டோ டோ பறவையின் ஞாபகங்களுடன்

கடந்த ஞாயிறு 14.06.09 மாலை 4.30மணியளவில், இரு மலேசிய எழுத்தாளர்களின் நூல் அறிமுகத்துடன் நவீன எழுத்துகள் சார்ந்த புரிதலுக்கான கலந்துரையாடலாக சிங்கப்பூர் தேசிய நூலகவாரியத்தின் 16வது (POD) மாடியில் எழுத்தாளர் பாலுமணிமாறனின் ‘தங்கமீன்’ பதிப்பக ஏற்பாட்டில் நடைபெற்றது.

உள்நுழைந்து வெளிரும் வரையில், பார்வையாளர் வருகையில் இருந்து நிழ்வில் நிறையவே வித்தியாசங்களை உணரமுடிந்தது. நிழவின் முதலாக தங்கமீன் பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் பாலுமணிமாறன் வாழ்த்துரையும், நன்றியுரையையும் ஒருங்கே சொன்னார்.

பின்னர் பேசவந்த சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அவர்கள் “நவீனவாதம் ஒரு பகிர்வு” எனும் தலைப்பில், அவருள் இன்னும் முழுமைபெறதா நவீனத் தேடலை மேலைநாடுகளில் தொடங்கி, தமிழக எழுத்துகளின் மீதான நவீனத் தோன்றலுடன், ஈழ இலக்கியங்களின் நவீன வாழ்வியலையும், மலேசிய சிங்கப்பூர் நவீன வாதம் என ஐந்து கட்டங்களாக பிரித்தளிக்கபட்ட கட்டுரையை நிறைவுசெய்தபோது அறிவியல் சமன்பாடுகளாக பரிணமித்து பார்வையாளர்கள் முன் சிக்கலான பிம்பத்தையே தோற்றுவித்தது.

நவீனம், பின்நவீனத்தின் கூறுகளை எழுத்தாளர் சித்ரா ரமேஷ் பல்வேறு வண்ணச்சிதறல்களாக நவீன உலகின் வாழ்வியலையும், அதே வாழ்வியலை சங்ககாலத்திற்கும் எடுத்துச் சென்று இன்றைய, இயல்பான எதார்த்தமான விசயங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றுச்சொல்லி பள்ளிக்கூடம், பெண்ணியம் ஊடாகங்களை கடந்து பல்வேறு இசங்களைச் சுட்டி சொல்லப்பட்ட செரிவான செய்திகளை வாசகர்கள் உட்புகுந்து வந்தார்களா என்பதைவிட, கடைசியில் சொல்லப்பட்ட டோ டோ பறவையின் ஞாபகங்களை எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்திருக்ககூடும். அன்றைய இரவு உறக்கத்தில் டோரா புஜ்ஜியாக டோ டோ பறவையும் அதன் அழிவால் எப்படி டோ டோ மரங்களும் இன்று நம்மிடையே வெறும் பெயர்களாக இருக்கிறது என்ற பிம்பங்களைச் சுமந்து விடியும் வரையில் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

பின்னர் எழுத்தாளர்களே நூலினை அறிமுகம் செய்யும் நிகழ்வு அரங்கேறியது. 700 சிறுகதைகள் எழுதிய மலேசிய எழுத்தாளர் ஏ.தேவராஜன் அவர்களின் ‘அரிதாரம் கலைந்தவன்’ எனும் முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட எழுத்தாளர் புதுமைத்தேனீ அன்பழகன் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர். அதன்பின் பரவலாக கவனம்பெற்றிருக்கும் மற்றொரு மலேசிய இளம் எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது ‘கடவுள் அலையும் நகரம்’ முதல் கவிதை தொகுப்பை வெளியிட மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரான் பெற்றுக்கொண்டார்.

Devarajan Book Launch

‘எனது மேடு பள்ளங்கள்’ எனும் தலைப்பில் அரிதாரம் கலைந்தவன் எனும் சிறுகதை புத்தகத்தை எழுதிய மலேசிய எழுத்தாளர் ஏ.தேவராஜன் 80-களின் தொடக்கத்தில் இருந்து எழுதிய சிறுகதைகளின் வெளியையும், பரிச்சார்த்தமான முயற்சிகளை மேற்கொண்ட சிறுகதைகளுடன் சிறுகதைகளுக்கான கூறுகளையும் எடுத்துக்காட்டி இது நவீனமாக என்று சிறுகதையை படித்துப்பார்த்து புரிந்துகொள்ளுங்கள் என்றபோது எல்லோருக்குள் ஒருவித இறுக்கம் சுமந்துகொண்டது. அந்த இறுக்கங்களையெல்லாம் தனக்குள் மற்றொரு திறமையை பொதித்து வைத்திருந்த 70ற்கும் மேற்பட்ட குரல்களில் பேசும் ஏ.தேவராஜன் சிலகுரல்களில் பேசிக்காட்டியபோது தங்களின் இறுக்கங்களையெல்லாம் மறந்து சிரித்துக்கொண்டிருந்த பார்வையாளர்களுடன் 16வது மாடிக்கட்டிடம் கொஞ்சம் சிலிர்த்துத்தான் போயிருக்ககூடும்.

Bala Book Launch

‘கடவுள் அலையும் நகரம்’ எனும் தனது முதல் கவிதை தொகுப்பை அறிமுகப்படுத்திய மலேசிய இளம் எழுத்தாளர் கே.பாலமுருகன் ‘நானும் எனது கடவுள் அலையும் நகரம்’ எனும் தலைப்பில் ஆரம்பகாலத்தில் கவர்சியான காதல்கவிதைகளை எழுதி சுற்றிக்கொண்டிருத்தவன் என்று பட்டவர்தனமாக ஆரம்பித்து, தற்செயலான நிகழ்வாக கல்லூரிக் காலகட்டத்தில் வாசிக்கபட்ட நவீனம் சார்ந்த எழுத்தாளர்களைசுட்டி மறுவாசிப்பின் வழியேதான் அவர்கள் முன்வைத்த சிக்கல்களை, புரிதல்களை எனக்குள் கிரகிக்கமுடிந்தது என்றும், தனது கடவுள் அலையும் நகரத்தின் கடவுள் என்பது ஒரு குறியீடு, அந்த குறியீடு தனது இயல்பு வாழ்க்கையை சிதைத்து வாழ்ந்துகொண்டிருக்கிற மனிதர்களே என்பதை சில கவிதைகளின் வழியே புனிதபிம்பங்களையும், மனிதனை உற்பத்தியாக மாற்றும் நகரத்தின் பரபரப்புகளையும் உணர்வு சார்ந்து உடைத்தெறிந்தார். இருப்பினும் என்னற்ற வளர்ச்சிகளை தனக்குள் உள்ளடக்கி வானுயர்ந்து வளர்ந்திருந்த கட்டிடத்திற்குள் நின்றுகொண்டு இன்றும் ஆடுகளை வெட்டிக்கொண்டிருக்கறார்கள், இராமர்பாலம் என்றுச் சொல்லி முடக்கப்பட்ட திட்டங்களை முன்வைத்து வாழ்தலுக்கு சாத்தியமில்லாத எழுத்து படைப்பில் மட்டுமே நவீனத்தை உள்ளடக்கியிருக்கிறது, மாற அன்பு மட்டுமே நிரந்தரமானது அன்பாக இருங்கள் என்றபோது இவருக்கு முன் வந்தவர்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியதை பார்வையாளர்கள் உணர்ந்திருக்க்க் கூடும்.

பரவலாக எதிர்பார்க்கப்பட்ட கலந்துரையாடலின் துவக்கத்தில் மலேசிய மூத்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது சிங்கப்பூரின் பழமையை ஞாபகப்படுத்தி எது நவீனம் பின்நவீனம் என்றால் எல்லாமே மக்கள் விரும்பவேண்டும் என்பதை மனதில் வைத்து படைக்கவேண்டும் என்றார். இடையிடையே எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்கள் சை.பீர்முகமதுவின் கருத்துகளுக்கு பெண்ணியம் சார்ந்த சில கருத்துகளை முன்வைத்தார். பின்னர் தொலைபேசிவாயிலாக ‘கொரியா கண்ணனிடம்’ எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் சில கேள்விகளை முன்வைத்தார் பார்வையாளர்களும் தங்களுக்குள் எழுந்த சந்தேகங்களை கேட்டறிந்தனர். இவரைத்தொடர்ந்து தமிழக எழுத்தாளர் ‘உயிர்மை’ இதழ் ஆசிரியர் ‘மனுஸ்யபுத்திரனுடன்’ தொலைத்தொடர்பை ஏற்படுத்த பின் நவீனம் பின்பின் நவீனம் என்று நகர்ந்துவிட்ட சூழலில் நவீனக் கவிதைகளை மறுவாசிப்பு தொடர்ச்சியான வாசித்தலின் வழியேதான் அடையாளம் காணமுடியும் என்றபோது நகரவாழ்வின் பரபரப்பில் தங்களின் சுயத்தை இழந்துகொண்டிருந்த மனிதர்கள் கலைந்துசெல்லத் துவங்கியிருந்தனர்.

தங்கமீன் பதிப்பகம் வெளியீட்டு புத்தகங்கள் ஒவ்வொன்றும் படைப்புசார்ந்தும் ‘கலவை’ சிறுகதைதொகுப்பின் ஒரு நாள் நிகழ்வு, ‘பயாஸ்கோப்காரன்’ வழியே மலேசிய எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல், இன்று புரிதலை நோக்கிய பயணம் என்று சிறு சலனங்களை ஏற்படுத்தும் நிகழ்வாகவே முன்னெடுத்துச் செல்லும் இந்தப் பயணம் விமர்சனங்களை கடந்தும் தொடரவேண்டும்.

தனி மனிதர்களாக நகர்த்திக்கொண்டிருக்கும் இந்த மலேசிய சிங்கப்பூர் இலக்கிய நிகழ்வுகள் ஒரு குழுவாக அல்லது இன்னும் சிலர் சேர்ந்து இயங்கும்போது கூடுதலான இடப்பெயர்வுகளை உருவாக்கலாம். உருவாக்கப்படவுண்டிய சிங்கப்பூரின் தமிழ் இளம் எழுத்தாளர்கள் டோ டோ பறவையின் ஞாபகங்களாக ஆக்கப்படுவதற்கு முன் வாசிப்பதற்கு சிறந்த களத்தினை ஏற்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் அரசின் செயல்பாடுகள் அர்த்தம்பொதிந்த கனவாக….

பாண்டித்துரை