Good bye சிங்கப்பூர்

சிங்கப்பூர் வந்த இந்த 4 வருடங்களில் சில நெருக்கமான நண்பர்களை கண்டடைந்திருக்கிறேன். அந்த சிலரில் அறிவுநிதியின் நெருக்கம் அதீதமானது.

பேசும்போதெல்லாம் சினிமா, சீமான், செழியன், அய்யப்பமாதவன், அரவிந்தன், கவிதை என இவற்றுள் ஏதாவது ஒன்றை தொட்டுச் சென்றிருப்போம்.

அரவிந்தன், அய்யப்பமாதவன், செழியனின் பரிட்சயம் அறிவுநிதியாலே எனக்கு சாத்தியப்பட்டது. அதன் நீட்சியாக ”பிரம்மா” கவிதைத்தொகுப்பு, ”நாம்” காலண்டிதழ், ”தனி” குறும்படம் தாயாரிப்பு என்று கடல்வெளிக்குள் சில தடங்களை என் வழியே அறிவுநிதி விட்டுச்செல்கிறார்.

ஆம் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சமதள மனத்துடன் சென்னையை நிரந்தரப்படுத்திக்கொள்ள ஆயத்தமாகிவிட்டார்.

அறிவுநிதிக்கு இனி சென்னைதான் முகவரி.

 2011ல் வெகுவான மாற்றங்களை அறிவுநிதியிடம் எதிர்நோக்கும் சிங்கப்பூர் நண்பர்கள் ஏராளம்.

அது வரைந்தவனின் மௌனம் பேசப்படும் காலமாக இருக்கலாம்.

குறுந்தகவலாகவும், தொலையாடலாகவும் இனி அறிவுநிதியின் நெருக்கத்தை நீட்டிக்கப்போவதில் பேசவும் எழுதவும் என்னை கூர்மைப்படுத்தலாம்.

நாளை இரவு (வெள்ளிக்கிழமை) பயணம்.

விமான நிலையம் சென்று விடைகொடுக்க ஆசை பணிச்சூழலில் சிக்கி இழப்பவற்றுள் இதுவும் ஒன்றாகிப்போனது.

இன்றிரவு அறிவை சந்திக்கப்போகிறேன்.  Carlsberg , Tiger பியர் சாப்பிடவேண்டும், கனவுகளை கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு பேசவேண்டும். இறுக அணைத்து உறங்க வேண்டும்.

My Dear Arivu

 வரைந்தவனின் மௌனத்தை
வார்த்தையாக்கும்போது
காலம் உனதாகிறது