சிதைந்த மே இரவொன்றில்…

இன்று ஏதாவது ஒரு பதிவு எழுதவேண்டும் அல்லது எழுதவேண்டுமென யாரேனும் எதிர்பார்த்திருக்கலாம். உள்மன அரிப்பாகவும் இருக்கலாம். பலமாக சொறிந்து கொண்டு எழுதத்தொடங்கினேன்.

 

எல்லோரையும் போலத்தான் எனக்கும் அந்த இரவு வந்தது. சற்று முன்னர்தான் மழை பொழிந்ததால் கூடூதலாக கருமை படர்ந்திருந்தது. முன் அனுபவம் உள்ளவர்கள் யாரிடமாவது விசாரித்திருக்க வேண்டும். நான் அதை செய்யவில்லை. அனுபபூர்வமாக உணரவேண்டும் என்று காத்திருந்தேன். மழை வாசம் சன்னல் வழிக் காற்றோடு பேசிக்கொண்டு தொட்டுச் சென்றது. இரவு நீளும் என்று சொல்வார்களே அன்று சுருங்கிவிட்டது ஆமாம் அதுவும் அவளின் யோனிக்குள்.

 முன்பே சொன்னேன் அல்லவா முன் அனுபவம் இல்லை என்று நான் பார்த்தறியாத யோனியை இன்றிரவு யாரேனும் பார்த்துக் கொண்டிருக்க அந்த இரவில் சன்னமான இசை மிதந்து வந்தது. அறை நண்பனாக இருக்கவேண்டும. இரவு உறங்கச் செல்லும் முன் இருவரும் இசை கேட்டு தூங்குவது வழக்கம். அவனுக்கு தெரியாது சுருங்கி விட்ட இரவினுள் நான் பயணித்துக் கொண்டிருப்பது.

 இன்று போலத்தான் நாளையும் இரவு வரும், மறுநாளும் இரவு வரும், ஒவ்வொரு நாளும் இரவு வரும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரவு வரும், மே மாதத்தில் அந்த நாள் இரவு வரும், இரவுகள் உடன் யோனியையும் அழைத்து வரும். அவள் வேண்டாம் இனிமேல் அடிக்கடி சொல்லக்கூடாது.

 சுருங்கி விட்ட அந்த இரவை எதிர்கொள்ள முன்பே தயாராகியிருந்தேன். தலைமாட்டில் ஒரு வத்திபெட்டி, 7-அப் பாட்டிலில் நிரப்பிய தண்ணீர், மண்டையடி தைலம், ஒரு குப்பி நிறைய பியர், மனுஸ்யபுத்திரனின் சில கவிதைகள். வேறு ஏதேனும் வேண்டுமா என்று இப்போதைக்கு தெரியவில்லை.

 மெல்ல நகரும் இரவில் தலை முதல் கால் வரை பெட்ஷீட்டை இழுத்து போர்த்திக் கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டேன். உடனிருந்த நண்பனுக்கு இது எல்லாம் விசித்திரமாக இருக்கும். இதற்கு முன்பு இப்படி நான் உறங்கியதை கண்டிராத அவன் ‘களுக்’ என்று சிரித்திருக்கலாம் அல்லது கொஞ்சம் சந்தேகத்தோடு விழித்தபடி உறங்கிக்கொண்டிருக்கலாம். அவனுக்கு முன் உறங்க வந்ததால் அவனுக்கள் இருக்கும் கேள்விகள் பதிலாக நாளை வரை அவன் காத்திருக்க வேண்டும். அதற்கள் இரவு விடிந்துவிடும். பூங்காக்களில் கூடி சிரிப்பது போல கூடி அழவும் ஒரு திரபியை யாரேனும் அறிமுகப்படத்வேண்டிய சூழலில், என்னைச் சுற்றி யாரேனும் அழுது கொண்டிருக்கலாம் அல்லது நானே அழுதுகொண்டிருக்கலாம்.

 கண்களை மூடிக்கொண்டிருந்தேன், கண்களை மூடிக்கொண்டிருந்தேன், கண்களை மூடிக்கொண்டிருந்தேன்….. சுகானுமான உறக்கம் இன்னும் வரவில்லை. உடல் முழவதும் ஏதோ ஊர்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு, பிரமையாக இருக்கலாம் பிரமையை உருவாக்கிய மூட்டை பூச்சியாகவும் இருக்கலாம். இந்த இரவில் என்னைப் போன்று யாரேனும் தயாராகியிருக்கலாம். அல்லது நாளை வரும் இரவிற்காக ஒத்திகை பார்க்கலாம். ஆனால் என்னிது ஒத்திகை கிடையாது, நிசம்! காணக்கிடைக்கா யோனிக்குள் சுருங்கி விட்ட இந்த இரவு நிசமானது.

 என்றுமில்லாது இந்த பூனைகள் வேறு தொடர்ந்து சப்தித்துக்கொண்டிருந்தது. இரவின் பயத்தில் இந்த சப்தம் கொஞ்சம் ஆறுதலை தருவதாக இருந்தது. பக்கத்து வீட்டில்தான் நிறைய பூனைகள் வளர்க்கிறார்கள். எப்போதாவது சன்னல் வழி எங்கள் வீட்டுக்கும் வரும். நான் கூட இரண்டு மூன்று முறை அந்த பூனைகளின் அருகே சென்று தலை முதல் வால் வரை தடவிக்கொடுத்திருக்கிறேன். ஒரு வித மயக்கத்தில் உடலை நெளித்து என் முன்னே சரணாகதியடைந்து கிடக்கும். நான் கையை விலக்கி நெடுநேரம் கழித்தே அந்த இடத்தை விட்டகலும். சப்தித்துக்கொண்டிருப்பது அந்த பூனைகளாகத்தான் இருக்கவேண்டும். இந்த இரவு முழுமைக்கும் பூனைகள் தொடருமானால் நாளை பகல் பொழுதில் அந்த பூனைகளுக்கு ஏதேனும் இறைச்சியை வாங்கி கொடுக்கவேண்டும் அதுவும் யாருக்கும் தெரியாமல்.

 மணி மூன்றிருக்ககூடும். நீர்த்தாரை வெடைத்துக்கொண்டிருக்க இதற்குமேலும் பொறுமையாக இருக்கமுடியாது என்று கழிப்பறையை நோக்கி எழுந்து சென்றேன். சன்னல் வழி தெரிந்த சில புளோக்குகளில் மின்விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. என்னை போன்று அங்கு யாருக்கேனும் நீர்த்தாரை அடைத்துக் கொண்டிருக்கலாம். இரவு மெல்ல சுருங்கிவிட்டிருந்தது. இனி இரவு பற்றிய பயம் வேண்டாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வெளிப்பட்ட கொட்டாவியுடன் சில ஸ்தோத்திரங்களை முனுமுனுத்தபடி படுத்துறங்கினேன். இல்லை படுத்தேன் உறங்கவில்லை கண்களை இறுக மூடிக்கொண்டேன். இருள் சூழத்தொடங்கிய உறக்கத்தினூடே யோனி விரியத்தொடங்கியது சன்னமான வெளிச்சத்தில் அவள் இந்நேரம் யோனியை சுத்தப்படுத்திக்கொண்டிருக்ககூடும்.

 கூடுதலாக இரு சொட்டு கண்ணீரை சுமந்தபடி ஊரில் இருக்கும் அம்மாவும் அப்பாவும் கூட கொஞ்சம் வருத்துடனே இந்த இரவை எதிர்நோக்கியிருக்கலாம். எனக்காக அழவேண்டாம் என்றாலும் அவர்கள் கேட்கப்போவதில்லை. இந்த இரவு என்னை ஏதேனும் செய்துவிடக்கூடும் என்று அவர்கள் பயந்தபடியிருக்கலாம். அதிகாலை எழுந்தவுடன் முதலில் அவர்களுடன் தொலையாட நினைத்துக் கொண்டு புரண்டு படுத்தேன்.