யமுனா வீடு

இரண்டு பேருந்து மாறிச் செல்லும் தூரத்தில்
நகரத்தின் கடைசியில் இருக்கிறது
யமுனா வீட்டில்
யமுனா
யமுனாவின் அம்மாவோடு
நாய்க்குட்டியும் இருக்கிறது
ஞாயிற்றுக் கிழமையில்
வாசு அண்ணா வந்து செல்கிறான்
வெளிப்புற கிரில்கதவு சாத்தப்பட்டு
உயரத்தில் கொக்கி மாட்டப்பட்டிருக்க
தபால்காரன் வருகையும்
பால்காரன் வருகையும்
அரிதாகிப் போன நாட்களில்
அபூர்வமாய் யாரேனும்
வழி தவறி விசாரிக்க வந்தால்
கீரிச்சிடும் கிரில் சப்தத்தில்
வீறிடும் நாய்க்குட்டியோடு
யமுனாவும் சேர்ந்து கொள்கிறாள்

நன்றி: மௌனம் – ஜனவரி 2011 (மலேசியா)

சாகசம்

சிறுவன் தேனப்பன்
தட்டான் பிடிக்கச் செல்லும்போது
சௌம்மியாகுட்டியையும் அழைத்துச் செல்கிறான்
தும்பைச் செடிகளை பறித்து
வெள்ளைப்பூக்களில் வந்தமர்ந்த தட்டானை
விரட்டிச் செல்கிறான்
சிறுவன் தேனப்பனுக்கு போக்குகாட்டி
சௌம்மியாகுட்டியின் பக்கம் வந்தமர்கிறது
தட்டானை விரட்டிப்பிடிக்கும் சாகசம் அறிந்தவளாய்
தும்பைச் செடிகளை பறித்து
தட்டானை விரட்டத் தொடங்குகிறாள்
வெள்ளைப்பூக்களின் தேனை உறிஞ்சியபடி
சௌம்மியாகுட்டிக்கு இறக்கை முளைத்து
தட்டானோடு பறந்து செல்வதை
சிறுவன் தேனப்பன் பார்த்துக்கொண்டிருக்கிறான்
நன்றி: மௌனம் – ஜனவரி 2011 (மலேசியா)

மௌனம் சில கவிதைகள்

அழத் தெரிந்த
சிரிக்கத் தெரிந்த
குழந்தையிடம்
கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது
அம்மாவாக
அப்பாவாக
இன்னும் சில
அடையாளங்களைச் சுமந்துகொண்டு

**************************************

நான்
நிரந்தரமானவன்
என்ற கடவுளின் முன்
வாய்பொத்திச் சிரித்துக்கொண்டிருந்தது
குழந்தை

நன்றி: மௌனம் (மலேசியா)