யாமிம்

துயில் எழுந்த முகத்துடன்
முன்பு ஒருமுறை
நான் வரைந்த ஓவியத்தை
அவளுள் ஒளித்து வைத்திருந்தாள்
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவள்
எப்போதும் இல்லாத
சாந்தமாக இருந்தாள்
அப்பா
மாமா
அம்மாயி
நண்பர்கள்…..
ஆனந்தமயமான
கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்தபடி
அவளின் அழகை தரிசித்தனர்
கொஞ்சமும் பயமில்லாமல்
படுத்திருந்தாள்
பரிசளிக்க
என்னிடம் ஒன்றும் இல்லை
சட்டைப்பையில் கூட
முத்தம் குடுக்க நினைத்தேன்
இப்போதைக்கு வேண்டாம் என்பதாய்
புன்னகைத்தபடி சயனித்திருந்தாள்
இதற்கு முன்பு
சேகரித்த சொற்களுடன்
விடுபட்ட ஒற்றைச் சொல்லையும் இணைத்து
“ல்” லில் மாலை அணிவித்தேன்
அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டிருந்தவள்
விடுவித்து
என் கையை ஏந்திக்கொண்டாள்
மென்மையாக வருடத்தொடங்கினேன்
நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்
மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளப்போவதாகவும்
மறுப்பேதுமின்றி
முத்தங்கள் கொடுக்கப்போவதாகவும்
நிலவில் கட்டப்போகும் வீட்டைப்பற்றியும்
யாமிம்
அவளை ரொம்ப பிடித்திருந்தது
இறந்த பின்பு.

©pandiidurai@yahoo.com

 

நன்றி:உயிரோசை (உயிர்மை.காம்)