பிரவுவை பற்றி எழுதவேண்டும் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. பிரவுவை எனக்குத் தெரியும் (இந்த தெரியும் என்பதை எந்த அளவிற்கு என்று பின்னே குறிப்பிட்டுள்ளேன்) பிரவுபிற்கு என்னை தெரியுமா என்று தெரியவில்லை, அப்படியே என்னை தெரிந்து கொள்ளவேண்டும் என்று பிரபு நினைக்கக்கூடிய இடத்தில் இன்று இல்லை.
இந்த பிரபு எனது ஊரான அ.காளாப்பூரை சேர்ந்தவர். அ.காளாப்பூரைச் சேர்ந்த 99.99 சதவிதம் பேர் அ.காளப்பூர் அரசு ஆண்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது, மீதமுள்ள .01 சதவிதம் பேர் சிங்கம்;புணரியில் உள்ள தனியார் ஆங்கிலவழி கல்வியில் படித்தனர். பிரபுவும் பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்தான். ஆங்கில வழி கல்வி பயில்பவர்கள் அரசு பள்ளி மாணவர்களைவிட அதிகம் மதிப்பெண் பெறுபவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் எனக்கு அப்போது உண்டு.
கடந்த மாதத்தில் ஒருநாள் அரவிந்தனிடம் பேசிக்கொண்டிருக்கையில் பிரவுவை தெரியும்ல பாண்டி என்றார். பாரிவள்ளல் பிரபு என்று சொன்னதும் தெரியும் என்றேன். இறந்துவிட்டதாக கூறினார். திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஏற்பட்ட விபத்து என்றார்.
பிரவுவை இப்போதும் என்னால் நினைத்துபார்க்க முடிகிறது. ஒரு முறை எங்கள் ஊர் திருவிழா என்று நினைக்கிறேன் உள்ள+ர் பள்ளி மாணவ மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. அங்கு பிரவுவும் ஒரு பாடலுக்க ஆடினான், அபூர்வ சகோதர்கள் படத்தில் வரும் ரப்பப்பரி ரப்ப்பரி புதுமாப்பிள்ளைக்கு என்ற பாடலுக்கு குள்ள கமலாக! திரையில் கமலை எப்படி ஆச்சர்யமாக பார்த்தேனே அதே ஆச்சர்யத்துடன் பிரபுவை பார்த்திருக்கிறேன். பின் எப்போதாவது சிங்கம்புணரிக்கு சைக்கிளில் செல்கையில் சாலையோரத்தில் இருக்கும் அவர்களின் வீட்டை கடந்து செல்கையில் பார்த்ததுண்டு. இப்போதும் என் நினைவுக்கு வருவது குள்ள பிரபுதான். இந்த அளவிற்குத்தான் எனக்கு பிரபு பரிச்சயம். இடைஇடையே அரவிந்தன் ஞாபகப்படுத்துவார். இனி அரவிந்தன் ஞாபகப்படுத்தமாட்டார்.
அம்மாவிற்கு அழைத்தேன் ( அம்மா எப்போதுமே ஊரில் நடக்கும் இறப்பு பற்றிய விபரத்தை உடனே தெரிவிக்க மாட்டாள் யாரிடமாவது செய்தியறிந்து பின் அம்மாவை அழைத்து விசாரிக்கும்போது ஆமாம்பா நீங்க தொலைவில் இருக்கிங்க உங்களுக்கு அந்த கதையை உடனே சொல்லி கலங்கவைக்க வேண்டாம் என்பாள் ) வாவனான் குளம் பிரபு என்று சில அடையாளங்களை சொன்னவுடன் ஆமாம்ப நல்ல பையன் அந்த பையன் தலையெடுத்துதான் 3-தமக்கைள் திருமணம் முடித்து மைத்துனர்களையும் உடன் சேர்த்துக்கொண்டு சேலத்தில் சொந்தமாக பர்னிச்சர் கடை வைத்து நல்ல நிலைமையில் இருக்கும் போது இப்படியாகிவிட்டது என்றார்கள். பிறகு சொன்னதுதான் பிரபு எந்த அளவிற்கு குடும்ப உறவினர்களிடையே தன்னை பிணைத்துக் கொண்டிருந்திருப்பார் என்று கற்பனை செய்யமுடிகிறது. பிரவுவின் இறுதிச் சடங்கில் 3-மச்சினனன்களும் கதறி அழுததை நான் இதற்கு முன் அப்படி பார்த்ததில்லை ஊரே சொன்னுச்சுப்பா
விபத்து குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் வரலாம்.. சமதளமற்ற சாலை வண்டியின் வேகத்தை தடை செய்திருக்கலாம், எதிர் வந்த வாகனத்தால் ஏற்பட்டிருக்கலாம், மதுவினாலும் ஏற்பட்டிருக்கலாம். ஒன்று மட்டும் புரிகிறது, மரணம் நம்மை தொடர்ந்தே வந்துகொண்டிக்கிறது. வெகுசிலருக்கு தெரிந்துவிடுகிறது பலருக்கும் தெரிவதில்லை..
பிரபு வந்தான் சென்றான் என்பதை அவ்வளவு எளிதில் அவன் சார்ந்த யாரும் கடந்து சென்றுவிடமுடியாது.
இந்த வாழ்க்கை இப்படித்தான் ஆரம்பிக்கும் இப்படித்தான் முடியும் என்று இங்கு எவரும் அறியாத போது பிரவுவின் ப்ரியங்களைப் போல நமக்கான பயணத்தில் எதை விட்டுச் செல்லப்போகிறோம்.
இனி எனக்கு பிரவுவை ஞாபகப்படுத்தும் ரப்பப்பரி ரப்பப்பரி புதுமாப்பிள்ளைக்கு பாடலை ஒரு முறை கேட்டுவிட்டு உறங்கச்சென்றுவிட்டேன்.