1.
வெளிச் செல்லும் விருந்தினரைப்
பின்தொடர்ந்து செல்ல
இளா அடம்பிடிக்கிறாள்
அழத்தொடங்குகிறாள்
டாக்டர்கிட்ட ஊசிகுத்தப் போறாங்க
என சொல்வதற்கு முன்
2.
யானை சவாரி செல்ல
இளா கூப்பிட்டாள்
பழக்கப்பட்ட யானையைப்போல்
மண்டியிட்டு அவளை ஏற்றிக்கொண்டேன்
யானைத் தலையைப் பிடித்த இளா
இடமும் வலமும் ஆட்டத் தொடங்கினாள்
யானை நகரத் தொடங்கியது
3.
அம்மாவுடனான தொலையாடலுக்குப் பின்
யாரு பேசறாங்க எனக் கேட்கும் முன்
சிவமயம்
உலகெங்கும் பரவியதுபோல்
பாரிவள்ளல் பள்ளியின்
கல்விப்புகழ் உலகெங்கும் பரவட்டும்
நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
எனச் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்
மாறுவேடப் போட்டியில்
சிவன் வேடம்போட்ட ஜெகஜோதி
4.
வரைந்தவனின் மௌனத்தை
வார்த்தையாக்கும் போது
காலம் உனதாகிறது
(அறிவுநிதிக்கு)
நன்றி: உயிரோசை.காம் (100-வது இதழ்)