நரேந்த் அலுவலகப் பணித்தோழன், அலுவலகம் செல்லும் போது அதிகம் பேசுவதுண்டு, கட்டுமான தளத்திற்கு சென்றால் அலுவல் சார்ந்த விசயங்கள்தான் அதிகம் பேசுவது, வெளிப்பணியிட அழுத்தங்களை அறிந்தவன்.

எளிதில் எல்லோரிடமும் பழகிவிடக் கூடியவன். அவனுடைய பணிக்கென சில ஒழுங்குகளை கடைபிடிப்பவன், சக பணியாளர்களுக்கு கற்றுத் தருபவன்.

என்னுடைய அலுவல் பணிகளுடே தேநீருக்காவும், உணவிற்காகவும் நரேந்தோடு பயணித்தது கொஞ்சம் மாறுதலும் மகிழ்ச்சியையும் தரும்.

சிங்கப்பூரில் இருந்து வெளியேறுவதை எளிதாகச் செய்துவிட்டான், அவன் பணி செய்த இந்த 3-1/2 ஆண்டுகளை வேறு எவராலும் நிரப்ப இயலாது, நிர்வாகமும் அறிந்த ஒன்று.

நரேந்தின் பெரு விருப்பம் ஒன்றே. வேண்டுதல்களில் நம்பிக்கையில்லை, நம்பிக்கையான வேண்டுதல்கள் உண்டு நரேந்திற்காகவும்.

இனி என் அலுவலகப் பயணத்தில் தேநீரை பகிர்ந்து கொள்ள யாரும் காத்திருக்கப்போவதில்லை.

கும்பகோணத்தை ஞாபகப்படுத்துவற்கு Narenth Natarajan இருக்கிறான்.nar

சூப்பர்வைஸர் இராஜேந்திரன்

appa.jpgதனியார் கல்லூரிகளின் வருகைகளுக்கு பிறகு, இன்றைக்கு இஞ்சினியர் என்றாலே மதிப்பில்லாமல் போய்விட்டது, வீட்டில் நான்கு பேர் இருந்தால் மூன்று இஞ்சினியர்களாவது இருப்பார்கள். அதில் இருவர் அதற்கு சம்பந்தம் இல்லாத பணியில் இருப்பார்கள். இஞ்சினியர் இராஜேந்திரன் வீடு எங்கு எனக்கேட்டால் வேறு அடையாளம் சொல்லச் சொல்வார்கள்.

அப்பா இராஜேந்திரன் ITI டர்னர் முடித்து சிங்கம்புணரி என்பீல்டு தொழிற்சாலையில் பணியை தொடங்கியவர், 1977 அம்மா வைரத்தை திருமணம் முடிக்கும் போது 240 ரூபாய் சம்பளம், அதில் 40ரூபாய் வீட்டு வாடகைக்கு போக மீதமுள்ள பணத்தில் கல்யாண கடனை அடைத்து, குடும்ப வாழ்க்கையை நடத்தினார்.

1984 ஆம் ஆண்டில் சிங்கம்புணரி என்பீல்டு தொழிற்சாலையை ராணிப்பேட்டையில் செயல்பட்ட தொழிற்சாலையில் இணைத்தபோது வெகு சிலர்தான் பணி மாற்றம் செய்யப்பட்டனர். பலர் அதன் உப நிறுவனங்களாக செயல்பட்ட சிறு நிறுவனங்களுக்கு மாறினர். அப்பாவும் அப்படி ஒரு சிறு நிறுவனத்திற்கு மாறி ஓரிரு ஆண்டுகள் அங்கு பணி புரிந்தார். சரியான வழிகாட்டுதல்கள், வாய்ப்புகள் அங்கு இல்லாத போது, தாத்தா மாணிக்கத்தின் ஆலோசனையின் பெயரில் அவர் ஆரம்பித்த தொழிற்சாலைக்கு மேற்பார்வையாளராக சென்றார்.

1985 ல் திருச்சி மாவட்டம் பேட்டவாய்த்தலையில் தாத்தா மாணிக்கம் அமைத்த ‘அமிர்தம் இஞ்சினியரிங்’ நிறுவனத்தின் மேற்பார்வையாளராக சில ஆண்டுகள் பணி புரிந்தார். உரிய திட்டமிடல் இல்லாமல் ஆரம்பித்ததால் மூலப்பொருள்களை பெற்று வருவதில் எதிர்கொண்ட சிரமங்களால் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி, முன்பு பணிபுரிந்த தொடர்புகளை வைத்து 1989 ல் சிங்கம்புணரியில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைஸர் பணி.

சூப்பர்வைஸர் என்றால் மேற்பார்வையிடுவது மட்டுமல்ல பணி, அந்த நிறுவனத்தில் முதலாளிக்கு அடுத்த நிலை சூப்பர்வைஸர், மதுரை TVS மற்றும் பிற நிறுவனங்களில் வாகன உறுதி பாகங்களை எடுத்து வந்து, உரிய அளவில் கடைந்து தரம்பார்த்து பிரித்து மீண்டும் TVS ல் சேர்ப்பது, கடைந்த இரும்புக்கழிவுகளை வெளியேற்றுவது, வங்கிப் பரிவர்தனை, சம்பள பட்டுவாடா, ஆண், பெண் என பணிபுரியும் ஊழியர்களை கட்டுப்படுத்துவது, பகல், இரவு இரண்டு சிப்ட் பணிகளை நிர்வகிப்பது என மேலாளராருக்கான பணியை அப்பா செய்தார். பணி காலத்தில் அப்பாவுக்கு இருந்த இன்னோரு பெயர் பிழைக்கத்தெரியாத மனிதர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பெற்றுவிட்டார் என்றால் நாங்கள்தான் போதும் என்று சொல்லிவிட்டோம். அ.காளாப்பூரில் வசிக்கும் இராஜேந்திரனை இன்றும் சூப்பர்வைஸர் இராஜேந்திரன் என்றால்தான் தெரியும். அஞ்சலக கடிதங்களிலும் சூப்பர்வைஸர் என்ற அடைமொழியோடுதான் கடிதங்கள் வரும்.

எழுத்து, மரியாதை, நேர்மை என சூப்பர்வைஸர் இராஜேந்திரனிடம் கற்றுக்கொண்டதைத்தான், கொஞ்சமென என்னிடம் நீங்கள் பார்க்கலாம்.

ஐ லவ் சூப்பர்வைஸர் & அப்பா

16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்

rameshஒரு ரயில்/பேருந்து பயண நேரத்தில் படித்து முடித்துவிடக்கூடிய கதைத்தொகுதி ரமேஷ் ரக்சனின் ’16’. சொல்லப்பட்ட 16 கதைகளும் 3-ல் இருந்து 4-பக்கங்களுக்குள் இருப்பதால் ஒரே வாசிப்பில் வாசித்து விடலாம், ஆனால் ஒவ்வொரு கதைகளை படித்து முடித்து அடுத்த சிறுகதைக்குள் உள்நுழைய நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்படுகிறது.

கிராமம் மற்றும் நகரம் என இரு வேறுபட்ட பரப்புகளில் நிகழும் சிறுகதைகள், எதார்த்தமாக அந்த வட்டார பேச்சுமொழியில் இருக்கிறது. விரிவான வர்ணனைகள் இல்லாமல் தொடங்கும் கதைகள், பதின்மவயதினர் கடந்து செல்லும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி சொல்லப்படும் எல்லாக் கதைகளும், ஆரம்ப பத்தியிலிருந்து கதையின் முடிவை நோக்கி நகரும் போது வாழ்தலின் எதிர் துருவத்தை சென்றடைகிறது. ஒவ்வொரு கதையின் முடிவும் இந்த சிறுகதை தொகுப்பில் ‘சொல்’ எனும் சிறுகதையின் இறுதியில் சொல்லப்பட்டுள்ள ‘ “தேவ்டியாவுள்ள…… எங்க அம்மய பேசினா கேட்டுட்டே இருக்கனுமா…” சில்லுகளாகியிருந்தன ஒரு பீர் பாட்டில்’, அப்படி நம் மண்டையிலும் ஒரு பியர் பாட்டில் கொண்டு அடிக்கும் வலியை ஏற்படுத்தும்.

பதின்ம வயதில் ஆண் மற்றும் பெண் இருவரும் வேலையிடத்தில் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்தம் காமம், தனி மனிதர்களின் உள்ளார்ந்த பிரச்சினைகள், நம்மை சுற்றிய சமூகம் எழுப்பும் கேள்விகள், சிறு குழந்தைகள் அறிந்தும், அறியாமலும் உயிர் நரம்மை நீவி தொடுக்கும் கேள்விகள், மனம் பிறழ்ந்த சிறுவர் சிறுமியின் வாழ்வியல் தரிசனங்கள் என்று சிறுவர், சிறுமியர் வாழ்வியலை பற்றி எழுதப்பட்ட இந்த சிறுகதைகளை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். ஆனால் சுருங்கச் சொல்லி நம்மை சுற்றிலுமான சிதிலமடைந்த மனிதர்களின் வாழ்வியலை தொட்டுவிடுகிறார்.

16 என்று ஆரம்பித்த திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்றிருப்பதாக சமிபத்திய D16 நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார்கள், அதுபோல ரமேஸ் ரக்சனின் ’16’ சிறுகதை தொகுதியிலிருந்து எந்த ஒரு சிறுகதையையும் குறும்படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் முயற்சி செய்யலாம்.

ஆசிரியர்: ரமேஷ் ரக்சன்
பதிப்பு : 2014
வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்