உயிர்எழுத்து ஜீலை இதழில் சில கவிதைகள் மற்றும் மௌனம் மலேசியா இதழிலும்

1.

குட்டப்பன் தோட்டத்து

கிடை அமர்த்தலில்

இரு ஆடுகள் பேசிக்கொண்டிருந்தன

ஒருநாள் நம்மை

வெட்டப்போகிறார்கள்

இருப்பினும்

மேய்ச்சலுக்காக திறந்துவிடுவதால்

மலைமுகட்டின் உச்சிக்கு சென்றுவர முடிந்த்து

 புதிதாய் சந்தித்த இருவரோடு கைகுலுக்கிய

 நம்மை ஒரு நாள்

வெட்டப்போகிறார்கள்

நம்மை தின்றுவாழும் இவர்களை

கர்த்தர் ரட்சிப்பாராக

நமக்கு பின்னால் வரும் சந்ததியையும்

மேய்ச்சலுக்காக திறந்துவிடுவார்கள்

கர்த்தர் இரட்சித்துக்கொண்டே இருக்க

 

2.

சிறப்புப் பேச்சாளர் வரத்தவறிய

ஒருநாளில்

கூட மாட ஒத்தாசைக்கு ஓடிக்கொண்டிருந்த

 என்னை

விழாக்குழுவினர் பெருமித்தத்தோடு மேடை ஏற்றினர்

பேசத்தொடங்கினேன்

இப்படியெல்லாம் இருக்க விரும்பியதில்லை

 சில நேரங்களில்

சூழல் நம்மை சிக்கவைத்துவிடுகிறது

அந்த நேரத்து தயக்கங்களை உடைக்க

ஒரு கதை சொல்லலாம்

பிடித்த பாடலை பாடலாம் என்றுச் சொல்லி

 பால்யகாலத்தில்

இப்படி இப்படியெல்லாம் இருந்தேன் என்றுச் சொல்லி

முடித்தபோது

எல்லோரும் குழந்தையாகிவிடுகின்றனர்

மொழிச்சிக்கல் ஏற்படுவதில்லை

எதைச் சொன்னேன் என்று

ஞாபகப்படுத்துகையில்

கையொலிக்கிடையே

குடுக்கப்பட்ட நேரம் முடிந்திருந்தது

மேடை ஏற்றிய பெருமிதத்தோடு

எதிரே விழாக்குழுவினர்.

 

3. அன்பாய் அவனை புறக்கணிப்போம்

ஆகக் கொடிய தண்டனையாய்

பார்க்கும் இடங்களில் எல்லாம்

அவன் அழுது கொண்டே இருக்கட்டும்

 

அவன் அழுது கொண்டே இருக்கட்டும்

 

மதிய உணவிற்குப் பின்னான தூக்கத்தில்

 நமக்காய் ஒரு கவிதை எழுதி

சுயமாய் அதன் குணமாய் வெடித்து

அவன் அழுது கொண்டே இருக்கட்டும்

 

அவன் இன்பம் சுமந்து வந்த

இரவின் கனவெல்லாம்

இருள் சூழ்ந்து போக

அவன் அழுது கொண்டே இருக்கட்டும்

 

பைத்தியகாரனாய் மாறிய பின்பு

அவன் கை பற்றி நடக்க

நமக்கு பயமாக இருக்கிறது

அவன் அழுது கொண்டே இருக்க

துரத்தியடிக்க துணை தேடி

தொடர்பை அறுப்போம்

 

அவன் அழுது கொண்டே இருக்க

தொப்புள்க்கொடி தொடர்பை அறுப்போம்

அவன் அழுது கொண்டே இருக்கட்டும்

 

ஆழ்ந்த மௌனத்திற்கு பின்னான

ஒரு சொல் போதும்

அந்த ஒரு சொல்லாலும்

இனி அவன் சார் நினைவு தொடரா

அன்பாய் அவனை புறக்கணிப்போம்

 

அவன் சுயம் சார்ந்த ஒன்றை

பலமிழக்கச் செய்ய

நாம் செய் தவற்றை மறந்து

அன்பாய் அவனை புறக்கணிப்போம்

 

கடல் சூழ் நகரமெங்கும்

பெருகும் கால்தடம் ஒன்றில்

அவன் சார் நினைவு தொடரா

பெருகும் கால்தடம் ஒன்றால்

அன்பாய் அவனை புறக்கணிப்போம்

 

அம்மா, அன்னை திரேசா, மாதா அமிர்தாவுடன்

 ஆக கடைசி நாமென்ற பிம்பம் உடைய

 அவன் சார் நினைவைத் தொடர இனியாருமில்லை

அன்பாய் அவனை புறக்கணித்து

நாம் சிரிப்போம்

 

நம்மைச் சுற்றிய பிரபஞ்சத்தை மறந்து

நாம் சிரிப்போம்

அவன் அழுது கொண்டே இருக்க

நாம் சிரிப்போம்

 

மௌனம் மட்டுமே இடைவெளியாய்

மரணத்தை தொடும் நடைவெளியில்

அன்பாய் அவனை புறக்கணிப்போம்

 

அவன் அழுதுகொண்டே இருக்க

அன்பாய் அவனை புறக்கணிப்போம்

 

அவன் அழுதுகொண்டே இருக்க

அன்பாய் அவனை புறக்கணிப்போம்…

நன்றி  உயிர்எழுத்து – ஜீலை இதழ்

நன்றி மௌனம் மலேசியா கவிதை இதழ்

2008 திரும்பிப் பார்க்கிறேன்

happy2008

அட! அதற்குள் 2008 கடந்துவிட்டதா, என்பதை தவிர திரும்பிப்பார்த்தால் எல்லாம் மகிழ்வான தருணங்களாகத்தான் இருந்திருக்கிறது.

 

2008-ன் துவக்கத்தில் நாம் என்னும் காலாண்டிதழை நண்பர்களுடன் ஆரம்பித்தது, பிரம்மா என்னும் கவிதை தொகுப்பினை (எனது முதல் கவிதை தொகுப்பு) நான்கு நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டது, அம்ருதா, யுகமாயினி, வடக்குவாசல், உயிரெழுத்து, அநங்கம், உயிரோசை (இணையம்) இதழ்களில் எனது படைப்புகள் வெளிவந்தது, முதல் தொலைக்காட்சி படைப்பு (சிங்கப்பூர் வசந்தம்), சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமை (PR) பெற்றதுடன் அடுத்த ஆண்டு என் ஊரில் எழுந்து நிற்கப்போகும் குடியிருப்புக்கு அடித்தளம் போட்டது வரை எல்லாம் மகிழ்வான தருணங்களே.

 

என்ன பாண்டி, அப்ப துன்பங்களே இல்லையா? என்றால்

 

இருக்கிறது!

 

ஆகக்கொடிய வலியினை மார்ச்-08  மத்தியில் அரவணைத்துக்கொண்டேன். இதன் வீச்சு இதயத்தில் துளையாய் இன்னும் இருக்கிறது. 2009-தினை இன்முகமாக வரவேற்க எல்லோரும் எழும் தருணத்திலும் என்னுள்ளேயான துன்பத்தின் சாயலை வெளிக்கொணர விரும்பவில்லை.

 

எப்பவும் அழாதடா, சிரிச்ச முகமாக இரு. இல்லை இல்லைனு சொல்லாத, எல்லாம் உன்னிடம் இருக்கிறது. வரும்! எல்லாம் ஒவ்வொன்றாய். உன்னைச் சுற்றிலும் மெழுகின் ஜோதியைத்தான் நீ நிரப்ப வேண்டும் என்று சொன்ன தோழி நினைவுக்கு வருகிறாள் இவானோடு! .

 

அதற்கான முயற்சியாய் 2008ன் துன்பங்களோடு

 

இனி

எனக்கான வலியினை

யாரிடமும் சொல்லப்போவதில்லை

ஏன்

என்னிடம் கூட!

 

2009 ன் துவக்கத்தில் எதற்காக காத்திருக்க போகிறாய் என்றால்

 

ஒரு கவிதைக்காக!!!

 

2008 ன் துவக்கத்திற்கான முதல் நாளிரவு அழகான ஒரு கவிதையை மனம் சுமந்துநின்றது, அந்த கவிதையை இந்த நேரத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

 

 

கவிதைக்கான காத்திருத்தலோடு

பாண்டித்துரை

 

@pandiidurai@yahoo.com