இணையத்திலும், சஞ்சிகைகளிலும் மிகுதியாக காணக்கிடைப்பது திரைப்படங்களின் விமர்சனம்தான், நாமும் ஆர்வமாய் தேடிப்படிப்பது அத்தகைய விமர்சனங்களைத்தான். முகநூல் வந்த பிறகு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே விமர்சனத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமே அதிகருத்திருக்கிறது.
குறும் படங்கள், ஆவணப்படங்கள் பற்றிய விமர்சனத்தை இங்கு வெகுசிலரே, வலை பதிவுகளிலும் ஒரு சில சஞ்சிகைகளில் எழுதிவருகின்றனர். அப்படி எழுதப்படும் குறும்பட விமர்சனங்கள் புத்தகமாவது அரிது.
இன்று வெளிவரும் என்னற்ற குறும்படங்களில் சிறந்த படத்திற்கான விமர்சனங்கள் புத்தக வடிவம் பெறும்போது அத்தகு திரைப்படங்கள் சினிமா குறித்து பயில்பவர்களுக்கு ஒரு ஆவணமாக இருக்கிறது. ஆண்டுதோறும் வெளிவரும் நூற்றுக்கணக்கான குறும்படங்களில் தெரிவு செய்து பார்க்கவும்.
எழுத்தாளர் கிராபியென் பப்ளாக் எழுதி புதிய கோணம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மாற்று சினிமா’ நூல் நானும் எனது நண்பர் அறிவுநிதி தயாரித்து கவிஞர் அய்யப்ப மாதவன் இயக்கி, திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் ஒளிப்பதிவு செய்த ‘சாலிட்டரி’, எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன் எழுதிய கர்ண மோட்சம் உள்ளிட்ட 25 கும் மேற்பட்ட குறும்படங்கள், சில ஆவணப்படங்கள் குறித்துப்பேசுகிறது.
ஒவ்வொரு குறும்படம் பற்றிச்சொல்லும் முன்னர் அந்த திரைப்படத்தை பார்பதற்கு கிடைத்த வாய்ப்பு பற்றியோ, அல்லது எழுத்தாளர் குறும்படம் ஒட்டிய நினைவுகளைக் கிளறி குறும்படத்தை அறிமுகப்படுத்தும் போது, ஒரு திரைப்படத்தை காட்சிப்படுத்திப் பார்க்கும் மனநிலையில் உள்ளவர்களுக்கு அயற்சியையும், வாசிப்பில் தொய்வையும் தருகிறது. மேலும் ஒரு சில இயக்குனர்களின் ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை விமர்சிக்கப்பட்டிருப்பதை தவிர்த்திருந்தால் வேறு புதிய ஒரு இயக்குனரின் குறும்படம் அடையாளப் படுத்தப்பட்டிருக்கும்.
மற்றபடி நாம் கடந்து செல்லும் நிகழ்வுகளை, சிறுகதைகளை குறும்படமாக ஆவணப்படமாக்க விரும்புபவர்களுக்கும், சிறுகதை வாசிப்பாளர்களுக்குமான நூல் இது.
நான் பார்த்த சாலிட்டரி, தீரா இருள், கர்ண மோட்சம், அட்சயம், மறை பொருள் தவிர்த்த பல படங்களை நானும் தேடிப்பார்க்க வேண்டும்.
வெளியீடு : புதிய கோணம்
முதற்பதிப்பு: 2010