இலக்கிய வட்டம் – ஏப்ரல் 4- பேசுபவர். திரு. முகவை இராம்குமார்

நண்பர்களே,

ஏப்ரல் மாத இலக்கிய வட்டம் கூட்டத்திற்கு வாருங்கள் என அழைக்கிறோம்.

நேரம்: ஞாயிறு ஏப்ரல் 4- பிற்பகல் மணி 3

இடம்: கல்லாங் சமூக மன்றம் (கம்யூனிடி க்ளப்) -பூன் கெங் எம்- ஆர்- டி அருகில்

பேசுபவர். திரு. முகவை இராம்குமார்

தலைப்பு  : சிலம்பில் கண்ட சில செய்திகள்

அனவரும் வந்து சுவைக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

கேட்டவ(ர்) உள்ளம் கிறுகிறுத்துப் போம்வண்ணம்

தீட்டுவார் தம்முரையைத் தித்திக்கக் – கூட்டமாய்

ஏறிடுவோம் மாடி இவருரை

என்கின்ற வாரி நனைந்திடலாம் வா.

 

அகவை சிறிதுதான் ஆயினும் பேச்சில்

முகவையார்க் குண்டு முதன்மை – தகவுடனே

 சீராய் நமக்குச் சிலம்பின் சிறப்பெல்லாம்

காரா(ய்)ப் பொழிந்திடுவார் காண் .

 

சிலம்பில் ரசித்தபல செய்திகள் பற்றி

நலம்படச் சொல்லிடுவார் நண்பர்- விளம்புவதை

நாட்டமுடன் கேட்டுநீ நன்மை பலகாணத்

தேட்டையுடன் அங்கு திரள்.

சேதிபல கண்டார் சிலம்பி(ல்) இவர்தானும்,

ஆதியோ(டு) அந்தம் அவைதருவார் – யாதொன்றும்

சாக்குநீ கூறாமல் சட்டென்றே அங்குறுதல்

ஆக்கமுறு(ம்) ஆறென் றறி.

அன்புடன் வரத ராஜன்.

மௌனம் சில கவிதைகள்

அழத் தெரிந்த
சிரிக்கத் தெரிந்த
குழந்தையிடம்
கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது
அம்மாவாக
அப்பாவாக
இன்னும் சில
அடையாளங்களைச் சுமந்துகொண்டு

**************************************

நான்
நிரந்தரமானவன்
என்ற கடவுளின் முன்
வாய்பொத்திச் சிரித்துக்கொண்டிருந்தது
குழந்தை

நன்றி: மௌனம் (மலேசியா)

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு – சிங்கப்பூரில்

 

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு இந்த வெள்ளிக்கிழமை 12 மார்ச் 2010, மாலை 7 – 9 வரை நடக்க இருக்கிறது. இடம் வடபத்திர காளியம்மன் கோவில்.

குடும்பம் சார்ந்த புரிதலை நோக்கி….

பிரியா பாபு

பிரியா பாபு எனும் திருநங்கை எழுதிய இந்த நாவல் சந்தியா பதிப்பகத்தாரால் 2008ல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அரவாணி எழுதிய முதல் நாவல்.

அரவாணிகள் குறித்த முழுமையான பார்வையை பெங்களுரைசேர்ந்த அரவாணி ஒருவர் நூலாக வெளியிட்டிருந்தார் அந்த நாவலில் அவர் சந்தித்து சென்ற அரவாணிகள் பற்றி எழுதியிருந்தார். இந்த நூல்தான் தமிழில் அரவாணிகள் குறித்து ஒரு அரவாணியால் எழுதப்பட்ட முதல் நூல் (நூலின் பெயர் ஞாபகத்தில் இல்லை) இதற்கு பிறகு நான் படித்தது லிவிங் ஸ்மைல் வித்யாவால் எழுதப்பட்ட “நான் வித்யா”  அரவாணிகளின் உள் உணர்வுகள் அவர்கள் சந்தித்த துயரம், மாற்றுப்பால் அறுவைசிகிச்சையென தான் கடந்துசென்ற காலங்களை நம்மருகேகொணர்ந்து அந்த வலியை, துயரத்தை அவர்களின் உணர்வுகளை உணரச்செய்த நூல்.

மூன்றாம் பாலின் முகம் – அரவாணியாக மாறும் ரமேஸ் என்ற இளைஞனையும் அவனது குடும்பம்சார்ந்தும் பின்னப்பட்டு அவனது கல்லூரி அவன் சந்திக்கும் பாம்படத்தி குரு (அரவாணிகளின் தாய்) அவர்கள் சார்ந்த உலகம், கூத்தாண்டவர் கோவில் திருவிழா என கடந்து மனம்மீதான புரிதலுடன் ரமேஷ் – பாரதி எனும் அரவாணியாக மாறுவதுடன் நாவல் முடிவடைகிறது.

பேச்சு வழக்கிலான நடையில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. அரவாணிகள் பிச்சை எடுப்பதற்கும் பாலியல் ரீதியில் துன்பப்படுவதற்கும் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதற்கும் முதல் காரணம் மூலகாரணம் குடும்பம் என்பதை சுட்டுகிறது.

திருடுவது அவமானமாக இல்லை வைப்பாட்டி வைத்துக்கொள்வது அவமானமாக இல்லை குடிப்பதும் பல பெண்களுடன் சுற்றுவதும் அவமானமாக இல்லை நான் அரவாணியாக மாறுவது மட்டும் அவமானமாக இருக்கிறதா என குடும்ப உறுப்பினர்களை கேள்விக்கு உட்படுத்தி வாசித்து செல்லும் நம்மில் சலனத்தை ஏற்படுத்துகிறது.

அம்மாவாக வரும் பார்வதி மகன் மகளாக மாறும் நிலை கண்ட குழப்பத்துடன் கண்மணி எனும் சமூகசேவகியை சந்திக்க அதன் பின்னான புரிதலில் ரமேஷ் மீதான கூடுதல் அன்புடன் அவன் சந்திக்கும் அரவாணிகளை சந்தித்து உரையாடுவதும் இன்றைய சமூகத்தில் குடும்பம் சார்ந்த உறவுகளில் ஏற்படும் புரிதல்களையும் இந்த சமூகத்தில் இன்னும் ஏற்படவேண்டிய புரிதல்களையும் முன்னிறுத்துகிறது.

தன்வலியை உணர்வுகளை எழுத்து திரைப்படம் என்று பதிவுசெய்வதன் வாயிலாகத்தான் இந்த சமூகம்  இனிமெல்லமாற்ற மடையும் அரவாணிகளை கொண்டாடும் என்பதாக இந்த நாவல் முடிவடைகிறது.

அரவாணிகளே அவர்களின் வாழ்வினை பதிவுசெய்யும் பொழுது வாசகனுக்கு கூடுதலான புரிதல்களை ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தமுடியும்.

இந்த நாவலில் வரும் கண்மணி எனும் சமூக சேவகி நம்ம பையனும் நாளைக்கு இந்த மாதிரி மாறனும்னு நினைச்ச என்ன பண்ணுவிங்க என தன் கணவரிம் கேட்கும் போது அதில் உள்ள சாதக பாதகங்களை எடுத்துசொல்லணும் அதற்கு மேல அவர்களின் பாதையை தேர்ந்தெடுப்பது அவர்களுக்கான உரிமை என்கிறார். இந்த நாவலை படித்துமுடிக்கும் போது வாககனுக்கு இந்த எண்ணம் தோன்றினாலே போதுமானது – அதுதான் இந்த நாவலை எழுதியிருக்கும் எழுத்தாளர் பிரியா பாவுவிற்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும்.

கூடுமான வரை இதுபோன்ற நூல்களை உங்களின் வீடுகளில் வைத்திருங்கள் – உங்கள் இல்லம் தேடிவரும் விருந்தினர்கள் யாரேனும் வாசிக்கச் செய்ய!

மூன்றாம் பாலின் முகம்
எழுத்தாளர்: பிரியா பாபு
சந்தியா பதிப்பகம் (தொலைபேசி : 044 24896979 65855704
விலை: உருபாய் 50