ஒப்பிலான் சித்தீக் = மனுசன்யா

ஒருவர் இறந்த பின்பு அவரைப்பற்றி நீங்கள் அறிந்திராத ஒருவர் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?

ஒரு ஊர் தோன்றிய பிறகு எத்தனையோ வருடங்கள் எத்தனையோ மனிதர்களை கடந்து வந்திருக்கும். ஆனால் யாரேனும் ஒருவர்தான் அந்த ஊரின் பெயரோடு அந்த ஊரின் அடையாளமாக அடையாளப்படுத்தப்படுகிறார். அந்த ஊர் பெயரை சொன்னதும் ஞாபகத்திற்கு வரும் முதல் மனிதராகவும் இருக்கிறார். (ஆலங்குடி என்றால் என் ஞாபகத்திற்கு வரும் பெயர் சோமு)

நண்பர் முகவை ராம்குமார் சிலப்பதிகாரம் பற்றி இலக்கிய வட்டத்தில் சொற்பொழிவு நிகழ்த்தவிருப்பதை அறிந்து பல மாத இடைவெளிக்கு பின்பு அங்கு சென்றிருந்தேன். கொஞ்சம் சுவாரஸ்யமாகத்தான் நிகழ்வு சென்றது. ராமின் நிதானமான பேச்சு அவரது சொற்பொழிவை நீண்டதொன்றாக காட்டியது.

நிகழ்ச்சி முடிந்த பின்  நண்பர் ஷாநவாஸிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவராக  வெளியேறிக்கொண்டிருந்தனர். சிலர் பேச்சினை தடைபடச்செய்து சம்பிரதாய வார்த்தைகளை உதிர்த்து விடைபெற்றனர்.

 அதீத பிரியத்தை வெளிப்படுத்தும் முதிர்ந்த நண்பர் திரு.கோடீஸ்வரன் அவர்களை பார்த்தவுடன் நண்பர் ஷாநவாஸ் அவரது மாவட்டமான ராமநாதபுரத்தை பற்றி ஆரம்பித்த உடன்…

 கோடீஸ்வரன் இடைமறித்து நான் பெருமைக்கு சொல்லல… இராமநாதபுரத்தில் என் கால்படாத கிராமமே இல்லனு சொல்லலாம் என்றபோது…

 ஒப்பிலான் எனது ஊர் சார் என்றார் ஷாநவாஸ்.

சித்தீக்கை தெரியுமா என்றார் கோடீஸ்வரன்

 துயரம் படிந்த சொற்வலுவில் அவர் என்னோட மச்சான் சார் இரண்டு வாரங்களுக்கு முன்தான் அவர் இறந்துவிட்டார் என்றார் ஷாநவாஸ்.

 பொருளற்ற வார்த்தைகளில் தனது துயரத்தை வெளிப்படுத்திய கோடீஸ்வரன் ஒப்பிலான் பற்றி சொன்ன முதல் வார்த்தை அவன் மனுசன்யா… மாமானுல அழைப்பான் என்று கோடீஸ்வரன் வெளிப்படுத்திய அந்த மாமா என்ற அழைப்பின் அன்பினை அறிய ஒப்பிலான் சித்தீக் இல்லை.  ஒருமுறை கோடீஸ்வரனிடம் சொல்லச் சொல்லிக் கேளுங்கள்.

ச்சே… இறந்துட்டாரா எப்ப என இமுருறைக்கு மேலும் கேட்டிருப்பார். ஒப்பிலானின் இன்னும் சில மனிதர்களை சுட்டிக்காட்டி சித்தீக் போல வரமுடியாதுப்பா நீ அவரை பார்திருக்கியா என்று கோடீஸ்வரன் என்னிடம் கேட்டார்.

இல்ல சார் புகைப்படத்தில் பார்த்தேன் ஷாநவாஸ் தான் காண்பித்தார் என்றேன்.

 அதற்கு பின்னான சிலநிமிடமும், கோடீஸ்வரனிடம் விடைபெற்று நானும் ஷானும் கடந்துவந்த தூரத்தையும் ஒப்பிலான் சித்தீக் எடுத்துக்கொண்டார்.

ஒரு மனிதன் இறந்த பின்பு நாம் நன்கு அறிந்த இவரைப்பற்றி நாம் அறிந்திராத ஒருவர் அவன் மனுசன்யா என்று சொல்லக் கேட்கும்போது ஒப்பிலான் சித்தீக்கின்  வாழ்க்கைக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டியிருக்கும்?

 நமக்கு ப்ரியமானவர்கள் காற்று, மழை, வெயில் என ஏதோ ஒரு இயற்கையின் வடிவில் நம்மை சுற்றிலும் வியாப்பித்திருப்பதாக எனது பாட்டி சொல்லக்கேட்டிருக்கிறேன். ஒரு வேளை கோடீஸ்வரனும் ஷாநவாஸ்ம் உரையாடியதை ஒப்பிலான் சித்தீக் கேட்டிருக்கலாம்!

 அடுத்த முறை ஷானை சந்திக்கும் போது சிங்கப்பூரில் இருந்து தருவித்து ஒப்பிலான் சித்தீக்  பயன்படுத்தி மிச்சமான அந்த பென்சில்களில் ஏதேனும் ஒன்றை வைத்திருந்தால் ஒன்று கொடுங்களேன் என்று கேட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

 ஒப்பிலான் என்றால் இனி எனக்கும் சித்தீக் தான் ஞாபகத்தில் வருவார் அதுவம் ஒரு மனிதனாக!

 

பாண்டித்துரை