சிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 1

(பெப்ரவரி-09)

“பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்”

 

தங்கமீன் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் மலேசிய எழுத்தார் சை.பீர்முகம்மது அவர்களின் “பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும”; சிறுகதை நூல் வெளியீடு சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய ஆதரவுடன் பெப்ரவரி-09ல்  வெளியிடப்பட்டது.  பாலுமணிமாறன் எழுதிய கவிதையை தேசிய அளவிலனா நான்குமொழி பாடலில் தமிழ் பாடலுக்கு இசையமைத்த குணசேகரன் குரலில் இசையுடனான தமிழ்தாய் வாழ்த்தாக பாடியதுடன் நிகழ்வு தொடங்கியது.

 

நிகழ்வினை முன்னின்று நடத்திய பாலுமணிமாறனின் வரவேற்புரையையும் நன்றியுரையையும் தொடர்ந்து ஜோதி. மாணிக்கவாசகம் அவர்கள் நூலினை அறிமுகப்படுத்தினார். எல்லாக்கதைகளிலும் ஏதோ ஒரு ரூபத்தில் உள் நுழையும் கள்ளுக்கடையில் தொடங்கி, சிகப்புவிளக்கு, மயான கண்டம், அசுணப் பறவை, உக்கிரப் பாம்பு என்று இருபது சிறுகதைக்குள் பொதிந்திருக்கும் நட்பு பெண்ணுரிமை என்ற பலவித கருத்துகளின் மையஓட்டத்தை தொடுவதாக அமைந்திருப்பதாக நான் சொல்வது எல்லாம் இருபது கதைகளின் வாசகனாக என்ற நூலாய்வு வாசக பகிர்தலாக அமைந்தது.

 

  நிகழ்வில் சென்னையில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் அயலக தமிழர்களில் தமிழ் பணி செய்தமைக்காக திமுக இலக்கிய அமைப்பு வழங்கிய முதல் அயலக தமிழருக்கான அண்ணா விருதை பெற்ற தொழிலதிபர் போப்ராஜ் அவர்களுக்கு, மலேசிய எழுத்தாளர்கள் கையெழுத்திட்ட நினைவுப்பரிசினை வழங்கி கௌரவித்தனர். பின்னர் பேசிய கவிஞர் அமலதாசனின் தலைமையுரை, பள்ளிமாணவர்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனையாக அமைந்தது.

 

  கவிஞர் அமலதாசன் அவர்கள் நூலினை வெளியிட, முதல் பிரதியை முறையே முஸ்தபா அறக்கட்டளையின் தலைவர் முஸ்தபா அவர்களும், செல்லாஸ் உணவக உரிமையாளர் மா.அன்பழகனும் பெற்றுக்கொண்டனர்.

 

 

“இவன் நட்ட மரங்கள்

 

இவன் நட்ட ரப்பர் மரங்கள்

 

நிமிர்ந்து விட்டன

 

இவன் நடும்போது

 

குனிந்தவன்தான்

 

இன்னும் நிமிரவில்லை”

 

என்ற வரிகளை எழுதிய மலேசிய எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்கள் நூலாசிரியர் சை.பீர்முகம்மது பற்றிய அறிமுகத்தை சொல்லி, மூன்று தொகுதிகளாக வெளிவந்த “வேரும் வாழ்வும்” என்ற மலேசிய சிறுகதை தொகுப்பிற்கு எடுத்துகொண்ட முயற்சிகள் அதற்கு மேற்கொண்ட பயணங்கள், இருபத்தைந்து ஆண்டுகள் பெரிதாக ஏதுவும் எழுதாமல் ஒதுங்கியிருந்து மீண்டு வந்தபோது மாறிவிட்ட நவீன இலக்கிபோக்கிற்கு ஏற்றவாறு தன்னையும் மாற்றிக்கொண்டவர் சை.பீர் என்பதாக அமைந்தது.

 

                முனைவர் ரெத்தின வேங்கடேசன் வழிநடத்த நூலாசிரியரின் உரையுடன் தொடங்கிய கலந்துரையாடலில் “வெடித்த துப்பாகிகள்” எனும் சிறுகதையை பாடமாக கொண்ட சிங்கப்பூர் மெக்பர்சன் உயர்நிலைபள்ளி மாணவர்கள் பலர் ஆர்வமாக கலந்துகொண்டதுடன் கலந்துரையாடலில், கேட்ட எப்படி ஒரு சுவரஸ்யமான சிறுகதையை எழுதுவது, இந்த சிறுகதைக்கு எழுத எடுத்து கொண்ட கால அளவு, கதை கரு எங்கிருந்து கிடைத்தது, என்பது உட்பட பார்வையாளராக வந்திருந்தவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

  இங்கு வந்திருக்கும் நீங்கள் எல்லாரும் எழுத்தாளராக முடியும் உங்கள் மனதோடு நீங்கள் பேசத்தொடங்கும் போது, என்பதை மையப்படுத்தி எல்லோரும் விரும்பக்கூடிய பேச்சாக  மலேசியாவின் தென்றல் வாரஇதழ் ஆசிரியர் வித்யாசாகரின் சிறப்புரை அமைந்தது.

 

○ பாண்டித்துரை

©pandiidurai@yahoo.com

சில கவிதைகளுடன் கடவுள் அலையும் நகரம் – சிங்கப்பூரில்

oviyam

ஒவியம்: சந்துரு (மலேசியா)

மலேசிய எழுத்தாளர்களான கே.பாலமுருகனின் முதல் கவிதைதொகுப்பு “கடவுள் அலையும் நகரம்” சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பக வெளியீடாக மே-2009 இறுதியில் சிங்கப்பூரில் நவீன கவிதைகள் மீதான கருத்தரங்குடன் நடைபெறுகிறது. நிகழ்வு பற்றிய விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். கே.பாலமுருகன் “அநங்கம்” எனும் இலக்கிய பத்திரிக்கையை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்வில் மற்றொரு மலேசிய எழுத்தாளரான ஜாசின் தேவராஜன் அவர்களின் சிறுகதை தொகுப்பையும் தங்கமீன் பதிப்பகம் வெளியிடுகிறது. இவர்  “மௌனம்” எனும் கவிதைக்கான இலக்கிய இதழை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

கே.பாலமுருகனின் சில கவிதைகள்

 

பள்ளத்தில் நெளியும் மரணம்

இறந்தவர்களெல்லாம்
பள்ளத்தில் விழுந்து
மீண்டுமொருமுறை
மரணிக்க முயற்சிக்கிறார்கள்!

அவர்களின் தற்கொலைகள்
தோல்வியில் முடிகின்றன!

இந்தப் பள்ளங்கள்
ஒருவரை ஒருமுறைதான்
இரட்சிக்கும்!

நிலத்தின்
சதைப் பிடிப்பில்
விழுந்த காயங்களைச்
சுமந்து கொண்டு
மரணம் நெளியும்
பள்ளங்கள்!

வீட்டுக்கொரு
பள்ளம் உருவாகி
உயிரோடிருப்பவர்களுக்காகக்
காத்திருக்கின்றன!

அவர்கள்
பள்ளத்தில் விழும்
கணங்களை
அங்குலம் அங்குலமாக
அளவெடுத்து
நீண்டுருக்கிறது அவர்களுக்கான
மரணங்கள்!

நிலம்தோறும்
வளர்ந்திருக்கும் பள்ளங்கள்
மரணத்தைக் கண்டு ஓடுபவர்களை
மிக அலட்சியமாகக்
கொன்று குவிக்க
கடவுள் ஏற்படுத்தியிருக்கும்
பலவீனம்!

 கடைசி பேருந்து

கடைசி பேருந்திற்காக
நின்றிருந்த போது
இரவு அடர்ந்து
வளர்ந்திருந்தது!

மனித இடைவெளி
விழுந்து
நகரம் இறந்திருந்தது!

சாலையின் பிரதான
குப்பை தொட்டி
கிளர்ச்சியாளர்கள்
அப்பொழுதுதான் தொடங்குகிறார்கள்!

பேருந்தின் காத்திருப்பு
இருக்கையிலிருந்து
விழித்தெழுகிறான் ஒருவன்!

நகர மனிதர்களின்
சலனம்
காணமல் போயிருந்தது!

விரைவு உணவுகளின்
மிச்சம் மீதியில்
கைகள் படர்ந்து மேய்ந்து கொண்டிருக்கின்றன!

ஊடுருவி ஊடுருவி
யார் யாரோ திடீரென
நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

கறுப்பு மனிதர்களின்
நடமாட்டம்!
பேருந்து நிற்குமிடம் மட்டும்
குறைந்த வெளிச்சத்தில். . .

ஒரு சிறுமி
சாலையைக் கடந்து
வெருங்கால்களில் இருண்டுவிட்ட
கடைவரிசைகளை நோக்கி
ஓடும்போதுதான்
கடைசி பேருந்து
வந்து சேர்ந்திருந்தது!

இரு நகர பயணிகள் மட்டும்
முன் இருக்கையின் இரும்பு கம்பியில்
தலைக்கவிழ்த்து உறங்கியிருக்க
அபார வெளிச்சம்!

கடைசி பேருந்து
கொஞ்சம் தாமதமாகவே
வந்திருக்கலாம்!

நாங்கள் பூக்களாக இருக்கிறோம்

கட்டுப்பாடுகளற்ற ஓர் உலகத்தில்
வாழ்ந்தே பழகிவிட்டோம்!
எங்கள் வீதிகளின்
மரங்களெல்லாம் பேசுகின்றன!
நாங்கள் நடந்து வருகையில்
கிளைகளால் உரசி
எங்களை தேற்றுகின்றன!

எங்கள் பறவைகள்
உறக்கத்திலும் சிறகுகளை
முடக்குவதில்லை!
சேற்றுக் குளங்கள்
எங்களின் தாய் பூமியாக
இருந்து வருகின்றன!
நாங்கள் பறவையாகவும் இருந்திருக்கிறோம்!

எங்கள் சாக்கடையிலும்
தங்க மீன்கள்தான்!
சிரிக்கின்றன பேசுகின்றன!
நாங்கள் கடவுள்களை
வணங்குவதில்லை. . .
நாங்கள் பூக்களாகவே இருக்கிறோம்
படையலுக்குச் சென்றதில்லை!

எங்கள் மரங்கள்
எங்களை உதிர்த்ததில்லை!
என்ன ஆச்சர்யம்?
நாங்கள் பூக்களாகவே இருக்கின்றோம்!

copyright: bala_barathi@hotmail.com

‘பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’

சிங்கப்பூர் எழுத்தாளர் பாலுமணிமாறன்-ன் தங்கமீன் பதிப்பகம் வெளியீடாக மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது-வின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை தொகுப்பு 22.02.2009 அன்று சிங்கப்பூரின் தேசிய நூலகவாரியத்தின் ஆதரவுடன் தேசிய நூலகத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெறுகிறது. சிறு தீவுக்குள் பிளவுபட்ட பல்தமிழ் அமைப்புகளின் தேடல் என்பது மிகமிக குறைவு. அதுவும் மாற்றுச் சிந்தனை என்றால் என்ன என்ற கேள்விகளுடன், தமிழ் தமிழ் என்ற ஒருமுகசிந்தனையில் பன்முக படைப்பாக்கும் திறன் அற்றவர்களையாவது உருவாக்குமா என்றால் என்னத்தை சொல்ல என்பதே என்னிலிருந்து பதிலாக வெளிப்படும்.  தமிழ்முரசு நாளிதழ் ஒன்றே ஆகப்பெரிய முதலும் கடைசியுமான இலக்கிய இதழாக நம்பிக்கொண்டும், ஜெராக்ஸ் தொணியிலான கவிதையும் அதனையும் கடந்த எழுத்து பிரபஞ்சத்தை என்னவென்றும் கேட்பதற்கும்,  விமர்சன களமற்ற எழுத்தாளர்களுக்கு  மத்தியில்,  ஒரு கதைசொல்லி முடிக்கும் முன் கடந்துவிடக்கூடிய தூரமாக இருக்கும் மலேசியாவின் எழுத்தாளர்கள் வருகை சிங்கப்பூருக்கு அவசியமான ஒன்றாகவே எனக்கு தோன்றுகிறது.

 

உங்களுக்கும் தோன்றினால்

வாருங்கள்

பயாஸ்கோப்காரனையும் வான்கோழியையும் கண்டடைவோம்

 

பாண்டித்துரை

inv-front-rev

inv-back