இந்தநாளின் மகிழ்ச்சியாக
எதைச்சொல்லலாம்
கடலெனும் வசீகர மீன்தொட்டியை
முகநூல் ஞாபகப்படுத்திய தெய்வீகச்சிரிப்பை
மாண்டாய் உயிரியல் பூங்கா
கட்டுமானதளத்தில் இதுவும் தெய்வீகச்சிரிப்பைய்யா என்று
பல்லைக்காட்டி சிரித்துப்பார்த்ததை
தம்பி காளி கொடுத்த கூழை
இரண்டு முறுக்கொடு பொத்துக்குடித்ததை
முஸ்தபா சென்று என் எடைபார்த்ததை
திரும்புகையில் குடை மறந்த மழைக்கு நடந்துசென்றதை
மதி யாழிசையை வாழ்த்திப் பகிர்ந்த
யானைக்கால்களால் தலை இடறிய கவிதையை
இந்த நாளுக்கு இன்னும் பருகாத
தேநீரை நினைத்து பணிசெய்து தொலைந்துகொண்டிருப்பதை
இந்த நாளின் மகிழ்ச்சியாக
எதைச்சொல்லலாம்