விமர்சனக் கூட்டம்- தானாய் நிரம்பும் கிணற்றடி

அய்யப்பமாதவனின் ”தானாய் நிரம்பும் கிணற்றடி” சிறுகதை நூல் விமர்சனக் கூட்டம்

நூல் குறித்து உரையாடுபவர்கள்

கவிஞர் நேசன்
கவிஞர் அசதா
எழுத்தாளர் முருகன்
கவிஞர் தாரா கணேசன்
எழுத்தாளர் விஜய மகேந்திரன்

நாள் : 10.04.2011இ மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை

நிகழ்ச்சி ஏற்பாடு : அகநாழிகை பொன். வாசுதேவன்

பதிப்பகம்: தமிழ்வனம்

ஏதாகினும் செய்

இன்றவனுக்கு

பரிசுத்தமான ஒரு அப்பத்தைப் பரிசளிக்கலாம்
மண்டியிட்டுப் பிரார்த்திக்க வேண்டும்
அதற்கு தேவாலயம் செல்லவேண்டும் காதலியிடம் சொல்லி

காதலியிடம் சொல்லி
எனக்கான முத்தங்களைப் பரிசளிக்கலாம்
அதற்கு அவள் ஆமோதிப்பது சந்தேகமே
 
ஒரு கவிதை எழுதிப் பரிசளிக்கலாம்
அதற்கு அவளின்
ரஸவாத சொற்களை அறிந்திருக்க வேண்டும்
 
வோட்கா புட்டியைப் பரிசளிக்கலாம்
அதற்கு யாரேனும்
விமானத்தில் பயணிக்க வேண்டும்
 
அவனின் அறையைச் சுத்தப்படுத்தி பரிசளிக்கலாம்
அதற்கு அவன் புனிதஸ்தலமாக பாவித்து
உடனிருக்கும் நண்பர்களை ஆலிங்கனம் செய்துவிடலாம்

மெடிசாவின் மோலி மலரைப் பரிசளிக்கலாம்
கிரேக்க நாட்டிற்குச் செல்லவேண்டும்
அதற்கு தேவதைகளின் மொழியை அறிந்திருக்க வேண்டும்
 
திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும்
ஒரு சொல்லால் பரிசளிப்பதை
 
அதுவும் ஒரு குறுஞ்செய்தியாக
அதுவும் ஒரு தொலையாடலாக

என்னைத் தொடர்ந்து
யாரேனும்
இன்னும் சிலர்
மானசீக காதலிகளின்
 
நிரம்பி வழியும் அன்பினால்
நிரம்பி வழியும் பரிசுகளால்
 
தற்கொலை செய்து கொள்ள
உத்தேசித்தவன்
ஒத்திப்போட்டு
 
இரவு விருந்திற்கான ஓல்டு மங்க்கை
எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம்.
 
(க்கு)

நன்றி:உயிரோசை (உயிர்மை.காம்)

“கல்லூரி” திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் சிங்கப்பூர் 24.10.2009 அன்று சிங்கப்பூரில்

சிங்கப்பூர் ஆங் மோ கியோ நூலகத்தில் 24.10.2009 அன்று மாலை 6.15மணிக்கு கவிஞர் அய்யப்பமாதவன் இயக்கிய செழியன் ஒளிப்பதிவு “தனி” குறும்படம் வெளியிடப்படுகிறது.

 

இந்த நிகழ்வில் செழியன் அவர்கள்  நல்ல சினிமா பற்றி சிறப்புரை நிகழ்த்துகிறார்.

நிகழ்வின் இறுதியில் செழியனுடன்  கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மேலதிக விபரங்களுக்கு

 

பாண்டித்துரை

82377006

திரை : குறும்படம்

விட்டு விடுதலையாகி – செழியன்

Vittu-viduthalai---Cd-Cover

 தமிழில் சமீபகாலமாக அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று ‘குறும்படம்’. கிடைக்கிற வசதிகளைக் கொண்டு நண்பர்களாகச் சேர்ந்து தயாரிக்கப்படும் இத்தகைய குறும்படங்களில் நல்லது எது எனப் பிரித்துக் கண்டறிவது சிரமமான வேலைதான். சமீபத்தில் நண்பரொருவர் தனது ஊரின் இலக்கிய அமைப்பின் சார்பாக நடத்திய குறும்பட விழாவில் சிறந்தது எது என்று தேர்ந்தெடுக்க முடியாத அளவுக்கு அவற்றின் தரம் இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். ஒரு கலை வடிவம் தனது எளிமையினால் வசீகரிக்கும்போது இவ்விதமான அதீதமான தயாரிப்புகளும் நகல்களும் உருவாவது தற்செயலானதுதான். முன்பு சிறுகதைக்கும் பின்பு புதுக்கவிதைக்கும் நேர்ந்தது இப்போது குறும்படங்களுக்கும் நேர்கிறது எனலாம். எனவே, குறும்படம் என்றாலே கொஞ்சம் ஜாக்கிரதையாகித் தவிர்க்க நினைக்கிற மனோபாவம் தீவிரமான திரைப்படப் பார்வையாளர்களுக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இத்தகைய சூழலில் விட்டு விடுதலையாகி என்றொரு குறும்படம் பார்க்க நேர்ந்தது. சிறு நகரத்தின் ஒரு வீட்டில் தொடங்குகிறது கதை. அம்மா, அப்பா இருவரும் வேலை பார்க்கும் ஒரு மத்தியதரக் குடும்பத்தில் அவர்களின் மகனாக வளர்கிற சிறுவனின் நோக்கில் கதை சொல்லப்படுகிறது. ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைபார்ப்பவர்களாக இருக்கும்போது அவர்களுக்கிருக்கிற மன அழுத்தம், அவர்களுக்குக் குழந்தையாக இருக்கும்போது அந்தச் சிறுவனுக்கு நேர்கிற கவனிப்பின்மை நமது கல்வித் திட்டங்களால் அவனுக்குத் தரப்படும் சுமைகள் என்று நுணுக்கமாக அணுகுகிறது இக்குறும்படம்.

பரந்த நிலவெளிகளில் சுதந்திரமாய் ஓடித் திரிகிற சிறுவனின் கனவுகளுடன் தொடங்குகிறது படம். இடையிடையே ஆசிரியரின் அதட்டும் குரலும் மேடையில் தட்டுகிற பிரம்பின் ஒலியும் வாங்கிய அடியின் வலியும் தூக்கத்தில் உறைக்க அவனது கனவு கலைகிறது. விழித்து எழுந்தால், வேலைக்குக் கிளம்புகிற பதட்டத்தில் இருக்கும் பெற்றோர்கள் அவன் பள்ளிக்குக் கிளம்பவேண்டிய அவசரத்தை உணர்த்துகிறார்கள். அவனுக்கு உட்காரக்கூட நேரமில்லாமல் காலைக் கடன்கள் நடப்பதும் கட்டாயக் குளியல் நடத்தி அவசரமாகச் செய்யப்பட்ட உணவைச் சாப்பிட நிர்ப்பந்தித்து மூவரும் தங்களின் கடமைகுறித்து வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்புகிறார்கள். பள்ளிக்கு வரும்வழியில் தனது பள்ளி ஆசிரியர் ஒருவரின் மரணத்தினால் இன்று விடுமுறை என்று அறிகிற சிறுவன் மகிழ்ச்சியுடன் தெருக்களைக் கடந்து வீட்டுக்கு வருகிறான். தங்கள் பதட்டத்தில் கிளம்பிய பெற்றோர்கள் அடுப்பில் எரிந்த கேஸ இணைப்பை நிறுத்தினோமா என்ற சந்தேகத்தில் திரும்பவும் வீட்டுக்கு வருகிறார்கள். சிறுவனும் வருகிறான். பள்ளி விடுமுறை என்றாலும் வீட்டுப் பாடங்களைப் படிக்கும்படி கட்டாயப்படுத்தி வெகு இயல்பாகச் சிறுவனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு அப்பாவும் அம்மாவும் வேலைக்குக் கிளம்புகிறார்கள். தன் விடுமுறை நாளைப் பூட்டிய வீட்டுக்குள்ளிருந்து சிறுவன் எப்படிக் கழிக்கிறான் என்பது மீதமுள்ள கதை.

 பூட்டிய கதவைப் பிடித்துக்கொண்டு தெருவைப் பார்த்து நிற்கிறான். வழியில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறான். அயர்ந்து தூங்குகிறான். தனது பாட்டியுடன் கிராமத்தில் சுற்றித் திரிந்த நாட்கள் ஒரு சுதந்திரக் கனவென வருகின்றன. வேலை முடித்துத் திரும்பும் அம்மா அவனது கனவைக் கலைக்கிறாள். திரும்பவும் தலை வாரி மாற்று உடை அணிவித்து தனிவகுப்புக்கு (tuition) அனுப்புகிறாள். வகுப்புக்குச் செல்லும் வழியில் அசையும் பெருமரங்களுடன் தனித்திருக்கிற நிலக் காட்சி அவனை ஈர்க்கிறது. இரண்டு கைகளையும் பறவையென விரித்துப் பறப்பது போல் காய்ந்த அந்தப் புல்வெளிகளுடே ஓடிச் செல்கிறான். கல்வி சார்ந்து குழந்தைகள்மேல் சுமத்துகிற பாரம் குறித்த suதீ title உடன் படம் நிறைவடைகிறது.

வீட்டுக்குள் பூட்டப்பட்டதும் சிறுவன் தெருவில் பார்க்கிற காட்சிகள் அனைத்தும் இயல்பானவை. அனுமன்போல் வேஷமிட்ட பகல் வேஷக்காரர்கள் அவன் வீட்டைக் கடப்பது, விடுமுறை நாளை சைக்கிளில் சுற்றிக் கொண்டாடுகிற நண்பனிடம் ஐஸ் வாங்கித்தரச் சொல்லிக் கேட்பது, கிளி ஜோசியன் கூண்டிலிருந்து வெளிவரும் கிளியுடன் பேசுவது பிறகு அது கூண்டுக்குள் அடைக்கப்பட்டு தானியங்கள் கொறிக்கையில், தங்கள் உறவினர் வருகையில் rhymes சொல்லச் சொல்லி பெற்றோர்கள் கேட்க இவன் சொல்வது அதற்கு பரிசாக அவர் இனிப்புகள் தருவது எனக் காட்சி ரீதியாக உவமிக்கப்படும் இடங்கள் அழகானவை.

கதை நிகழும் நகரத்திற்குரிய மனிதர்களை நடிகர்களாகத் தேர்ந்தெடுப்பதும் நடைமுறை வாழ்க்கையின் இயல்பான உரையாடல்களையே அவர்களைப் பேசவைப்பதும் நல்ல விஷயம். அதுபோலத் தெருவின் இயல்பான இயக்கத்தையும் இப்படம் தன்வழியே பதிவுசெய்கிறது. பணியாரம் சுடும் கிழவியைக் கடந்து செல்லும் துப்புறவுப் பணியாளர்கள், பகல் வேஷக்காரர்கள், கிளி ஜோசியக்காரன் என சிறு நகரத்தின் பகல் பொழுதைக் கடந்து செல்லும் வெயிலும் மணிதர்களும் இப்படத்தில் இயல்பாகப் பதிவாகிறார்கள். ஒலி, ஒளி சார்ந்த நுட்பப்பிழைகள் உறுத்தியபோதிலும் இவ்வகையான படங்கள் தயாராகும் பிரதேசத்தின் நுட்பங்களையும் இம்மாதிரிப் படங்களைத் தயாரிக்க முன்வருகிற மனப்பாங்கையும் முன்வைத்து இப்படத்தின் உள்ளடக்கத்தை மட்டும் நாம் யோசிக்கலாம். பாட்டியுடன் தான் இருந்த கிராமத்து நாட்களை நினைவுகூர்கிற காட்சித் தொகுப்புகளின் நீளமும் சற்றே அதிகமானது. மேலும் சிறந்த பின்னணி இசை சேர்த்திருந்தால் இதன் தாக்கம் இன்னமும் வலுவாக இருந்திருக்கும்.

 சிறு நகரத்தின் நுட்பங்களைக்கொண்டு இப்படத்தைத் தயாரிக்க முடிவதும் அதன் வழியே தான் சொல்ல நினைக்கிற கதையை அழகாகப் பதிவுசெய்வதும் இயக்குனரின் மேல் நமக்குப் பெரிய நம்பிக்கையைத் தருகின்றன. வெகு ஜனங்களுக்கான வணிகத் திரைப்படத்தை மீறிக் காட்சிக் கலாச்சாரத்தில் தன் ஆதங்கத்தைப் பதிவுசெய்யும் இம்மாதிரிப் படங்களின் சிறு முயற்சியே மாற்று ஊடகத்தை உறுதியாக நிர்மாணிக்கும். அவ்வகையில் குறும்படங்களில் தேடல் கொண்டவர்கள் தங்கள் நேரத்தில் முப்பது நிமிடங்களைத் தாராளமாக இந்தப் படத்திற்கென ஒதுக்கலாம்.

நன்றி: காலச்சுவடு.காம்

திரை: விட்டு விடுதலையாகி
செழியன்