16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்

rameshஒரு ரயில்/பேருந்து பயண நேரத்தில் படித்து முடித்துவிடக்கூடிய கதைத்தொகுதி ரமேஷ் ரக்சனின் ’16’. சொல்லப்பட்ட 16 கதைகளும் 3-ல் இருந்து 4-பக்கங்களுக்குள் இருப்பதால் ஒரே வாசிப்பில் வாசித்து விடலாம், ஆனால் ஒவ்வொரு கதைகளை படித்து முடித்து அடுத்த சிறுகதைக்குள் உள்நுழைய நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்படுகிறது.

கிராமம் மற்றும் நகரம் என இரு வேறுபட்ட பரப்புகளில் நிகழும் சிறுகதைகள், எதார்த்தமாக அந்த வட்டார பேச்சுமொழியில் இருக்கிறது. விரிவான வர்ணனைகள் இல்லாமல் தொடங்கும் கதைகள், பதின்மவயதினர் கடந்து செல்லும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி சொல்லப்படும் எல்லாக் கதைகளும், ஆரம்ப பத்தியிலிருந்து கதையின் முடிவை நோக்கி நகரும் போது வாழ்தலின் எதிர் துருவத்தை சென்றடைகிறது. ஒவ்வொரு கதையின் முடிவும் இந்த சிறுகதை தொகுப்பில் ‘சொல்’ எனும் சிறுகதையின் இறுதியில் சொல்லப்பட்டுள்ள ‘ “தேவ்டியாவுள்ள…… எங்க அம்மய பேசினா கேட்டுட்டே இருக்கனுமா…” சில்லுகளாகியிருந்தன ஒரு பீர் பாட்டில்’, அப்படி நம் மண்டையிலும் ஒரு பியர் பாட்டில் கொண்டு அடிக்கும் வலியை ஏற்படுத்தும்.

பதின்ம வயதில் ஆண் மற்றும் பெண் இருவரும் வேலையிடத்தில் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்தம் காமம், தனி மனிதர்களின் உள்ளார்ந்த பிரச்சினைகள், நம்மை சுற்றிய சமூகம் எழுப்பும் கேள்விகள், சிறு குழந்தைகள் அறிந்தும், அறியாமலும் உயிர் நரம்மை நீவி தொடுக்கும் கேள்விகள், மனம் பிறழ்ந்த சிறுவர் சிறுமியின் வாழ்வியல் தரிசனங்கள் என்று சிறுவர், சிறுமியர் வாழ்வியலை பற்றி எழுதப்பட்ட இந்த சிறுகதைகளை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். ஆனால் சுருங்கச் சொல்லி நம்மை சுற்றிலுமான சிதிலமடைந்த மனிதர்களின் வாழ்வியலை தொட்டுவிடுகிறார்.

16 என்று ஆரம்பித்த திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்றிருப்பதாக சமிபத்திய D16 நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார்கள், அதுபோல ரமேஸ் ரக்சனின் ’16’ சிறுகதை தொகுதியிலிருந்து எந்த ஒரு சிறுகதையையும் குறும்படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் முயற்சி செய்யலாம்.

ஆசிரியர்: ரமேஷ் ரக்சன்
பதிப்பு : 2014
வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்

இரவிற்குமட்டும் தெரியும் அழுகையும் எனதன்பும்

நீண்டா நாட்களாகிவிட்டது, வலைப்பக்கம் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த இரண்டுமாதங்களில் எங்கோ தொலைத்துவிட்டேன்.

மயக்கம் என்ன திரைப்படம் பார்த்தேன் பிடித்திருந்தது.

இந்த முறை தமிழகம் சென்றிருந்தபோது அறிவுநிதியை சந்திக்காதது கொஞ்சம் வருத்தமே.

இன்று
கொஞ்சம் கவலையுடன் இருந்தேன்
பைத்தியமாக இருந்தேன்
குழந்தையாக இருந்தேன்
ஒரு மாதிரியாக இருந்தேன்
மொத்தத்தில் இருந்தேன்

இன்று அழுதது மிகவும் பிடித்திருந்தது

கேபிள் சங்கரின் ராஜபாட்டை விமர்சனப் பதிவை படித்தபின்பும் படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்துவிட்டேன் 2மணி நேரத்தை கடத்த வேண்டும்….

கியூட் பொண்டாட்டி பாடலை நான் பாடி என் நண்பன் தஞ்சைசதீஸ் கேட்கவேண்டும் என்று சொன்னதால் பயிற்சியில் ஈடுபடுகிறேன் பாடினால் முதன் முதலாக நான் பாடும் ஒரு முழுப்பாடலாக அது இருக்கும் …..

இரவிற்குமட்டும் தெரிந்த அழுகையையும் எனதன்பையும் இப்பொழுதும் சொல்லலாம் —  

 

“தனி”

 
 
 
அழைப்பது
பாண்டித்துரை + 65 82377006
ஷாநவாஸ் + 65 82858065
பூங்குன்ற பாண்டியன் +65 83602341

படித்ததும் பிடித்ததால் பகிர்ந்து கொள்கிறேன்

சாமிக்கும் மேல செளமியா

ஒவ்வொரு பலூனாய்
உடைத்துக் கொண்டிருக்கிறாள்
செளமியாக்குட்டி
பலூன்
உடைந்து கொண்டிருக்கிறது
வெடிச்சிரிப்புடன்.
o
விளையாடி முடித்து
தூக்கிப்போடுகிறாள்
செளமியாக்குட்டி
சோகத்தில்
கைகால்களை உடைத்துக் கொள்கின்றன
அறிவில்லாத பொம்மைகள்.
o
நிறையக்கேள்விகளுடன்
விடிகிறது
செளமியாவின் காலை.
கேள்விகளுக்கு
பயந்து சிலைக்குப்பின் ஒளிந்து பார்க்கிறார்
கடவுள்
o
நான் அம்மா செல்லம்.
அவங்கதான் நான்
குட்டிப்பாப்பாப்பாவா இருக்கும்போது
எறும்புகடிக்காம இருக்க தொப்பைக்குள்ள வச்சுருந்தாங்க
என்கிறாள்.
தூக்கத்தில் உதட்டசைத்து
கடவுளிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறாள் போலும்.
o
குழந்தையும் தெய்வமும் ஒன்று
என்றேன் செளமியாவிடம்
இல்லப்பா நான் சாமிக்கும்
மேல
சாமிக்கு என்னமாதிரி சிரிக்கத்தெரியாது
என்றாள்.
சரிதான்.

http://silarojakkal.wordpress.com/2010/10/15/சாமிக்கும்-மேல-செளமியா/

thanks: Poems by லதாமகன்

அசிங்கம்னா என்னடா (தலைவிதி)

முனைவர் லெட்சுமியின் அக்கப்போர் தொடரா வருதுனு நண்பர்கள் பலர் சொல்லவும், கடந்த இதழின் அக்கப்போரை முந்தாநேற்று ஒரு தோழி படித்துவிட்டு அலறி அடித்து ஓடிவந்து நீ படிச்சியாடானு கேட்கவும்…
நீயும்மாடினு கேட்டு வைத்தேன்.
 
நேற்று இரவு அலுவலக மாதாந்திர கூட்டத்தை முடித்துவிட்டு வீடு திருப்பிய பின் நள்ளிரவில் உயிரோசையை வாசித்துவிட்டு வல்லினம் அகப்பக்கதை வாசிக்கத் தொடங்கினேன்…
 
ம.நவீன்-ன் எதிர் வினையை வாசித்து முடித்தபின் எனக்குள் எழுந்தது ஒரே கேள்விதான்!
 
வல்லினம் அகப்பக்கத்தில் தனது புகைப்படத்துடன் ம.நவீன் பக்கங்கள் என்று விளம்பரப்படுத்தியுள்ள  http://vallinam.com.my/navin/  எனும் தளத்தில்தான். ”இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை” – ”ம. நவீன்” எனும் நேர்காணலை வாசிக்க நேர்ந்தது…
 
ஆக அப்படி இருக்க…  

 
அந்த தளத்தில் வாசித்த எனக்கு, வல்லினம் அகப்பக்கத்திற்கு தனது எதிர்வினையை பா.அ.சிவம் அனுப்பியதை, அசுத்தத்தை  ஏற்படுத்தியதாக ம.நவீன் எழுதியதை நினைத்து எக்குக்கு தப்பாக சிரித்துவைத்தேன்.
 
வல்லினம் இதழினை வெளியில் இருந்து யாரேனும் வந்துதான் அசுத்தப்படுத்தவேண்டுமா?
 
குறிப்பு:
ஜெயமோகனின் குறிப்பினை மட்டும் குறிப்பிட்டுவிட்டு எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் மனுஸ்யபுத்திரன் குறிப்புகளை விட்டு விட்டீர்களே (அவர்கள் வருந்தக்கூடும்)  மிஸ்டர்.
 
நன்றி: வல்லினம் மற்றும் லும்பினி
 
வாசக வேண்டுகோள்: –
  
முனைவர் லெட்சுமியின் அக்கப்போர் தொடராக வெளிவரவில்லையென்று அத்தகைய பத்திக்கான வாசகர்கள் வருந்துவதாக பேசிக்கொள்கிறார்கள்…
 
முனைவர் லெட்சுமியின் அக்கப்போர்க்கு முழுப்பதிலாக அடுத்த வாரத்தில் கிடைக்கும் ஓய்வு நாளில் சின்னப்புள்ளைத்தனமாக சிலவரிகளை எழுதி பதிவிட நினைத்துள்ளேன்.
 
வல்லினம் அகப்பக்கத்தில் அக்கப்போர் தொடரட்டும் அப்போது மணக்கும் அல்லவா?

முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரை – எம்.கே.குமார் பார்வையில்

sorry na,

நீங்கள் பதிவிட்டு வெகு நாட்களாகிவிட்டதால் உங்களின் வலைதளத்தினை பார்வையிடாமல் இருந்துவிட்டேன். வேலைப்பளு குட்டிப்பையனுடான விளையாட்டுக்கள் இதனையும் கடந்து நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது வாசித்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரைக்கு நீங்கள் உங்களின் கருத்தினை பதிவுசெய்தமைக்கு என்னுடைய நன்றிகள்.

http://yemkaykumar.blogspot.com/2010/06/blog-post.html

குடும்பம் சார்ந்த புரிதலை நோக்கி….

பிரியா பாபு

பிரியா பாபு எனும் திருநங்கை எழுதிய இந்த நாவல் சந்தியா பதிப்பகத்தாரால் 2008ல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அரவாணி எழுதிய முதல் நாவல்.

அரவாணிகள் குறித்த முழுமையான பார்வையை பெங்களுரைசேர்ந்த அரவாணி ஒருவர் நூலாக வெளியிட்டிருந்தார் அந்த நாவலில் அவர் சந்தித்து சென்ற அரவாணிகள் பற்றி எழுதியிருந்தார். இந்த நூல்தான் தமிழில் அரவாணிகள் குறித்து ஒரு அரவாணியால் எழுதப்பட்ட முதல் நூல் (நூலின் பெயர் ஞாபகத்தில் இல்லை) இதற்கு பிறகு நான் படித்தது லிவிங் ஸ்மைல் வித்யாவால் எழுதப்பட்ட “நான் வித்யா”  அரவாணிகளின் உள் உணர்வுகள் அவர்கள் சந்தித்த துயரம், மாற்றுப்பால் அறுவைசிகிச்சையென தான் கடந்துசென்ற காலங்களை நம்மருகேகொணர்ந்து அந்த வலியை, துயரத்தை அவர்களின் உணர்வுகளை உணரச்செய்த நூல்.

மூன்றாம் பாலின் முகம் – அரவாணியாக மாறும் ரமேஸ் என்ற இளைஞனையும் அவனது குடும்பம்சார்ந்தும் பின்னப்பட்டு அவனது கல்லூரி அவன் சந்திக்கும் பாம்படத்தி குரு (அரவாணிகளின் தாய்) அவர்கள் சார்ந்த உலகம், கூத்தாண்டவர் கோவில் திருவிழா என கடந்து மனம்மீதான புரிதலுடன் ரமேஷ் – பாரதி எனும் அரவாணியாக மாறுவதுடன் நாவல் முடிவடைகிறது.

பேச்சு வழக்கிலான நடையில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. அரவாணிகள் பிச்சை எடுப்பதற்கும் பாலியல் ரீதியில் துன்பப்படுவதற்கும் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதற்கும் முதல் காரணம் மூலகாரணம் குடும்பம் என்பதை சுட்டுகிறது.

திருடுவது அவமானமாக இல்லை வைப்பாட்டி வைத்துக்கொள்வது அவமானமாக இல்லை குடிப்பதும் பல பெண்களுடன் சுற்றுவதும் அவமானமாக இல்லை நான் அரவாணியாக மாறுவது மட்டும் அவமானமாக இருக்கிறதா என குடும்ப உறுப்பினர்களை கேள்விக்கு உட்படுத்தி வாசித்து செல்லும் நம்மில் சலனத்தை ஏற்படுத்துகிறது.

அம்மாவாக வரும் பார்வதி மகன் மகளாக மாறும் நிலை கண்ட குழப்பத்துடன் கண்மணி எனும் சமூகசேவகியை சந்திக்க அதன் பின்னான புரிதலில் ரமேஷ் மீதான கூடுதல் அன்புடன் அவன் சந்திக்கும் அரவாணிகளை சந்தித்து உரையாடுவதும் இன்றைய சமூகத்தில் குடும்பம் சார்ந்த உறவுகளில் ஏற்படும் புரிதல்களையும் இந்த சமூகத்தில் இன்னும் ஏற்படவேண்டிய புரிதல்களையும் முன்னிறுத்துகிறது.

தன்வலியை உணர்வுகளை எழுத்து திரைப்படம் என்று பதிவுசெய்வதன் வாயிலாகத்தான் இந்த சமூகம்  இனிமெல்லமாற்ற மடையும் அரவாணிகளை கொண்டாடும் என்பதாக இந்த நாவல் முடிவடைகிறது.

அரவாணிகளே அவர்களின் வாழ்வினை பதிவுசெய்யும் பொழுது வாசகனுக்கு கூடுதலான புரிதல்களை ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தமுடியும்.

இந்த நாவலில் வரும் கண்மணி எனும் சமூக சேவகி நம்ம பையனும் நாளைக்கு இந்த மாதிரி மாறனும்னு நினைச்ச என்ன பண்ணுவிங்க என தன் கணவரிம் கேட்கும் போது அதில் உள்ள சாதக பாதகங்களை எடுத்துசொல்லணும் அதற்கு மேல அவர்களின் பாதையை தேர்ந்தெடுப்பது அவர்களுக்கான உரிமை என்கிறார். இந்த நாவலை படித்துமுடிக்கும் போது வாககனுக்கு இந்த எண்ணம் தோன்றினாலே போதுமானது – அதுதான் இந்த நாவலை எழுதியிருக்கும் எழுத்தாளர் பிரியா பாவுவிற்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும்.

கூடுமான வரை இதுபோன்ற நூல்களை உங்களின் வீடுகளில் வைத்திருங்கள் – உங்கள் இல்லம் தேடிவரும் விருந்தினர்கள் யாரேனும் வாசிக்கச் செய்ய!

மூன்றாம் பாலின் முகம்
எழுத்தாளர்: பிரியா பாபு
சந்தியா பதிப்பகம் (தொலைபேசி : 044 24896979 65855704
விலை: உருபாய் 50