வேண்டும் ஒரு அகராதி – இஸ்திகுனு வா!

SOUTHEASTASIA-0411-01

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி). இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும், அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன்,  என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா நெடுநாளாக என்னுள் உள்ளது.

 

 

சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை. இஸ்திகுனு-வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து, அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று, இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன் (அதற்கு பின்புதான் அவரது சொற்பொழிவே ஆரம்பமானது).

 

“வாழமீனுக்கு” எனும் திரைப்பாடல் வெளிவந்த தருணம் (அப்போதுதான் நான் //பேரன் லவ்லி// போட்டு போட்டு பேராசை// உன்னை விட// அழகாய் இருப்பதாக// என்று எழுத ஆரம்பித்த தருணம்) ஒரே பாடலில் பிரபல்யம் அடைந்து விட்டானே என்ற காழ்ப்புணர்சியில், இது எல்லாம் ஒரு இசையா என்று சில குரல்கள் சினிமாத் துறைக்குள் ஒலித்தது. இதில் தன்னை ஆச்சாரங்களுக்குள் அடக்கிக்கொண்டு இசைஅமைக்கும் இசையமைப்பாளரும் ஒருவர் (இந்த செய்தி நான் பத்திரப்படுத்த தவறிவிட்ட (இப்படி பல செய்திகள்) ஒரு பத்திரிக்கையில் வெளிவந்தது). “சித்திரம் பேசுதடி” திரைப்படம் வெளிவந்த தருணம் சென்னையில் இருந்தேன். அங்கு ஒரு திரையரங்கில் இந்தப்படம் ஓடிக்கொண்டிருந்தது (திரையரங்க பெயர் ஞாபகத்தில் இல்லை) அந்த திரையங்க வாயிலில் ஒவ்வொரு காட்சியின் துவக்கத்திலும் வாழமீனுக்கு பாடலை பாடிய கானா உலகநாதனை அந்த திரைப்படத்தில் தோன்றிய உடையலங்காரத்தில் பார்க்கலாம். அவரை பாடச்சொல்லியும், ஆட்டோகிராப் கேட்டும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தனர், விசாரித்ததில் (யாரிடம் என்பது வேண்டாமே பின்பொருகட்டத்தில் தவறான தகவல் என்று தகவல் தந்தவரை மனதிற்குள் நான் பழிக்க நேரலாம் ) ஒவ்வொரு காட்சியின் துவக்கத்திலும்….  அப்படி ஒரு முறை காட்சிதர அவருக்கு ஐம்பதோ, நூறோ ரூபாய் அந்த திரையரங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது.

 

இந்த இடத்தில் சென்னை வேண்டாம் வேறு ஒரு மாவட்டத்தில் கர்நாடக சங்கீதம் முறையாக பயின்ற ஒருவரின் முதல் சினிமா பாடல் வாழமீன் தந்த போதையை விட அதிகமாக தரும்பட்சத்தில், அந்தப் பாடகரை இப்படி திரையரங்க வாயிலில் மோடி மஸ்தானாக நிறுத்தி வைப்பார்களா என்ற கேள்விக்குறி எழுகிறது.

 

 

இந்த நேரத்தில் திரையில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் புகழடைந்த ஓம்சக்தி பக்தர் இசையமைப்பாளர் தேவாவின் வெற்றிக்கு பின்னணனியில், கானா உலகநாதன் போன்ற பலர் இருந்திருக்கலாம் என்ற ஐயம் ஏற்படுகிறது இங்கு அவனின் ஏழ்மையும், அவன் சார்ந்த வர்க்கப் பின்னணியும் ஏகபோக சுரண்டலின் முதலாய் அவன் வாழ்க்கையின் முடிவாய்.

 

சரி மேற்சொன்ன விசயத்திற்கு வருவோம். குப்பத்து மொழி பற்றி சில தகவல்களை ஜெயமோகன் உள்ளிட்ட சில எழுத்தாளர்களும் சில நண்பர்களும் என்னுடன் பகிர்ந்துகொண்டிருந்தனர். அதில் எழுத்தாளர் ஜெயமோகன் இப்படி குறிப்பிட்டிருப்பார் “ஒலித் திரிபுகளும் மொழிக்குழப்பமும் கொண்ட பிராமண பாஷை குப்பத்து மொழி போன்று தாழ்வாக நினைக்கப்படுவதில்லை என்பதை கவனித்தால் சென்னைத் தமிழ் மீதான கிண்டல் என்பது அதைப்பேசும் மக்கள் மீதான கிண்டல் மட்டுமே என்பதை புரிந்துகொள்ளலாம்”.

 

ஆக அவா, இவாளுக்கு அர்த்தம் புரிந்துகொள்ள இங்கு எவாளுக்கும் அகராதி தேவைப்படுவதில்லை, அதனையும் கடந்த ஒருவித பரவச குழைவே அவர்களுக்குள் ஏற்படுகிறது. இஸ்திகுனு-வாவோ அகராதி வேண்டி இம்சிக்கிறது. இறை என்று சொல்லிக்கொண்டு முற்றும் துறந்ததாக முற்றும் உணர்ந்ததாக சுகபோகமாய் வாழும் மா மகரிஷிகளை நாம் ஒன்றும் சொல்லவியலாது, அவர்களை சுற்றி எப்போதும் சிலர் இருந்துகொண்டிருக்கும் வரை. இந்த நேரத்தில் பகவான் ரமணமகரிஷியை மனதில் நினைக்கத் தோன்றுகிறது

 ©pandiidurai@yahoo.com

நன்றி: அநங்கம் (மலேசிய இலக்கிய இதழ்)

“அநங்கம்”

 

2007ல் மலேசிய இதழான காதல்“” சிங்கப்பூரில் வாசகர் வட்டம் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று காதல் இதழ் வெளிவரவில்லை எனினும் காதல் இதழ் மலேசிய மகாணங்களில் சில விதைகளை தூவியிருக்கிறது. அதில் விட்ட முளையாகத்தான் அநங்கம் இதழினை பார்க்கத்தோன்றுகிறது. மலேசியாவின் கெடா மகாணம், குறிப்பாக சுங்கைப்பட்டாணிக்கு மலேசிய இலக்கியத்தில் தனிச்சிறப்பு இருக்கிறது. அங்கிருந்துதான் அநங்கம் அரும்பியுள்ளது.

 

சமீபகாலமாக தமிழக சிற்றிதழ்களில் தொடர்சியாக தனது படைப்புகளை அளித்து வரும் மலேசிய இளம் எழுத்தாளர் கே.பாலமுருகன், மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து அநங்கம் இதழினை வெளியிட்டுள்ளனர். தீவிர எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும், வாசகர்களையும் இணைப்பது என்ற எண்ணத்தில் இதுவரை இரு இதழ்கள் வெளிவந்துள்ளன.

 

இதன் தொடர்ச்சியான மூன்றாவது இதழ் சிங்கப்பூரில் வாசகர் வட்டம் நண்பர்களால் வரும் சனிக்கிழமை 14.03.2009 அன்று, மாலை 4.30 மணிக்கு ஆங் மோ கியோ நூலகத்தில் தக்காளி அறையில் (இரண்டாவது தளம்) நடைபெறுகிறது.

 

நிகழ்வில் இதழ் ஆசிரியர் கே.பாலமுருகன் மலேசிய மூத்த எழுத்தாளர்கள் சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான்  உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு அறிமுகம் மற்றும் கலந்துரையாடலாக நிகழ்வு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. முழுநாள் பயணத்தை இரண்டு மணிநேரத்தில் கடக்கவிருக்கும் மலேசிய எழுத்தாள நண்பர்களுக்காகவும், வாசகர்களையும் எழுத்தாளர்களையும் அடுத்த கட்ட நகர்விற்கு இட்டுச் செல்லும் வாசகர் வட்ட நண்பர்களின் முயற்சிக்காகவும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க…

 

அன்புடன் அழைப்பது

பாண்டித்துரை  82377006

 

anangam-1