இப்படியும் சில மனிதர்கள் பைத்தியங்களாய் !!

இப்படியும் சில மனிதர்கள் பைத்தியங்களாய் !!

  

சிறுகதை – “பாண்டித்துரை”

  நேற்றுத்தான் முன்னாவை பார்த்தேன்ரொம்பவும் சந்தோசமாக இருந்தான். (ஊரில் முனுசாமி சிங்கப்பூர் வந்தபின்னாடி முன்னாவாகிட்டான்).

  

  சிவாஜி படத்தை மூனு தடவைப் பார்த்துவிட்டு  அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.

  

 நீ என்னதான் சொல்லு சங்கரை அடிச்சுக்கவே முடியாதுப்பா! முதல் காட்சியிலேயே தலைவரு  என்னம்மா வர்றாரு தெரியுமாவாஜி வாஜி ..ன்னு வந்து படம் முடியற வரைக்கும் சும்மா கலக்கிட்டாருவாஜி வாஜி

  

 சாலையில் போயிட்டு இருக்கிற  எல்லாரும் எங்களை திரும்பிப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அமைதியாக நடையைத் தொடர்ந்தோம்.

  

  எப்படா மாப்ஸ் நீ சிவாஜியைப் பார்க்கப் போறேன்னு என்னைக் கேட்டான்.

  

  பதினைஞ்சு வெள்ளியைக் கொடுத்துப் பார்க்க வசதியில்லை தேக்காவில் ஐந்துவெள்ளி குடுத்து டிவிடி யில தான் பார்க்கலாம் என்று இருக்கேன், என்றேன் நான்.

  நீ திருந்தவே மாட்டியாடா. ஓவர் டைம் பணத்தை எல்லாம் என்னடா மாப்ஸ் பண்ற  கொஞ்சமாவது செலவு பன்னுங்கடா என்றான்.

  

 ஒரு விசயம், நான் இன்னைக்கு மறுபடியும் பிளாசா போறேன் சிவாஜி படம் பார்க்க. கேத்ரீனா, வந்தனா, சுப்புலெட்சுமி எல்லாம் வர்றாங்க நீயும் வர்றியா?  என்றான்.

  

  இவங்களை எல்லாம் மாதத்தில்  இரண்டு, மூனு நாள் முன்னா கூட பார்க்கலாம். எனக்கும் அவங்க நண்பர்கள் தான். ஆனால் அவங்களை சந்திக்கும் போதெல்லாம் என்னையே நான் திரும்பிப் பார்த்துக்க வேண்டியிருக்கும்வேற ஒன்னும் இல்லை பர்சு இருக்கான்னு தான்.

  

   சீனத் தோழி கேத்ரீனா என்னைசிட்டிஎன்றுதான் அழைப்பாள் .ஏன்னா  சிதம்பரம் என்கிற பேரு அவளுக்கு கூப்பிட வரலையாம். கேத்ரீனாசிட்டி, எங்களையெல்லாம் கலட்டிவிட்டுட்டு, நீ எப்பவும் தனியா போறியே லவ் ஏதாவது இருக்கிறதா என்றாள்! “

  

  கேத்ரீனாவுக்கு நம்ம ஊருக் கதையெல்லாம் தெரியும்.  எங்க கூடசேர்ந்து தமிழ்ப்படம் பார்த்து நல்லாவே புரிஞ்சுக்கிறா! நானும் நிறைய சொல்வேன்.

  

  முன்னா தோழிகளில் கேத்ரீனா மட்டும் தான்  என்கிட்ட நல்லா பேசுவா.

  அவளே போன் பண்ணி பல சமயம் மணிக்கணக்கா பேசுவாஅப்பவெல்லாம் முன்னா கேப்பான், “என்ன மாப்ஸ் லவ்வா? அப்புறம் எங்க அத்தைக்கு யாரு பதில் சொல்றதுன்னு”  கிண்டல் பண்ணுவான்

என்னத்தச் சொல்ல, ஒரு பொண்ணோட மணிக்கணக்கா பேசுனா காதல் தான்னு நம்ம ஊரில் எழுதப்படாத சொல்லா இன்னைக்கும் நடைமுறையில் இருக்கில்ல.

  நாங்க போனில் பேசிக்கிட்டு இருக்கும் போது, முன்னா சத்தமாக கத்துவான் கேத்ரீனா கேட்பா, யாரு அது முன்னா தானே ? நாட்டி பாய்னு சிரிச்சுகிட்டே சொல்லுவா. இப்படியாய் நகர்ந்தன நாட்கள்.

  

  ஒருநாள் வந்தனா,தனக்கு திருமணம் நிச்சயம் ஆனதற்கு செந்ததோசா தீவில் பார்ட்டி கொடுத்தாள்.

  

  சாரு, நிவேதன், முன்னா, கேத்ரீனா, சுகாங், மக்காய், சுப்புனு எண்ணிப்பார்த்தா பதினைஞ்சு பேர்எப்படியும் அன்றைக்கு ஆயிரம் வெள்ளி செலவாகியிருக்கும்முன்னா 250 வெள்ளி குடுத்திருப்பான்.  

 நான் பரிசுப்பொருளாய்பார்த்திபனின் கிறுக்கல்கள்புத்தகம் குடுத்தேன்என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு  “ஏன் அப்படியே ஒரு ஜோல்னா பையை மாட்டிக்கிட்டு வந்து குடுக்குறது தானே? கிறுக்கா, யாரு வேண்டாம்னா அத இங்கதான் குடுக்கனும்மா? என்று சிரித்தாள்.

  

  இங்கேயும் அந்த சிவாஜி தாக்கம், மிதமான இருட்டில் பியர் கோப்பைகளின்  சப்தங்களின் இடையே மெல்லியதாய் பாடல் கசிந்து வந்து கொண்டிருந்தது.

  மக்காய் கூட ச்சீ ச்சீனு முனுமுனுத்து கொண்டிருந்தது எனக்கு பிடித்திருந்தது.

  

  எங்க ஊருல ஜாக்கிசான் படத்தை பார்த்துவிட்டு ஊனு கத்துனதை நினைச்சுகிட்டேன், முன்னா சிரிச்சான்.

  

  வந்தனா முகத்தில் கொஞ்சமாய் சோகம் இருந்ததை காண முடிந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த அளவிற்கு சுதந்திரம் இருக்குமா என்பது தெரியலைதான். என்னதான் சிங்கப்பூர் சூழலில் பிறந்து வளர்ந்தாலும் திருமணத்திற்கு பின் பெண்களின் மகிழ்வுகளில் பல பறிபோய்விடத்தான் செய்கிறது.

  

  நான் ஒரு டைகர் பியர் மட்டும் எடுத்துக்கிட்டேன். கேத்ரீனா ஒய்ன் எடுத்துக்கிட்டாஅவள் ஒய்ன் சாப்பிடுறதை பார்க்கும் போது, பெண்களிடம் தான் தண்ணியடிக்க கத்துக்கணும்னு தோன்றியது எனக்கு. அதை கையில் ஏந்தி பருகியதில்  அவ்வளவு நளினம்  இருந்தது.

  

  வந்தனா சாருவைத்தான் கல்யாணம் பண்ணுவா என்று நினைத்திருந்தேன் என்றாள். கேத்ரீனா.

  

  ஏய், முதல்ல நீ தமிழ்படம் அதிகமாகப் பார்ப்பதை நிறுத்து என்றேன்.

  

  அப்படிப் பண்ணியிருந்தா வந்தனா சாருவைக் கல்யாணம் பண்ணியிருப்பாளா? என்றாள். ஒய்ன்  நிறைந்திருந்த கண்களுடன் கேத்ரினா.

  

  வ்வா வ்வானுயாரோ வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டது.  வழக்கம்போல சுகாங் தான். எப்பவுமே அவன் இப்படித்தான். அதிகமாயிடுச்சுனு தெரியும் ஆனாலும் அடம் பிடிச்சுக் குடிப்பான் கடைசியில வாந்தியெடுப்பான். நானும் ஒவ்வொரு முறையும் பசங்களை திட்டுவேன் நீங்கதான்டா அவன கெடுக்குறிங்கனு.

முன்னா சொன்னான்மாப்ஸ் இப்ப ஏன் டென்சன் ஆகுற. தினமுமா அவன் குடிக்கிறான் இந்த மாதிரி நம்ம கூட சேரும்போது மட்டும்தான். அவனுக்கு இதுதான்டா புடிச்சிருக்குஎன்றபோதும் என் மனம் ஒப்பவில்லை..

பேரருக்கு வேலை வைக்காமல் எல்லாம் முன்னாவே சுத்தம் செய்தான்.

  அவன் சட்டையை முதலில் மாற்று என்று சுப்பு அவளோட கோட்டை கழட்டிக்குடுத்தா. முகத்தில் கொஞ்சமும் சுருக்கம் இல்லை.

  

  நான் போற வழிதான் கௌ-காங்கில் நான் விட்டுவிடுகிறேன் என்று கேத்ரீனா சொன்னாள்.

  

  முன்னா கேட்கவில்லை.பிறகு நானும் கூட போனேன். காரில் சென்றபோது முன்னா கேட்டான்என்ன மாப்ஸ் தமிழ் முரசுவிற்கு போனவாரம் கவிதை அனுப்பினியே வந்திருச்சா என்றான்”  வழக்கம்போல் உதட்டை பிதுக்கினேன்.

  

  முயற்சி பண்ணு இல்லைனா நாமளே அச்சடிச்சு தேக்காவில் குடுத்திரலாம் என்று கூறிச் சிரித்தபோது,ஏதோ ஒன்று மனதை அழுத்திச் சென்றதாய் உணர்ந்தேன்.                                                                                                          

      சுகாங் இன்னமும் ச்சீ என்று குழந்தைபோல கேத்ரீனாவின் மடியில் முனகிக்கொண்டிருந்தான். அவளின் கை அவனின் முடியை கோதிக்கொண்டிருந்தது.

  

  உன்னோட பிளாக் எப்டியிருக்கு என்று கேட்டாள். கேத்ரீனா .

  

  ம். நிறைய பேர் வருகிறார்கள் சிலர் கருத்தை சொல்கின்றனர் என்றேன்.                 
       
அவளின் பல்வேறு வேலைகளுக்கிடையிலும் வலைதளத்தை அறிமுகப்படுத்தி  வடிவமைப்பில் எனக்கு உதவுகிறாள் என்பதை எண்ணியபோது பெருமையாய் இருந்தது.

  

  சுக்காங் வீடு வந்தடைந்தோம். ஆனால் ,காரை விட்டு இரண்டு பேரால் அவனை தூக்கமுடியவில்லைஒரு பியருக்கே நான் மிதக்க ஆரம்பித்திருந்தேன். முன்னா இன்னைக்கு கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டிருந்தான்நாங்க படும் கஷ்டத்தை பார்த்துவிட்டு டிரைவர், “விடுங்க தம்பி நான் தூக்கிவந்து விடுறேன்”, என்றார்.        


     
ஐம்பது வயது இருக்க வேண்டும் அனாசையாக தூக்கிவந்து லிப்டில் கொண்டுவந்து விட்டார்.நன்றி கூறினோம் .

           முதலில் முன்னாவிற்கு பறக்கும் முத்தம், பின் என்னிடம்  கண்களால் பேசிவிட்டு , அதே காரில் விடைபெற்றாள் கேத்ரீனா.

  

  சுக்காய் வீட்டில் அவரோட தாத்தா மட்டுமிருந்தார்அம்மா வேலைக்குப் போய்விட்டார். அப்பா இப்ப இல்லை.ஏன்னா வேற ஒரு வாழ்க்கைத்துணையுடன் வாழ்கிறார்.                                                                
      
எனக்கு சற்று அங்கே இருக்கவேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. என்னை புரிந்துகொண்டிருக்க வேண்டும், முன்னா விசில் அடித்துகொண்டே விஜய் டிவியில் மூழ்க ஆரம்பித்துவிட்டான்.   

                                                   
     
தாத்தா சுக்காங்கை நன்றாகவே புரிந்துவைத்துள்ளார்.  தாத்தா சுக்காயின் சட்டை பேன்ட் எல்லாம் கழற்றிவிட்டு வெந்நீர் வைத்து குளிக்கவைத்து பின் கொஞ்சமாக சாப்பிடவைத்தார் .அவனுக்கு இது எல்லாம் ஞாபகத்தில் இருக்குமா என என்ணியது என் மனம்.

 தாத்தாவைக் கவனித்தபோது ,அவர் கொஞ்சமும் வருத்தபட்டதாகத் தெரியவில்லை. முகத்தில் புன்னகையே இருந்தது. இதைப்பார்க்கும் போது சுக்கா இதுக்காகவே தினமும் குடிக்கலாம் என்று நினைத்தேன்.

  

  சரி தாத்தா, நாங்க கிளம்புறோம் ஆன்டியை கேட்டதா சொல்லுங்க, என்றான். முன்னா. அருகே ஆமோக்கியாவில் தான் எங்கள் வீடு என்பதால் நானும் முன்னாவும் நடக்க ஆரம்பித்தோம்.

  

  ஓளிக்கற்றையை விரட்டிப் பிடிப்பதாய் பேருந்து எங்களை கடந்து சென்றது. என் மனதும் கூடத்தான். எப்பப்பார்த்தாலும் குடிச்சிகிட்டு இருக்கிற மாமா, எப்பப்பார்த்தாலும் அவரை திட்டிக்கொண்டிருக்கும் அவரின் அண்ணா, முக்குகடை சொக்கன், எங்க ஊரு ராவுத்தர், அம்மன் கோவில் பூசாரி, வழுக்கத் தலையை மறைக்க பின்னாடி முடியை முன்னாடி கொண்டுவந்து சீவும் தலைமையாசிரியர், அப்புறம் பூங்கொடி டீச்சர், எதிர்த் வீட்டு பாட்டிம்மா, என்கிட்ட மட்டும் டிக்கட் வாங்காத கண்டக்டர், எப்பத்தா கிழவி, குண்டு பாப்பா, மிட்டாய் மாது, நல்லா சாப்புடு சிதம்பரம்னு முகத்தாலே அதட்டும் சியாமளா, சின்ன வயசு சீனு, அம்மா, புல்புல்னு

  

  நினைவுகளுடனேயே படுக்கையில் வீழ்ந்த போது.

  

  என்ன மாப்ஸ் ரொம்ப களைப்பா இருக்கா..? காலையில எந்திரிக்க அலாரம் வைக்கட்டுமா..?

  

 ஏதோ குரல் ஒன்று தொலைவில் எங்கேயோ இருந்து கசிந்துவருவதாகப்பட்டது.

–  – – பாண்டித்துரை 

   

பின்னூட்டமொன்றை இடுக