ஒரு ரயில்/பேருந்து பயண நேரத்தில் படித்து முடித்துவிடக்கூடிய கதைத்தொகுதி ரமேஷ் ரக்சனின் ’16’. சொல்லப்பட்ட 16 கதைகளும் 3-ல் இருந்து 4-பக்கங்களுக்குள் இருப்பதால் ஒரே வாசிப்பில் வாசித்து விடலாம், ஆனால் ஒவ்வொரு கதைகளை படித்து முடித்து அடுத்த சிறுகதைக்குள் உள்நுழைய நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்படுகிறது.
கிராமம் மற்றும் நகரம் என இரு வேறுபட்ட பரப்புகளில் நிகழும் சிறுகதைகள், எதார்த்தமாக அந்த வட்டார பேச்சுமொழியில் இருக்கிறது. விரிவான வர்ணனைகள் இல்லாமல் தொடங்கும் கதைகள், பதின்மவயதினர் கடந்து செல்லும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி சொல்லப்படும் எல்லாக் கதைகளும், ஆரம்ப பத்தியிலிருந்து கதையின் முடிவை நோக்கி நகரும் போது வாழ்தலின் எதிர் துருவத்தை சென்றடைகிறது. ஒவ்வொரு கதையின் முடிவும் இந்த சிறுகதை தொகுப்பில் ‘சொல்’ எனும் சிறுகதையின் இறுதியில் சொல்லப்பட்டுள்ள ‘ “தேவ்டியாவுள்ள…… எங்க அம்மய பேசினா கேட்டுட்டே இருக்கனுமா…” சில்லுகளாகியிருந்தன ஒரு பீர் பாட்டில்’, அப்படி நம் மண்டையிலும் ஒரு பியர் பாட்டில் கொண்டு அடிக்கும் வலியை ஏற்படுத்தும்.
பதின்ம வயதில் ஆண் மற்றும் பெண் இருவரும் வேலையிடத்தில் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்தம் காமம், தனி மனிதர்களின் உள்ளார்ந்த பிரச்சினைகள், நம்மை சுற்றிய சமூகம் எழுப்பும் கேள்விகள், சிறு குழந்தைகள் அறிந்தும், அறியாமலும் உயிர் நரம்மை நீவி தொடுக்கும் கேள்விகள், மனம் பிறழ்ந்த சிறுவர் சிறுமியின் வாழ்வியல் தரிசனங்கள் என்று சிறுவர், சிறுமியர் வாழ்வியலை பற்றி எழுதப்பட்ட இந்த சிறுகதைகளை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். ஆனால் சுருங்கச் சொல்லி நம்மை சுற்றிலுமான சிதிலமடைந்த மனிதர்களின் வாழ்வியலை தொட்டுவிடுகிறார்.
16 என்று ஆரம்பித்த திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்றிருப்பதாக சமிபத்திய D16 நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார்கள், அதுபோல ரமேஸ் ரக்சனின் ’16’ சிறுகதை தொகுதியிலிருந்து எந்த ஒரு சிறுகதையையும் குறும்படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் முயற்சி செய்யலாம்.
ஆசிரியர்: ரமேஷ் ரக்சன்
பதிப்பு : 2014
வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்