நேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆம்பலாப்பட்டு கிராமத்தில் பிறந்தவர். கடந்த 14 வருடமாக சிங்கையில் வசிக்கும் இவர், 13 சிறுகதைகள் அடங்கிய ‘உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81’  என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு நூல் 2017 இல் ‘மோக்லி’ பதிப்பகத்தில் வெளியானது. சிங்கப்பூர் NAC நடத்திய தங்கமுனை விருதுகள் இவரது   ராட்சசி (2015-இரண்டாம் பரிசு), ரகசியம் (2017/முதல் பரிசு) சிறுகதைகளுக்கு கிடைத்தது. இவரது சிறுகதை தொகுப்பிற்கு 2018 க.சீ.சிவக்குமார் நினைவு விருது கிடைத்தது. தற்போது நாவல் எழுதுகிறேன் என்ற புரளியை கிளப்பிவிட்டு நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கும் இவரை தட்டி எழுப்பி சில கேள்விகள் மட்டுமே கேட்க முடிந்தது.

‘மாயா’ இலக்கிய வட்டம் ஆரம்பித்ததின் நோக்கம் நிறைவேறி இருக்கிறதா? வாசகர்கள் ‘மாயா’ வை எப்படி பார்க்கிறார்கள்?

மாயா ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகும் நிலையில் எங்களின் நோக்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து உள்ளோம். எந்த அமைப்பின் நோக்கமும் அவ்வளவு எளிதில் நிறைவேறி விடுவதில்லை, புது வாசகர்களை கண்டடைந்து அவர்களை குறிப்பாக சிங்கப்பூர் கதைகளை படிக்க வைப்பது சவாலான ஒன்று, கடந்த மாதங்களில் அதில் வெற்றியும் அடைந்துள்ளோம். வாசகர்கள் ஆவலுடன் வருகிறார்கள் தயக்கமின்றி தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்.

‘மாயா’ விமர்சனங்கள் கட்டுரைகளாக வலைதளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதா?

இதுவரை இல்லை ஆனால் எங்களின் நோக்கம் அதுவே . விரைவில் மாயாவிற்காக வலைதளம் ஒன்று துவங்கி அதில் விமர்சனக் கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்.

‘மாயா’ வில் விவாதிக்க எடுத்துக்கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் & அறியப்பட்ட எழுத்தாளர்களிடம் பெற்று வாசிக்கவும் / வலைதளத்தில் பதிவிடவும் செய்யலாமே?

அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கிறது. விரைவில் மாயா இலக்கிய வட்டத்திற்கான வலைதளம் துவங்கி அதில் பதிவிடப்படும்.

ரமா சுரேஷ் எழுத்தாளர் ஆகிவிட்டாரா?
ஒரே ஒரு தொகுப்பை போட்டுவிட்டு நான் ரமாசுரேஷ் எழுத்தாளர் என்று கை குழுக்க கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கு.

உட்லண்ட்ஸ் ஸ்ரிட் 81 சிங்கப்பூர் பெண்கள் எழுதிய சிறுகதைகளிலிருந்து பெரிதும் மாறுபட்ட ஒன்று, எப்படி இப்படியான கதைமொழிக்குள் வந்தீர்கள்?

நான் மனிதர்களின் செயல்பாடுகளை அதிகம் ரசிப்பவள் அதிலும் குறிப்பாக பெண்களை அதிகம் ரசிப்பேன் நேசிப்பேன்.  என் கதைகள் பெரும்பாலும் பெண்களின் அக வாழ்வை கொண்டவை.

2015 ல் ராச்சசி கதையை நான் எழுதும் போது எனக்கு நானே சில விசயங்களில் கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டேன் ஆனால் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் கதைகளை படிக்க ஆரம்பித்தபோது அந்த தடைகளை தகர்த்துவிட ஆரம்பித்தேன்.

என்னமாதிரியான கட்டுப்பாடு என்று சொல்ல முடியுமா? லஷ்மி சரவணக்குமார் கதைகள் உங்களுக்கு தந்த தரிசனத்தை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்?

விளிம்பு நிலை மாந்தர்களின் கதையை தடையில்லாமல் எழுத எனக்குள் தைரியத்தை கொடுத்தது உப்பு நாய்கள்தான். நிர்வாணம் என்ற ஒற்றை வார்த்தையே எனக்குள் கட்டுப்பாடாகத்தான் இருந்தது ஆனால் லஷ்மியின் கதைகளில் நிர்வாணத்தையே இரண்டு பக்கங்கள் எழுதி இருப்பார் அந்த மொழியை படிக்கையில் எனக்குள் நிறைய மாற்றம். உடல் அரசியல் பற்றி எழுதுவதில்  தவறில்லை அதை நாம் எழுதும் விதத்தில்தான் உள்ளது என்பதை புரிந்துக்கொண்டேன்.

உங்களின் கதைகளைப் படித்த யாரேனும் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமாரின் பாதிப்பு இருப்பதாக சொல்லியிருக்கிறார்களா?

அப்படி யாரும் இதுவரை என்னிடம் நேரடியாக சொன்னதில்லை.

நேரடியாக சொல்லலைனா எங்கோ சொல்லி கேள்விப்பட்ட மாதிரிதானே?

மொழியில் இருப்பது போல் எனக்கே சில நேரம் தோன்றும். நேரடியாக பேசத் தயங்குபவர்களை பற்றி நாம் ஏன் யோசிக்க வேண்டும்

உங்கள் கதைகளில் பூனைகள், குழந்தைகள் அதிகம் வருகிறார்கள். அதுபற்றியும், பெரியவர்கள் குழந்தைகளுக்கு இடையே ஊடாடும் மனநிலை இது பற்றிச் சொல்லுங்கள்?

வாஸ்தவம்தான் என் கதைகளில் பிரதான பாத்திரங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் . சிங்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பார்த்தால் இவர்கள் மட்டுமே நிறைந்து நிற்பார்கள். காலை பத்து மணி முதல் மாலை வரை குடியிருப்பு பகுதிகள் அங்காடி கடை வீதி என்று      மனிதர்கள் அதிகம் நடமாட கூடிய பகுதிகளில் இவர்களின் சிரிப்பு சத்தமும் கேலியும் கிண்டலுமான பேச்சும் அதிகமாக கேட்கும் அவர்களுடன் சக நண்பனை போல பூனைகளும் இருக்கும். மேலும் சிங்கப்பூர் களத்தில் பூனைகள்தான் நமக்கு கிடைத்த ஒரே விலங்கும்!

பெரியவர்கள் (முதியவர்கள்) குழந்தைகள் இவர்கள் இருவரும் கிட்டதட்ட ஒரே மனநிலையில் உடையவர்கள். பழகியவர்கள் புதியவர்கள் என்று பாராமல் பார்த்தவுடன் சிரித்து பேச ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு மனிதனிடமும் பல சுவாரசியமான கதைகள் இருக்கும் அதில் சில ரகசியங்கள் இருக்கும் அந்த ரகசியத்தை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகே சுவாரசியமாக வெளி வரும். அப்படிப்பட்ட ரகசியங்களை முதியவர்கள் குழந்தைகளிடம் மட்டுமே அடிக்கடி சொல்லி சிலாயித்துக்கொள்வார்கள். தங்களுக்கு புரியுதோ இல்லையோ அந்த சுவாரசியம் குழந்தைகளுக்கு பிடித்து விடும். உறவு பாசம் இதை தாண்டி ‘தனி கவனம்’ என்பதே இவர்களுக்கு தேவை.

நேரடியாக பார்த்த / பாதித்த ஒன்றை எழுவது,  கற்பனையாக ஒன்றை எழுதுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

நம் சொந்த கதை அல்லது நம்மை பாதித்த அல்லது கற்பனை கதை எதுவாக இருந்தாலும் சரி கதையின் உட்கரு எழுத்தாளனுக்குள் உயிர்ப்பிக்க வேண்டும் அந்த அதிர்வுதான் நம்மை கதை எழுத தூண்டுவதே.

சிங்கப்பூர் சிறுகதைகளில் ‘உட்லண்ட்ஸ்  ஸ்ட்ரீட்81 வித்தியாசமான கதைக்களம்  கொண்ட சிறுகதை  தொகுப்பு,  இந்த தொகுப்பு பற்றி பரவலாக யாரும் பேசவில்லை என்று நினைக்கிறேன்?

உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 மட்டும் அல்ல சிங்கப்பூர் தொகுப்புகள் எதுவும் இங்கு பேசப்படுவது இல்லை. ஆனால் தமிழகத்தில் எனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.

இந்த தொகுப்பிற்கு கிடைத்த சிறந்த பாராட்டு / சிறந்த விமர்சனம் யாரிடமிருந்து கிடைத்தது?

விமர்சனம் என்றால் காரசாரமாக யாரும் இன்னும் முன் வைக்கவில்லை. எல்.ஜே.வயலட் ஒரு விமர்சனம் எழுதி இருந்தார் அது எனக்கு பிடித்த ஒன்று.
பாராட்டு நிறைய கிடைத்தது அதில் முதல் பாராட்டு கவிஞர் கரிகாலன் அவர்களுடையது, அவரிடம் நான் பேசும் போதெல்லாம் அடுத்தகதையை எழுத ஆரம்பித்துவிடுவேன் அந்தளவு ஊக்கப்படுத்துவார்.  சாரு அவர்கள் தொகுப்பை படித்துவிட்டு என் கைபேசி எண்ணை தேடி பிடித்து பேசிய அந்த தருனம் நான் தேவதை ஆகிவிட்டேன், சமீபத்தில் கவிஞர் யவனிகா அவர்களின் பாராட்டு.
எனக்கு மிகப்பெரிய அங்கிகாரம் கொடுத்தது க.சீ. சிவக்குமார் நினைவு விருது.

யாதுமாகியில் நீங்களும் ஒரு கவிஞராக இடம் பெற்றிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்?

நான் கவிதை எழுதுவதில்லை.

எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு நிகழ்வில் உங்களது கேள்விக்கு நியாமான ஒரு பதிலைச் சொல்லாமல் அவமதித்ததை இப்போது எப்படி பார்க்கிறீர்கள்?

அப்போது கோபமும் வருத்தமும் நிறைய இருந்தது. ஆனால் இப்போது நினைத்தால் கூட சிரிப்பு வந்துவிடும். அன்று அவர் அந்த பதிலை கோபமாக சொல்லாமல் நிதானமாக சொல்லி இருந்தால் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை ரொம்பவே பாதித்து இருக்கும். அதனால் அந்த கோபத்திற்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

வாசிப்பதன் வழியே என்னமாதிரியான மாற்றத்தை வாசகன் அடையக்கூடும்?

வாசிப்பதின் வாயிலாக மட்டும் அல்ல  நாம் சந்திக்கும் பல சூழல்கள் நம்மை பல மாற்றங்களை கண்டடைய செய்கிறது.  இதில் வாசகர்கள்  மற்றவர்களை விட கொடுத்து வைத்தவர்கள் தனக்கு பிடித்த கதாப்பாத்திரமாக மாறி விடுவார்கள், சில நாட்களுக்கு முன்பு வானவில் என்ற ரஷ்ய நாவல் ஒன்று படித்தேன் அதில் வரும் ஒரு பிணமாக மாறி தவிக்க ஆரம்பித்துவிட்டேன் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த கதை நிகழும் களமாகவே உருமாறி விட்டேன். ஏன் சில வாசகர்கள் தன் மானசீகமான எழுத்தாளர்களை போன்றே வாழ ஆரம்பித்து விடுவார்கள் உதாரணத்திற்கு எஸ்.ரா , சாரு வின் தீவிர வாசகர்களை பார்த்தீர்கள் என்றால் மிக இயல்பாக நாம் கண்டுபிடித்து விடலாம்
நான் சமீபத்தில் ரசித்த ஓஷோவின் வரிகள்  “நீயாகப் படைக்கும் எதுவும் உன்னைவிட சிறியதாகத்தான் இருக்க வேண்டும்”
எழுத்தை விட எழுத்தாளன் சிறந்தவனாக விளங்க வேண்டும் அப்போதுதான் வாசகன் எழுத்தின் வாயிலாக மாற்றத்தை கண்டடைய முடியும்.

நேர்காணல்: எழுத்தாளர் ரமாசுரேஷ்
நேர்காணல் செய்தவர்: பாண்டித்துரை

உமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….

ஒரு தேநீரும், இரண்டு ரொட்டி பரோட்டாவும் சாப்பிடும் நேரத்தில் உமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….

 

கேள்வி: இந்த ஆண்டு (2016) வாசிப்பில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய புத்தகமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

உமாகதிர்: குழந்தை பருவம் பற்றி எழுதிய எழுத்தாளர்களில் யூமாவாசுகியை குறிப்பிடலாம், அந்த வரிசையில் ஒரு சிறுவன் ஊட்டியில் வாழ்ந்த நாட்களை அழகாக பதிவு செய்த “வெலிங்டன்” நாவலைச் சொல்லலாம். எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய நாவல்

கேள்வி: இந்த ஆண்டு (2016) பார்த்த திரைப்படங்களில் மிகவும் பிடித்த படங்களாக எதைச் சொல்லலாம்?

உமாகதிர்:ஒரு தாத்தாவைப் பற்றிய திரைப்படம்,  நாடோடி வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருப்பார்கள். தாத்தாவிற்கு நாடோடியாக வாழ வேண்டும் என்ற ஆசை, அதற்கான சந்தர்ப்பத்தை மகன் பணம் கொடுத்து அமைத்துத் தருகிறான். இடையர்களோடு ஒருத்தனாக ஒரு கிராமத்து முதியவர் எதைப் பற்றியுமான கவலைகள் இன்றி பயணம் செய்வதைப் பதிவு செய்த கன்னடப்படமான “திதி”யும் மாராத்தி திரைப்படமான “சாய்ரட்”டையும் சொல்லலாம். தமிழில் “ஜோக்கர்” திரைப்படத்தை குறிப்பிடலாம்.

கேள்வி: சமீபத்தில் சிங்கப்பூர் வந்த கவிஞர் யவனிகா ஸ்ரீராம்முடனான சந்திப்பு?

உமாகதிர்: கவிஞர்கள் எல்லாம் இருக்கமாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன், ஆனால் நேரில் பழக இருக்கம் இல்லாத சாதரணமாக பழகக்கூடியவராக யவனிகா இருந்தார். எல்லா தரப்பு மனிதர்களிடமும் உரையாடக்கூடியவர்,. யவனிகாவுடனான உரையாடல் வழியே நமக்கு கற்றுக் கொள்வதற்கு நிறைய விசயங்கள் இருக்கிறது.

1

கேள்வி: மகன் நவீனனுக்கு இலக்கிய வாசிப்பு, புத்தகங்கள் & எழுத்தாளர்களின் அறிமுகத்தை ஏதோ ஒரு விதத்தில் ஞாபகப்படுத்துவன் சூட்சுமம் என்ன?

உமாகதிர்: விவசாயின் மகன் விவசாயம் சார்ந்து ஏதேனும் தெரிந்து கொள்வது போல, எனது தந்தை அரசு வேலை பார்ப்பவர் ஓய்வு நேரங்களில் வார சஞ்சிலுகைகளை வாசிப்பார், அதை பார்த்து கொண்டிருக்கும் எனக்கும் வாசிப்பில் ஆர்வம் வந்தது. அப்படித்தான் நான் வீட்டில் இருக்கும் போது புத்தகங்களை வாசிப்பேன், திரைப்படங்கள் பார்ப்பேன். அந்த இரண்டையும் நவீனன் பின் தொடர்கிறான்.

2

கேள்வி: சிறுகதை எழுத விரும்புவது…

உமாகதிர்: ஆர்வத்தோடு சரி. வாசிப்பவர்கள் எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் சிறுகதை எழுத வேண்டும் என்று தோன்றும், அப்படித்தான் அதற்கு நிறைய வாசிப்பு வேண்டும்.

கேள்வி: பரபரப்பான சிங்கை சூழலில், எந்த ஒரு காட்சியையும் நின்று அவதானிப்பது அரிது. நீங்கள் கடந்து செல்லும் நிறைய மனிதர்களை அவதானிக்கிறீர்கள், ஏன்?

உமாகதிர்: வாசிப்புதான் காரணம்

நாஞ்சில் நாடனின் “சதுரங்கக்குதிரை”யில் ஒரு காட்சி வருகிறது. நாரயணன் ஒரு விற்பனை பிரதிநிதி, விற்பனைப் பிரதிநிதிக்குரிய டார்க்கெட்டை அந்தந்த மாதத்தில் தொட வேண்டும். மகராஸ்டிராவில் ஒரு குக்கிராமத்தில் ஆர்டர் எடுக்கச் செல்வார், அங்கு அவருக்கு ஆர்டர் கிடைக்காது. இந்த மாதம் என்ன செய்வது உணவிற்கு கூட பணம் இல்லையே என்று கவலையோடு செல்லும்போது, அவரை தாண்டிச் செல்லும் ஒரு கரும்பு லாரியின் மேல் உள்ள சிறுமியை கவனிப்பார் அந்த சிறுமியும் இவரைப் பார்த்தவுடன் ஒரு கரும்பை உருவி உடைத்து அவரது திசை நோக்கி எறிவாள், அந்த கரும்பை பிடித்து இவர் சாப்பிடுவார்.

அப்படித்தான் ஒரு விரத்தியான சூழலில், ஒரு அன்பு நம்பைப் பற்றி யோசிப்பதற்கோ அன்பு செய்யவோ தயாராகத்தான் இருக்கிறார்கள். அது இலக்கிய வாசிப்பு வழியாக கண்டிப்பாக எல்லோருக்கும் வரும், அந்த மாதிரியான காட்சிதான். சோர்வுற்றவனுக்கு கிடைக்கும் ஒரு மாத்திரைப்போல! புத்தக வாசிப்பின் வழியே, பிற மனிதர்களை அவதானிப்பது வழியே கிடைக்கிறது..

3

 

கேள்வி: வாசிப்பு பற்றி சொல்ல விரும்புவது…

உமாகதிர்: வாசிப்புதான் ஒருவனை நல்வழிபடுத்தும். இலக்கிய வாசிப்பாளன் எவ்வளவுதான் கரடு முரடானவனாக இருந்தாலும் அவனை நல்ல வழிக்கு கொண்டு வந்துவிடும்.

நாம் வாழ முடியாத ஒரு வாழ்கையைதான் நிறைய நபர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கை ஒரே வாழ்க்கை, அதனால் எல்லாருடைய அனுபவங்களையும் நம்மால் பார்க்க முடியாது, அதை எழுத்தாளன் செய்கிறான். வாசிப்பின் வழியே வாசிப்பாளன் உணர்கிறான்..

கேள்வி: எழுத்தாளர்களில் யூமாவாசுகியின் மீது மட்டும் ஏன் கூடுதல் ப்ரியம்?

உமாகதிர்: யூமாவாசுகியின் எழுத்தில் நாலு வரி எழுதினாலும் அதில் இரண்டு வரி மற்ற மனிதர்கள் பற்றிய அன்பு இருந்து கொண்டே இருக்கும். அதை தவிர்த்து அவரால் எழுதவே முடியாது. கவிதையாக இருந்தாலும், நாவலாக இருந்தாலும் சகமனிதர்கள் மீதான அன்பு இருக்கும். எப்படி சலிக்காமல் அன்பு பற்றி ஒருவரால் எழுத முடிகிறது அதான்.

8

கேள்வி: திருவண்ணமலை என்றால் ஞாபகத்திற்கு வருவது?

உமாகதிர்: முன்பெல்லாம் அங்கு இருக்கும் ஒரு சந்தையும், கிரிவலம் ஞாபகத்திற்கு வரும், இப்போதெல்லாம் பவாதான் ஞாபகத்திற்கு வருகிறார்.

கேள்வி: ஏன் பவாசெல்லத்துரையின் ஞாபகம்?

உமாகதிர்: ஒருமுறை அய்யனார் விஸ்வநாத் தான் ஒரு கிரகபிரவேஷத்திற்கு அழைத்திருந்தார். அப்பகூட அய்யனாரை கிண்டல் செய்தேன், அங்கெல்லாம் சென்று ஜாலியாக இருக்க முடியாது என்று. சென்றது பவா வீடு, அங்கு சென்றபின்னர்தான் தெரிந்தது எழுத்து, ஓவியம், திரைப்படம் என நிறைய ஆளுமைகள் வந்திருந்தனர்.

நாம் பார்த்த கிரகபிரவேஷம் மாதிரி கிடையாது. வீட்டை இயக்குனர் பாலு மகேந்திரா திறந்து வைத்தார், அந்த வீட்டிற்குள் முதன் முதலாக சென்றது அந்த வீட்டை கட்டும்போது வேலை பார்த்தவர்கள், கரிசல் கிருஸ்ணசாமி என்று நினைக்கிறேன் அவர் பாடிய பாடல் அப்படி நிறைய விசயங்கள் அன்றய பொழுதில்.

அதனை தொடர்ந்து அடிக்கடி பவா வீட்டடிற்கு செல்ல ஆரம்பித்தேன். அந்த வீட்டில் எல்லாமே இருக்கிறது. இலக்கியம் இருக்கிறது, நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லா தரப்பு மனிதர்களும் அங்கு வருகிறார்கள், அப்படி வரும்  ஆளுமைகள் அதற்கான கொண்டாட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு சாதரணமாக இருக்கிறார்கள் என்னைப் போன்றவர்களோடு உரையாடுகிறார்கள். யார் அங்கு சென்றாலும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான மரியாதை.

6

கேள்வி: அய்யனார் விஸ்வநாத் நட்பு பற்றி

உமாகதிர்: அய்யனார் வலை பதிவராகத்தான் அறிமுகம். நெருக்கமான தோழன், அதை உணரவைப்பார். அவரது அன்பு ரொம்ப பிடிக்கும், அதுவும் ரெண்டு பெக்க போட்டால் பீரிடும் அன்பு தனித்துவமானது. சமுகத்தில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் பற்றி விசனப்பட ஆரம்பித்து விடுவார். அவருடைய மொழி அழகாக இருக்கும், அவருடைய கவிதைகள்  அழகானது, ஒருவிதத்தில் எனக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம். என் வாழ்வில் நான் கண்டடைந்த நல்ல நட்பு அய்யனார்.

7

கேள்வி: சிங்கப்பூர் இலக்கியம் பற்றி?

உமாகதிர்: சிங்கப்பூர் இலக்கியத்தை பொறுத்தவரை அதிகமாக வாசித்ததில்லை, வாசித்த ஒன்றிரண்டும் பெருத்த ஏமாற்றம்தான். காத்திரமான சிறுகதைகள் எழுதுவதற்கான எல்லாக் களமும் இருக்கிறது, ஆனால் அதற்கான நேரமும் உழைப்பும் யாரிடமும் கிடையாது. அதற்கான உழைப்பும் திறமையும் இருக்ககூடியவர்கள் இங்கு இருக்கிறார்கள், ஆனால் அப்படி யாரும் எழுத முன்வரவில்லை அல்லது முயற்சி எடுக்கவில்லைனு சொல்லலாம். ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டிய கட்டாயம் இங்கு, அதனாலான அழுத்தத்தோடு இருக்கிறார்களோ என்று தோன்றும்.

http://soulcroon.com/2017/01/01/14/