நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்
எல்லாம் மாறும்மட்டும்
எதிர்த்து நிற்கட்டும்
தேசம் விட்டு தேசம் போய்
பிச்சையெடுக்கட்டும்
பிணைகைதியாய் வாழட்டும்
காட்டி கொடுக்கட்டும்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்
அடிபட்டு வீழும்
அநாமத்தின் புகைப்படகோப்புகள்
வாரம் ஒரு
வன்புணர்ச்சி வீடியோ பதிவுகள்
இல்லாதுபோயின்
சன் டிவியும் கலைஞர் டிவியும்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்
செல்லடி சப்த்தத்தை செய்தியாய் படிப்போம்
பின் அதனை மடித்துவைப்போம்
நன்றாக சாப்பிடுவோம்
இரவின் கனவோடு இன்புற்று
தூங்கி எழுவோம்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்
வில்லு படம் பற்றி பேசுவோம்
விசயகாந்த் அரசியல் பற்றி பேசுவோம்
இன்னார் கூட இன்னார் ஓடிப்போனது உட்பட
நாம் பேச நிறைய இருக்க
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்
நமக்கென வீடு இருக்கிறது
காய்ச்சல் வந்தால்
அம்மா
அப்பப்பா
தொலைபேசி அழைப்புகள்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்
நன்றி: உயிரோசை இணைய இதழ்
©pandiidurai@yahoo.com
/நமக்கென வீடு இருக்கிறது
காய்ச்சல் வந்தால்
அம்மா
அப்பப்பா
தொலைபேசி அழைப்புகள்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்/
உண்மை தான் நண்பரே
உங்களுடைய பதிவினை எழுத்தாளர் மாதங்கி வலைச்சரம் வலைப் பூவின் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலமாக உங்களுடைய தளத்திற்கு வருகை தர நேர்ந்தது. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.com – சென்று பார்க்கவும்