நெருடல்

அவர்களுக்காக
என்ன செய்துவிட்டோம்
பெரிதாய்

அவர்களுக்காக
நீலிக்கண்ணீர் வடித்தோம்
அணி பிரித்து அறிக்கை தயாரித்தோம்
இரங்கல் கூட்டங்களில் முன் நின்றோம்
சில கவிதைகளைச் செய்தோம்
அதிசயங்கள் நடந்திடும் என பேசிக்கொண்டோம்
ஒருவன் தீயிட்டுக் கொண்டான்

அவர்களுக்காக
என்ன செய்துவிட்டோம்
பெரிதாய்

அவர்களை
குவியும் பிணங்களாக்கினோம்
வன்புணர்ந்ததை வாசித்தோம்
தினச் செய்தியில் ஒன்றாக்கினோம்
மௌனமாய் வேடிக்கை பார்த்தோம்

அவர்களுக்காக
என்ன செய்துவிட்டோம்
பெரிதாய்

அவர்கள்
உறவுகள் உயிர்த்து போய்கொண்டிருக்க
மொழி இழந்து போய்க்கொண்டிருக்க
இனம் அழிந்து போய்க்கொண்டிருக்க
நாடற்று போய்க்கொண்டிருக்க

அவர்களுக்காக
என்ன செய்துவிட்டோம்
பெரிதாய்

அவர்களில்
யாரேனும் மிச்சமிருக்க
அவர்களின்
சடலங்களை எண்ணத் தொடங்கி
அவர்களின் அவர்களுக்காய்
காத்திருக்கத் தொடங்கிவிட்டோம்

அவர்களுக்கா
என்ன செய்துவிட்டோம்
பெரிதாய்

இன்னும் ஒரு
கவிதை எழுதுவதை விட?

© பாண்டித்துரை     pandiidurai@yahoo.com

வாழ்வில் சந்தோசத்தை தேடும் மனிதர் ஷான்

நண்பர்கள் பலர் நேசிக்கும் மனிதர் அப்துல்காதர் ஷாநவாஸ், இன்றோடு ஒருமுட்டை பரோட்டாவையும் சாதா பரோட்டாவையும் ஒரு முடிவுக்குகொண்டு வந்துவிட்டார்.

ஒரு முட்டை பரோட்டா வளர்ந்த கதையையும், வளர்த்த கதையையும் என்னுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். உயிரோசையின் ஆரம்பகால பத்திகள் நண்பர் பாலுமணிமாறனின் உந்துததால் உயிரோசையில் வெளிவருவதற்கு ஒரு மாதங்களுக்கு முன் எழுதி முடிக்கப்பட்டவை. பாலு ஆரம்பிச்சு வைக்கவில்லை என்றால் இந்த வேகம் எனக்கு வந்திருக்காது பாண்டி அப்படித்தானே என்று சில நேரங்களில்
சிறுவனாக மாறிவிடுவார்.

 பெரும்பாலான ஞாயிற்றுகிழமைகளில் மாலைநேரங்களில் ஷான் பறிமாறிய  பரோட்டாக்களை ருசி பார்த்திருக்கிறேன். ஒருமுட்டை பரோட்டா, சாதா பரோட்டோவின் ருசி பற்றி அவ்வவ்போது நண்பர்கள் பகிர்ந்துகொண்டதை என்னிடத்தில் சொல்லிக்கொண்டே நீங்க தான் பாண்டி ருசி பற்றி இன்னும் சரிவர சொல்லவில்லை என்று கடித்துக்கொள்வார். நமக்கு சாப்பாடு முக்கியம். பல ஞாயிற்றுகிழமைகளில் சாப்பிடுங்க பாண்டி என்று ஷானும் வாங்க சாப்பிடுங்க என்று திருமதி ஷாநவாசும் அழைப்பதுண்டு. சாப்பிட்டுவிட்டேன், இல்ல அப்புறம் சாப்பிடுகிறேன் என்று நான் வாய் தொறந்தது கிடையாது. எப்போதும் எல்லா நேரங்களில் சாப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது என்பதை அறிந்த நண்பர் ஷாநவாஸ்.

பரபரப்பான தொழிலில் ஷான்க்கு கிடைப்பது சொற்பமான நேரம். மாலை 3 மணிவாக்கில் ஷான்-ன் பரோட்டாக்கடைக்கு சென்றால் ஷான் எழுதிக்கொண்டோ படித்துக்கொண்டோ இருப்பார். அருகே குறிப்பு புத்தகம். திறந்து பார்த்தால் தேதி வாரியாக அவர் படித்தவற்றில் முக்கியமான குறிப்புகளை தொகுத்து வைத்திருப்பார். ஒரு முட்டை பரோட்டா தொடர் பத்தியில் ஷான் குறிப்பிட்ட பல குறிப்புகள் சிலரை ஆச்சர்யபடுத்தியிருக்கும். அதற்கான மெனக்கெடல் நூலகம், இணையம், நண்பர்கள் என்ற தேடலே…. படிப்பதும் அதனை குறிப்பெடுப்பதும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது

 ஷான் அவரது வலைதளத்திலும் சிங்கப்பூர் இணைய இதழான தங்கமீனிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். இருப்பினும் உயிரோசையின் இந்த தொடர் மூலமாக ஷான் ஒரு புதிய பயணத்தை ஆரம்பதித்திருக்கிறார். இலக்கியம் ஆகட்டும் தொழிலாகட்டும் ஆரம்பிப்பது சுலமான விசயம் இல்லை அப்படி அழகுற ஆரம்பித்த ஒன்றை இன்னும் செப்பனிட்டு செல்வது கடினமான ஒன்று. அடுத்த சில ஆண்டுகளில் ஷான் எழுதுவதை வைத்துத்தான் மதிப்பிட முடியும்.

 ஷான்னை உற்சாகபடுத்த கூடிய, விமர்சனபூர்வமான மதிப்பிட கூடிய சில நண்பர்களை உயிரோசை இணைய இதழ் அவருக்கு தந்திருக்கிறது. அதில் சிலர் அந்த அக்கறையை எடுத்துக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். ஏன் என்றால் நான் அறிந்த அவர்கள் எழுதுவதை விட நன்றாக எழுதக்கூடிய நண்பர்களை இறுக அணைத்து முத்தமிடக்கூடியவர்கள்.

என்னை பல நேரங்களில் சோகமாக அல்லது ஏதோ ஒன்றை தொலைத்தவனாக அல்லது கனவில் நடப்பவனாக நண்பர்கள் பார்த்ததுண்டு, ஆனால் ஷானவாஸை சிரித்த முகமாக மட்டும்தான் நீங்கள் பார்த்திருக்க முடியும்.

நான் பெயர் சொல்லி அழைக்ககூடிய முதிர்ந்த ஒரே நண்பர். உயிரோசையின் இந்த தொடர் உயிர்மை பதிப்பகத்தில் வெளிவருவது குறித்த அறிவிப்பு எனக்கு கூடுதல் மகிழ்சியை தந்துள்ளது அதுவும் 2011 புத்தககண்காட்சில் கூடுதல் கூடுதல் கூடுதலாகத்தானே இருக்கும்.

 சிங்கப்பூர் எழுத்தாளர்களில் இந்திரஜித்தை போன்று இன்று ஷாநவாஸ்-க்கும் பரவலான எழுத்தாளர்கள் வாசகர்களை சென்றடைந்துள்ளார். உயிரோசை & உயிர்மை எடுத்துச்சென்றுள்ளது

பரோட்டோ பற்றி எழுதியும் சந்தோசத்தை தேடலாம் என்பதற்கு ஷான் முன்மாதிரி.

ஒரு கவிதை (தங்கமீன் இணைய இதழில்)

குடியேறிய முதல்நாளில் இருந்து
உங்களுடைய பணி ஆரம்பமாகிறது
உன்னதமான ஒன்றைப் பற்றி
இளையர்களோடு உரையாடுகிறீர்கள்
ரகசிய சொல்லாடல்களைக் கையகப்படுத்த
சதுரங்க காய்களை நகர்த்தி
குட்டப்பனின் மனநிலையைப் பிரதிபலித்து
எல்லோராலும் நம்பப்படுகிறீர்கள்

உங்களைச் சந்தித்த பின்
அவரோடும் இவரோடும் இவர்?
எனும் கேள்வியைத் தோற்றுவித்து
நித்ய புன்னைகையுடன் வலம் வருகிறீர்கள்
அப்போதைக்கெல்லாம் உங்களின்
உட்சூம்பிய ஆதங்கம் தெரியவில்லை

ஒருநாள்
சூன்ய வெளியில் கல் எறியப்படுகிறது
பிறகொருநாள் காறி உமிழப்படுகிறது
மற்றொரு நாள் வசைச் சொல் பிரயோகிக்கப்படுகிறது
சலனமற்ற ஒருநாளில் மலத்தை துடைத்து எறிகிறார்கள்

இதன் பின்னணியில்
நீங்கள் இருக்கிறீர்கள் என்று நம்பப்பட்டு
அத்துனைக் கெட்டவார்த்தைகளும்
உங்களை நோக்கிப் பிரயோகிக்கப்படுகிறது
எப்போதும் போலவே
உங்களின் இதயம் துடித்துக் கொண்டிருக்க
லெட்சுமி கடாட்சமாய்
அவள் தோன்றப்போகும் கனவொன்றில்
நித்திய புன்னகையுடன் உறங்கப்போகிறீர்கள்.

நன்றி

http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=131