நிராகரிக்கப்படவேண்டிய விமர்சனம் . (சிங்கப்பூரின் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு))

ஜீன் 2010 வல்லினம்’ (மலேசியா) மின்னிதழில் வெளிவந்த சிங்கப்பூரின் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு) என்ற முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி அவர்களின் விமர்சனக் கட்டுரைக்கான எதிர்வினையை வல்லினம் இதழுக்கு அனுப்பச் சொல்லி நண்பர்கள் என்னிடம் கேட்டனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஒரு இதழுக்கு ஏற்ற கட்டுரையா இல்லையா என்று அந்தகட்டுரைகளை வாசிக்கும் போதே அதன் வாசகர்கள் உணர்ந்துவிடுவார்கள். அப்படி இந்த கட்டுரையை நான் படித்தபோது  

 

வல்லினம் இதழ் மீது ஏமாற்றமே ஏற்பட்டது.

வல்லினம் இதழில் வெளியான முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி – யின் கட்டுரைக்கான இணைப்பு

http://www.vallinam.com.my/issue18/essay5.html

முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி-யின் கட்டுரைக்கு பிற எழுத்தாளர்கள் அவர்களின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர் அதற்கான இணைப்பினையும் இங்கு கொடுத்துள்ளேன்.

கே.பாலமுருகன் (மலேசியா)  http://bala-balamurugan.blogspot.com/2010/06/blog-post_03.html
பாலுமணிமாறன் http://baalu-manimaran.blogspot.com
அப்துல்காதர் ஷாநவாஸ்   https://shaanavas.wordpress.com
சூன்யா http://soonya007.blogspot.com
இந்திரஜித் http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3016

90-க்கு பிறகு கவிதைச் சூழல் எப்படி இருக்கிறது என்று வல்லினம் இதிழில் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி தன்னுடைய சுயத்தை பதிவு செய்துள்ளார். இந்த கட்டுரையை படித்த பலரும் முன்பு அவர் பெற்ற கௌரவத்தை திரும்பவும் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டு எழுதியிருப்பதாகவே கருத்துரைத்தனர் (விமர்சனப் புலிங்கிற பட்டம்க)

அவர் பெறுவதும் விடுவதும் பற்றிய பிரக்ஞை எனக்கு இல்லை..

கவிதை குறித்த விமர்சனம், கவிஞர் குறித்த விமர்சனத்தில் பொதுத்தன்மையை வசதியாக மறந்துவிட்டார் (மறதி கட்டுரை முழுமைக்கும் வியாப்பித்துள்ளது). கட்டுரை முழுமைக்கும் சிங்கையின் புறச்சூழலை கவிஞர்கள் பாடுவதாக குறிப்பிடும் முனைவர் (இனி முனைவர் என்றே அழைப்போம்) இத்துணை காலத்தில் அகம் என்ன என்று அவர்களுக்கு ஒரு வகுப்பு எடுத்திருந்தால் ஒரு வேளை கவிஞர்கள் “அகம்பிரம்மாஸ்மி” என கவிதை புனைந்திருக்கலாம்.

நீ வாழும் காலத்தில் என்ன செய்தாய் அதுதான் முக்கியம். அது அவரவர் மனதினை பொறுத்தது. அப்படி சுப்பிரமணியம் ரமேஷ் சிங்கப்பூரில் இருந்த காலத்தில் வாசகர் வட்டத்தை சிறப்பாகவே முன்னெடுத்துச்சென்றார்.  சுப்பிரமணியம் ரமேஷ் (மானஸாஜென்) கண்டடைந்த ‘நேற்றிருந்தோம்’ (நேற்றிருந்தோம் – சிங்கப்பூரின் 60-களை மீள்பார்வை செய்யும் முகமான 60-களில் வாழ்ந்தவர்களின் அனுபவப் பகிர்வு- இது சிங்கப்பூருக்கான ஒரு ஆத்மார்த்தமான தேடல்னு – ஓ இது கவிதை அல்லவல்ல அல்லவல்லவா)

‘நேற்றிருந்தோம்’ இன்று கட்டுரை தொகுப்பாக மலர வாசகர் வட்டத்தின் பொழுதுகளை களவாடிக்கொண்டிருப்பதை அங்கு மௌனமாக வந்து செல்லும் வாசகர்கள் அறிவார்கள். மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அவர்கள் சமீபத்திய வாசகர் வட்டத்தில் (மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடனான சந்திப்பில்) சுப்பிரமணியம் ரமேஷ் வந்தபின்பு கட்டுரைகளாக வாசகர் வட்ட கருத்துகள் பதிவு செய்யப்பட்டது என்பதை குறிப்பிட்டிருந்தார். அதற்கான சாட்சியாக இன்றும் சில பதிவுகளை வாசகர் வட்டவலைபதிவில் பார்க்கலாம்.  http://vasagarvattam.blogspot.com

லதா சிங்கப்பூரின் அகத்தை படைக்கிறார் என்பதற்காக சுப்பிரமணியம் ரமேஷ்-ம் படைக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது அல்லது நிர்பந்திப்பது எந்த அடிப்படையில் சரியான ஒன்று என்று எனக்கு தெரியவில்லை. மேலும் அது உங்களின் கவிதை குறித்த ரசனையின் மொன்னை தனத்தை அப்பட்டமாக காட்டுகிறது. சுப்பிரமணியம் ரமேஷ்-ன் கவிதை குறித்தும் நீங்கள் பேசாதது மொன்னை தனத்தை பலமாக ஆமோதிப்பதாகவே வாசகர்களுக்கு தோன்றலாம்.

லதா கவிதைகளின் மீதான சுப்பிரமணியம் ரமேஷ்-ன்  விமர்சனம் அவசியமானது, சுப்பிரமணியம் ரமேஷ் பற்றிய இன்னும் சில உங்களின் காழ்ப்பு வரிகள் பாவம் அவரிடம் எதையோ எதிர்பார்த்து நீங்கள் ஏமாந்த கதையை வெளிப்படுத்துவதாக படிக்கும் சிலர் நினைக்கக்கூடும். (யு- டீயூப் இணைப்பினை கொடுத்திருந்தால் வல்லினம் ஆசிரியர்கள் புகைப்படத்தை தேடி கட்டுரைக்கு சான்றாக வெளியிட்டிருப்பார்கள் – இப்போது கூட நீங்கள் அனுப்பிவைக்கலாம் )

இந்த கட்டுரைக்கு துளியும் சம்பந்தம் இல்லாதது ஜெயந்தி சங்கர் பற்றிய பதிவுகள்.

அவரின் மொழி பெயர்ப்பு கவிதைகள் பற்றி ஏதேனும் முன்வைத்திருந்தால் ஜெயந்திக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும் .

மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் அவரது எதிர்வினையில் குறிப்பிட்டது போல நீங்களும் அதைத்தானே செய்திருக்கிறீர்கள். என்ன ‘மௌனம்’ (மலேசியா) இதழில் வெளிவந்த கட்டுரையில் கொஞ்சம் பிட் சேர்த்து ‘வல்லினம்’  இதழுக்கு அனுப்பியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் பிட் சேர்த்து ஏதேனும் இதழுக்கு அனுப்பலாம். பாவம் ‘வல்லினம்’ ஆசிரியர் குழவினர் மௌனத்தை வாசித்திருப்பின் இந்த கட்டுரை தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது மாற்று கட்டுரையாக வந்திருக்கலாம் . (வாசிக்காதது அவர்களின் உன்னதத்தை குறிக்கிறது)

மாதங்கியின் கவிதை ஒன்றை முனைவர் ‘சொல்வனம்’ எனும் இணைய இதழில்  தேடி கட்டுரையில் பதிவிட்டிருப்பதன் காரணத்தை அதற்கான கவிதா விமர்சனத்தில் வாசகர்கள் கண்டுணரலாம். பிற கவிதைகள் பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் இருந்து குறிப்பிட இந்த கவிஞரின் கவிதையை மட்டும் இணையத்தில் இருந்து எடுத்து கையாண்டிருப்பதன் காரணத்தை வாசக எண்ணங்களுக்குள் வகைப்படுத்தியிருப்பர்.

ஒரு நிகழ்வில் முனைவர் அவர்களுக்கு சிங்கப்பூரின் சுப்புடு என்று யாரோ பட்டம் கொடுத்தது ஞாபகத்திற்கு வருகிறது. அவரது கவிதையையும் முனைவர் அவர்கள் விமர்சித்திருப்பின்  மோதிரக் கையில் குட்டுபட்டவராக அந்தக் கவிஞர் மோட்சம் அடையலாம்.

முனைவரின் வசதிக்கு (மறதிக்கு) பல கவிஞர்களை இந்த கட்டுரையில் காணவில்லை. ஒரு வேளை ‘மௌனம்’ இதழின் பக்க பற்றாக்குறையை வல்லினம் இதழில் ஒப்பேற்றியது போல வல்லினம் இதழின் பற்றாக்குறைக்கு வேறு ஏதேனும் இதழ்களை நாடலாம் அல்லது முனைவரே 90க்கு பிறகு சிங்கப்பூரில் கவிதைச் சூழல் என்று ஒரு புத்தகம் போடலாம் (அதை படித்து நான் அறிந்த சிங்கப்பூர் இலக்கியம் என்று வெங்கட் சுவாமிநாதன் ஒரு பத்திக் கட்டுரையும் எழுதலாம்)

பல்வேறு கவிஞர்கள் பற்றி குறிப்பிடும் போது அவர்களின் கவிதை குறித்து பேசும் முனைவர் மா.அன்பழகன் அவர்களை பற்றி குறிப்பிடும் போது எங்கும் அவரின் கவிதையை முன்வைத்து பேசாததை மா.அன்பழகனார் ‘வல்லினம்’ வாசித்திருப்பின் வருந்தியிருக்கலாம் (மோ.கு படவில்லையே என்று). நீங்கள் அவரின் எந்த ஒரு கவிதையையும் வாசிக்கவில்லை என்பதாகவே வாகர்கள் நினைக்ககூடும்.

இங்கு பல ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களின் கவிதைகள் சிங்கப்பூரின் புறத்தையும் சிங்கப்பூரை துதி பாடுவதாக குறிப்பிடும் முனைவர் என்றேனும் ஒ.அ.ஊ-ளின் வாழ்வியலை (முனைவர் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தாலும் ) (பணிக் காலம் தங்கும் இடம் என ———-) கொஞ்சம் ஆராய்ந்து இருப்பின் கவனமும் கருத்தும் மாறியிருக்கலாம் (அங்காடித் தெருவிற்கு பதிவு எழுதிய எழுத்தாளர்களின் கவனத்திற்கு)

பெரும்பாலான ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களின்  (ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் – இப்படியும் அழைக்கலாம்) பணிக்கால அளவு குறைந்த பட்சம் 10 மணிநேரம் பலர் ஞாயிற்றுக்கிழமை உட்பட வேலை செய்கிறார்கள். நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பலர் அன்று விடுப்பு எடுத்தோ அல்லது கூடுதல் பணி நேரத்தை துண்டித்துவிட்டோதான் (கூடுதலாக ஊதியம் கிடைக்கும்  நேரம்) இத்தகைய நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். அது அவர்களின் ஆர்வம் விருப்பம் (வேறு ஏதேனும் ஆர்வம் இவர்களுக்கு இருந்திருந்தால் முனைவர் அவர்களுக்கு இந்த பிரச்சினை வந்திருக்காது)

சகோதரிகளின் திருமணத்தை, மழலை பேச்சை, மனைவியின் முத்தத்தை, உறவுகளின் மரணத்தை அதன் மீது எழும் ஒப்பாரியை  தொலைபேசியில் கேட்டு இன்ப துன்பமடையும் ஒ.அ.ஊ-களுக்கு அவர்களின் ஊர் பற்றிய நினைவுகள்தான் அதிகம் இருக்கும். அதன் மீதான எழுத்துகள்தான் அதீதமாக வரும்  (மேலும் கவிதை எழுதும் எல்லோரிடத்திலும் அகம் புறம் என்று எதிர்பார்ப்பது முனைவருக்கு நியாயமானதே)

அவர்களின் சிங்கப்பூர் பற்றிய துதியை பக்தி என்று மாற்றிச்சொல்லலாம். எத்தனை பேருக்கு இங்கிருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி கிடைத்த வாய்ப்பால் தனது வாழ்வினை உறவுகளின் வாழ்வினை பொருளாதார அடிப்படையில் மேம்பட காரணமாக இருந்த சிங்கப்பூரை அவர்கள் புகழ்ந்து பாடுவதை உப்பிட்டவரை உள்ளளவு நினை என்றும் சொல்லலாம். (துதி பாடுவதால் அவர்களின் ஊதியத்தில் ஒரு வெள்ளி கூடியதாக எனக்கு தெரியவில்லை)

தங்கமுனை விருது பற்றிய விபரங்கள் பிழையானவையாக இருக்கின்றன. கவிமாலை இலக்கிய வகுப்பால் எனது எழுத்துப்பிழை சரியடைந்ததுபோல ( முனைவரின் கற்பனா சக்கதிக்கு அக்மார் வணக்கம்) ஞாபகசக்தி அதிகம் உள்ள புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்து பேசும் இராம.கண்ணபிரான் போன்றவர்களிடம் கேட்டுப்பெற்றிருப்பின் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

பெயர் காரணத்திற்கெல்லாம் முரணை கண்டுபிடித்திருப்பது முனைவர் அவர்களின் பலம் என்று நீங்கள் (வாசகர்கள்) நினைத்தால் அதுதான் முனைவர் அவர்களின் முரண் அடிப்படையிலான எல்லா முரண் விமர்சனத்திற்கும் கிடைத்த வெற்றி.

ஒரு புத்தகம் வெளியிடும் போது உறவுகளை வைத்து வெளியிடுவது தவறான செயல் என்று உங்கள் கருத்தின் வாயிலாக அறிந்துகொண்டேன்.

பீஷான் கலா, கோட்டை பிரபு, காளிமுத்து பாரத் என முனைவர் அலசி ஆராய்ந்து தேடி கண்டடைந்ததை முனைவர் அவர்களின் விமர்சனம் குறித்த அக்கறை என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். (நான் அப்படித்தான் எடுத்துக்கொண்டேன்)

கடந்த ஆறு ஏழு மாதங்களாக கவிமாலையில் இரவு உணவு (சுண்டக் காய்ச்சிய பாலுடன்) வழங்குவதை முனைவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருப்பின் குறிப்பிட்டிருப்பார். ஏன் என்றால் என் போன்று இரவு உணவிற்காக வரும் கவிஞர்கள் என்று 3 முதல் நான்கு நபர்களை அடையாளப்படுத்தலாம்.

முனைவர் அவர்கள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் சிங்கப்பூரில் கவிதைகள் எழுதப்படவேண்டும் கவிதைத்துறை வளர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் எழுதப்பட்ட விமர்சனம் என்ற நோக்கில் வாசித்தால் (அடிக்கடி இதனை நினைத்து கொண்டே வாசித்தால்) வாசித்து முடித்தபின் ஆமாஞ்சாமி சொல்லத் தோன்றும்.

அப்படித்தான் இருக்கிறது கவிதை குறித்த, கவிதைக்கான சூழல் குறித்த, கவிஞர்களின் சூழல் குறித்த, கவிதை பிறப்பதற்கான சூழல் குறித்த முனைவர் அவர்களின் உயரிய தரிசனப் பார்வை. இதை நீங்கள் உயரிய விமர்சனமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். கவிதை குறித்த காழ்ப்பு எல்லாம் முனைவர் அவர்களுக்கு கிடையாது என்பதை கட்டுரையை வாசித்து முடித்தவுடன் நீங்களும் அறிந்திருக்கலாம். வேறு ஏதோ காழ்ப்பு மட்டுமே முனைவரின் கட்டுரையில் தெரிவதாக நினைத்தால் அதை மறந்துவிட்டு கவிஞர்கள் முனைவர் அவர்களின் உச்ச பட்ச கவிதா விமர்சனத்தை அப்படியே ஏற்று உங்களை செழுமை படுத்திக்கொள்ளுங்கள். (இந்த விமர்சனக்கட்டுரை வாயிலாக மோ.கு பெற்ற அத்துனை கவிஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்)

2006 2007 ல் வெளிவந்த தொகுப்புகளை வைத்து நிறைய பேசியிருக்கிறீர்கள். இன்று (2010) வரை அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் அல்லது என்ன செய்திருக்கிறார்கள்? அன்று வந்ததே அதே நிலா இன்றும் அதே நிலாவாகத்தான் இருக்கிறார்களா என்றும் ஆராய்ந்து விமர்சித்திருப்பின் உங்களின் கட்டுரைக்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கும்.

நானும் நானும் கவிதை தொகுப்பு குறித்த உங்களின் வித்தியாசமான ரசனையை நானும் வித்தியாசமாகவே ரசித்தேன்.

உங்கள் கட்டுரையில் உள்ள எழுத்துப்பிழைகள் குறிப்பாக கவிஞர்களின் பெயர் பிழைகள் நீங்கள் சரியாக எழுதிக்கொடுத்து சரியாக தட்டச்சு செய்தபின் யூனிக்கோடு எழுத்துருவாக மாற்றும்போது பட்ட திரிபு என்றே நினைத்துக்கொண்டேன்.

கவித்துவ வறட்சினு குறிப்பிட்டிருந்திங்க – அதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக குறிப்பிட்டிருக்கலாம்

ஒரு வேளை தலைப்பு கொடுக்காமல் கவிதை எழுத சொன்னால் கவித்துவ வறட்சி மாறுமா என்று யோசிக்க சொன்னீர்கள் – இரு கவிதை அமைப்புகளும் யோசிக்க வேண்டிய ஒன்றுதான்.

அதே நேரத்தில் மாதத்திற்கு இரண்டு தலைப்புகளுக்கு (இரு கவிதை அமைப்புகளால்) கவிதை எழுதும் கவிஞர்கள் அவர்களின் பிற கவிதைகளுக்கும் யாரேனும் தலைப்பு கொடுக்க கவிதை எழுதுகிறார்களா என்று யோசிக்க வேண்டும் எத்தனை கவிஞர்கள் அங்கு தலைப்பிற்கு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கவிதை அமைப்புகளில் கவிதை எழுதுவதற்கான பயிற்சியை யாரும் கொடுத்ததாக நான் சென்றவரை எனக்கு தெரியவில்லை. – இதுவும் இரு கவிதை அமைப்புகள் கவனிக்க வேண்டிய அம்சம் (என் நண்பன்  சொன்னான் பயிற்சி இருந்தா பக்கோடா கூட பண்ணலாம்னு)

கவிதை குறித்த, கவிதை வளர்ச்சி குறித்த உயரிய அக்கறை உள்ள நீங்கள் இன்னும் கூடுதல் அக்கறையுடன் இரு அமைப்பிற்கும் வருகை புரிந்து கவிதை பட்டறை வகுப்புகளை நடத்தலாம் (கண்டிப்பாக முதல் இருக்கையில் என்னை எதிர் பார்க்கலாம்)

என்னைப் பற்றிய குழப்பங்களை மதிப்பிட்டமைக்காகவும் எனது கவிதை குறித்த உங்களின் புரிதலுக்கும் மிக்க நன்றிகள்.

சுயநலக்காரர்களுக்கு சூனியம் வைக்க தமிழ் கவிதைமீது காதலுடைய உங்களைப் போன்றவர்கள்தான் கவிதையை காக்க சரியானவர்கள். மாதம் ஒரு கவிஞரின் கவிதைகள் என தமிழகத்தின் —–தா (பேரை சொன்னா நான் பட்டம் கொடுத்து விட்டதாக யாரேனும் பின்னொருநாள் ஞாபகப்படுத்தி பதிவிடலாம்) போன்று வல்லினம் இதழில் அடையாளப்படுத்தலாம். அப்போது சிங்கப்பூரின் சரியான கவிதையை சரியான கவிஞர்களை உலகத்து தமிழர்கள் அடையாளம் காண்பது எளிதாக அமையலாம்.

விமர்சனக் கட்டுiரையை படித்து முடித்தபோது நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை- யும்,  நுணலும் தன் வாயால் கெடுவது போல என்பதும் சரியென்றே என் மனதிற்கு பட்டது.

வல்லினம் இதழ் மலினமான சர்ச்சைகளை முன்னிறுத்தி கூடுதல் வாசகர்களை சென்றடைய வேண்டிய அவசியம் இல்லை என்று தான் நேற்று வரை நினைத்திருந்தேன். இன்று இருப்பதால் அந்த நினைப்பை மாற்றிக் கொண்டேன். (பூங்குழலி, மஹாத்மன் பா.சிவம் போன்றவர்களின் படைப்புகளுக்காக வாசிப்பு தொடரும்)

சிங்கப்பூர் கவிதைச் சூழல் 90க்கு பிறகு என்ற தங்களின் காத்திரமான விமர்சனத்தை படித்த பலரும் தாங்கள் நேற்று குடியேறி இன்று சிங்கப்பூர்வாசியாக (குடியுரிமை) மாறியதை தெரிவித்து இருந்தால் சிங்கப்பூர் இலக்கியம் சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சியின் மேல் நீங்கள் கொண்டுள்ள உயரிய அக்கறையை பலரும் பாரட்டியிருப்பார்கள். அப்படி நீங்கள் நேற்று குடியேறி இன்று சிங்கப்பூர்வாசியானதை குறிப்பிடாததது நீங்கள் பாராட்டுக்களை விரும்பாதவர் என்பதையே காட்டுகிறது.

விமர்சனம் என்பது எழுத்தாளனை கவிஞனை உருவாக்க மறு உருவாக்கம் செய்யவேண்டும் இது முனைவர்-க்கான வரி கிடையாது அவர் அறிந்த ஒன்று என்பதால் மேற்சொன்ன வரிகள் கோ.பி கா.பா பீ.க நண்பர்களுக்கு.

விக்ரமாதித்யன் கருத்துப்படி நீங்கள் செய்த இந்த அருமையுடைய செயலை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கும் போது 2015 அல்லது 2020ற்கு பிறகான சிங்கப்பூர் கவிதைச் சூழல் என்று ஆய்வு செய்யும் போது விமர்சனம் செய்யும்போது மாற்றங்களுக்கு வித்திட்ட, மாற்றுக் கவிதைகளுக்கு உங்களின் பெயரை அடையாளப்படுத்தும் படியான கவிஞர்கள் சிலர் உருவாகலாம்.

ஆக அருமையுடைய செயலை தொடர்ச்சியாக செய்யுங்கள் அடியேனும் அவ்வப்போது எழுதும் கவிதைகள் குறித்து உங்களின் முரண் பார்வைகள் மூலமாகவும் ஆத்மார்த்தமான தேடல் மூலமாகவும் எனக்கான கவிதை வெளியை மேம்படுத்திக் கொள்கிறேன்.

பாண்டித்துரை

pandiidurai@yahoo.com

நன்றி: வல்லினம்