பிரபஞ்சனின் பிறந்தநாளில்…

தேசிய நூலகத்தில் (23.04.2010) நடைபெற்ற ஷாஜி மற்றும் பிரபஞ்சன் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் அதிகம் இருந்தது. நிகழ்விற்குச் சென்று வந்தவர்கள் தொலையாடியபோது ஷாஜியின் உரையைப் பற்றியும் காணாமல்போன மனிதர்களின் கதையையும் சொன்னபோது அந்த வருத்தம் இன்னும் கூடுதலாகியது. காணாமல் போன மனிதர்களின் கதை பலருக்கும் தெரிந்திருப்பது ஆச்சர்யத்தை அளித்தது.
 
திங்கட்கிழமை (26.04.2010) அன்று ஆங் மோ கியோ நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நடைபெறும் சந்திப்பில் எப்படியும் கலந்துகொள்ள வேண்டும் என்று முன்கூட்டியே வேலைப்பளுவிலிருந்து விடைபெற திட்டமிட்டும் மணி இரவு 7-ஐத் தொட்டுவிட்டது. போவோமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் நண்பர் பூங்குன்றன் பாண்டியனைத் தொடர்பு கொண்டேன். 6.30ற்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்வு இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றபோது வாகனத்தின் வேகத்தை அதிகரித்தேன். இடையில் நண்பர் ஷாநவாஸ் தொடர்புகொண்டு நிகழ்விற்கு வந்துவிட்டேன், இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று சொன்னபோது பச்சை சமிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கடந்திருந்தேன்.

(நண்பர் ஷாநவாஸ் உடன் எழுத்தாளர்கள் ஷாஜி மற்றும் பிரபஞ்சன்)
நிகழ்விற்குள் நுழைந்தபோது பிரபஞ்சன் மிதமான குரலில் பேசிக்கொண்டிருந்தார். யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை உள்வாங்கிக் கொள்ளாமல் சென்றமர்ந்தேன். எனது இடப்பக்கத்தில் இராமச்சந்திரன், ரெ.பாண்டியன் இருவரும் அமர்ந்திருப்பதைப் பார்த்தபோது கூடுதலான மகிழ்ச்சியைத் தந்தது. கோணங்கியின் கல்குதிரை ஒரு பிரதி  கைவசம் இருந்தது நிகழ்விற்குப் பின் ரெ.பாண்டியன் அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, பிரபஞ்சன் காகங்கள் குறித்த பிரக்ஞையில் ஆத்மநாமின் யாருடைய பித்ருக்களோ என்ற கவிதை வரிகளைக் கடந்தபோது சிங்கப்பூர் வந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, நாம் காக்கைகளை எங்கேனும் பார்த்தோமா என்று நினைக்கையில் மைனாக்குஞ்சுகளே வந்து சென்றது.

தொடர்ச்சியான இலக்கிய சந்திப்புகளுக்காக வெளிச்சென்றபோது காகங்கள் சிங்கப்பூரில் எங்கேனும் கூடிக் கொண்டிருப்பதை அறியாது, நான்தான் மைனாக்களைக் கண்டடைகிறேனோ என்ற கேள்வியும் எழுந்தது.

பிரபஞ்சன் குழந்தைமை சார்ந்த அக்கறையைத் தொட்டுச் சென்றபோது 15 நாட்களே சந்தித்த 3வயது நிரம்பிய எனது அக்கா மகள் ஜெகஜோதியின் ஞாபகத்தினுள் ஆழ்ந்துவிட்டேன். சில நாட்களுக்கு முன் என் அம்மாவிடம் தொலையாடியபோது எனக்குப் பெண் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். அதுபற்றி வீட்டில் பேசிக்கொண்டிருக்கையில் யாருக்குக் கல்யாணம்? நீதி மாமாவுக்கா, நான் இருக்கேனே நீதி மாமாவுக்கு, நான் கட்டிக்கிறேன், நான் பக்கத்தில் உட்கார்ந்துகொள்கிறேன் என்று அவள் திரும்பத் திரும்பச் சொன்னதை அம்மா குதூகலத்துடன் சொன்னபோது 3 மணிக்குப் பள்ளி முடிந்தும், அதே பள்ளியில் பணிபுரியும் அவளின் தாய் வருகைக்காக மணி 6-ஐக் கடந்தும் காத்திருந்து அவள் உறங்கிப் போகும் சித்திரம்தான் ஞாபகத்திற்கு வருகிறது….

என்னுடைய குழந்தை என்ன சொன்னாலும் கேட்காது, ஆனால் இந்தக் குழந்தை என்ன சொன்னாலும் கேட்கிறது என்று பிரபஞ்சனைச் சுட்டி இன்று பிரபஞ்சனுக்குப் பிறந்தநாள் என்று பரணி அறிவித்தபோது பிரபஞ்சனிடமிருந்து கிடைக்கவிருக்கும் கேக் துண்டுகளுக்காகக் காத்திருந்தது என்னமோ உண்மைதான்.

64 வயதைக் கடந்து 65 பிறப்பதாகவும் எழுத ஆரம்பித்து இன்றோடு 50 ஆண்டுகள் என்று பிரபஞ்சன் சொன்னபோது அரங்கம் முழுமைக்கும் அந்த இன்பம் தொற்றிக்கொண்டது.
(முனைவர் ஸ்ரீலெட்சுமி, பிரபஞ்சன், பரணி)
யாரேனும் பிரபஞ்சனுக்கு முந்தங்களைக் கொடுத்து அன்பினை வெளிப்படுத்துவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்ததை விட நிகழ்ச்சி முடிந்து  பயணித்திக் கொண்டிருக்கையில் நாம் கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணமும் எழுந்து அடங்கியது.
ஷாஜியின் உரை சுருக்கமாக இருந்தது. ஆனால் மனதிற்கு நிறைவைத் தந்தது. நான் அரங்கிற்குள் வரும்போது நான்கு வாசகர்கள்தான் வந்திருந்தனர் நம்முடைய கலந்துரையாடலில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள இந்த நான்கு பேரே போதுமானது என்று நினைத்துக் கொண்டு உள்நுழைந்ததாகச் சொல்லி அவர் சொன்ன கஸல் பாடகரையும் கடந்து 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட சில நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர் பேச வரும் போது நேரம் முடிந்திருப்பதையும் அதையும் கடந்து ஆசையில் ஐந்து நிமிடங்கள் அவர் பேசத் தொடங்கிவிட்டால் அடுத்தடுத்து வரும் துண்டுச் சீட்டுக்கள்தான் ஏனோ ஞாபகத்திற்கு வந்தது.
பரணி போன்றவர்களின் ஆர்வத்தில் இங்கு சிலரும்  புண்ணியத்தை தேடிக்கொண்டனர். நானும் அதைத் தேடித்தான் இங்கு வந்தேனோ?
நன்றி: உயிர்மை.காம் (உயிரோசை)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s