என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன் – செழியன் (ஒளிப்பதிவாளர்)

செழியன் கவிதைகள்

chelyan

 

வீட்டுக்கு மேல் போர் விமானங்கள்

குழந்தைகளை இழுத்துக்கொண்டு நீங்கள்

ஓடி ஒளியும்போது

கண்ணெதிரில் உங்கள் வீட்டு பெண்கள்

கற்பழிக்கப்படும்போது

உங்கள் சகோதரன் சுட்டுக் கொல்லப்படும்போது

பட்டினியால் உங்கள் பெற்றோர் இறக்கும்போது

அப்போதுதான்

போர் என்பது புரியும் எனில்

அதுவரைக்கும் தமிழர்களே கிரிக்கெட் பாருங்கள்

அடுத்த தேர்தல் வந்துவிட்டது

வரிசையில் நின்று வாக்களியுங்கள்

 

 ************************************

 

பயணத்தில் உங்கள் இருக்கையில்

இன்னொருவர் அமர்ந்துகொண்டு

எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்?

சாலையில் உங்கள் வாகனத்தை

இன்னொரு வாகனம் இடித்துவிட்டால்

என்ன செய்வீர்கள்?

உங்கள் குழந்தையை பள்ளி ஆசிரியர்

காயம் வர அடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?

பேருந்தில் உங்கள் மகளை இன்னொருவர்

உரசுவதை பார்த்தால் என்ன செய்வீர்கள்?

உங்கள் வீட்டுக்குள் அத்துமீறி

சில அந்நியர் புகுந்தால்

என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்?

இறையாண்மை பேசுவீர்களோ?

இதற்கெல்லாம் . . .

எதிர்த்தால் தீவிரவாதம் எனில்

இலங்கையில் நடப்பதும் அஃதே நண்பா

 

******************************************** 

 

ஆர்ப்பாட்டம் நடத்தியாச்சு

ஓப்பாரி வச்சாச்சு

கண்டனக்கூட்டம் முடிஞ்சது

கவிதை வாசிச்சாச்சு

கட்டுரைகள் எழுதியாச்சு

ஓவியம் வரைஞ்சாச்சு

ஊர்வல் போயாச்சு

மனிதச் சங்கிலி

அடையாள உண்ணாவிரதம்

வழக்கறிஞர் போராட்டம்

மாணவர் போராட்டம்

திரையுலகப் போராட்டம்

கடையடைப்பு

தந்தி அடித்து

மெயில் அனுப்பி

எஸ்.எம்.எஸ் விட்டு

வேலைநிறுத்தம் செஞ்சு

பேருந்துகள் கொளுத்தி

தூதரகங்களை நொறுக்கி

ஜெயிலுக்குப் போயி

சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து

அட! புதினேழுபேர் தீக்குளிச்சுச்

செத்தும் போயாச்சு.

. . . க்காளி . . . என்னதான்யா செய்யுறது இனி!

 

 

நன்றி: ஆனந்திவிகடன்

தமிழ்விண்.காம் பதிவுகளுக்கு என்னவாயிற்று

t.w

சற்று முன் தமிழ் விண் இணையதளத்திற்கு சென்றேன். அங்கே எந்தப் பதிவுகளையும் காணவில்லை. என்ன ஆயிற்று தமிழ் விண்ணுக்கு?

மீளா பிரமிப்பினூடே படிந்துவிட்ட இழப்புகள்.

இதற்கு முன்பு அ.முத்துலிங்கத்தின் கட்டுரைதொகுப்புகளை வாசித்திருக்கிறேன். இவரின் சிறுகதை தொகுப்பு என்பது இதுவே முதல் முறை ஆனால் கட்டுரைகளின் ஈர்ப்பு ஏனோ சிறுகதைகளுக்குள் இல்லை.

 

அக்கா – 1964 (இந்த வருடம் சரியா என்பது தெரியவில்லை)

திக்சக்கரம் – 1995

வம்ச விருத்தி – 1996

வடக்கு வீதி – 1998

 

வாசகர் வட்டத்திற்காக நான் வாசித்த மகாராஜாவின் ரயில் வண்டி – 2001  இவரது ஐந்தாவது சிறுகதை தொகுப்புஇ இதற்கு முன்னரும் பின்னரும் வெளிவந்த சிறுகதை தொகுப்புகளை நான் படித்ததில்லை. சிறுகதையை படிப்பதற்கு முன்பு தலைப்பு பற்றிய பிரக்ஞையில் மகாராஜாவின் வண்டி என்றால் எப்படியெல்லாம் இருக்கும் என்ற கற்பனையில் பிரமிப்புடன் மிதந்து கிடந்தேன். கதையை வாசிக்க துவங்கியபோதுஇ ஒருவித சலிப்பு ஏற்பட்டது. கதையை நகர்த்தல் ஒரு துப்பறியும் கதைசொல்லல் போன்ற பிம்பம் என்னுள் படிந்ததேஇ ஆனால் பிற கதைகளை வாசிக்க வாசிக்க மாற்றம் ஏற்பட்டது. ஒட்டு மொத்த கதைகளை படித்து முடிக்கும் போது பிரமிப்பு ஏற்படுதைவிடஇ ஒரு வறண்ட மனநிலையில் ஏற்படும் சலிப்பே தோன்றிமறைந்தது. எல்லாக்கதைகளின் முடிவிலும் ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு இழப்பு படிந்துபோய்கிடக்கிறது.

 

இருபது கதைகள் கொண்ட தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான அல்லது மனதிற்கு நெருக்கமான கதை என்றுஇ “தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில”; கதையை சொல்லலாம்

 

பொன்னி எனும் வேலைக்காரச்சிறுமி காணமல் போவதிலிருந்து துவங்கிஇ அதன் தொடர்சியாக நிச்சயிக்கப்பட்ட தில்லை அம்பலப் பிள்ளையார் கோவிலுக்கு சென்று அங்கு இந்த கதை முழுவதும் பிண்ணப்பட்ட இரண்டு சகோதர்களில் இளையவன் இறந்து போவதோடு முடிகிறது. இரண்டு சகோதர்களில் மூத்தவனின் பார்வையில் சொல்லப்பட்ட கதையில் இடம் பெரும் சில சொல்லாடல்களை இப்போது பார்ப்போம்.

 

‘’அந்த மார்பிள்களை நான் அபகரிப்பதற்கு பலமுறை முயன்று தோல்வியுற்றிருந்தேன். எனக்கு எரிச்சலாக வந்தது‘’.

 

‘’அங்கே கறுப்புப் புழுவுக்கு பாலாபிஷேகம் நடந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதும் ‘பழிகாரா இன்னும் நீ உடுக்கவில்லையா ? கார் வரப்போகிறது ஓடு ஓடு என்றாள் ‘’.

 

‘’நான் எப்போழுதாவது கார் ஓட்டினால் அப்படி ஒரு தொப்பி அணிந்து சாய்ந்து நின்று பீடி குடிக்க வேண்டும் என்று உடனேயே தீர்மானம் எடுத்தேன் ‘’.

 

‘’எனக்கும் பொன்னிக்கும் இடையில் தலையைக் கொடுத்து தம்பியும் எட்டிப்பார்த்தான். ஒப்பந்தத்தை மீறுகிறான். ஒரு குட்டு வைத்தேன். உலகம் நேரானது‘’.

 

‘’வுட்போர்டில் நின்றபடி ஒரு கை உள்ளே பிடிக்க மறு கை வெளியே தொங்க சின்ன மாமா சிகை கலைய அங்கவஸ்திரம் மிதக்க ஒரு தேவதூதன்போல பறந்து வந்தார். இந்த தருணத்தில் எனக்கு சின்ன மாமாவிடம் இருந்த மதிப்பு பன்மடங்கு பெருகியது. ‘’.

 

’கோயில் வந்தபோது எனக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அது ஒரு சிறிய கோவில். ஒரு குருக்களும் ஒரு மாடும் ஒரு சொறிநாயும் இரண்டு பிச்சைக்காரர்களும்தான் அதன் சொந்தக்காரர்கள் ‘’.

 

‘’பெற்றோர் பார்க்காத சமயத்தில் அவள் கோவில் நாயிடம் விளையாட நெருங்கினாள். அது உர்ர் என்று அதிருப்தியாக உறுமியது. சிறிது பின்வாங்குவதும் அணுகுவதுமாக இருந்தாள் அவளுடைய கெண்டைக் கால்களை நாயினுடைய கூரிய பற்கள் சந்திக்கும் தருணத்துக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன் அந்த குட்டி சந்தோஷமும் அவளுடைய தகப்பன் திடீரென்று நாயை விரட்டியதால் கெட்டுப்போனது‘’.

 

‘’முழங்கால் மூட்டில் ஏற்பட்ட பாவாடை நீக்கலுக்குள் நான் பார்த்துவிடாமல் இருக்க தன்னுடைய பின்பக்கம் என்னுடைய முகத்துக்கு நேராக வரும்படி பிரயத்தனமாகத் திருப்பி வைத்தாள் ‘’.

 

 

‘’இன்னும் கரியாக ஒரு நிமிடத்தில் இவன் இறந்துவிடுவான் என்பது தெரியாமல் நான் அந்த மார்பிள்களை வாங்கி பத்திரப்படுத்தினேன் ‘’.

 

‘’அண்ணா நீ நீந்துவாயா? ஏன்றான் தீடிரென்று. உலகத்தில் உள்ள சகல கலைகளிலும் நான் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று அவன் நினைத்தான் ‘’.

 

‘’எனக்கு கோபம் வந்தது. இவன் அளவுக்கு அதிகமாகக் குளத்தை அனுபவிப்தை நான் விரும்பவில்லை. இவன் செய்வதிலும் பார்க்க கூடுதலான ஒரு யுக்தியை நான் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

 

‘’அப்போது என் கண்முன்னே கணுக்கால் வெள்ளத்தில் அவன் சரிந்துகொண்டிருந்தான். கனவிலே நடப்பதுபோல ஈர்க்கப்பட்டு அதையே பார்த்தேன். அவன் அப்படித் தத்தளித்தபோது எட்டிக் கைகளை கொடுத்திருந்தாலோ சத்தம் எழுப்பியிருந்தாலோ போதும். நான் செய்யவில்லை விறைத்துப்போய் ஒரு நிமிடம் வரைக்கும் அசையாமல் அங்கே தோன்றிய நீர்ச்சுழலைப் பார்த்தவாறு நின்றேன். ஒரு மந்திரம்போல அவன் சிரித்தபடி கைகொட்டி எழும்புவான் என்ற நினைப்பு எனக்குள் இருந்தது‘’.

 

‘’அதற்கு பிறகுதான் ஓவென்று கத்திக்கொண்டு அம்மாவிடம் ஓடியதாக ஞாபகம் ‘’.

 

‘’தூங்குவதுபோலத் தம்பியை பக்கவாட்டில் இரண்டு ககைளிலும் ஏந்தியபடி அவர்நடந்து வந்து நடுஅறையில் நடுக்கட்டிலில் கிடத்தினார். திடீரென்று அந்த அறையில் இருந்த காற்றை யாரோ அகற்றிவட்டார்கள். நான் வெளியே ஓடிவந்து மூச்சுவிட்டேன் ‘’.

 

 

இப்போது நான் சொன்னவையெல்லாம் இந்த கதையில் வரும் இந்த கதையை சொல்லிச்செல்லும் மூத்த சிறுவனின் எண்ணங்கள் சார்ந்தவை . இவன் எந்த குணாதிசயங்களை உள்ளடக்கியவன் என்ற அனுமானத்திற்கு வாசகனை இட்டுச் செல்ல உதவுபவை

 

 

இரண்டு சகோதர்களுக்கு இடையேயான பிணைப்பை கதை முழுமைக்கும் காணாலாம். இயல்பாக இரு சகோதர்கள் இருக்கும் வீடுகளில் அவர்களுக்குள் ஏற்படும் போட்டிஇ தனக்கென்று பாதுகாத்து வரும் பொக்கிஷங்கள்இ பிரச்சினைகளின் தோற்றுவாயை மறைத்தல் என்று சிறுபிராயத்தை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். மூத்த சிறுவன் நிறைய இடங்களில் அவனின் எண்ணங்கள் சாரந்து பிரமிக்கவைக்கிறான். கதைமுழுமைக்கும் மூத்த சிறுவனுக்குள் ஒரு வித குருரத்தன்மை நிரம்பியிருக்கிறது. இந்த குருரம் இளம்பிராயத்தில் பலருக்குள் ஏற்படக்கூடிய ஒன்றுதான் பின்னொருநாள் நினைக்கும்போதுஇ பலரும் இப்படியெல்லாமா இருந்திருக்கிறோம் என்றுஇ நம்மீதான கோபத்தை பரிதாபத்தை தோற்றுவிக்கும.; சிலருக்குள் இத்தகைய குருரங்கள் வாழ்க்கை முழுமைக்கும் நிரம்பிவிடுகிறது.

 

‘நாளை’’ சிறுகதை ஒரு கிராம அழிவிலிருந்து தப்பித்து ஒருவேளை உணவுக்காய் நீண்ட தொலைவு அலைந்து அகதிமுகாமில் தங்கவைக்கப்படும் இரு சிறுவர்களை பற்றிய கதை என்றாலும் சொல்லப்பட்ட சில பக்கங்களுக்குள் இப்படித்தான் ஒரு முகாம் ஈழத்தில் இருக்ககூடும் என்ற ஒரு முழுமையான முகாமினை கற்பனை செய்யமுடிகிறது. இதில் வரக்கூடிய மூத்த சிறுவனும் அவனது எண்ணங்களால் பிரமிக்க வைக்கிறான்

 

‘’மகாராஜாவின் இரயில் வண்டி’’ என்ற முதல் சிறுகதை பதின்ம வயதில் ஒருவனுக்குள் ஏற்படும் அதிர்வுகளும் மென்மையான காதலையும் பலவருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எல்லோருக்குள்ளும் இப்படி ஒன்றை அசைபோட வைக்கிறது.

 

‘’ஐந்தாவது கதிரை’’ சிறுகதை கணவன் மனைவிக்குள் நடைபெரும் மனம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை பேசுகிறது. கலாச்சாரங்களுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட ஒருவள் தனது மார்பகங்களில் பச்சை குத்திக்கொண்டதோடு முடிகிறது. மார்பகங்களில் பச்சை குத்தியதை படிக்கும் போது எனக்குள் படித்தபோது ஒரு வித அதிர்வு இருந்தது. ஆனால் பிறகு எனக்குள் சமாதானம் செய்து கொண்டேன் ஒரு பெண் இன்னொரு பெண்ணிற்கு பச்சை குத்தியிருக்கலாம் என்று.

 

‘’கடன்’’  சிறுகதை சிங்கப்பூரின் நிரந்தவாசிகளுக்கு பொருந்திப்போகக்கூடிய ஒன்று. முதுமையில் தனித்தலையும் ஒருவரின் ஏக்கங்கள் மற்றும் வாழ்வின் அன்றாட வாழ்க்கை சிக்கல்களோடு அந்த முதியவரை சாகடிப்பதுடன் முடிகிறது.

 

 

 

கொம்புளான, தொடக்கம் , அம்மாவின் பாவாடை, பட்டம் ,  ராகுகாலம் என்று இன்னும் சில கதைகளை பற்றி எழுத நினைத்திருந்தேன்.

வேண்டும் ஒரு அகராதி – இஸ்திகுனு வா!

SOUTHEASTASIA-0411-01

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி). இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும், அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன்,  என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா நெடுநாளாக என்னுள் உள்ளது.

 

 

சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை. இஸ்திகுனு-வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து, அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று, இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன் (அதற்கு பின்புதான் அவரது சொற்பொழிவே ஆரம்பமானது).

 

“வாழமீனுக்கு” எனும் திரைப்பாடல் வெளிவந்த தருணம் (அப்போதுதான் நான் //பேரன் லவ்லி// போட்டு போட்டு பேராசை// உன்னை விட// அழகாய் இருப்பதாக// என்று எழுத ஆரம்பித்த தருணம்) ஒரே பாடலில் பிரபல்யம் அடைந்து விட்டானே என்ற காழ்ப்புணர்சியில், இது எல்லாம் ஒரு இசையா என்று சில குரல்கள் சினிமாத் துறைக்குள் ஒலித்தது. இதில் தன்னை ஆச்சாரங்களுக்குள் அடக்கிக்கொண்டு இசைஅமைக்கும் இசையமைப்பாளரும் ஒருவர் (இந்த செய்தி நான் பத்திரப்படுத்த தவறிவிட்ட (இப்படி பல செய்திகள்) ஒரு பத்திரிக்கையில் வெளிவந்தது). “சித்திரம் பேசுதடி” திரைப்படம் வெளிவந்த தருணம் சென்னையில் இருந்தேன். அங்கு ஒரு திரையரங்கில் இந்தப்படம் ஓடிக்கொண்டிருந்தது (திரையரங்க பெயர் ஞாபகத்தில் இல்லை) அந்த திரையங்க வாயிலில் ஒவ்வொரு காட்சியின் துவக்கத்திலும் வாழமீனுக்கு பாடலை பாடிய கானா உலகநாதனை அந்த திரைப்படத்தில் தோன்றிய உடையலங்காரத்தில் பார்க்கலாம். அவரை பாடச்சொல்லியும், ஆட்டோகிராப் கேட்டும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தனர், விசாரித்ததில் (யாரிடம் என்பது வேண்டாமே பின்பொருகட்டத்தில் தவறான தகவல் என்று தகவல் தந்தவரை மனதிற்குள் நான் பழிக்க நேரலாம் ) ஒவ்வொரு காட்சியின் துவக்கத்திலும்….  அப்படி ஒரு முறை காட்சிதர அவருக்கு ஐம்பதோ, நூறோ ரூபாய் அந்த திரையரங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது.

 

இந்த இடத்தில் சென்னை வேண்டாம் வேறு ஒரு மாவட்டத்தில் கர்நாடக சங்கீதம் முறையாக பயின்ற ஒருவரின் முதல் சினிமா பாடல் வாழமீன் தந்த போதையை விட அதிகமாக தரும்பட்சத்தில், அந்தப் பாடகரை இப்படி திரையரங்க வாயிலில் மோடி மஸ்தானாக நிறுத்தி வைப்பார்களா என்ற கேள்விக்குறி எழுகிறது.

 

 

இந்த நேரத்தில் திரையில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் புகழடைந்த ஓம்சக்தி பக்தர் இசையமைப்பாளர் தேவாவின் வெற்றிக்கு பின்னணனியில், கானா உலகநாதன் போன்ற பலர் இருந்திருக்கலாம் என்ற ஐயம் ஏற்படுகிறது இங்கு அவனின் ஏழ்மையும், அவன் சார்ந்த வர்க்கப் பின்னணியும் ஏகபோக சுரண்டலின் முதலாய் அவன் வாழ்க்கையின் முடிவாய்.

 

சரி மேற்சொன்ன விசயத்திற்கு வருவோம். குப்பத்து மொழி பற்றி சில தகவல்களை ஜெயமோகன் உள்ளிட்ட சில எழுத்தாளர்களும் சில நண்பர்களும் என்னுடன் பகிர்ந்துகொண்டிருந்தனர். அதில் எழுத்தாளர் ஜெயமோகன் இப்படி குறிப்பிட்டிருப்பார் “ஒலித் திரிபுகளும் மொழிக்குழப்பமும் கொண்ட பிராமண பாஷை குப்பத்து மொழி போன்று தாழ்வாக நினைக்கப்படுவதில்லை என்பதை கவனித்தால் சென்னைத் தமிழ் மீதான கிண்டல் என்பது அதைப்பேசும் மக்கள் மீதான கிண்டல் மட்டுமே என்பதை புரிந்துகொள்ளலாம்”.

 

ஆக அவா, இவாளுக்கு அர்த்தம் புரிந்துகொள்ள இங்கு எவாளுக்கும் அகராதி தேவைப்படுவதில்லை, அதனையும் கடந்த ஒருவித பரவச குழைவே அவர்களுக்குள் ஏற்படுகிறது. இஸ்திகுனு-வாவோ அகராதி வேண்டி இம்சிக்கிறது. இறை என்று சொல்லிக்கொண்டு முற்றும் துறந்ததாக முற்றும் உணர்ந்ததாக சுகபோகமாய் வாழும் மா மகரிஷிகளை நாம் ஒன்றும் சொல்லவியலாது, அவர்களை சுற்றி எப்போதும் சிலர் இருந்துகொண்டிருக்கும் வரை. இந்த நேரத்தில் பகவான் ரமணமகரிஷியை மனதில் நினைக்கத் தோன்றுகிறது

 ©pandiidurai@yahoo.com

நன்றி: அநங்கம் (மலேசிய இலக்கிய இதழ்)

பாமக – முடிவினை வரவேற்போம்

 

 ramdoss

 

தேர்தல் நேரத்தில் கட்சி தாவுதையே தனது கொள்கையாக கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி-க்கு இந்த தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றியை வரவேற்போம்.

 

சில கவிதைகளுடன் கடவுள் அலையும் நகரம் – சிங்கப்பூரில்

oviyam

ஒவியம்: சந்துரு (மலேசியா)

மலேசிய எழுத்தாளர்களான கே.பாலமுருகனின் முதல் கவிதைதொகுப்பு “கடவுள் அலையும் நகரம்” சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பக வெளியீடாக மே-2009 இறுதியில் சிங்கப்பூரில் நவீன கவிதைகள் மீதான கருத்தரங்குடன் நடைபெறுகிறது. நிகழ்வு பற்றிய விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். கே.பாலமுருகன் “அநங்கம்” எனும் இலக்கிய பத்திரிக்கையை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்வில் மற்றொரு மலேசிய எழுத்தாளரான ஜாசின் தேவராஜன் அவர்களின் சிறுகதை தொகுப்பையும் தங்கமீன் பதிப்பகம் வெளியிடுகிறது. இவர்  “மௌனம்” எனும் கவிதைக்கான இலக்கிய இதழை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

கே.பாலமுருகனின் சில கவிதைகள்

 

பள்ளத்தில் நெளியும் மரணம்

இறந்தவர்களெல்லாம்
பள்ளத்தில் விழுந்து
மீண்டுமொருமுறை
மரணிக்க முயற்சிக்கிறார்கள்!

அவர்களின் தற்கொலைகள்
தோல்வியில் முடிகின்றன!

இந்தப் பள்ளங்கள்
ஒருவரை ஒருமுறைதான்
இரட்சிக்கும்!

நிலத்தின்
சதைப் பிடிப்பில்
விழுந்த காயங்களைச்
சுமந்து கொண்டு
மரணம் நெளியும்
பள்ளங்கள்!

வீட்டுக்கொரு
பள்ளம் உருவாகி
உயிரோடிருப்பவர்களுக்காகக்
காத்திருக்கின்றன!

அவர்கள்
பள்ளத்தில் விழும்
கணங்களை
அங்குலம் அங்குலமாக
அளவெடுத்து
நீண்டுருக்கிறது அவர்களுக்கான
மரணங்கள்!

நிலம்தோறும்
வளர்ந்திருக்கும் பள்ளங்கள்
மரணத்தைக் கண்டு ஓடுபவர்களை
மிக அலட்சியமாகக்
கொன்று குவிக்க
கடவுள் ஏற்படுத்தியிருக்கும்
பலவீனம்!

 கடைசி பேருந்து

கடைசி பேருந்திற்காக
நின்றிருந்த போது
இரவு அடர்ந்து
வளர்ந்திருந்தது!

மனித இடைவெளி
விழுந்து
நகரம் இறந்திருந்தது!

சாலையின் பிரதான
குப்பை தொட்டி
கிளர்ச்சியாளர்கள்
அப்பொழுதுதான் தொடங்குகிறார்கள்!

பேருந்தின் காத்திருப்பு
இருக்கையிலிருந்து
விழித்தெழுகிறான் ஒருவன்!

நகர மனிதர்களின்
சலனம்
காணமல் போயிருந்தது!

விரைவு உணவுகளின்
மிச்சம் மீதியில்
கைகள் படர்ந்து மேய்ந்து கொண்டிருக்கின்றன!

ஊடுருவி ஊடுருவி
யார் யாரோ திடீரென
நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

கறுப்பு மனிதர்களின்
நடமாட்டம்!
பேருந்து நிற்குமிடம் மட்டும்
குறைந்த வெளிச்சத்தில். . .

ஒரு சிறுமி
சாலையைக் கடந்து
வெருங்கால்களில் இருண்டுவிட்ட
கடைவரிசைகளை நோக்கி
ஓடும்போதுதான்
கடைசி பேருந்து
வந்து சேர்ந்திருந்தது!

இரு நகர பயணிகள் மட்டும்
முன் இருக்கையின் இரும்பு கம்பியில்
தலைக்கவிழ்த்து உறங்கியிருக்க
அபார வெளிச்சம்!

கடைசி பேருந்து
கொஞ்சம் தாமதமாகவே
வந்திருக்கலாம்!

நாங்கள் பூக்களாக இருக்கிறோம்

கட்டுப்பாடுகளற்ற ஓர் உலகத்தில்
வாழ்ந்தே பழகிவிட்டோம்!
எங்கள் வீதிகளின்
மரங்களெல்லாம் பேசுகின்றன!
நாங்கள் நடந்து வருகையில்
கிளைகளால் உரசி
எங்களை தேற்றுகின்றன!

எங்கள் பறவைகள்
உறக்கத்திலும் சிறகுகளை
முடக்குவதில்லை!
சேற்றுக் குளங்கள்
எங்களின் தாய் பூமியாக
இருந்து வருகின்றன!
நாங்கள் பறவையாகவும் இருந்திருக்கிறோம்!

எங்கள் சாக்கடையிலும்
தங்க மீன்கள்தான்!
சிரிக்கின்றன பேசுகின்றன!
நாங்கள் கடவுள்களை
வணங்குவதில்லை. . .
நாங்கள் பூக்களாகவே இருக்கிறோம்
படையலுக்குச் சென்றதில்லை!

எங்கள் மரங்கள்
எங்களை உதிர்த்ததில்லை!
என்ன ஆச்சர்யம்?
நாங்கள் பூக்களாகவே இருக்கின்றோம்!

copyright: bala_barathi@hotmail.com