக்கும்.

 

பெருமாளுக்கு சேக்காளினு சொன்னா நான், உச்சிக்குடுமி நாரயணனன், கோவணத்தெரு புவனாக்கா, அப்புறம் கயலு. காலம்பறம் நான் ஸ்கூலுக்கு போன சாயங்காலம்தான் வருவேன். பெருமாளு படிக்கலை. வாட பெருமாளு படிக்கபோவம்னு நானும் கூப்பிடலை. பகல்பொழுதில் பதினொறுமணிக்கு  மாட்டப்பத்திக்கிட்டு கயலக்காபோக பெருமாளும் கூடப்போவன். திரும்ப சாயங்காலம் ஆறுமணிக்குத்தான் வருவான். கயலுகூட ஒரு நாள் சத்தம்போட்டுச்சு. ஏன்டா என் பின்னாலே வர்றேனு. யேன்கானு கேட்டப்ப சொன்னா தேத்தாங்காட்டுப்பக்கம் மாடுமேய்கப்போனப்ப பெருமாளு பசமாட்டுமாறப்புடிச்சு பாலகுடிச்சுப்புட்டானாம். அக்கா அவன சத்தம்போட்டப்ப மொறச்சுப் பார்த்தானாம். அக்கா பயந்துபோயிடுச்சு. அப்புறம் பெருமாளுதான் அந்தாண்ட நிழல் தாழ்வா இருக்குற சூரம்பத்தைக்கிட்ட அக்காவை கூட்டிட்டுபோய் சமாதானப்படுத்தினானாம். அப்பவும் அக்காவுக்கு பயம்போலயாம்தினமும் கயலுக்கா எனக்கு மட்டும் சூரம்பழம் நிறைய குடுக்கும்.

 

பெருமாளு நல்லா விசிலு அடிப்பான். அவன் அடிக்கிற விசிலுசத்தத்துக்கு புட்டான் வீட்டுநாய் எங்க இருந்தாலும் வந்துடும்னும். அந்த நாய்க்கு பாம்புக்காதுனு புவனாக  சொல்லும். நான் இன்னும் பாக்கலை.

 

சனிக்கிழமை ஆச்சுனாப்போதும். பெருமாளு குஷியாகிவிடுவான். யேன்னா அன்னைக் குத்தான் காரையூர் சந்தை. தங்கராசுமாமா மாட்டுவண்டியை சந்தைக்கு ஓட்டிட்டுபோவாரு. அன்னைக்குபூரா பெருமாளுக்கு அந்த மாட்டுவண்டிதான் வீடு. அம்மா வீட்டில பனங்கிழங்கு அவிச்சாக்க அன்னைக்கு நானும் சந்தைக்குபோவேன். பெருமாளுக்கு வெரசா வண்டியை ஓட்டினாத்தான் புடிக்கும். ஆனா பாரத்தோடபோறவண்டிமாடு ஆடி அசைஞ்சுதான் போகும். திரும்பி வாரப்ப ஊரு பொம்பளையெல்லாம் இந்த வண்டியிலதான் வரும். அப்பவும் வண்டி ஆடி ஆசைஞ்சுதான் போகும். புவனா அக்கா பக்கத்துலதான் பெருமாளு உக்காந்துவருவான். அவன் காதுக்குல அப்ப அப்ப புவனாக  என்னமோ சொல்லும். எனக்கு கேட்காது நான் தான் பின்னால ஓடிவருவேனே ஊருக்கு ரொம்ப தொலைவா போணும். நிலாகூட எங்ககூட ஓடிவருமா அதனால காலு வலிக்காது.

 

போனமாசம் ஊர்திருவிழாவுக்கு பணம்ரொம்ப சேநதுச்சாம். இங்ககூட தேக்கால கூட்டம் போட்டோம் தலைக்கு நூறுவெள்ளினு சொக்கன் சித்தப்பாதான் முடிவுபண்ணிச்சு. அவருதான் எங்கஊருக்கு சிங்கப்பூர் விஜயகாந்த் மன்றத்தலைவர். எம்புட்டு செலவாச்சுனு கணக்கு எல்லாம் சொல்லல. ஆனா கொட்டை எழுத்துல சிங்கப்பூர் விஜயகாந்த மன்றம் நண்பர்களுனு போடப்போறதா சொன்னாரு.

 

ஊருல நிறைய காசு வசூலானதாலே தலைக்கு ஒரு சீட்டு எடுத்து குலுக்கிப்போட்டு அதுலு ஒரு சீட்டை எடுத்து யாரு வாராங்களோ அவங்களை சிங்கப்பூருல இருக்குற நம்ம சாதிசனத்தை பாக்க அனுப்பனும்னு நாட்டாமையும்,  தலையாரியும் முடிவுவெடுத்தாங்கலாம்.

அம்மாதான் சொன்னா போன் போட்டப்ப. ராசு வயித்துல ஈரத்துணியைபோட்டு விரதம் இருக்கேன். உன்னை பாத்து அஞ்சுவருசமாச்சுனு அழுதிச்சு. நானும் அழுதேன். அம்மாவுக்கு சீட்டுவரணும்னு காளியாத்தா கோயிலுக்குபோய் கையில சூடம் எல்லாம் ஏந்தி வேண்டிக்கிட்டேன். அப்புறம் பூசத்து மொட்டைபோட்டு வேல் குத்திகறதாவும்.

 

போனமாசம் தீவுல வேலைங்கிறதால போனே கிடைக்கலை. ஊருல இருந்து யாரும் கவிஞர் வந்தா எஸ்.எம்.எஸ் மட்டும் எப்பவாச்சும் வரும் அன்னைக்கு மட்டும் ஓட்டி துட்டு வேண்டாம்னு சொல்லிப்புடுவேன். எனக்கு மேல இருக்குற அண்ணன்தான் ஏன்டா இப்படி ஓட்டிதுட்டு வேண்டாம்னுட்டு போற 4 மணிநேரத்துக்கு ஒனக்கு என்ன ஆச்சு 18வெள்ளி நீ என்னடானா 10வெள்ளி செலவழிச்சு மாசமாசம் அந்த கூட்டத்துக்கு போறனு ஏனக்கு சிரிப்புதான் வரும். ஏன்னா சனிக்கிழமை ஆச்சுனா அண்ணன் 3போத்தல் பீரு குடிக்கும் நான் ஒண்ணுதான் குடிப்பேன். அப்ப அண்ணன் நெறைய செலவு பண்ணும்.

 

அப்படித்தான் ஜலான்பஜார் சமூகமன்றத்தில  சின்னாவைப்பார்த்தது. உனக்கு சேதி தெரியுமா நம்ம பெருமாளு இங்க வர்றானாம்னு சொல்ல,  அவனுக்குதான் ஒருவேலையும் தெரியாதே பின்ன இங்க எதுக்கு வர்றானு. இங்க மாடுகூட இல்லையே. அப்பத்தான் தெரியும் பெருமாளுக்கு ஊருல சீட்டுவிழுந்திச்சுனு

 

அன்னைக்கு ராத்திரி அம்மாவுக்கு போன்பண்ணிபேசுனேன்.. ரொம்ப நேரமா அம்மா பொழம்புச்சு. நான் சொன்னேன் இன்னும் இரண்டுவருசத்தில வந்துடுவேன் நீ வெரசா எனக்கு பொண்ணு பாருனு. ஏன்னா வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைக்கலையாமே, கூட வேலை பாக்குற அண்ணன் அப்படித்தான் இரண்டுமாச லீவுல கல்யாணம் பண்ணப்போறேனு ஊருக்கு போய் பொண்ணு கிடைக்காம இரண்டு நாளைக்கு முன்னால பொண்ணு கிடைக்சு நிச்சயம் பண்ணிட்டு வந்தாரு. இன்னும் ஆறு மாசத்துல கம்பெனியை வெட்டிட்டு போகபபோகுது. அங்குட்டு நாலுவருசத்திற்கு லீவு கிடைக்காது அதான்.

 

ஏன்டாப்ப நம்ம பெருமாளுக்குதான் ரேஷன்கார்டு இல்லையே. ரேஷன்கார்டு இருந்தாத்தானே போட்டாப்புடிச்சு கப்பல்ல போக புக்கு குடுப்பாங்கனுச்சு அம்மா. அம்மா எப்பவுமே இப்படித்தான் ப்ளேட்ட கப்பல்லுனு சொல்லும். நான்தான் சொன்னேன் ஊரு தலையாரிக்கு ஏட்டு வேண்டப்பட்டவரு, அம்பது ரூவா துட்டை வாங்கிகிட்டு குடித்திருவாங்கனு. அப்பகூட அம்மா சொன்னா இந்தபெருமாளு பயலுக்குத்தான் மச்சத்தைபாரேனு!

 

 

சொக்கன் சித்தப்புதான் போன்பண்ணி சொன்னாரு. வர்ர ஞாயிற்றுக்கிழமை பெருமாளு வர்றானாம் அதனால இங்க இருக்குற நம்ம ஊரு சனம் எல்லாம் அன்னைக்கு தேக்கால இருக்கணும்னு. பெருமாளை அஞ்சுவருசத்துக்கு அப்புறம் பாக்கப்போறேனு அம்புட்டு ஆசையா அன்னைக்கும் ஓட்டி துட்டு வேணாம்னுட்டு தேக்காவுக்கு போனேன்.. அங்க எனக்கு முன்னமே பாத்தாம்ல இருந்து கணேசு அண்ணாஇ அப்புறம் சின்னாஇ சிட்டான்னு இன்னும் இரண்டு மூணுபேரு வந்திருந்தாங்க.

 

சின்னாதான் சொன்னான் சித்தப்பு பெருமாள கூட்டியார ஹோட்டலுக்கு போயிருக்கதா. கணேசு அண்ணனுக்கு எம்மேல தனிப்பிரியம். பாக்குறப்பலாம் கேக்கும் என்னடா ஓட்டி இருக்கா, பணத்தை ஊருக்கு அனுப்பினியா, ஊருக்கே பணத்தை குடுத்துவிடுறேனு நல்ல டிரெஸை ஒண்ணுவாங்கி போடுடா பாக்குறப்பல்லாம் கேக்கும். அன்னைக்கும் அப்படித்தான் கேட்டுச்சு. அப்புறம் எனக்கு மட்டும் ஒரு பாண்டா கலர் பாட்டில் வாங்கி குடுத்துச்சு.

 

சித்தப்புக்கிட்ட இருந்து போன் கணேசு அண்ணாதான் பேசிச்சு. லோரி எடுத்துக்குட்டு ஹோட்டலுக்கு வர்றேனு சொன்ன தாசு வரல்லையாம். அதான் டாக்ஸி இன்னும் பத்து நிமிசத்துல புடிச்சுட்டு வர்றேனு. அதுக்குல செந்தோசதீவுல வேலைபாக்குற சேகரு, துவாஸ் பாக்டரில வேலைபார்க்கிற மணி, சிப்பிஆர்டுல வேலைபார்க்குற முருகன், ராசப்பன்னு எங்க ஊரு சனம் பாதிக்கும் மேல வந்திருச்சு. எல்லாரும் சித்தப்புக்கு போன அடிச்சு பெருமாளு எப்ப வாரன்னு விசாரிச்சாங்க. ஞாயிற்றுக்கிழமைதான் சித்தப்புக்கு நெறைய போன் வரும்.

 

அஞ்சப்பர்கிட்ட சித்தப்புவும், பெருமாளும் வர்றதா கை காட்டி அப்பவும் சின்னாதன் சொன்னான்நாங்க ரேஸ்கோர்ஸ் பொட்டல்ல மரத்தாண்ட உக்காந்திருந்தோம். பெருமாளை பாக்குறதுக்கு அப்படியேதான் இருந்தான். முன்னவிட இப்ப கலரு கம்மி. ஆம்மாகூட சொன்னுச்சு ஊருல மழை தண்ணியே இல்ல ஓரே வெயிலு ராசானு.

 

எல்லாரும் பெருமாளை சுத்திநின்னுக்கிட்டு கைகொடுத்தாங்க. பெருமாளுக்கு யாருகிட்டபேசுறது தெரியல, பேந்த பேந்த முழிச்சுக்கிட்டு சும்மா நின்னான். கணேசு அண்ணாதான் பெருமாளு தோளுல கையைப்போட்டு என்ன என்னம்மோ விசாரிச்சுச்சு, தேவகி எப்படி இருக்கா நல்லா இருக்காள எனக்கு என்ன குடுத்துவிட்டிருக்கானுங்கிறது மட்டும்தான் காதுல விழுந்துச்சு பெருமாளு உம்னு சொன்னான். சித்தப்புதான் பெருமாளு கொண்டுவந்த பொட்டனத்தை பிரிச்சு பேரு எழுதியிருக்கிறத பார்த்து எல்லாருக்கிட்டயும் கொடுத்துச்சு. அம்மா முருக்கு சுட்டு ஒரு பை கொடுத்துவிட்டிருக்கேனு சொன்னத சித்தப்பு என்கிட்ட கொடுததாரு. நான் அதுல கொஞ்சம் கணேசு அண்ணாகிட்ட கொடுத்தேன், சிரிச்சிக்கிட்டே வாங்கிகிட்டாரு.

 

பெருமாளுக்கு என்னை சரியா அடையாளம் தெரியலபோல நான்தான் சொன்னேன் ராசுடா உனக்கு பனங்காய் பொறுக்கிதரும்ல தனம், தனத்தோட அத்தை பையனு. ம்னு பெருமாளு தலையை ஆட்டுச்சு அதுக்குள்ள சித்தப்பு சொன்னாப்புல, இங்கபாருங்க நாம இங்க இருக்கிற நிலைமைல பெருமாளை நம்மகூட தங்கசொல்லமுடியாது அதுவும் எல்லாரு வீட்டுக்கும் போகணும்கிறதும் முடியாது நாளைக்கு என் ரூம்புக்கு கூட்டிவரலைனு யாரும் குறைசொல்லக்கூடாது. அதனால தேக்கா ஹோட்டல பெருமாளை தங்கசொல்லுவோம் யாருக்கு காத்தால வேலையோ அவங்க சாயங்காலமும், யாருக்கு ராத்திரி வேலையோ அவங்க காத்தாலையும் வந்து பெருமாளுகூட இருங்கனு எல்லாரும் சரினு தலையாட்டினோம்.

 

பெருமாளை என்கூட கூட்டிக்கிட்டுபோனும்னு கொள்ளஆசை. ஆனா நான் தங்கியிருக்கது கொண்டைனர்ல. மூட்டபூச்சிவேற கடிக்கும். அப்புறம் நான் இங்க இருக்குறத போய் ஊருல அம்மாக்கிட்ட சொல்லிட்டானா ஏன்டா ராசா உனக்கு என்னடா குறைச்சலு இந்த தகர பெட்டிக்குள்ள வெக்கையில கெடந்து சாகனும்னு எதுவும் எழுதிவச்சிருக்கானு. அம்மாவுக்கு அப்படித்தான் சொல்லத்தெரியும் கொண்டைனருன சொல்லத்தெரியாது.

 

நேரம் ஆச்சுனு சித்தப்புதான் சொன்னுச்சு. சரி சரி எல்லாரும்போங்க நானும் கணேசும் பெருமாளை கூட்டிபோய் பிரியாணிவாங்கி பசியாறச்சொல்லி ஹோட்டலில் விட்டுறேனு. அப்புறம் அடுத்த ஞாயிறு ராத்தரி ப்ளைட்டுக்கு பெருமாளு ஊருக்கு போறதால யாரும் எதுவும் ஊருக்கு குடுத்துவிடறதுனா சீங்கிரம் வாங்கிக்கங்க ஏதாச்சும்னா எனக்கு போன் பண்ணுங்கனு சொன்னாரு.

 

தீவுலதான் எனக்கு இந்த வாரமும் வேலைங்கிறதால பெருமாளுகூட போன்ல பேச முடியல. முஸ்தபா முன்னாடி பெருமாளு கூட ஒரு போட்டா புடிச்சு அம்மாகிட்ட கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டேன். அம்மாவுக்குதான் ஒரு டார்ச்லைட்டும் மண்டையடி தைலமும் வாங்கிகுடுக்கணும். சேலைவாங்கி குடுக்கலாம்னு நெனைச்சிருந்தேன். அம்மாதான் சொன்னிச்சு ராசு அங்க எல்லாம் காசு கூட இருக்கும் சுருவா இருந்து பொழக்கணும் எனக்கு எதுவும் வேண்டாம்னு. பெருமாளுக்க ஒரு பெரிய டவுசரும் சென்டு பாட்டிலும் வாங்கிகுடுக்கணும் ஏன்னா அம்புட்டுத்தான் காசு இப்ப இருக்கு இருபது தேதிக்கு மேலதான் சம்பளம் வரும் பத்தாதைக்கு சின்னாகிட்டதான் கேட்கணும்.

பாண்டித்துரை

நன்றி: யுகமாயினி – டிசம்பர் 08

©pandiidurai@yahoo.com