சாலையில் நடப்பதும் நான்கு வெள்ளியை இழப்பதும் ஒரு நம்பிக்கையின்மை

சீனப்புத்தாண்டு சுருங்கி இரு தினங்களாக வீடுகளுக்குள் அடைபட்டிருந்த சீனர்கள்  வெளிவரத்தொடங்கிய நாளில், நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் வங்கிக்கு செல்ல நேர்ந்தது. வங்கிப்பணி முடிந்ததும் கால்கள் அருகே இருந்த புக்கிஸ் நூலகத்திற்குள் அழைத்துச்சென்றது. உள்நுழையும்போது அன்றிருந்த மொட்டைவெயிலுக்கு நூலகத்தின் குளிரூட்டப்பட்டவசதி தேவையான ஒன்றாகவே தோன்றியது.

 

சிங்கப்பூரில் புத்தக அங்காடிகளில் கிடைக்காத சஞ்சிகைகளைதான் மனம் எப்போதும் முதலில் விரும்பும், அப்படி படிக்கத்தவறிய அம்ருதாவின் கடந்த இருமாத இதழ்களை புரட்டத்தொடங்கினால் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி. ஒரு வருடத்திற்கு பின் எனது  கவிதை ஒன்றை நவம்பர் 08 இதழில் காணமுடிந்தது. கொஞ்ச நேர மனத்தாளத்தினூடே ரசித்துக்கொண்டிருந்தேன். பின் அருகே இருந்த நகல் எடுக்கும் சாதனத்தில் நகல் எடுத்துக்கொண்டேன்.(இந்நேரம் தமிழகமாக இருந்திருப்பின் வறட்டென்று கிழித்திருப்பேன்) பின்தொடரும் யாரேனும் ஒருவருக்கு இனி தெரிய வாய்ப்பிருக்கும்.

 

மூன்று மணியளவில் மெல்ல கால்கள் தேக்காவை நோக்கி நகரத்தொடங்கியது. இப்போதெல்லாம் ஆளில்லா மாட்டுவண்டி (இங்கு மாடுகளை காண்பதே ஆபூர்வம்- பொங்கலன்று மாட்டையும் வண்டியையும் கண்காட்சியாக காண்பதே இங்கு முதலும் கடைசியும்-சில நேரங்களில் இப்படி வரிந்துகட்டிக்கொண்டு காட்சிபடுத்துவது தேவைதானா என்ற கேள்வியும் எழுவதுண்டு). செல்லும் திசையைப்போல தேக்காவைச் சுற்றி எங்கு சென்றாலும் கடைசியில் கால்கள் தேக்காவை தொட்டு திரும்புவதையே வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

 

எப்போதும் எனக்கு தேவையான புத்தகங்களை பெற்றுத்தரும் புத்தக அங்காடியை முட்டிமோதினேன். வாரத் துவக்கத்திலேயே எனக்கு தேவையான புத்தகங்களை வாங்கியிருந்தாலும் அப்படிச் செல்வதில் மனம் ஏதோ ஒன்றை விரும்புகிறது. கடைக்காரருடன் சிலநிமிட உரையாடலுக்கு பின், மீண்டும் தேக்காவின் வீதிகளை நோட்டமிட்டபடி களமிறங்கினேன். காளியாத்தா கோவில் அருகே வரும்போது கண்கள் ஏதேச்சையாக ஒரு புத்தக அங்காடியை நோக்கி திரும்பியது. அங்கிருந்த ஒரு புத்தகம், அறைகுறை ஆடைகளுக்குள் பிதுங்கித் தெரியும் பெண்மையையும் கடந்து என்னை ரொம்பவே ஈர்பதாக இருந்தது. முன்பு பலமுறை நண்பரிடம் பல பிரதிகள் பெற்று அதனை என் நட்பு வட்டத்தில் அன்பளிப்பாக கொடுத்தது நினைவுக்கு வந்தது. என்னிடம் வரத்தவறிய அந்த புத்தகத்தின் சமீபத்திய இதழ்தான் அது. இதுபோன்ற தருணங்களில் கை எப்போதும் சும்மாவே இருக்காது, அழகிய ஸ்திரீகளை காணும்போது என்னுள் ஏற்படும் தொடுகைபோன்ற ப்ரஞ்கையுடன் புத்தகத்தை ஏந்திக்கொண்டு புரட்டத்தொடங்கினேன்.

 

முன்புரட்டும்போது வசீகரித்தது ஒரு புன்னகை, மனமின்றி அதனை கடந்து சிலபக்கங்களை புரட்டும்போதே மனம் வாங்குவோமா, வேண்டாமா என்று விவாதிக்கதொடங்கியிருந்தது. மர்ம வீடியோ கடையை கடந்தபோது வாங்கிடவேண்டி மனம் வீழ்ந்தே விட்டது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தோழியுடனான தொலையாடலில், புத்தக அங்காடியில் காசில்லாமல் என்னடா பண்ற என்றாள், ஒரு வெள்ளிக்குதானே வாங்கப்போகிறேன் என்றபோது அதற்கும் காசுவேண்டுமல்லவா என்பதனை மறந்து, நான்கு வெள்ளியை கொடுத்து வாங்கவேண்டும் எண்ணிக்கொண்டே பர்ஸ்ஸிற்குள் அடைபட்டிருந்த ஓரிரு வெள்ளியை தேடத்துவங்கினேன். முன்பு ஒரு முறை இதே இடத்தில்தான் ஞாநி குமுதத்திற்கு மாறிவிட்டார் என்ற தலைப்பை பார்த்து குமுதம் வாங்க நேர்ந்தது. அதுகூட ஏதேச்சையான நகர்வில்தான்.

 

வீட்டிற்குள் வந்து அடைபட்டபோது மின்னஞ்சல் பரிவர்த்தனை, தொலையாடல் எல்லாவற்றையும் கடந்த ஏதோ ஒன்று என்னை இம்சிக்கத்தொடங்கியது. பைத்தியகாரனுக்குரிய மனநிலையில் என்னை நானே திட்டத்தொடங்கினேன் அதன் உச்சமான கொச்சை வார்த்தைகளை எல்லாம் இங்கே கொட்டமுடியாது.

 

சாலையில் நடப்பதும் நான்கு வெள்ளியை இழப்பதும் ஒரு நம்பிக்கையின்மைதான். ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் நான்கு வெள்ளியை இழந்தது. பக்கங்களை புரட்டத்தொடங்கியபோது வசீகரித்த புன்னகையா, அந்த மர்ம வீடியோ கடையா, அதனையும் கடந்து விற்பனை ரீதியில் நண்பர்கள் கண்டடைந்த மாற்றமாகவும் இருக்கலாம். இனி ஒவ்வொருமுறை சாலையில் நடக்கும்போது நான்கு வெள்ளியை இழப்பதற்கான சாத்தியங்கள் நிரம்பிக்கிடக்கின்றன, அதற்கான பத்திரப்படுத்தலை தேடியபடி இந்நேரம் ஒவ்வொருவரும் ஓடத்தொடங்கியிருப்பர்.

 

இந்த கட்டுரையை முடிக்கும்போது சாலையை கடக்காமலேயே நான்கு வெள்ளியை இழக்க நேர்ந்தது. அதற்கான காரணம் நான் குடியிருக்கும் தொழிற்பேட்டைக்கு வெளியே கேட்ட மணிச்சப்தம், வெளியே வந்தால் வண்டியில் ஐஸ்விற்பனை செய்யும் முதியவர். அவரை அழைத்து ஒரு வெள்ளிக்கு சாக்கோ சிப் என்ற ஐஸ்ஸை தேர்ந்தெடுத்தபடியே பேச்சுக்கொடுத்தேன். இந்த பகுதியல் நல்ல விற்பனையா என்று, எங்க தம்பி இதுவரை மூன்றுதான் விற்றுள்ளது என்றுச் சொல்லி சீனர்கள் இதனை விரும்புவதில்லை என்றார். இன்னொரு ஐஸ் கொடுங்க என்றபடி அருகிருந்த என் சீன நண்பர்களை அழைத்து அவர்களுக்கும் தருவித்துகொடுத்தேன். இழத்தலிலும் ஏதோ ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கிறது, இன்னும் சற்று வாழ்வினை நீட்டிக்க ஐஸ் வண்டியை அழுத்திச்செல்லும் அந்த முதியவரின் நம்பிக்கையைபோல.

 

©pandiidurai@yahoo.com

6 thoughts on “சாலையில் நடப்பதும் நான்கு வெள்ளியை இழப்பதும் ஒரு நம்பிக்கையின்மை

 1. அனானி சொல்கிறார்:

  என்ன கன்றாவிப் பதிவு இது?
  என்ன எழுத முயற்சித்திருக்கிறீர் ஐயா?

 2. கிரி சொல்கிறார்:

  //மர்ம வீடியோ கடையை கடந்தபோது வாங்கிடவேண்டி மனம் வீழ்ந்தே விட்டது//

  அதென்னங்க அப்படி ஒரு கடை!

 3. ’டொன்’ லீ சொல்கிறார்:

  ம்…விளங்குது….கொஞ்சம் கவித்துவமாக புலம்பி விட்டீர்கள்..அது தான் பிரச்சினை..:-)

 4. ஜோதிபாரதி சொல்கிறார்:

  மனம் என்பது மக் ரிட்சியில் பார்த்த வானரம் போன்றது!
  சாலையில் போகும் போது கூட பார்த்துப் போகவேண்டும். அங்கங்கே பார்க்கக் கூடாது.

 5. பாண்டித்துரை சொல்கிறார்:

  //அனானி said

  என்ன கன்றாவிப் பதிவு இது? //

  வாங்க சிங்கப்பூர் அனானி

  //என்ன எழுத முயற்சித்திருக்கிறீர் ஐயா?//

  தமிழ்
  —————————-
  கிரி said

  //மர்ம வீடியோ கடையை கடந்தபோது வாங்கிடவேண்டி மனம் வீழ்ந்தே விட்டது//

  அதென்னங்க அப்படி ஒரு கடை!//////

  கடையோட பட்ட பெயரா இருக்குமோ

 6. பாண்டித்துரை சொல்கிறார்:

  நன்றி டொன்லீ

  ஜோதிபாரதி said
  //அங்கங்கே பார்க்கக் கூடாது.//

  கண்கள் இல்லாது இருந்திருந்தால்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s