பூன்லே 2 சவுத்துவாஸ்

சிங்கப்பூரில்  சில பாவப்பட்ட ஜென்மங்கள் பயணிக்கும் வழித்தடம்தான் பூன்லே 2 சவுத்துவாஸ், ஆமாம் இவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! சவுத்துவாஸை சிங்கப்பூரின் குப்பைகளை எரிக்கும் பகுதியென்றுதான் பலரும் குறிப்பிடுவர். இங்குதான் சிங்கப்பூரின் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. சிப்பியார்ட் என சொல்லப்படும் கப்பல் கட்டுமானம் செய்யும் நிறுவனங்களும் இந்தப் பகுதியில்தான் அதிகம். சிங்கப்பூரின்   தெற்கே இருக்கும் இந்தப் பகுதியிலிருந்தும்  தரைமார்க்கமாக மலேசியா செல்ல ஒரு சுங்கச் சாவடியிருக்கிறது. யாருமற்ற வானந்திரம் என்பார்களே அப்படி கான்கிரிட் கம்பெனிகளால் மட்டுமே நிரப்பபட்டபகுதி.

 

பாவப்பட்ட ஜென்மங்கள் என்றேன் அல்லவா! இந்த பகுதியில் பணிபுரிவதில் பெரும் பகுதியினர் வெளிநாட்டு ஊழியர்கள். அவர்கள் தங்கியிருக்கும் அறைகள் வியர்வை, அழுக்கு என பல்லின மனித வாசனைகளை நிரப்பிக் கொண்டிருக்கும். இரண்டு, மூன்று  அடுக்குகள் கொண்ட இரும்பு கட்டில்களுடன், நான்கு நபர்கள் நிரப்பும் அறைகளை ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் பத்திற்கும் மிகுதியாய் நிரப்பியிருப்பர். பாவப்பட்ட ஜென்மம் தன்னை நிரப்பிக்கொள்ள பை, புத்தகம் காயப்போட்ட சட்டை, ஜட்டி, இன்னும் பல இத்யாதிகளுடன் நிரம்பிவழியும் கட்டிலின் மையத்தில் மட்டும் கொஞ்சம் இடத்தினை விட்டிருப்பர். 

 

 

இந்த பாவப்பட்ட ஜென்மங்களை ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் என்றுதான் இங்கு பிரதானப்படுத்துவர். அதில் பலர் குறைந்த பட்ச ஊழியத்தில் சில நாட்கள் வேலையின்றி பல நாட்கள் இரவுத்தூக்கத்தை உண்டு அறைகளுக்கு வந்து செல்லும் அழையா விருந்தாளியான மூட்டைப்பூச்சிகளிடம் உரையாடியபடி முடங்கிப்போவதுண்டு நான், நீ என போட்டி போட்டு வெளியிடும் மூச்சுக்காற்றுகள் மேல் எழும்பி ஒன்றாய் கலந்து பின்னர் அவர்களின் நாசிகளில் மறுசுழற்சிக்கு அனுப்படுவதில் தினம் புத்துணர்வாய் புதுப்பித்துக்கொள்ளும், இந்த ஆத்மாக்களிள் அறைகளில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் மின்விளக்குகள் முன் இரவும், பகலும் ஒன்றுதான். படுத்துறங்கும் ஜென்மங்களுக்கு ஒரு விதத்தில் தாலாட்டாய் அமைவது தொடர்சியான பேச்சுக்குரல்கள், அதுவும் அலைபேசியின் வழியேயான தொலையாடல்.

 

 

அலைபேசி அட்டை வேண்டுமா பாக்கெட் அரிசி வேண்டுமா ஆறாவது விரல் (புகைப்பான்) இன்னும் எல்லாம் ஐம்பது சென்ட் அதிகப்படியான விலையில் நாட்சென்ற பின்னரும் நலம் விசாரிப்பதுண்டு. அங்காடிகளுக்கு செல்லவேண்டும் என்றால் காததூரம் நடக்கவேண்டும் அல்லது முப்பது நிமிட பயணத்திற்கு பின்னான பட்டணத்தையே நாடவேண்டும். குறிகளிடப்பட்ட பல்வேறு ஆத்மாக்களின் ஆடைகளை சுற்றித்துவைக்கும் மின்சாதனங்கள், கால் டாக்ஸி சுமந்து வரும் கட்டிச்சோற்றுடன் வார இறுதிநாட்களில் சாலையோரங்களில் அமர்ந்து சுவைக்கும் பியர் என பிரியமான நாட்களாகத்தான் இவர்களுக்கு நகர்ந்து செல்கிறது.

 

ஊரில் இருந்து இங்கு வந்து திரும்பும் எல்லோரும் பேசுவது சிங்கப்பூரின் ஆச்சர்யங்களை, அதிசயங்களையும் தானே! அப்படிப்பட்ட ஆச்சர்யம்தான் இவர்களின் அறைகள். வாழுமிடங்கள் வழக்கொளிந்து என்பார்கள் அல்லவா, அப்படி டெக்னிக்கல் பார்க் என்று சொல்வார்கள் அல்லவா  சிங்கப்பூர் அரசால் அங்கிகரிக்கப்பட்ட டெக்னிக்கல் பார்க் எல்லாம் மாற்று உரிமம் அளிக்கப்பட்டு மனித வாசனைகளை நிரப்பும் அறைகளாக தடுக்கப்படுகிறது.

 

 

பூன்லே 2 சவுத்துவாஸ் பயணத் தடத்தின் ஓரே பேருந்து 182. “பயணங்கள் எழுத்தளானுக்கு இனிமையானதாகத்தான் இருக்ககூடும் என்னில் முதன் முதலாக எரிச்சலைடைய செய்து இன்று பழகிப்போய்விட்டன இந்தப் பயணங்கள். முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை வரும் பேருந்து பெரும்பாலும் தூரத்தே சிலர் ஓடிவரும் போது நிறுத்தத்தை கடந்திருக்கும். ஊரைப்போல எங்கு கை காட்டினாலும் நிறுத்தும் பேருந்துகள் கிடையாது. விதி விலக்காக ஞாயிறு அன்று மட்டும் அதுவும் மாலை நேரங்களில் சில தனியார் வாகனங்கள் ஒரு வெள்ளிக்காய் வளைய வருவதுண்டு.

 

 பூன்லே ஜங்ஷனில் ஒவ்வொருமுறை சவுத்துவாஸ் பேருந்துக்காய் காத்திருக்கும் போது பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் 180 மற்றும் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை வரும் 179 அதுவும் இரட்டை அடுக்கு பேருந்தினை ஏக்கமாக பார்பதுண்டு. சவுத்துவாஸிற்கான வரிசையின் எண்ணிக்கை நீண்டுகொண்டிருக்கையில் இரட்டை அடுக்கு பேருந்து வர வேண்டுமென பலர் பிரார்தனை செய்துகொண்டிருக்க நான் சென்றபோது எல்லாம்  ஒற்றை அடுக்கு பேருந்தே வந்து நிற்கும். உட்கார்ந்து, நின்று கொண்டு என அம்பது, அறுபது நபர்களை ஏற்றிச்செல்லும் பேருந்தில் காத்திருந்து வரிசையாய் ஏறும் பாவப்பட்ட ஜென்மங்கள் எப்போதுமே பேருந்தின் மத்தியை விட்டு நகராது களைப்புற்று உறங்கிப் போவதுண்டு.  பேருந்தின் மத்தியை விட்டு நகர மறுப்பவர்களை பழிந்த படியே அடுத்த முப்பது நிமிடத்திற்கு கொட்டாவிகளை மென்றுகொண்டு காத்திருக்க தொடங்குபவர்களை சில முறை கடைசியாய் தொற்றி அடைக்கப்பட்ட கண்ணாடி கதவுகளின் வழியே பார்பதுண்டு. அடுத்த பேருந்து ஏற்றிக்கொள்ளும் என்று  புன்னகைத்தபடி வரவேற்கும் ஓட்டுனர்கூட உள்ளே போ என்று உரக்கச்சொல்வது கிடையாது. இந்த தடத்தில் மட்டும்தான் சன்னல் திறந்திருக்க இயற்கையான காற்றினை நுகர்வதுண்டு. பிற தடங்களில் மிகுதியான பேருந்துகளில் குளிருட்டப்பட்ட காற்றினையே சுவாசிப்பதுண்டு.

 

ஒரு முறை தமிழகத்தில் என் தோழியிடம் தொலையாடிக் கொண்டிருக்கையில் நான் செல்லமாக விளிக்கும் அவள் பெயரைச் சொல்லி என்ன “பூனை மலேசியாவில் இருக்கும் உன் கணவர் மாதா மாதம் பணம் அனுப்புவாரா என்று வினவ, ம் பாண்டி மாசம் இரண்டாயிரம் அனுப்புவார் என்றாள். இரண்டாயிரம் தானா என்று நான் இழுக்க…,  உனக்கென்ன பாண்டி பணக்காரன் சிங்கப்பூர்லல நீ இருக்க என்றால். ஆமாம் சிங்கப்பூரில் உள்ள பாவப்பட்ட ஜென்மங்கள் எல்லோரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அல்லவா அதையும் இன்னும் நான் பயணிக்காத வழித்தடங்களில் பயணிக்கத் தொடங்கும் போது கண்டடையக்கூடும்.

 

பின்குறிப்பு: இன்னும் சில  நாட்களில் புதிய தடத்தில் எம்.ஆர்.டி தொடங்கவிருக்கிறது. அது தொடங்கும் போது ஓரளவிற்கு பூன்லே 2 சவுத் துவாஸ் பயணம் இனிமையாக இருக்ககூடும்.

9 thoughts on “பூன்லே 2 சவுத்துவாஸ்

 1. Renga சொல்கிறார்:

  REAL STORY. I’M WITNESSING THE SAME THING FOR 9 YEARS, YES, TECH PARK BECOMING WORKER’S PARK.

 2. ’டொன்’ லீ சொல்கிறார்:

  உண்மை தான் பாண்டித்துரை…இவர்களின் வாழ்க்கை தரம் மிகவும் கேவலமானது. சிங்கப்பூரர்களால் செய்ய முடியாத (விரும்பாத) வேலையை செய்யும் இவர்களின் வாழ்க்கை நலனின் அரசும் அந்த நிறுவனங்களும் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டும்

  179 பேரூந்துக்காக நிற்கும் போது 182 க்கு நிற்கும் ஏக்கம் நிறைந்த முகங்களை பார்த்திருக்கிறேன்

  வரும் சனி திறக்குப்படும் MRT extension எல்லாருக்கும் நிம்மதியைக் கொடுக்கட்டும் 🙂

 3. சிங்கை நாதன் சொல்கிறார்:

  😦
  அன்புடன்
  சிங்கை நாதன்

 4. ஜோதிபாரதி சொல்கிறார்:

  நல்ல பதிவு நீதிபாண்டி!
  ஆதங்கங்களை அடுக்கி வைத்திருக்கிறீர்கள்.

 5. கிரி சொல்கிறார்:

  பாண்டித்துரை நல்லா எழுதி இருக்கீங்க..

  சிங்கப்பூர் என்றால் அடுக்கு மாடிகளும் நவீன வாழ்க்கை தரங்களும் கண்ணை கவரும் இடங்களும் மட்டும் தெரிந்த பலருக்கு ..தெரியாத இதை போல விஷயங்கள் பல

  கொஞ்சம் பத்தி பிரித்து எழுதினீர்கள் என்றால் படிக்க எளிதாக இருக்கும்

 6. பாண்டித்துரை சொல்கிறார்:

  ///டொன்லீ said

  வரும் சனி திறக்குப்படும் MRT extension எல்லாருக்கும் நிம்மதியைக் கொடுக்கட்டும் ////

  சரியான தகவலுக்கு நன்றி டொன்லீ

 7. பாண்டித்துரை சொல்கிறார்:

  நன்றி ரங்கா

  ——

  நன்றி ஜோ. முன்பு ஒரு முறை எழுதி தமிழக இதழுக்கு அனுப்பிய கட்டுரை ரொம்ப நாளாயிற்று. அந்த இதழில் வரவில்லை. கிரியின் பதிவை பார்த்ததும் தேடி எடுத்து பதிந்தேன்.

  ———–
  பத்தி பிரிச்சாச்சு கிரி

 8. திகழ்மிளிர் சொல்கிறார்:

  உங்களின் இடுகையை நான் சிங்கையில் பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்வை கண் முன்னே காட்டியது.

  நன்றாக எழுதியுள்ளீர்கள்

  அதுவும் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல்

  வாழ்த்துகள்

  அன்புடன்
  திகழ்
  சிங்கையிலிருந்து

 9. பாண்டித்துரை சொல்கிறார்:

  நன்றி திகழ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s