Monthly Archives: நவம்பர் 2014
காணாமல் போன சுமதி
திண்டுக்கல் ரோட்டிலிருந்து ஊராட்சிமன்ற சாலைக்கு திரும்பும் முக்கை கடக்கையில்
சுமதியின் ஞாபகம் வந்து விடுகிறது.
1985களில் சுமதி வாடகைக்கு விடும் சைக்கிள் கடையை தொடங்கினாள்.
பின்னொருநாளில் அ.காளாப்பூரின் ஆகப்பெரிய சைக்கிள்கடையாக மாற்றிவிடுவாள் என்று நம்பியிருந்தேன்.
தினச்செய்திகளை வாசிப்பதற்கான இடமாக சுமதியின் சைக்கிள் கடை இருந்தது
அழகிய யுவதிகளின் சொக்கட்டான் விளையாட்டும் தாயம் உருட்டுவதற்கும் சுமதியின் சைக்கிள் கடையை யே விரும்பினர்
சுமதி அழகிய யுவதிகளின் அழகை ஒருபோதும் வர்ணிக்க தயங்கியதில்லை
சுமதி ஆணாகப் பிறந்திருந்தாள் எல்லாப் பெண்களு ம் காதலித்திருக்ககூடும்
எப்போதும் கேளிப்பேச்சிற்கும், குதூகலத்திற்குமான இடமாவே சுமதியின் சைக்கிள் கடை இருந்தது
சுமதியின் சைக்கிள்கள் தாவணியில் வரும் யுவதிகளைபோலவே எப்போதும் இருந்ததுண்டு
சைக்கிள்கடையை புதுப்பித்து விரிவாக்கத்திற்காக வங்கியை அணுகியிருப்பதாக ஒருமுறை கேள்விப்பட்டேன்
பணம் சம்பாதிப்பற்கான வேட்கை சுமதியிடம் இருந்தது
அது மாந்ரீகங்களை எங்கோ கற்றுக்கொள்ள சுமதியை நகர்த்தியது
தனது சைக்கிள் கடையில் குறி சொல்லத் தொடங்கினாள்
வேற்று ஊர் சனங்களுக்கு சுமதியின் சொல்வாக்கு பலிப்பதாகச் சொன்னார்கள்
பின்னொருநாளில் சிங்கப்பூருக்கு சில நாட்களே பணிப்பெண்ணாக சென்றாள்
திரும்பி வந்தாள். சிலநாட்கள் பணிப்பெண்கதையை சொல்லக்கேட்டோம்
மறுபடியும் சைக்கிள் கடையை புதுப்பிப்பாள் என்று நம்பிக்கொண்டிருக்கையில்
அதே இடத்தில் டீக்-கடையை ஆரம்பித்தாள்
சில காலத்திற்கு பின் சுமதி மாயமாகிப்போனாள்
கோயம்பத்தூதரில் சுமதி பணிபுரிந்துகொண்டிருப்பதாக சிலர் சொல்ல கேள்விப்பட்டேன்
சுமதி 1985 தொடங்கி ஆண்களுக்கு இணையாக தன்னை சிறுதொழில் பிணைத்து முன்வரநினைத்தவள்
சிறுதொழில் முனைவராக வரநினைத்த சுமதியை கண்டுபிடிப்பது அத்துணை எளிதல்ல
திண்டுக்கல் ரோட்டிலிருந்து ஊராட்சிமன்ற சாலைக்கு திரும்பும் முக்கை கடக்கையில்
சுமதியின் ஞாபகம் வந்து விடுகிறது.
சுமதிக்கு இன்று நான் இருக்கிறேன் என்று சொல்லவேண்டும்