தோற்றுப்போகட்டும் இவனின்….

        சரி எனத் தெரியும் தவறை இங்கு மீண்டும் மீண்டும் செய்துகொண்டுதானிருக்கிறான். மனிதனாய் பிறந்துவிட்டான் அல்லவா! எல்லோருமே இவனை  தூக்கி எறிந்ததாய் வெளிக்காட்டி அது தானாய் மீண்டுவந்து அமர்வதற்காகவே உட்கார்திருக்கின்றனர். 

              சமீபத்திய சங்கடமாய்  அங்கும் இங்கும் தென்படும் இவனை, ஒரு புருவம் சுருக்கி ஆர்வத்தின் மிகுதியோ அல்ல அரைப்பைத்தியமோ என்று  புன்னகைத்ததாக நினைவில் இல்லை. காரணங்கள் புரிபடாத பொழுதும் காலத்தின் சுழற்சியில் கடந்துதானே செல்லவேண்டும், அதுதானே நியதி

       இவனை கொண்டாடுதல் என்பது எவ்வளவு ஆரோக்கியமான விசயம். இவனிலிருந்துதான் இப்பிரபஞ்சம் என்று பார்க்கத்தொடங்கினால், இங்கு எல்லாமுமாய் இவனாகிறான். ஒரு பக்கம் குருதி வழிந்தோட, இடையிடையே மழலையின் புன்னகையாய் இருண்மையான பொழுதின் அரவங்கள். அடைப்பட்ட கூட்டுக்குள் எழும் புணர்தலின் ஸ்பரிசங்கள் என்று எல்லாமுமாய் வெடித்துச்சிதற, சாலையில் ஒருவன் அடிபட்டுக் கிடக்கிறான்இவனைப்போலவே, இவனும் உச்கொட்டி கடந்துசென்றாலும் உயிர்பின் துடிப்பினை உள்வாங்கிக்கொண்டு, மனிதனாகப்பட இயலாபொழுதும் அதன் மறுபக்கமாய் இயன்றதை நித்தித்தவண்ணமாய் மூர்ச்சையடைகிறான்

     மழலையாய் பிறந்த இவன், அகோரத்தை உள்ளடக்கி புன்னகையால் புறம்தள்ளியபடியே இவனை உள்நோக்கி பார்த்தலில் உடன்பாடற்று, இவனையும்! இவனையும்! உற்று நோக்கும் விழியின் படலம் எல்லாம் சர்ப்பத்தின் நாவுகளாக நீழ்கிறது.  உணர்தலும் புணர்தலுமான பயணத்தில், இவனுள் ஏற்பட்ட மாற்றம் சுயம் எனும்பொழுது சுடச்செய்கிறது. விழாவின் குருதிகள் விழிகளில் வழிய, ஆண்டுகள் உருண்டோடினாலும் அடைகாத்தலின் பொருட்டு வெம்மையில் வெடித்துச்சிதறும் இவனது குஞ்சுகளை வேடிக்கைப் பார்த்தபடியே, வாழ்ந்ததின் எச்சத்தில் வாழ்க்கையின் மிச்சமான மரணிக்கும் பொழுது இவனின் எதிர்பார்ப்புகள் தோற்றுப்போகட்டும் . 

           இவன் மீதான புரிதல்கள் ஏதுமில்லாதபொழுதும், இவனுள்ளும் எதிர்பார்ப்புகள், இவனைப்போலவே கடந்து செல்கிறான். கவனிக்காதொரு தருணத்தில் சரி எனத் தெரியும் தவறை இங்கு மீண்டு மீண்டும் செய்தபடி………………………………..

கி.பி

உலகத்தின் கணக்கினை வகுத்தவன்

நீ வந்ததன் வழித்தடம் பிறழ்கிறதோ?

உலகமயமாதலாய்

 உன் படம் ஏந்தி எங்கும்

விளிம்புநிலை மக்களை வாங்க

அங்கும் அதன் விகிதாச்சாரமே

அதிகரிக்கும் இப்போக்கிலே

அடிபட்டுபோகிறது

 உன் மனிதநேயம்

இனியாவது நீ பிறப்பாய்

விளிம்பு நிலை விழி திறப்பாய்

பரிசுத்த ஆவியாய்

நீ மீண்டும் பிறந்திட

கர்த்தரே என்னை ரட்சிப்பாயாக 

நன்றி: சிங்கை ஒலி 96.87 தமிழ்முரசு வார்ப்பு இணையம்

ஆக்கம்: பாண்டித்துரை

இப்படிக்கு இவனும், இவனது கவிதையும்…

அதிகாலையில் தூங்கி புத்தாண்டு (2008) அன்று 10 மணியளவில் எழுந்தாலும் என் முகத்தின் ஓரமாக எங்கேனும் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் அந்த கவிதைக்கான வரிகள்.  

பசி என் வயிற்றை கிள்ள மாற்று சூழலில் நான் இருந்தாலும், முன்பு செய்த தவறை இந்த முறை செய்யவில்லை. ஆனாலும் இயலாத ஓர் சமயத்தில் நண்பரை அழைத்துக்கொண்டு அருகே இருந்த கடைக்கு சென்று ஐஸ்கிரீம் ,சாக்லெட் என்று அப்போதைய அவசரத்திற்கு ஒன்றாய் தொட்டுக்கொண்டேன்.  இடையிடைய புத்தாண்டு நிகழ்வுகள் தொலைக்காட்சியின் வாயிலாக தமிழகத்தை என்முன் தந்துகொண்டிருப்பதாய் (யாரேனும் நினைத்திருக்க கூடும்) ,  என்றும் இல்லாது வந்து விழுந்த குறுந்தகவல் என புத்தாண்டு சுருங்கிக்கொண்டிருந்தது.  

2008ன் முதல் நாள் மாலை ஒரு கவிதை எழுதினேன். ஆனால் அதற்கு முன்நாள் மாலையிலிருந்தே இந்த கவிதைக்கான வரிகள் எப்பொழுதும் வந்து விழலாம் என்று தொக்கிக் கொண்டிருந்தது. புத்தாண்டு கொண்டாட்ட ப்யர், ப்ரிய நண்பர்கள், சில விவாதங்கள் அதன் மேல் எழுந்த நம்பிக்கை, நள்ளிரவு தாண்டியும் சிரிப்பு சப்தங்கள், ஒருவரை மாற்றி ஒருவர் என்று விசாரித்துச் சென்ற அலைபேசி அழைப்புகள் என கவனிக்க தக்கவாறு இயல்பாகவே இருந்திருக்கிறேன். ஆனாலும் நான் குடித்த ப்யரைப் போன்று என்னுள்ளே ஒருபுறம் கவிதைக்கான வரிகள் கசிந்து வந்த வண்ணமே …. நள்ளிரவு தாண்டியும் ப்ரிய பெண் தோழிக்கு நீண்டநேர தொ(ல்)லை தொடர்பு இருவருக்குள்ளும் எழுந்து அடங்கிய கண்ணீர்துளி என்று எல்லாவற்றையும் கடந்து என்னுள்ளே எழுந்துகொண்டிருந்தது எப்பொழுதும் வந்து விழக்கூடும். 

 ஏன் கவிதை எழுதவேண்டும்? எதற்காக எழுத வேண்டும் என்று எழுத ஆரம்பித்த காலம் தொட்டும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கான புரிதல்களை எனக்கு இந்த கவிதை உணர்த்தியது.  வேறொரு மனவெளியில்தான் இந்த கவிதையை எழுதினேன் ( ஒரு சில நண்பர்கள் அறிவர்). இது சரியானதுதானா என்று என்னால் சொல்லமுடியாது. ஓப்பிட்டு பார்க்கவும் எனக்கு உடன்பாடில்லை. நண்பர் ஒருவர் சொன்னது நீதி தேடுகிறான் முயற்சி பண்ணுகிறான் அது போன்றுதானோ இந்த கவிதையும்! உணரத்தொடங்கியுள்ளேன். இதை உதட்டளவில் சொல்லிவிடவும் முடியாது.  ஏன் எனில் அந்த கவிதைக்காக கொஞ்ச நேரமாவது வாழ்ந்துள்ளேன்.  எல்லாம் வலி மிகுந்த தருணங்கள். 

 கவிதையை முடிக்கும் முன்பே சில நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.  அதன் மீது எழுந்த விவாதங்கள், சந்தர்ப்பம், சங்கடம் என்று என்னை மாற்றிக் கொண்டாலும், அடுத்த இரு நாட்களுக்கு என்னை எங்கெங்கோ அழைத்து செல்லபோவது தெரியாமல் எம்ஆர்.டி யில் பயணனிக்கத் தொடங்கினேன். 

அடுத்தடுத்து வந்த இரு நாட்களில் நான் இல்லை.  கவிதைக்கான காரணங்களா என்றெல்லாம் என்னும் நிலையில் இல்லையெனினும், கவிதைக்கான தேடல் போய் என்னை மீட்டெடுக்க துவங்கினேன். காபிக்கான நேரம் இல்லையெனினும் காபியை நாடுவது போல, நானே முன் வந்து எனதல்லாத வேலைகளை விரும்பி மேற்கொண்டேன். அப்படி, இப்படி என்று என்னை முழுமையாக மீட்டெடுத்தேன். கவிதைக்கான காலகட்டத்திலிருந்து  இந்த இடைப்பட்ட காலகட்டம் வரை வலி மிகுந்த தருணங்கள் என்றாலும் ஏதோ ஒரு நிமிடத்தில் புன்னகை பூத்து சென்றிருக்கலாம். என்னால் அறிய முடியாத அந்த நிமிடத்திற்காக வலிகளை வாடிக்கையாக்கிக் கொண்டு மீண்டும் கவிதை எழுதவே ஆசைப்படுகிறேன். 

இப்பொழுது ஏங்கோ ஓர் இடத்தில் குழந்தை அழுது கொண்டிருக்கலாம். என்னுடைய தேடலும், அதன் பின்னே எழுதப்படும் கவிதைகளும் ……………………………………… 

இப்படிக்கு இவன்: பாண்டித்துரை