யமுனா வீடு – 13

PC: ஓவியர் துரையெழிலன்

யமுனாவை நீங்கள் பார்த்திருக்கலாம்.

யமுனாவை மதுபானக்கூடத்தில் நடமானமாடக்கூடியவளாகவோ,
மெக்டொனால் மேசையை சுத்தம் செய்பவளாகவோ,
முஸ்தபாவில் காசாளராகவோ,
செல் பெட்ரோலை வாகனங்களுக்கு நிரப்பக்கூடியவளாகவோ,
சக அலுவலகப் பணியாளர்களில் ஒருவராகவோ,
கவிதைகள் படைக்கும் நிகழ்வொன்றிலோ பார்த்திருக்கலாம்…

யமுனா நம்மை நோக்கி சினேகமாகப் புன்னகைத்திருப்பாள்.
கவனமாக ஒதுக்கிக் கடந்து சென்ற ஒருவனாக நானோ நீங்களோ இருந்திருப்போம்..
அந்தப் புன்னகை சக மனிதனின் புன்னகை
அந்தப் புன்னகையில் மனிதனுக்கான அன்பே இருந்திருக்கும்

யமுனா தவிர்க்கப்பட வேண்டியவளல்லள்
யமுனா நேசிப்பினை யாசிப்பவளல்லள்

யமுனாவின் புன்னகையை அந்தத் தருணத்தில் புன்னகையால் எதிர்கொள்ளவே நினைத்திருப்பாள்

யமுனாவிற்காக புன்னகைப்பது அவ்வளவு ஒன்றும் கீழ்மையானதல்ல

யமுனாவை நாளை ஒரு எம்ஆர்டி பயணத்தில் நான் சந்திக்கலாம்

என்னுடைய முகம்நோக்கி வரும் அவளின் புன்னகையைக் கண்கள் கொண்டு எதிர்கொள்வேன்.

நீ நான் அவள் யமுனா

வேண்டியவளல்லள்
யாசிப்பவளல்லள்
கீழ்மையானதல்ல…

#பாண்டித்துரை

யமுனா வீடு – 12

சித்ராவிடமிருந்து நட்பழைப்பு
சின்னகுயில் சித்ராவா என்றேன்
இல்லை வெறும் சித்ரா என்றாள்
வெறும் சித்ராவாக யாருமே
இருக்க முடியாதே
ஏதாவது ஒரு சித்ராவாக நீ இருக்கக்கூடுமென்றேன் …
முன்பொருநாள்
நட்டு, போல்டுகளைக் கடையும்
நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப்
பிரிவில் பணிபுரிந்த சித்ரா
அப்படி என்ன சிறப்பு
இந்தத் சித்ராவினுள்
இருக்கக்கூடுமென்று
யோசிக்கத் தொடங்கினாள்.

யமுனா வீடு – 11

PC: ஓவியர் துரைஎழிலன்

பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி
முன்னங்கால்களை மேலுயர்த்தி
என் முகம்பார்த்துச் சப்தமிட்ட
அணிலின் மொழி
எனக்குப் புரியவில்லை எனினும்

வானவில் பண்பலையின் உயிர்ச் சொல்லில்
அய்யப்ப மாதவன் கவிதையை வாசித்துக்கொண்டிருக்க

கிண்கிணி ஓசையை எழுப்பிய ஆடு
மேய்ப்பனோடு நகர்ந்து கொண்டிருந்த
பெருநகர வாழ்வொன்றில்

யாருமற்ற வெளியை உருவாக்கும்
ஆட்டுக் குட்டியின் பாடலொன்றை
யமுனா முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்

பெருநகர வாழ்தலிலும்
யாருமற்று இருத்தலிலும்
அய்யப்ப மாதவன் வாசித்த கவிதை
யமுனாவின் வீட்டை நிரப்பிச் செல்கிறது

யமுனா
கவிதைக்கான ஓவியம் ஒன்றை
கரித்துண்டால் சுவற்றில்
கோடுகளாக்கி உறங்கிப்போகிறாள்

வீடு வருவோர்க்கு
சுவர்க் கோடுகள் புரிவதில்லை
அந்தக் கவிதையும்
யமுனாவும் அப்படித்தான்

நன்றி: கவிஞர் அய்யப்ப மாதவன்

நன்றி: க.உதயகுமார் ( கவிதையின் முதல் 5 வரிகளுக்கு)