இந்தக் கொடுங்கனவு தமிழர்களின் நினைவுகளில், அந்த நினைவுகளால் எழுதப்படப்போகும் சரித்திரத்தில் நிரந்தரமாகப் படிந்துவிட்டது. உலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்கள் வரலாற்றில் இதற்கு நிகரான ஒரு கொடுங்கனவு எப்போதும் நிகழ்ந்த்தில்லை. பிரபாகரனின் உடல் என்று காட்டப்பட்ட ஒரு பிம்பம் தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனதை சிதைத்ததுபோல இன்னொரு பிம்பம் சிதைத்ததில்லை. ஈழப்போரட்டத்தின் துயரக்கதைகளையும் சாகசக் கதைகளையும் இடையறாது கேட்டு வளர்ந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையில் அந்தப் போராட்டம் இன்று அழித்தொழிக்கப்பட்டிருக்கும் காட்சி ஏற்படுத்தும் வெறுமையும் கசப்பும் கடந்துசெல்லக் கூடியதல்ல. விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் இன்று தோற்கடிக்கப்பட்ட குரூரமாக சிதைக்கப்பட்ட தமிழ் அடையாளத்தின் வடிவமாக மாறியிருக்கிறார்கள். இந்த யுத்தத்தில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு லட்சம் தமிழர்கள் சர்வதேச அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் ரத்த சாட்சியாக இருக்கிறார்கள். இந்தக் கணத்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ் என்ற மொழிப்பிரதேசத்தில், நாடற்றவனாக, நிலமற்றவனாக, மிகக் குரூரமாக தோற்கடிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நாஜிக்களால் படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் இவ்வாறுதான் உணர்ந்திருக்கக் கூடும். தமிழ் அடையாள உணர்வுக்கு வெளியே, அன்னியர்கள் இந்த்த் துயரத்தை புரிந்து கொள்வது கடினமானது. அவர்கள் புலிகளின் அரசியல் தவறுகளைப் பற்றி பேசுவதன் வழியே தெற்காசியாவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த மாபெரும் இனப்படுகொலையை சமன்படுத்திவிடக் கூடும். ஆனால் இந்தக் காயம் இந்த வீழ்ச்சியி புலிகளின் வீழ்ச்சி அல்ல. வேட்டையாடப்பட்ட ஒரு இனக் குழுவின், படுகளத்தில் கைவிடப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வீழ்ச்சியின் சரித்திரம் இது.
சிங்கள மக்கள் இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது முரசங்களை அதிரச் செய்தபடி நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு இனத்தின்மீது கொள்ளப்டபட்ட வெற்றியின் நடனம். பயங்கரவாதத்தை வெற்றி கொண்டதற்கான உலக நாடுகள் இலங்கை அரசுக்கு வாழ்த்துகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் நடந்த இந்த பச்சை ரத்த இனப் படுகொலையை ‘அத்து மீறல்கள்’ என மென்மையான குரலில் சில மனிதாபிமான சக்திகள் கண்டித்து வருகின்றன. சரணடைய வந்த புலிகளின் தலைவர்களையும் தளபதிகளையும் கொன்று தீர்த்த ராஜபக்சேவின் அரசு ஒரு மறுப்பு அறிக்கையின் மூலம் தனது கொடூரமான போர்க் குற்றங்களை மறைத்துவிட்டது. ராஜபக்சேவின் ராணுவத்தின் போராட்டத்தையும் பிறகு பிணங்களையும் காட்டி கொடுத்தவர்கள் இனி பொம்மை அரசுகளுக்கு தலைமை தாங்கி நீதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவார்கள். தமிழர்களுக்கு எதிரான இந்த யுத்தத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவும் சீனாவும் தங்களது எதிர்கால யுத்த தந்நிரங்களுக்காக இந்தச் சின்னஞ்சிறுதீவை மேலாதிக்கம் செலுத்த தொடர்ந்து போட்டியிடும்.
தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட இவ்வளவு குரூரமான இனப்படுகொலைக்கு எதிராக தலையிட சர்வதேச அரங்கில் எந்த நாடும் முன்வரவில்லை. மன்னிக்கமுடியாத போர்க்குற்றங்களை இழைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தை உறுதியுடன் கண்டிக்க ஜ.நா உட்பட எந்த சர்வதேச அமைப்பும் முயற்சிக்கவில்லை. நவீன உலக வரலாற்றில் இந்த அளவிற்கு புறக்கணிக்கப்பட்ட ஒரு மனித்த துயரம் இனப்படுகொலை வேறு எதுவும் இல்லை. தமிழர்கள் ஆங்காங்கே தெருமுனைகளில் ஆர்ப்பாட்டம் செய்து தடியடி வாங்கிக் கொண்டு கலைந்துபோகிறார்கள். கவிதைகள் எழுகிறார்கள். கபட அரசியல்வாதிகளின் கையில் தங்கள் கனவுகளையும் நம்பிக்கைகளையும் கையளிக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு பெரிய அழிவிற்கு ஆட்படுத்தப்பட்டாலும் அவர்களால் செய்யக் கூடியது எல்லாம் அது மட்டுமே.
இலட்சக்கணக்கான மக்கள் இலங்கை அரசின் தடுப்பு முகமாம்களில் பசியிலும் பட்டினியிலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்குப் பதில் ஏதும் இல்லை. தனது இனப்படுகொலையின் சாட்சியங்களை மறைப்பதில் மும்மரமாக இருக்கும் இலங்கை அரசு சர்வதேச உதவி நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து வருகிறது.
தனக்கென ஒரு நாடில்லாத ஒரு அரசு இல்லாத ஒரு இனத்தின் குரூரமான வீழ்ச்சி. இது என்றென்றும் நமது நினைவுகளில் நமக்கு பிந்தைய தலைமுறைகளின் நினைவுகளில் நிலைத்து நிற்கும். நாடற்றவனின் துயரம், கொலைக் களத்தில் தமக்காக பேசுபவர்கள் யாருமற்றவர்களின் துயரம் வரலாற்றின் அவர்கள் உயிர்த்தெழுவதற்கான வலிமையைக் கொடுத்திருக்கிறது. தமிழினமும் என்றேனும் ஒரு நாள் தனது தோல்வியிலிருந்தும் அழிவிலிருந்தும் உயிர்த்தெழும்.
இப்போது தமிகர்கள் எந்த நாட்டில் எந்த அரசின் கீழ் வாழ்ந்தாலும் அவர்கள் நாடற்றவர்கள், அகதிகள், தோற்கடிக்கப்பட்டவர்கள்.
மனுஸ்ய புத்திரன்
ஜீன் 2009 உயிர்மை இதழில் இருந்து.
நன்றி: மனுஸ்ய புத்திரன், உயிர்மை